ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய அர்ச்சா ரூபமும் குணங்களும்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீம்தே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< ஸ்ரீமன் நாராயணன் யார்?

வ்யாசனும் பராசரனும் தம் நண்பர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்குத் திரும்புகிறார்கள். பாட்டி ஒரு தாம்பாளத்தில் பூக்கள், பழங்கள், உலர்ப்பழங்கள், பருப்பு வகைகளை அடுக்கி வைப்பதைக் காண்கிறார்கள்.

வ்யாச: இந்த பூக்களையும் பழங்களையும் யாருக்காக எடுத்து வைக்கிறீர்கள் பாட்டி?

ஆண்டாள் பாட்டி: வ்யாசா, இப்பொழுது ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் புறப்பாடு கண்டு இந்த வழியாக எழுந்தருளும் நேரம். நம்மை விருந்தாளியாக, குறிப்பாக பெரியோர் யாராவது காண வந்தால், அவர்கள் நம்முடன் இருக்கும் வரையில் அவர்களை நன்றாக உபசரிக்க வேண்டும். அதுவும் அவ்வளவு பெரிய ஜகத்துக்கே நாதன் நம்மைக் காண வரும் பொழுது, அவரைச் சரியாக கவனித்து உபசரிப்பதை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும்.

பராசர: நிச்சயமாக, பாட்டி. அப்படியென்றால், ஸ்ரீரங்கநாதன் இங்கு எழுந்தருளும்பொழுது நான் அவருக்குப் பழங்கள் சமர்ப்பிப்பேன்.

ஆண்டாள் பாட்டி: மிக நல்லது, பராசரா. வா, அவர் வருகைக்காக வாசலுக்குப் போய் காத்துக் கொண்டு இருக்கலாம்.
namperumal-2-nachiarsநம்பெருமாள் (ஸ்ரீரங்கநாதன்) ஆண்டாள் பாட்டியின் வீட்டு முன்பாக வருகிறார். பராசரன் ஸ்ரீரங்கநாதனுக்கு பூக்கள் பழங்கள் சமர்ப்பிக்கும் வாய்ப்பினால் பொலிவோடு காத்திருக்கிறான்.

பராசர : பாட்டி, அவர் தனது இடது கையில் என்னவோ பிடித்துக் கொண்டு இருக்கிறாரே, அது என்ன?

namperumal2வலது திருக்கையில் (சுதர்சன) சக்கரம், இடது திருக்கையில் சங்கு – வலது கைத்திருத்தோள்களுக்கு மேலே, அபயஹஸ்தம் (அபயம் அளிக்கும் திருக்கோலம்), இடது கைத்திருத்தோள்களுக்குக் கீழே கதை

ஆண்டாள் பாட்டி: அவர் தனது இடது கையில் கதையைப் பற்றியிருக்கிறார் பராசரா. ஸ்ரீரங்கநாதனின் அர்ச்சாவதாரத்தில் அவருக்கு நான்கு கைகள். அவர் தனது மற்ற இடது கையில் தோளுக்கு மேலே, சங்கைப் பற்றியிருக்கிறார்; வலது கையில் தோளுக்கு மேலே அவர் ஸுதர்சன சக்கரத்தைப் பற்றியிருக்கிறார். அவர் தனது ஆயுதங்களைத் தாங்கி நமக்கு காண்பித்துக் கொடுப்பது என்னவென்றால், அவர் நம்மை எப்பொழுதும் காக்கிறார் என்பதும் நமக்கு வரும் இடர்களை அழிக்கிறார் என்பதுவுமே.

வ்யாச: அவரது வலது கை எதனைக் குறிக்கிறது பாட்டி?

namperumAL-abhayahasthamஅபயஹஸ்தம் – காக்கிறேன் என்று காண்பிக்கும் திருக்கோலம்

ஆண்டாள் பாட்டி: இது ஒரு நல்ல கேள்வி. ஒரு கன்று தன் தாயிடம் எவ்வாறு நடந்து கொண்டாலும், கன்றின் தேவை அறிந்து தாய்ப்பசு அதனிடம் ஓடிச்செல்வது போல், பெருமாள் அவரது வலது கையைப் பரிவுடன் நம்மை நோக்கித் தெரிவிப்பது “நான் உன்னைக் காக்கிறேன், கவலை கொள்ளாதே” என்று கூறவும், அவர் நம் மேல் கொண்டிருக்கும் பரிவை நமக்கு அறிவிக்கவுமே!

namperumal2 - smiling-face and tall-crownஉயர்ந்த கிரீடமும் (மேன்மை) சிரித்த திருமுகமும் (எளிமை)

வ்யாச: சரி பாட்டி, அவரது தலையின் மேல் என்ன வைத்துக்கொண்டிருக்கிறார்?

ஆண்டாள் பாட்டி: அது ஒரு கிரீடம், வ்யாச. அது நமக்கு தெரிவிப்பது என்னவென்றால், அவர் தாம் இந்த உலகத்தில் உள்ள அனைத்துக்கும்  முடி சூடிய மன்னர் என்பதே.

பராசர: அந்த கிரீடம் பார்ப்பதற்கு மிக நன்றாக இருக்கிறது, பாட்டி. அவரது திவ்யமான முகத்துக்கு அது மிகப் பொருத்தமாக இருக்கிறது.

ஆண்டாள் பாட்டி: ஆமாம், அவரது திருமுகம் மிகவும் போற்றத்தக்கது. அவர் நம்மிடையே இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்; அதிலும் உங்களைப் போன்ற குழந்தைகளின் நடுவே இருப்பதில், அதிக மகிழ்ச்சி கொள்கிறார்.

பராசர: ஆமாம், பாட்டி. நான் அவரை மிக அருகில் பார்த்தேன். அவர் திருவடிகளையும் அவரது புன்னகையையும் பார்த்தேன்.

ஆண்டாள் பாட்டி: மிக நல்லது, பராசரா. அவரது பாதங்களின் அழகினாலும் மென்மையினாலும், அவற்றை “பாதக் கமலங்கள்” , “திருவடித் தாமரைகள்” என்று அழைக்கிறோம். அவர் நம்மிடையே மகிழ்வுடன் இருக்கவே இங்கு இறங்கி வந்திருக்கிறார் என்பதனை அவரது சிரித்த முகம் உணர்த்துகிறது. அவரது திருவடிகளை உறுதியுடன் பீடத்தில் (தாமரைத்தளம்) இருத்தியிருப்பதன் மூலம் அவர் நமக்காகவே நம்முடன் இருப்பதற்காக வந்திருக்கிறார் என்பதும் நம்மை ஒருபோதும் விட்டுவிட மாட்டார் என்ற உறுதியையுமே உணர்த்துகிறது. ஆக ஸ்ரீமன் நாரயணனின் அர்ச்சாவதாரத்தின் சில உயர்ந்த மங்கள குணங்களான – அவரது வாத்ஸல்யம் (தாயைப் போன்ற பரிவுடன் நம்மைக் காக்கும் திருக்கரங்கள்), ஸ்வாமித்வம் (மேன்மை – நீண்ட கிரீடம்), ஸௌஸீல்யம் (மிக எளிமையுடன் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் நம்மிடையே கலந்து இருத்தல்), ஸௌலப்யம் (அணுகுவதற்கு எளிமை – பற்றுதற்கு எளிதான அவரது திருவடித் தாமரைகள்)  ஆகியவற்றை இன்று நாம் அறிந்து கொண்டோம்.

வ்யாசனும் பராசரனும் பிரமிப்புடன் விழிகள் விரியக் காண்கையில் புறப்பாடு அவர்களைக் கடந்து செல்கிறது.

அடியேன் கீதா ராமானுஜ தாஸி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2014/08/beginners-guide-sriman-narayanas-divine-archa-form-and-qualities/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

1 thought on “ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய அர்ச்சா ரூபமும் குணங்களும்”

Leave a Comment