ஸ்ரீராமாயணம் பாலபாடம் – மிதிலைநகர் அடைந்தனர் தாசரதிகள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீராமாயணம் பாலபாடம்

<< கல்லையும் பெண்ணாக்கினான்

பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.

பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள்.

அத்துழாய்: விச்வாமித்ர முனிவரும், ராம லக்ஷ்மணாதிகளும் மிதிலை நகருக்குப் புறப்பட்டார்கள் என்று சென்ற முறை சொன்னீர்கள் பாட்டி. அங்கே என்ன நடந்தது?

பாட்டி: அம்மூவரும், கௌதம முனிவரது ஆச்ரமத்திலிருந்து வடகீழ்த் திசையில் சென்று மிதிலை நகரை அடைந்து, ஜனகமன்னனது வேள்விச்சாலை/யாகசாலை அருகில் சேர்ந்தனர். அங்கு வேள்விக்குத் தேவையான ஸம்பாரங்கள்/திரவியங்கள் வெகு ஆச்சரியமாகவும் அழகாகவும் மிகுதியாகவும் சேகரித்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியப்போடு அழகிய விடுதியில் சென்று அமர்ந்தார்கள்.

வ்யாசன்: ஜனகமன்னன் அம்மூவரையும் நன்கு உபசரித்திருப்பாரே, அதைப் பற்றிச் சொல்லுங்கள் பாட்டி.

பாட்டி: சொல்கிறேன் கேளுங்கள். ஜனகமன்னன் விச்வாமித்ர முனிவர் எழுந்தருளியிருப்பதறிந்து, தனது புரோஹிதரும், கௌதம முனிவரது திருமகனான சதானந்த முனிவரை முன்னிட்டுக்கொண்டு உபசாரங்கள் செய்ய வந்தார். விச்வாமித்ர முனிவரும் மன்னனுடைய உபசாரங்களை ஏற்று, மன்னனை நோக்கி யோகக்ஷேமங்கள் விசாரித்துவிட்டு ஆசனத்தில் வீற்றிருந்தார். பிறகு ஜனகமன்னன் கைகூப்பி மிகவும் பணிவோடு முனிவரை நோக்கி “கண்டவர் மனம் குளிரும்படியான திருமேனியுடைய இக்குமாரர்களைப் பற்றின வரலாறுகளைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என்று சொல்ல, விச்வாமித்ர முனிவர் இவர்கள் இஷுவாகு குலத்திலுதித்த தசரத சக்ரவர்த்தியின் திருமகன்களென்றும், தன்னுடைய யாகத்தை ரக்ஷிப்பதற்காக அழைத்துவரப்பட்டது முதலாக கௌதம முனிவரது மனைவியான அகலிகை சாபவிமோசனம் பெற்ற விருத்தாந்தங்களையெல்லாம் சொல்லிமுடித்தார்.

வேதவல்லி: கௌதம முனிவர் தன்னுடைய தாயார் அகலிகை சாபம்தீர்ந்த செய்திகேட்டு மிகவும் மகிழ்ந்திருப்பாரே பாட்டி?

பாட்டி: ஆமாம் வேதவல்லி. கௌதம முனிவரின் மூத்த குமாரரான சதானந்த முனிவர் இவ்விஷயத்தைக் கேட்டு மிகவும் மகிழ்ந்து, தசரத புத்ரர்களைக் கண்ணாரக்கண்டுகளித்து உள்ளம் பூரித்து, தன் தாயினுடைய சாபவிமோசனம் பெற்ற வரலாற்றையும், பிரிந்த தாய் தந்தையர் மீண்டும் ஒன்றுசேர்ந்த விஷயத்தையும் விச்வாமித்ர முனிவரிடமிருந்து விரிவாக கேட்டறிந்து மிகவும் மகிழ்ந்து, பிறகு விச்வாமித்ர முனிவருடைய தவவலிமை முதலிய பெருமைகளைத் தாசரதிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கத் தொடங்கினார்.

பராசரன்: கேட்பதற்கே சுவாரசியமாக இருக்கிறது பாட்டி. மேலும் சொல்லுங்கள்.

பாட்டி: நீங்கள் அடுத்தமுறை வரும்போது சொல்கிறேன். சற்று நேரத்தில் பெருமாளுக்குத் தளிகை அமுதுசெய்தாகிவிடும். இங்கேயே நீங்கள் பெருமாள் ப்ரசாதத்தை எடுத்துக்கொண்டபிறகு உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள். குழந்தைகளும் பெருமாளுக்கு அமுதுசெய்த ப்ரசாதத்தை உண்டுவிட்டு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டார்கள்.

அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி

வலைத்தளம் –  http://pillai.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment