Category Archives: Stories

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ராமானுஜர் – பகுதி – 2

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< ராமானுஜர் – பகுதி – 1

பராசரன், வ்யாசன் இருவரும், வேதவல்லியுடனும் அத்துழாயுடன் ஆண்டாள் பாட்டியின் வீட்டில் நுழைகிறார்கள்.

பராசர : பாட்டி, ராமானுஜருடைய வாழ்கையைப் பற்றியும், அவருடைய அனைத்து சிஷ்யர்களைப் பற்றியும் சொல்வதாக நேற்று சொன்னீர்களே.

பாட்டி: ஆமாம். அவருடைய சிஷ்யர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் ராமானுஜர் கொண்டிருந்த ஒரு மிகச் சிறந்த அம்சத்தைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது என்னவென்றால், அவருடைய தோற்றத்திற்கு முன்னால், அவருடைய அவதாரத்தைப் பற்றி சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே, நம்மாழ்வார் மதுரகவியாழ்வாருக்கு முன்னறிவித்து விட்டார்; அதனை நாதமுனிகளுக்கும் முன்னறிவித்தார். சரமோபாய நிர்ணயம் என்ற ஒரு சிறந்த க்ரந்தம் உண்டு; அது எம்பெருமானாரின் மேன்மைகளை முழுமையாக உரைக்கும் – இதில் நம்மாழ்வாருக்கும் – நாதமுனிகளுக்கும் இடையே எம்பெருமானாரின் அவதாரம் குறித்து நடந்த உரையாடலைப் பதிவு செய்யும். நம்மாழ்வார் மதுரகவியாழ்வாருக்கு அளித்த எம்பெருமானாரின் திவ்ய திருமேனி இன்றும் ஆழ்வார்திருநகரியில்,  பவிஷ்யதாசார்யன்  சன்னிதியில் இன்றளவும் ஆராதிக்கப்பட்டு வருகிறது.

ராமானுஜர் – ஆழ்வார்திருநகரி

வ்யாச : ஆஹா! அப்படியானால், ஆழ்வாரும் சில ஆசார்யர்களும் அவருடைய அவதாரத்தைப் பற்றி முன்பே அறிந்திருந்தனர். எவ்வளவு ஆச்சர்யம் பாட்டி. அவருடைய வாழ்க்கையைக் குறித்து மேலும் சொல்லுங்கள்.

பாட்டி: ஆமாம், ராமானுஜர் வைஷ்ணவ சித்தாந்தத்தை நம் தேசத்தின் பல மூலை முடுக்குகளிலும் பிரசாரம் செய்தார். அதில் அவருக்கு பல இடங்களில் எதிர்ப்பு இருந்தது; சில இடங்களில் ஆதரவும் இருந்தது. ராமானுஜர் தம் அன்பினாலும் ஞானத்தினாலும் அனைத்து மக்களையும் ஈர்த்தார். அவர் காஞ்சிபுரத்தில் இருந்த பொழுது, அவருக்கு தஞ்சம்மாளுடன் விவாகம் நடைபெற்றது, பிறகு அவர் தேவப் பெருமாளிடம் ஸந்யாஸாச்ரமம் பெற்றார், அப்பொழுது அவர் தன்னுடைய  மருமகனான முதலியாண்டானைத் தவிர அனைத்து உடைமைகளையும் விடுவதாக உறுதி பூண்டார்.

வ்யாச: பாட்டி, அவர் ஏன் விவாகம் செய்து கொண்டபின் ஸந்யாஸாச்ரமம் மேற்கொள்ள வேண்டும்? அவர் க்ருஹஸ்தராக இருந்து கொண்டே அவருடைய அனைத்து கைங்கர்யங்களையும் செய்திருக்கலாமே?

பாட்டி : வ்யாசா, அதற்குப் பல காரணங்கள் இருந்தன. முதலானது, அவருக்கும் அவருடைய மனைவிக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. இரண்டாவது, ஒரு மேன்மையான நோக்கம் உனக்கு இருக்குமானால் சில தியாகங்களை செய்யத்தான் வேண்டும். வைஷ்ணவ சித்தாந்தத்தை நம் தேசத்தின் பல மூலை முடுக்குகளிலுள்ள மக்களிடம் அவர் கொண்டு சென்றார் என்பது நாமெல்லோரும் அறிந்ததுதானே. உதாரணமாக, நம் தேசத்தைக் காவல் காக்கும் உன்னத லட்சியத்திற்காக நம் வீரர்கள், தம் அன்பான உறவினர்களையும் நன்பர்களையும் விட்டு வந்து அப்பணியினை செய்கிறார்கள் அல்லவா? அது போலத்தான், ராமானுஜர் தம் மனதில் ஒரு சிறந்த நோக்கத்தைக் கொண்டிருந்தார். வேதங்களின் உட்கருத்தை வெளிப்படுத்துதலே தம் நோக்கம்  என்பதனை அவர் நன்றாக அறிந்திருந்தார்.  அதனால் அவர் ஸந்யாஸம் பெற்றுக் கொண்டார். அவர் ஜீயராக ஆனவுடனேயே, சிறந்த பண்டிதர்களாண முதலியாண்டானும் கூரத்தாழ்வானும் ராமானுஜருக்கு சிஷ்யர்களானார்கள்.

அத்துழாய் : அவ்வளவு பெரிய பொறுப்பு ஒரு சுமை தானே? ராமானுஜர் தனியாக எப்படி அதனை நிறைவேற்றினார்?

பாட்டி : இல்லை அத்துழாய்! அது ஒரு சுமையே அன்று. உன்னுடைய பணியில் ஆர்வம் மிகுந்து இருந்தால் அது உனக்கு ஒரு சுமையாகத் தோன்றாது. மேலும், ராமானுஜர் எக்காலத்திலும் தனியாக இல்லை அவர் எக்காலத்திலும் அவருடைய சிறந்த சிஷ்யர்களான, முதலியாண்டான், கூரத்தாழ்வான், எம்பார், அனந்தாழ்வான், கிடம்பியாச்சான், வடுக நம்பி, பிள்ளை உறங்காவில்லிதாசர் போன்றோருடனேயே இருந்தார், அவர்கள் அவரை நாளும் கருத்தாகக் காத்து அவருக்குத் தொன்டு செய்து வந்தனர். அவருடைய லட்சியங்களிற்கான பயணத்தில் அவர்கள் எக்காலத்திலும் அவருடனேயே இருந்தார்கள். அவரைத் தாக்கவும், ஏன் கொல்லவுமே பல முயற்சிகள் அக்காலத்தில் இருந்தன. அது போன்ற சமயங்களில், எம்பார், கூரத்தாழ்வான் போன்றோர் தம் ஆசாரியரைக் காக்கும் பொருட்டு அவர்கள் ஆந்த ஆபத்துகளுக்கு உள்ளானார்கள். சைவ அரசனின் நாட்டிற்கு கூரத்தாழ்வானும் பெரிய நம்பியும் சென்று அவர்களின் கண்களை இழந்ததனை அறிவீர்களல்லவா? அத்தகைய சிறந்த சிஷ்யர்கள் சூழ இருந்த ராமானுஜரும் பல கோயில்களில் நிர்வாக சீர்திருத்தம் செய்யும் பணியை சிறப்பாக நடத்தினார்.

Ramanujar-srirangam

ராமானுஜர் – ஸ்ரீரங்கம் 

வேதவல்லி : ஆமாம் பாட்டி, ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற கோயில்களின் நிர்வாகம், சட்ட திட்டங்கள், வழக்கங்களெல்லாம் ராமானுஜரால் நிறுவப்பட்டவை என்று நான் கேட்டிருக்கிறேன். அதனைப் பற்றி எங்களுக்குச் சொல்கிறீர்களா?

பாட்டி : அது சரிதான் வேதவல்லி. வேதங்களில் சொல்லப்பட்ட வழக்கங்களை எல்லாம் அவர் நிலைநாட்டினார். அவர் மிகுந்த கவனத்தோடு இந்தத் திட்டங்களை நிறுவி, அவ்வனைத்தும் சரிவர நடைபெறும் வண்ணம் செய்தார். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அதிகாரியாக இருந்தவர் பெரிய கோயில் நம்பி என்னும் ஒருவர். நான் முன்னே சொன்னது போல, கோயில் நிர்வாகத்தில் அவர் செய்ய விரும்பிய மாற்றங்களைச் செயல்படுத்த அவருக்கு பெரிய கோயில் நம்பி சுலபத்தில் அனுமதித்து விடவில்லை. அதனால்  பெரிய கோயில் நம்பியை ஸ்ரீவைஷ்ணவ தர்மத்தில் கொண்டு வரவும் அவருக்கு அதற்கான வழியினை காட்டவும் ராமானுஜர் கூரத்தாழ்வானை அனுப்பி வைத்தார். பெரிய கோயில் நம்பியும் ஆழ்வானின் வழிகாட்டுதலினால், ராமானுஜரிடம் சரணடைந்தார், பிற்காலத்தில் திருவரங்கத்தமுதனார் என்று அழைக்கப்பட்டார். அவர் பிற்காலத்தில் ராமானுஜரைப் போற்றி இராமானுச நூற்றந்தாதியினை இயற்றினார். திருவேங்கடமுடையானை வேறு விதமாக இதர பிரிவினர்கள் கூறி வந்தனர் என்பதனையும் அவர் விஷ்ணுவே என்ற அடையாளத்தை அவருக்கு ஏற்படுத்தியவர் ராமானுஜர்தாம் என்றும் தெரியுமா?

ramanujar-tirupathi

ராமானுஜர் – திருமலை

பராசர : என்ன? நாம் எல்லோரும் திருவேங்கடமுடையான் ஸ்ரீமஹாவிஷ்ணுவேதான் என்றுதான் அறிவோமே? எப்பொழுது இதில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது?

பாட்டி : ஆம்! திருவேங்கடமுடையான் மஹாவிஷ்ணுவேதான்.  ஆனால், அதற்கு மாறாக கூறிக்கொண்டிருந்தவர்கள் சிலரும் இருந்தனர். சிலர் அவரை ருத்ரன் என்றும் வேறு சிலர் அவர் ஸ்கந்தனின் ரூபம் என்றும் கூறிக்கொண்டிருந்தனர். இதனைச் செவியுற்ற ராமானுஜர் திருப்பதிக்குச் சென்றார். அதில் அவருக்கு மிகவும் வருத்தம். அங்கே  சென்று திருவேங்கடமுடையானுடைய சங்கத்தையும் சக்கரத்தையும் அடையாளப்படுத்தி அவரை நிலைநாட்டினார். ஆக, திருப்பதியில் ராமானுஜர் கோயில் நிர்வாகம் மாத்திரமன்றி வேறு சில கைங்கர்யங்களையும் செய்தார். இதனாலேயே ராமானுஜரைத் திருவேங்கடமுடையானுடடை ஆசாரியர் என்று கொண்டாடுவார்கள்.  அங்கேதான், ராமானுஜர் ராமாயணத்தின் சாரத்தை அவருடைய மாமாவான திருமலை நம்பியிடம் கற்றார். இதற்கு பின்னால் அவர் வேறு பல கோயில்களின் கைங்கர்யங்களை நிறுவினார், அவற்றுள் பிரதானமானது திருநாராயணபுரம் ஆகும்.

ராமானுஜர் – திருநாராயணபுரம்

அத்துழாய் : பாட்டி, அக்காலத்தில் மேல்கோட்டையில் இருந்த ஜைனர்கள் ராமானுஜருக்கு ஊறு செய்தார்கள் என்று நான் கேட்டிருக்கிறேன் பாட்டி.

வ்யாச : நான்கூட திருநாராயணபுரத்து பெருமாளை துலுக்கர்கள் படையெடுத்து கவர்ந்து சென்று விட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

பாட்டி : ஆம், அது உண்மைதான். கோயில்களின் மேம்பாட்டிற்கும் நம் சம்பிரதாயத்தின் மேன்மைக்கும் அவர் பல சீர்த்திருத்தங்களை செய்யும் பணியில் ராமானுஜர் பல இன்னல்களை நேர்கொண்டார். மாற்றம் என்பதனை பலரும் விரும்பி ஏற்பதில்லையே. எல்லோரும் தம்முடைய வழிமுறைகளில் பழகிவிடுவதால், அது சரியானாலும் தவறானாலும், அதற்கான மாற்றங்களையோ மாற்றம் செய்ய முன்வரும் நபரையோ, அவர்கள் ஏற்பதில்லை. இது நம் சமுதாயத்தின் பொதுவான அணுகுமுறைதான். இன்றைய நாளில் கூட மாற்றம் என்பது கடினமே, என்றால், 1000 ஆண்டுகுளுக்கு முன்பு இருந்த திடமான நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள், ராமானுஜர் அதற்கான மாற்றங்களை செய்ய, பலத்த எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் நித்யமான உண்மையை ஜைன பண்டிதர்கள் ஏற்கத் தயங்கினார்கள். ஒரே சமயத்தில் 1000 ஜைன பண்டிதர்களோடு வாதிடுமாறு ராமானுஜருக்கு சவாலை முன்வைத்தார்கள்.  ராமானுஜர் தம்முடைய உண்மை ஸ்வரூபமான 1000 தலைகளைக் கொண்ட ஆதிசேஷனுடைய  ஸ்வரூபத்தை எடுத்துக் கொண்டு ஒரே நேரத்தில் அவர்களுடைய கேள்விகள் அனைத்திற்கும் விடை சொல்லி, அவர்களை வாதத்தில் வென்றார்.

திருநாராயணபுரம் கோயில் உத்சவமூர்த்தியான செல்வப்பிள்ளைப் பெருமாளை துலுக்கர்களின் படையெடுப்பின்போது கவர்ந்து சென்று விட்டனர்; செல்வப்பிள்ளைப் பெருமாளை படையெடுத்த அரசனுடைய மகளின் அந்தப்புரத்தில் அவள் மிகுந்த அன்போடும் பரிவுடனும் கொண்டாடி வந்தாள். ராமானுஜர் செல்வப்பிள்ளையை மீட்டுச் செல்ல வந்த பொழுது, அவருடைய பிரிவினை அவளால் தாங்க இயலவில்லை.

அத்துழாய் : இது ஆண்டாள் கிருஷ்ணருடைய பிரிவினை தாங்க மாட்டாமல் இருந்தது போல்தானா!

பாட்டி : ஆமாம், ஆண்டாளைப் போலவேதான். அந்த மன்னனுடைய மகளுக்கு செல்வப்பிள்ளையை ராமானுஜருடன் அனுப்பி வைக்கும் எண்ணமே தாங்கமாட்டாததாக இருந்தது. இறுதியில் ராமானுஜர், அரசனுடைய மகளுக்கும் செல்வப்பிள்ளைக்கும் விவாகம் செய்து வைத்தார். இது பெருமாளின் மேல் உண்மையான பக்தியும் அன்பும் கொள்வது மதத்திற்கும் குலத்திற்கும் அப்பாற்பட்டது என்பதனை மறுபடியும் நமக்குக் காட்டிக் கொடுக்கிறது.

kurathazhwan-ramanujar-mudhaliyandan

கூரத்தாழ்வான் – ராமானுஜர் – முதலியாண்டான்

வ்யாச : பாட்டி, ராமானுஜர் எவ்வாறு ஆளவந்தாருடைய மூன்று ஆசைகளை நிறைவேற்றினார் என்று நீங்கள் எங்களுக்குச் சொல்லவே இல்லையே.

பாட்டி : கூரத்தாழ்வான் இரண்டு குழந்தைகளால் அனுக்கிரஹிக்கப்பட்டார். ராமானுஜர் அவரின் இரண்டு புதல்வர்களுக்கும் வியாசன் என்றும் பராசரன் என்றும் பெயரிட்டு அவ்விரு ரிஷிகளின் மேன்மைக்கு அடையாளப்படுத்தினார், இதன் மூலம் அவர் ஆளவந்தாரிடத்தில் தாம் செய்த முதல் ப்ரதிக்ஞையை நிறைவேற்றினார். பிற்காலத்தில் எம்பார் என்று வழங்கப்பட்ட கோவிந்த பட்டருக்குச் சிறிய கோவிந்த பட்டர் என்று ஓர் இளைய தம்பி இருந்தார், அவருடைய புதல்வருக்கு பராங்குசநம்பி என்ற நம்மாழ்வாரின் அடையாளப் பெயரிட்டார்; இதன் மூலம் இரண்டாவது ப்ரதிக்ஞை நிறைவேறியது. இறுதியாக, அவர் மூன்றாம் ப்ரதிக்ஞையை ஸ்ரீபாஷ்யம் இயற்றியதன் மூலம் நிறைவேற்றினார். ஸ்ரீபாஷ்யத்தை இயற்றுவதற்காக ராமானுஜர், காஷ்மீரத்திற்கு கூரத்தாழ்வானுடன் பயணப்பட்டார்.

வேதவல்லி : காஷ்மீரத்தில் என்ன நடந்தது?

பாட்டி : ராமானுஜர், ஸ்ரீபாஷ்யம் இயற்றுவதுற்குத் தேவையான ஒரு குறிப்பு க்ரந்தத்தைப் (புத்தகத்தை) பெறுவதற்காக கூரத்தாழ்வானுடன் காஷ்மீரத்திற்கு ப்ரயாணமானார். அவர் அந்த க்ரந்தத்தைப் பெற்றபின், தங்களிடம் இருந்த க்ரந்தத்தை ராமானுஜர் தம்முடைய நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதைப் பொறுக்கமுடியாத சிலர், அவர்களைத் தொடர்ந்து வந்து, அந்தப் புத்தகத்தைப் பறித்துச் சென்றனர்.

வ்யாச : எவ்வளவு கொடுஞ்செயல்!

பாட்டி : ஆமாம்! ஆனால் அவர்கள் அந்த க்ரந்த்தத்தை பெறும் முன்பே ஆழ்வான் அந்த மொத்த க்ரந்தத்தையும் ஸ்ரீபாஷ்யம் எழுதுவதற்குத் தேவையான உட்பொருளையும் மனப்பாடம் செய்து விட்டார்.

வ்யாச : ஒரு மொத்த க்ரந்தத்தையும் மனப்பாடம் செய்துவிட்டாரா? அது எப்படி முடியும் பாட்டி? நான் கூட அப்படி என்னுடைய பாடப் புத்தகங்களை அது போல மனப்பாடம் செய்தால் எப்படி இருக்கும்?

பாட்டி (சிரித்தபடி) : கூரத்தாழ்வான் ராமானுஜருக்கு ஒரு சிஷ்யராக மாத்திரமல்ல, அவர் ராமானுஜருக்கு ஒரு பரிசு போலவும் பெரிய நிதியாகவும் இருந்தார். ராமானுஜருடைய அணுக்கத்தினால் மற்றவர்கள் மேன்மையுற்றனர் என்பது இருக்க, ராமானுஜரே தாம் கூரத்தாழ்வானுடைய அணுக்கத்தினால் தாம் மேன்மையுற்றதாக கூறுவார். அவர் பெரிய பண்டிதராயிருந்தும் கூட, தம் மனதினை ராமானுஜருடைய உறைவிடமாக கொண்டிருந்தவர்; கர்வமோ அகம்பாவமோ என்பது கிஞ்சித்தும் அவர் மனதில் இருந்ததே இல்லை.

கூரத்தாழ்வானின் உதவியுடன், ராமானுஜர் ஸ்ரீபாஷ்யத்தினை இயற்றியதன் மூலம், அவர் ஆளவந்தாரிடம் தாம் இயற்றிய கடைசி ப்ரதிக்ஞையையும் நிறைவேற்றினார். ஸ்ரீரங்கத்தை ஆண்ட சைவ அரசனுடைய இறப்புக்குப் பின், ராமானுஜர் ஸ்ரீரங்கத்திற்குத் திரும்ப வந்து அடைந்தார்.

இறுதியில் இவ்வுலகை விட்டுப் பரமபதத்திற்கு ஏகும் முன், ஆளவந்தாரைப் போலவே, ராமானுஜர் நம் சம்பிரதாயத்தை மேலும் கொண்டு செல்லும் விடிவிளக்காக ஆழ்வானின் போற்றத்தக்க குமாரரான பராசர பட்டரை நிர்ணயித்தார். பட்டருக்கும் பிற சிஷ்யர்களுக்கும் எம்பாரை நாடி எம்பாரிடம் மேலும் உபதேசங்கள் பெறுமாறு பணித்தார்.

பிற சிஷ்யர்களிடம் தம்மிடம் இருப்பது போலவே பட்டரிடத்தினில் நடக்குமாறு பணித்தார். எவ்வாறு ஆளவந்தார் ராமானுஜரை நம் சம்பிரதாயத்திற்குள் கொண்டு வரப் பெரிய நம்பியைப் பணிதாரோ, அதே போல பட்டரிடம் நஞ்சீயரையும் நம் சம்பிரதாயத்திற்குள் கொண்டு வருமாறும் பணித்தார். பின்பு தம் ஆசார்யர்களான பெரிய நம்பியையும் ஆளவந்தாரையும் தியானித்தவாறு ஸ்ரீமன் நாராயணனின் உறைவிடமான பரமபதத்தில் நித்யமான கைங்கர்யங்கள் செய்யும் பொருட்டு இவ்வுலகை நீத்தார். சிறிது காலத்தில் ராமானுஜரின் பிரிவினை தாங்க இயலாமல், எம்பாரும் பரமபதத்திற்கு ஏகினார்.

பராசர : பாட்டி, ராமானுஜரின் தேஹம் இன்றும் ஸ்ரீரங்கதில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது நிஜமா?

பாட்டி : ஆமாம் பராசரா, அது உண்மைதான்; நாம் நம்முடைய சிறந்த ஆசார்யர்களைக் குறித்து சொல்லும்பொழுது, எவ்வாறு பெருமாளுக்கு உயர்த்தி சொல்வோமோ, அதே போல திருமேனி என்று சொல்கிறோம். ராமானுஜருடைய சரம திருமேனி ஸ்ரீரங்கம் கோயிலில் அவருடைய சன்னிதியில் அவருடைய அர்ச்சா திருமேனிக்குக் கீழே பாதுகாக்கப்படுகிறது. இப்பொழுது ராமானுஜருடைய சன்னிதியாக நாம் சேவிப்பது முன் காலத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதருடைய வசந்த மண்டபமாக இருந்தது. இப்பொழுது நாம் ராமானுஜருடைய திருவடித்  தாமரைகளையும் ஸ்ரீரங்கநதனுடைய திருவடித் தாமரைகளையும் நமக்கு நம் ஆசார்யர்களைப் பற்றியும் அவர்களின் மேன்மையை அறிந்து கொள்ளும் ஆர்வத்தைக் கொடுக்க ப்ரார்த்தித்துக் கொள்வோம். நேரமாகிறது, இப்பொழுது நீங்கள் எல்லாரும் புறப்படுங்கள். நாம் அடுத்த முறை சந்திக்கும் பொழுது, நான் உங்களுக்கு ராமானுஜருடைய பல சிஷ்யர்களைப் பற்றியும், அவர்களின் சிறப்பையும், ராமானுஜருடைய திக்விஜயத்தில் அவர்கள் ஆற்றிய தொண்டினைப் பற்றியும் சொல்வேன்.

குழந்தைகள் அனைவரும் ராமானுஜரைப் பற்றியும் அவர் செய்த பல கைங்கர்யங்களையும், அவர் எதிர்கொண்ட பல இன்னல்களையும், அவர் நம் சம்பிரதாயத்தின் சிறந்த ஆசார்யனாக எவ்வாறு வெளிப்பட்டார் என்றும் எண்ணியவாறு புறப்பட்டுச் செல்கின்றனர்.

அடியேன் கீதா ராமானுஜ தாசி

ஆதாரம்:  http://pillai.koyil.org/index.php/2016/08/beginners-guide-ramanujar-2/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/

ஸ்ரீ வைஷ்ணவம் – பால பாடம் – ஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 2

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< ஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 1

திருக்கோஷ்டியூர் நம்பி, திருக்கச்சி நம்பி மற்றும் மாறனேர் நம்பி

tirukkachinambi

பராசரனும் வ்யாசனும் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களின் நண்பர்களான வேதவல்லி, அத்துழாய் மற்றும் ஸ்ரீவத்ஸாங்கனும் அவர்களுடன் வருகிறார்கள்.

பாட்டி (புன்முறுவலுடன்) : உள்ளே வாருங்கள் குழந்தைகளே. வ்யாசா, நான் நேற்றுச் சொன்னது போலவே, நீ உன்னுடைய எல்லா நண்பர்களையும்  அழைத்து வந்து விட்டாயே!

வ்யாஸ : ஆமாம் பாட்டி, நானும் பராசரனும் ஸ்ரீவத்ஸாங்கனுக்கு, ராமானுஜரைப் பற்றியும் அவருடைய ஆசார்யர்களைப் பற்றிய கதைகளைச் சொன்னோம். அவனும் மேலும் கதைகளை உங்களிடம் கேட்க விரும்பி எங்களுடன் இன்று வந்து விட்டான்.

பாட்டி : நல்லது. வா, உட்கார். இன்று நான், நம் சம்பிரதாயத்தில் மிகச் சிறந்த இரண்டு ஆசார்யர்களான திருக்கச்சி நம்பியைப் பற்றியும் திருக்கோஷ்டியூர் நம்பியைப் பற்றியும் சொல்கிறேன்.

ஸ்ரீவத்ஸாங்கன் : பாட்டி, திருக்கச்சி நம்பி சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் வழியிலுள்ள பூவிருந்தவல்லி என்னும் இடத்தில் அவதரித்தவர். அந்தக் கோயிலுக்கு நாங்கள் போன வருடம் கோடை விடுமுறையில் சென்றிருந்தோம்.

பாட்டி: மிகச்சரி. அவர் தேவப்பெருமாளுக்கு திருவாலவட்ட கைங்கர்யம் செய்து வந்தவர். பெருமாளுடன் உரையாடும் பேறு பெற்றவர். அவர் தேவப்பெருமாளுடைய அன்பிற்கும்  நெருக்கத்திற்கும் பாத்திரமானவர். ராமானுஜர் காஞ்சிபுரத்திற்கு வந்த பொழுது திருக்கச்சி நம்பி தான் அவருக்கு முதல் ஆசார்யராக இருந்து தம் சிஷ்யராக ஏற்று, ராமானுஜரை எம்பெருமானுக்குத் தொண் டு செய்வதில் முதலில் ஈடுபடுத்தி அருளியவர்.

வ்யாஸ: ராமானுஜர் என்ன கைங்கர்யம் செய்தார் பாட்டி?

பாட்டி : தமக்கு நல்வழி காட்டும்படி ராமானுஜர் கோர, திருக்கச்சி நம்பி ராமானுஜரை அருகிலிருந்த சாலைக்கிணறு  என்னும் கிணற்றிலிருந்து பெருமாளுடைய திருமஞ்சனத்திற்கான நீரைக் கொண்டு வரும் கைங்கர்யத்தில் ஈடுபடுமாறு கூறினார். இதைத்தான் முதல் கைங்கர்யமாக ராமானுஜருக்கு திருக்கச்சி நம்பிகள் காட்டிக்கொடுத்தார். அவருக்கு சாஸ்திரங்களில் இருந்த ஞானத்திற்கும் எம்பெருமானிடத்திலிருந்த அன்பிற்கும்  நிகரே இல்லை. ராமானுஜரும் திருக்கச்சி நம்பிகளிடத்தில் மிகுந்த அன்பும் பணிவும் கொண்டவராக தம்மை அவரின் சிஷ்யராக ஏற்று தமக்கு பஞ்சசம்ஸ்காரம் செய்விக்கும்படி வேண்டினார்.

பராசர : ஆனால் பாட்டி, பெரிய நம்பி ராமானுஜருக்கு மதுராந்தகத்தில் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்தார் என்று எங்களுக்கு நீங்கள் சொன்னீர்களே ?

பாட்டி : ஆமாம் பராசரா . நீ அதை நன்கு நினைவில் வைத்திருப்பது நல்லது. சாஸ்திரங்களை நன்கு அறிந்த அறிஞரான திருக்கச்சி நம்பி, சாஸ்திரங்களில் கூறியிருந்த சில நியதிகளின்படி  ராமானுஜருக்குத் தம்மால் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்விக்க இயலாது என்று அறிந்திருந்தார். அதை அவர் ராமானுஜருக்கு விளக்க, சாஸ்திரங்களின் கூறியிருந்தபடியால் ராமானுஜரும் அதனை ஏற்றுக்கொண்டார். இதைக் கொண்டே ராமானுஜர் நம் சம்பிரதாயத்தின் தர்மத்தின் மீதும் புனிதத்தன்மையின் மீதும் கொண்டிருந்த அசையாத நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அறிந்து கொள்ளலாம். நம்முடைய ஆசார்யர்கள் போலவே அவரும் நம் சாஸ்திரங்களில் சொல்லியிருந்தால் அதில் சந்தேகம் ஏதும் கொள்ளாமல் எக்கேள்வியும் இன்றி பகவானுடைய வாக்கும் ஆணையும் அதுவே என்று நம்பினார். ராமானுஜருக்கு நம் சம்பிரதாயத்தில் எழுந்த சந்தேகங்களுக்கும்  கேள்விகளுக்கும் திருக்கச்சி நம்பி தீர்த்து வைத்து நல்வழி காட்டினார். திருக்கச்சி நம்பி ராமானுஜரின் சந்தேகத்தை நிவர்த்திக்கும் பொருட்டு தேவப்பெருமாளுடன் உரையாடியது குறித்து வெகு சுவையான ஒரு கதை உண்டு .

வேதவல்லி : அந்த சந்தேகங்கள் என்ன ? தேவப் பெருமாள் என்னதான் பாட்டி கூறினார்?

பாட்டி : ஒரு முறை ராமானுஜரின் உள்ளத்தில் சில குழப்பங்கள் எழுந்தன. அவர் திருக்கச்சி நம்பி தேவப்பெருமாளுடன் உரையாடக் கூடியவர்  என்பதால் நம்பியை நாடினார். நம்பியும் எம்பெருமானிடம் சென்று கைங்கர்யங்கள் செய்து ராமானுஜரின் கோரிக்கைகளை எழுப்ப,  தக்க தருணம் பார்த்திருந்தார். தேவப்பெருமாளும் நம்பியின் தயக்கத்திற்கான காரணம் என்னவென்று  கேட்டார். நம்பி ராமானுஜருக்கு இருந்த தெளிவுபடுத்தவேண்டிய  சில சந்தேகங்கள் இருப்பதாக கூற, தேவப்பெருமாள் அந்தர்யாமியாகையால் , பரிவோடு கூறினார் – ”ராமானுஜரிடம் கூறவும் 1) அனைத்திலும் உயர்ந்த பரமாத்மா நானே, ஐயமில்லை 2) அனைத்து உயிரினங்களிலும் உயிரற்றவையிலும் அந்தர்யாமியாக இருப்பவன் நானே அவை எனக்கு நிகரன்று. அவை என்னிலிருந்து மாறுபட்டவை மட்டுமின்றி எனக்கு அடிமைப்பட்டவை  3) என்னை மாத்திரமே சரணாக பற்றுவதால் மட்டுமே என்னைப் புரிந்து கொள்ளவும் என்னை வந்தடையவும் இயலும்.    4) என்னை சரணடைந்த என் பக்தர்களை நான் தவறாது நினைவில் கொண்டு அவர்களுடைய அந்திமக் காலத்தில் ரக்ஷிப்பேன். 5) என்னுடைய  பக்தர்கள் இவ்வுலகை விட்ட பின், அவர்களுக்கு என்னுடைய உறைவிடமான ஸ்ரீவைகுண்டத்தில்  நித்ய கைங்கர்யங்களைச் செய்யும் வண்ணம் அருள்வேன்; இறுதியாக 6)  பெரிய நம்பியை ஆசார்யனாகக் கொள்ளவும்”. ராமானுஜருக்கு எழுந்த ஐயங்கள் என்னவென்று தேவப்பெருமாளும் கேட்கவில்லை, நம்பியுமே அந்த ஐயங்கள் என்னவென்பதை அறிந்தவரல்ல. நம்பி ராமானுஜருக்கு இந்த விடைகளைச் சொல்ல, ராமானுஜர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை. தேவப்பெருமாளின் கருணைக்கு எல்லையேது. ராமானுஜருக்கு எப்பொழுது சந்தேகங்களோ  சஞ்சலங்களோ எழுந்தாலும் தேவப்பெருமாள் அவருக்கு எப்பொழுதும் தெளிவு கொடுத்தவர். தாம் ஸமாச்ரயணம் பெற்றுக்கொள்ள பெரிய நம்பியை அணுக வேண்டும் என்ற தெளிவு ராமானுஜருக்கு இப்பொழுது ஏற்பட்டு விட்டதனால், அவர் திருக்கச்சி நம்பியிடமிருந்து ஆசி பெற்றுக்கொண்டு பெரிய நம்பியைக் காண ஸ்ரீரங்கத்திற்க்கு புறப்பட்டார்; அதற்குப் பின்னால் நடந்ததை நாம் அறிவோம் இல்லையா குழந்தைகளே?

வ்யாச : ஆமாம் பாட்டி, எங்களுக்கு நினைவிருக்கிறது.

பாட்டி : நம் சம்பிரதாயத்தில் பிற ஸ்ரீவைஷ்ணவர்கள் முன்பு ஒரு ஸ்ரீவைஷ்ணவனுக்கு இருக்க வேண்டிய மிக இன்றியமையாத குணம் எளிமை, இதனை நைச்ய பாவம் என்றும் அடிக்கடி வழங்குவர். பெரிய நம்பி வாய்ச்சொல் அளவில் இல்லாமல் தமது உள்ளப்பூர்வமான எளிமைக் குணத்தினால், எளிமைக்கு நடமாடும் உதாரணமாக விளங்கியவர். பெரிய நம்பி மிக எளிமையாக விளங்கி பிற ஸ்ரீவைஷ்ணவர்களுடன் மிகுந்த மரியாதையுடன் நடத்தியவர். ஒரு சுவையான சம்பவத்தினால் இதனை விளங்கிக் கொள்ளலாம். பெரிய நம்பியைப் போலவே ஆளவந்தாருக்கு மற்றொரு சீடராக மாறனேர் நம்பி என்னும் ஒரு உயர்ந்த ஆசார்யர் அக்காலத்தில் இருந்தார். மாறனேர் நம்பிக்கு தமது அந்திமக் கைங்கர்யங்களை ஒரு ஸ்ரீவைஷ்ணவர் செய்ய வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது; அவர் பெரிய நம்பி அதனை நிறைவேற்ற வேண்டும்  என்று கோரினார். இதற்குப் பெரிய நம்பி உகப்போடு ஒப்புக் கொண்டார்; அதனால் ஒரு கீழ்க்குலத்தில் பிறந்தவருக்கு அந்திமக் கைங்கர்யங்களை செய்து சாஸ்திரத்திற்குப்  புறம்பாக நடந்ததனால் அவ்வூரிலிருந்த பிற மக்களின் கோபத்திற்கு உள்ளானார். இதற்குப் பெரிய நம்பி சொன்ன விளக்கம் என்னவென்றால் பாகவத கைங்கர்யத்தை மிகுந்த சுத்தியுடனும் பணிவுடனும் செய்ய வேண்டும் என்று நம்மாழ்வாரின் உபதேசத்தின் படியே தாம் இதனைச் செய்தார் என்பதே. பாகவதர்களை, அவருடைய  குலத்தையோ பிறப்பையோ பாராமல், அவரிடம் மிகுந்த பணிவுடன் நாம் நடக்க வேண்டும். இவ்வாறான நைச்ய பாவத்தைக் கொள்கையளவில் அல்லாமல், தம் வாழ்க்கையில் அதன் படியே இருந்தவர் பெரிய நம்பி. எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களும் எம்பெருமானுக்கு பிரியமானவர்களாகையால் அவர்களை மிகுந்த பணிவோடு கொண்டாட வேண்டும் என்று அவர் நம்பினார். மேலும், பெரிய நம்பி, ஒரு உண்மையான பக்தனின் அந்திமக் காலத்தில் உள்ள இடமும் நிலையும் எவ்வாறாக இருந்தாலும், எம்பெருமான் அந்த பக்தருக்கு ஸ்ரீவைகுண்டத்தில் அந்தமில் பேரின்பமான கைங்கர்யத்தை அருளுவார் என்று திருக்கச்சி நம்பிக்கு தேவப்பெருமாள் அருளினார் அல்லவா அதனையும் ஆழ்ந்த்து நம்பினார்; இவர் இருந்த காலத்தில் தம் ஆசார்யரான ஆளவந்தாரின்  உபதேசப் படியும் நம்மாழ்வாரின் உபதேசங்களின் படியும் இருந்தவர். இன்றைக்கு இது போதுமா அல்லது மேலே திருக்கோஷ்டியூர் நம்பி பற்றிச் சொல்லட்டுமா?

azhwar-acharyas-ramanuja

வேதவல்லி : அவரைப் பற்றியும் கதைகள் உங்களிடம் உண்டா?

பாட்டி : ஆமாம், நிறைய உண்டு!

அத்துழாய் : அப்படியானால் திருக்கோஷ்டியூர் நம்பியைப் பற்றியும் சொல்லுங்கள் பாட்டி.

பாட்டி : திருக்கோஷ்டியூர் நம்பியும் ஆளவந்தாருடைய பிரதம சிஷ்யர்களில் ஒருவர்; அவருக்கு திருமந்த்ரம் மற்றும் சரம ச்லோகத்தின் பொருளை உபதேசிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது. அவை என்னவென்று அறிவீர்களா?

வ்யாச : ஓம் நமோ நாராயணாய என்பது தான் திருமந்த்ரம்.

ஸ்ரீவத்ஸாங்கன் : ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ ; அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச: என்பதுதான் சரம ஸ்லோகம் .

பாட்டி : மிக நல்லது. இந்த மூன்று வாசகங்களுக்கும் மிக ஆழ்ந்த கருத்துக்கள் பொதிந்துள்ளன; அவற்றை ஆசார்யரிடம் இருந்து உபதேசமாக பெற்றறிய வெண்டும்.

வேதவல்லி : ஆனால் பாட்டி, நம்மில் பெரும்பாலானவர்களுக்கும் இவ்வாசகங்களின் பொருள் தெரிந்துள்ளதே.

பாட்டி: ஆம், நம்மில் பலரும் இவற்றின் பொதுவான கருத்தினை அறிந்து கொண்டிருக்கிறோம் ஆனாலும், இவை ஒவ்வொன்றிலும் பொதிந்துள்ள நம் சம்பிரதாயத்தின் ஆழ்ந்த கருத்துக்கள் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டவை; அவற்றை ஒரு ஆசார்யனின் அருளின்றியோ வழிகாட்டுதலின்றியோ முழுவதுமாக அறிந்து கொள்ள இயலாது. ஆகையினால்தான் திருக்கோஷ்டியூர் நம்பிக்கு ராமானுஜருக்கு இக்கருத்துக்களை உபதேசிக்கும் முக்கியமான பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது.

அத்துழாய் : பாட்டி, ராமானுஜர் திருக்கோஷ்டியுர் நம்பியிடம் உபதேசம் பெற 18 முறைகள் சென்றார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேனே. அது உண்மையா? அவர் ஏன் அத்தனை சிரமத்திற்கு உள்ளானார்?

பாட்டி : ஆமாம், அது உண்மைதான். ஒருபுறம் இதனை ராமானுஜரின் நம் சம்பிரதாயத்தில் இருந்த ஊக்கத்தையும் ச்ரத்தையையும் அறிய திருக்கோஷ்டியூர் நம்பி செய்த சோதனை என்று கொள்ளலாம்; மறுபுறம் இது ராமானுஜரின் விடாமுயற்சிக்கும் பொறுமைக்கும் சான்றாகவும் கொள்ளலாம். நாம் சிரமங்களுக்கு உள்ளாகும்பொழுது, அதனை நாம் பொறுமையோடு எதிர்கொண்டு விடாமுயற்சியோடு அந்த தடைகளைத்தாண்ட வேண்டும். ராமானுஜர் எத்தனை முறை திருக்கோஷ்டியுர் நம்பியினிடம் சென்றார் என்று பாருங்கள், 18 முறைகள்! அவர் உறுதியுடன் இருந்து, இறுதியில், 18ஆவது முறைதான் அவர் சரம ச்லோகத்தின் செறிந்த கருத்துக்களை திருக்கோஷ்டியூர் நம்பியிடத்தில் உபதேசமாக பெற்றார்.

வ்யாச : பாட்டி, திருக்கோஷ்டியூர் நம்பி கண்டிப்பான ஆசார்யராக இருந்தார் போலிருக்கிறதே. அவர் ராமானுஜரிடத்தில் சற்று கருணையோடு இருந்திருக்கலாம்.

பாட்டி : மேம்போக்காக இச்சம்பவத்தைப் பார்த்தால் நம் எல்லாருக்கும் இதே தவறான புரிதலே ஏற்படும்.  ஆனால் அது உண்மையல்ல. அவர் பார்ப்பதற்கு ராமானுஜரிடத்தில் மிகவும் கடுமையாக இருந்தார்போல் இருந்தாலும், அவரிடத்தில் மிகவும் உள்ளன்பும் கனிவும் கொண்டு அவருடைய நன்மையை நோக்கமாகக் கொண்டிருந்தார். மிகவும் முதிய ஒரு தந்தை தம் மகனிடத்தில் கண்டிப்புடன் இருப்பது போல் தோன்றினாலும் மகனுடைய நன்மைக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யும்  தந்தையைப் போன்றவர் அவர். நான் நேற்று திருமாலையாண்டனைப் பற்றி கூறுகையில், உங்களிடம் ஆண்டானுக்கும் ராமானுஜருக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன என்று சொன்னேனே நினைவிருக்கிறதா? ராமானுஜரின் பொருட்டு அவ்விருவரின் கருத்து வேறுபாடுகளையும்  சுமூகமாக களைந்தவர் திருக்கோஷ்டியூர் நம்பியாவார். உண்மையில், ராமானுஜர் பிற ஸ்ரீவைஷ்ணவர்கள் மீது கொண்டிருந்த தன்னலமற்ற அன்பினால் ஈர்க்கப்பட்டு அவருக்கு எம்பெருமானார் (எம்பெருமானைக் காட்டிலுமே உயர்ந்தவர்) என்று ராமானுஜரை  அன்புடன் அழைத்தவர் திருக்கோஷ்டியூர் நம்பியே. இவ்வாறாகத்தான்  ராமானுஜருக்கு “எம்பெருமானார்” என்ற அழகிய திருநாமம் ஏற்பட்டது. ஸ்ரீரங்கத்தில் சில விஷமிகள் ராமானுஜருடைய உணவில் விஷம் கலந்தபொழுது, தக்க சமயத்தில் அங்கே வந்து ராமானுஜரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவருக்கு உணவு தயாரிக்கும் பொறுப்பைக் கிடாம்பியாச்சானிடம் ஏற்படுத்தியவரும் திருக்கோஷ்டியூர் நம்பிதாம்.  அன்பு நிறைந்த ஒரு தந்தை தன் மகனுடைய  நன்மையை எவ்வாறு   கருத்தாகக் கொள்வாரோ அதே போல் திருக்கோஷ்டியூர் நம்பியும் ராமானுஜருடைய நன்மையை நோக்காகக் கொண்டிருந்தார். அவருடைய மேன்மையைப் பற்றியும், அளவற்ற ஞானத்தைப் பற்றியும் அவருடைய ஆசார்யரான ஆளவந்தாரிடம் அவர் கொண்டிருந்த பக்தியைப் பற்றியும் பலப் பல கதைகள் உண்டு. அக்கதைகளை உங்களுக்கு சொல்ல எனக்கு மிகவும் விருப்பமே. அவற்றைக் கேட்டுக்கொண்டேயிருக்க உங்களுக்கு ஆவல் இருந்தாலும், நேரம்  கடந்தால் உங்கள் பெற்றோர் கவலை கொள்வார்கள் என்பது நினைவிருக்கிறதா? இப்பொழுது இப்பழங்களை பெற்றுக்கொண்டு உங்கள் வீடுகளுக்குத் திரும்புங்கள். அடுத்த முறை நான் இது போல நம் ஆசார்யர்களைப் பற்றி மேலும் பல கதைகளைச் சொல்கிறேன்.

குழந்தைகள், பழங்களைப் பகிர்ந்து கொண்டு திருக்கச்சி நம்பியைப் பற்றியும், மாறனேர் நம்பியைப் பற்றியும் திருக்கோஷ்டியூர் நம்பியைப் பற்றியும் எண்ணியவாறு தங்கள் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றார்கள்.

அடியேன் கீதா ராமானுஜ தாசி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2016/08/beginners-guide-alavandhars-sishyas-2/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/

ஸ்ரீ வைஷ்ணவம் – பால பாடம் – ஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 1

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< பெரிய நம்பி

திருவரங்கப்பெருமாள் அரையர், பெரிய திருமலை நம்பி மற்றும் திருமாலை ஆண்டான்

pancha-acharyas

ஆளவந்தாரின் சீடர்கள்

பராசரனும் வ்யாசனும் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்கு அவர்களின் தோழி வேதவல்லியோடு வருகிறார்கள்.

பாட்டி : வா வேதவல்லி. உள்ளே வாருங்கள் குழந்தைகளே!

வ்யாச : பாட்டி, போன முறை எங்களுக்கு ராமானுஜரைப் பற்றியும் அவருடைய ஆசார்யர்கள் குறித்து மேலும் பிறகு சொல்வதாகச் சொன்னீர்களே.

பராசர : பாட்டி, ராமானுஜருக்கு பெரிய நம்பி மாத்திரமல்லாது வேறு பல ஆசார்யர்களும் இருந்தனர் என்று சொன்னீர்களே ? அவர்கள் எவர் பாட்டி?

பாட்டி : நான் போன முறை சொன்னது போல, ஆளவந்தாருடைய பல சிஷ்யர்கள் இளையாழ்வாரை சம்பிரதாயத்தில் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுள் முக்கியமானவர்கள் 1) திருவரங்கப்பெருமாள் அரையர் 2) திருக்கோஷ்டியூர் நம்பி 3) பெரிய திருமலை நம்பி 4) திருமாலையாண்டான் 5) பெரிய நம்பியுடன் 6) திருக்கச்சி நம்பியும். நாம் போன தடவை பெரிய நம்பியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோமில்லையா? இப்பொழுது நான் மற்ற ஆசார்யர்கள் பற்றியும் அவர்கள் நம் சம்பிரதாயத்திற்குப் புரிந்த அருந்தொண்டினையும் கூறப் போகிறேன்.

பராசர : பாட்டி, ராமானுஜர் ஏன் இத்தனை ஆசார்யர்களைப் பெற்றிருந்தார்?

பாட்டி : அவர்கள் ஒவ்வொருவருமே ஸ்ரீ ராமானுஜரை அத்துணை சிறந்த ஆசார்யராகப் பிற்காலத்தில் விளங்கும் வண்ணம் அவரைச் செதுக்கியவர்கள் ஆவர். திருவரங்கப்பெருமாளரையர்  ராமானுஜரை காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்குக் கொணர்ந்த சிறந்த கைங்கர்யத்தைச் செய்தவர்.

வ்யாச : அது எவ்வாறு நடந்தது? அந்தக் கதையை எங்களுக்குச் சொல்லுங்கள் பாட்டி.

பாட்டி : ராமானுஜர் ஸந்யாஸாச்ரமம் பெற்ற பின்பு காஞ்சிபுரத்தில் வசித்து வந்திருந்தார். அச்சமயம் அரையர் காஞ்சிபுரத்திற்கு சென்று திருக்கச்சி நம்பியிடம் தாம் தேவப்பெருமாளின் முன் அரையர் சேவை செய்ய அனுமதி கோரினார். தேவப்பெருமாள் தம் முன் அரையர் சேவை செய்ய அவருடைய அர்ச்சகர்கள் மூலம் அனுமதி கொடுத்தார். அரையர் ஆழ்ந்த அன்புடனும் பக்தியுடனும் பாசுரங்களை அபிநயத்துடன் பாடினார். எம்பெருமான் மிகுந்த மகிழ்வுற்றவராக அவருக்குப் பல பரிசுகள் கொடுத்தார். அரையரோ தனக்கு அந்தப் பரிசுகள் வேண்டாம் என்றும் தமக்கு வேறொன்று வேண்டும் என்று கூறினார். எம்பெருமான் ஒப்புக்கொண்டு “எது கேட்டாலும் கொடுப்போம், மேலே கேளும்” என்று சொல்ல, அரையர் அப்பொழுது ராமானுஜரைச் சுட்டிக்காட்டி, அவரைத் தம்முடன் ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகச் சொன்னார். “நீர் இவரைக் கேட்கப் போவதை யாம் அறியவில்லை, வேறு எதாவது கேளும்” என்று தேவப் பெருமாள் கூறினார்.  அரையர்  “ஒரே சொல் என்று கொண்ட ஸ்ரீராமனும் நீரே – இதற்கு மேலும் மறுக்காதீர்” என்று பதிலளித்தார். இறுதியில் தேவப் பெருமாள் ஒப்புக்கொண்டு ராமானுஜருக்கு விடை கொடுத்தார்.

வ்யாச: என்ன தந்திரம் பாட்டி ? அரையர் எவ்வளவு சாமர்த்தியமாகப் பெருமாளை ஒப்புக்கொள்ளச் செய்தார்!

பாட்டி: ஆமாம் வ்யாசா. அக்கணமே, அரையர் ராமானுஜருடைய கைகளைப் பற்றி, ஸ்ரீரங்கத்திற்கு பயணத்தைத் தொடங்கினார். இவ்வாறாக, அரையரை ஸ்ரீரங்கத்திற்கு கொணர்ந்ததன் மூலம், ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் உறுதியுடன் மேலும் தழைத்தோங்க வழி வகுத்தார்.

வேதவல்லி : பாட்டி, ஒவ்வொரு ஆசார்யருமே ராமானுஜரை ஒவ்வொரு வழியில் செதுக்கினர் என்று கூறினீர்களே, அரையர் ராமானுஜருக்கு என்ன உபதேசித்தார்?

பாட்டி : ஆளவந்தார் தம்முடைய முக்கிய சிஷ்யர்கள் ஒவ்வொருவரையும் நம் சம்பிரதாயத்தின் வெவ்வேறு அம்சங்களை ராமானுஜருக்குக் கற்பிக்குமாறு பணித்திருந்தார். அவ்வாறு அரையரை நம் சம்பிரதாயத்தின் உட்கருத்தை ராமானுஜருக்கு கற்பிக்குமாறு கூறப்பட்டிருந்தது. அந்நிலையில், ராமானுஜர் அரையரிடம் உபதேசம் பெற்றுக்கொள்ளும் முன் ஒரு அழகான செயலைச் செய்தார். தம்முடைய ஆசார்யரிடம் (அரையர்) உபதேசம் பெற்றுக்கொள்ளும் முன் 6 மாத காலத்துக்கு அவர் கைங்கர்யங்கள் புரிந்து வந்தார். ராமானுஜரின் இந்தத் தொண்டான – தத்தம் ஆசர்யர்களிடம் உபதேசம் பெற்றுக்கொள்ளும் முன் அவருக்கு கைங்கர்யங்கள் புரிந்து வருதலை, கூரத்தாழ்வான், முதலியாண்டான் மற்றும் வேறு பல ஆசார்யர்களின் வாழ்க்கைச் சரித்திரத்திலும் காணலாம். இது அவர்களின் பெற்றுக் கொள்ளப்போகும் உபதேசத்தின் மீதும் அதை உபதேசிப்பவர் மீதும் உள்ள சிரத்தையை நமக்கு அழகாக உணர்த்தும். ராமானுஜர் அரையருக்கு தினந்தோறும் அவர் பருகும் பாலை காய்ச்சிச் சரியான சூட்டில் கொடுப்பதையும் தேவைப்படும் நேரத்தில் அவருக்கு மஞ்சள் காப்புப் பூசிவிடும் தொண்டையும் புரிந்து வந்தார்.

வ்யாச: பாட்டி, மற்ற ஆசார்யர்கள் ராமானுஜருக்கு என்ன உபதேசித்தனர் பாட்டி?

பாட்டி : ஆமாம், அவற்றை ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். திருமலை நம்பி ராமானுஜரின் மாமா ஆவார். திருவேங்கடத்தைச் சேர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களில் அவர்தாம் முதன்மையானவர். அவர் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு தினந்தோறும் தீர்த்தத்தை ஆகாச கங்கையிலிருந்து (திருமலையில் இருக்கும் ஓர் நீராதாரம்) கொண்டு வரும் கைங்கர்யத்தை மேற்கொண்டிருந்தார். அவருடைய ஆசார்யரான ஆளவந்தார் அவரிடம் ஸ்ரீ ராமாயணத்தின் சாரத்தையும் அதன் அழகான பொருளையும் ராமானுஜருக்கு உபதேசிக்குமாறு நியமித்திருந்தார். நம் சம்பிரதாயத்தில் ஸ்ரீராமாயணத்தைச் சரணாகதி சாஸ்திரம்  என்று போற்றிக் கூறுவர். ராமானுஜர் அவதரித்தபொழுது, அவருக்கு இளையாழ்வார் என்று பெயரிட்டது அவருடைய தாய்மாமாவாகிய திருமலை நம்பியே. இது மாத்திரம் அன்று, திருமலை நம்பி ராமானுஜரின் தாயாருடைய சகோதரியின் புத்திரரான கோவிந்தப் பெருமாளையும் திருத்தி நம் சம்பிரதாயத்தில் திருப்பியவர் திருமலை நம்பியே. நம் சம்பிரதாயத்தில் அவருடைய ஞானத்திற்கும் ஆழ்வார்களுடைய பாசுரங்களில் அவருக்கு இருந்த ஈர்ப்பிற்க்கும் நிகரேயில்லை.

பராசர : பாட்டி, எங்களுக்குத் திருமாலையாண்டானைப் பற்றி மேலும் சொல்கிறீர்களா? அவர் ராமானுஜருக்கு எவ்வாறு அனுக்ரஹித்தார்?

பாட்டி :  திருவாய்மொழியின்  பொருளை உபசேதிசிப்பதே திருமாலையாண்டானுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு. ராமானுஜர் ஸ்ரீரங்கத்தை அடைந்தபின், திருக்கோஷ்டியுர் நம்பி அவரைத் திருமாலையாண்டானிடமிருந்து நம்மாழ்வாருடைய திருவாய்மொழியின்   சிறந்த கருத்துகளைக் கேட்டறியுமாறு வழிகாட்டினார். இருவருமே சிறந்த பண்டிதர்களானதால் முதலில் இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும், அவைகள் இணக்கமாகவே தீர்ந்து போயின; ராமானுஜர் ஆழ்வாருடைய பாசுரங்களின் நுண்ணிய உட்கருத்துக்களை அவருடைய ஆசார்யரான திருமாலையாண்டானுடைய அனுக்கிரஹத்தினால் கற்றறிந்தார். திருமாலையாண்டான் அவருடைய ஆசார்யர் ஆளவந்தாரிடத்தில் மிகுந்த பக்தியும் மதிப்பும் கொண்டிருந்தவர். அவர் எக்காலத்திலும் அவருடைய ஆசார்யருடைய உபதேசங்களிலிருந்தோ ,  அவர் காட்டிய மார்க்கத்திலிருந்தோ விலகியதேயில்லை. நம் சம்பிரதாயத்திற்கான  கைங்கர்யங்களின் பொருட்டு அவற்றை ராமானுஜருக்கு அவர் கற்பித்தார்.

வேதவல்லி : திருக்கோஷ்டியூர் நம்பியைப் பற்றியும் திருக்கச்சி நம்பியைப் பற்றியும் சொல்லுங்கள் பாட்டி?

பாட்டி : அவர்களைப் பற்றி நான் அடுத்த தடவை சொல்கிறேன். அவர்கள் குறித்து பல சுவையான கதைகள் உண்டு.

வ்யாசன், பராசரன் வேதவல்லி (ஏகோபித்த குரலில்) : அந்தக் கதைகளை இப்பொழுது சொல்லுங்களேன் பாட்டி.

பாட்டி : நேரமாகி விட்டதே. இன்றைக்கு இது போதும் . வீட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள். நாளை உங்கள் நண்பர்களையும்  மறவாது அழைத்து வாருங்கள்.

குழந்தைகள் ஆசார்யர்களைப் பற்றியும், பாட்டி அடுத்த நாள் சொல்லப் போகும் கதைகளைப் பற்றியும் ஆர்வத்துடன் எண்ணமிட்டவாறும் தங்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்றனர்.

அடியேன் கீதா ராமானுஜ தாசி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2016/07/beginners-guide-alavandhars-sishyas-1/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/

ஸ்ரீ வைஷ்ணவம் – பால பாடம் – பெரிய நம்பி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< ஆளவந்தார்

பராசரனும் வ்யாசனும் பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களுடன், கையில் ஒரு பரிசுடன் அத்துழாயும் வருகிறாள்.

பாட்டி : இங்கு என்ன பரிசு வென்றாய் கண்ணே?

வ்யாஸ : பாட்டி, எங்களுடைய பள்ளியில் நடந்த மாறுவேடப் போட்டியில் அத்துழாய் ஆண்டாள் வேடமிட்டு, திருப்பாவையிலிருந்து சில பாடல்கள் பாடினாள், முதல் பரிசும் வென்றாள்.

பாட்டி : மிக நன்று அத்துழாய்! நீ பாடிய அப்பாசுரங்களை இன்று நான் உங்களுக்குப் பெரிய நம்பியைப் பற்றிச் சொன்னபின்பு கேட்கப் போகிறேன்.

வ்யாசன், பராசுரன், அத்துழாய் மூவரும் ஒன்றாக: இளையாழ்வாரைப் பற்றியும் கூட, பாட்டி!

பாட்டி : ஆமாம். நான் சென்ற முறை சொன்னது போலே, பெரிய நம்பி ஆளவந்தாருடைய பிரதம சிஷ்யர்களில் ஒருவர். அவர் ஸ்ரீரங்கத்தில் மார்கழி மாதத்தில் கேட்டை நக்ஷத்ரத்தில் அவதரித்தவர். அவர்தாம், இளையாழ்வாரை காஞ்சீபுரத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வந்தவர். ஒருபுறம் பெரிய நம்பி இளையாழ்வாரைக் காண காஞ்சிக்குப் பயணிக்க, மறுபுறம் இளையாழ்வாரோ பெரிய நம்பியைக் காணும் பொருட்டு ஸ்ரீரங்கத்திற்குப் புறப்பட்டார்.

பராசர : பாட்டி, இளையாழ்வார் காஞ்சீபுரத்தில் யாதவ ப்ரகாசரிடத்தில் சிஷ்யராயிருக்கையில், அவர் ஏன் ஸ்ரீரங்கத்திற்குப் புறப்பட்டார்?

பாட்டி : மிக நல்ல கேள்வி! ஆளவந்தார், திருக்கச்சி நம்பியை இளையாழ்வாருக்குத் தேவை ஏற்படும் சமயத்தில் தகுந்த வழி காட்டும்படி பணித்தார் என்று நான் சென்ற தடவை சொன்னது நினைவிருக்கிறதா? இளையாழ்வருக்குத் தம்முடைய குரு யாதவ ப்ரகாசருடைய கருத்துக்களில் வேறுபாடுகள் தோன்றத் தொடங்க, அவர் மனத்தில் எழுந்த பல சந்தேகங்கள் கருமேகங்கள் போன்று மறைக்க, அவர் திருக்கச்சி நம்பியை அது குறித்து அணுகினார். பின்பு திருக்கச்சி நம்பி அதை பற்றி யாரிடம் கேட்பார்?

அத்துழாய் : தேவப் பெருமாள்!

பாட்டி : அற்புதம்! இளையாழ்வாருக்கு எப்பொழுதும் அபயம் அளித்து வந்த தேவப் பெருமாள்தான் அவரை பெரிய நம்பியிடம் சென்று, பெரிய நம்பியிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டு அவரின் சிஷ்யராகும்படி கூறினார். இரவின் இருளை காலையில் உதிக்கும் சூரியக் கிரணங்கள் போக்குவது போன்று, இளையாழ்வாரின் மனத்தில் இருந்து வந்து சந்தேகங்களைப் போக்கினார். இவ்வாறாக இளையாழ்வார் காஞ்சிக்குப் புறப்பட, பெரிய நம்பி இளையாழ்வாரைக் காணும் பொருட்டு காஞ்சிக்கு ப்ரயாணம் செய்து கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் மதுராந்தகம் என்னும் இடத்தில் சந்தித்துக் கொள்ள, பெரிய நம்பி இளையாழ்வாருக்கு அங்கேயே பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து, அவரை நம் சம்பிரதாயத்தில் கொணர்ந்தார்.

வ்யாச : அட ஆமாம், அங்கேதானே நம்முடைய மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் இருக்கிறது. போன விடுமுறைக்கு அங்கே சென்றிருந்தோமே! ஆனால், அவர் ஏன் இளையாழ்வாரை சம்பிரதாயத்திற்குள் அழைத்து வர காஞ்சிக்கோ ஸ்ரீரங்கத்திற்கோ செல்லவில்லை ? ஏன் அதனை அங்கே மதுராந்தகத்திலேயே செய்தார்?

பெரிய நம்பி – ஸ்ரீரங்கம்

பாட்டி: பெரிய நம்பி, இளையாழ்வாரின் மீது மிகுந்து அபிமானமும் அன்பும் கொண்டிருந்த ஒரு சிறந்த ஆசார்யர். அவர் இது போன்ற நல்ல செயல்களை தாமதிக்கலாகாது என்பதனை அறிந்திருந்தார்; இளையாழ்வாருக்கும் அதே உணர்வு. குழந்தைகளே, இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன, நம்முடைய சம்பிரதாயத்திற்கு ஸம்பந்தப்பட்ட எந்த நல்ல செயல்களையோ, கைங்கர்யங்கள் செய்வதையோ நாம் காலம் தாழ்த்தவே கூடாது என்பதே! எவ்வளவு சீக்கிரம் செய்கிறோமோ, அவ்வளவு நல்லது. பெருமாளுடைய பக்தர்களிடையே வேறுபாடு பார்க்காமல், ஒவ்வொருவருடனும் அன்புடனும் மதிப்புடனும் நடப்பதே நம்முடைய சம்பிரதாயத்தின் உட்கருத்தாகும்; இதனைப் பெரிய நம்பி அறிந்தவர். அவர் தம்முடைய சிஷ்யரான ராமானுஜர் மீது மிகுந்து அன்பு கொண்டிருந்தார்; நம்முடைய சம்பிரதாயத்தின் விடிவெள்ளியான ராமானுஜருக்காக உயிர் துறக்கும் அளவுக்கு!

வ்யாச : அவர் உயிரைத் தியாகம் செய்தாரா? எதற்காக அவ்வாறு செய்தார் பாட்டி?

பாட்டி : ஒரு சமயம், தன்னுடைய ஆணைகளை ஒப்புக்கொள்வதற்காக ராமானுஜரை சைவ அரசன் தன்னுடைய அரசவைக்கு வருமாறு சொன்னான். ராமானுஜருக்குப் பதிலாக அவருடைய சிறந்த சிஷ்யர்களில் ஒருவரான கூரத்தாழ்வான், தம்முடைய ஆசார்யர் போல கோலம் பூண்டு வயதில் மிகவும் முதிர்ந்த பெரிய நம்பியுடன் அரசவைக்குச் சென்றார். பெரிய நம்பி தம்முடன் தம் மகளையும் அழைத்து சென்றார்; அவள் பெயர் அத்துழாய்!

அத்துழாய் : என் பெயரும் அதுவேதான் !

பாட்டி : ஆமா, அதே தான்! அரசன் தன்னுடைய ஆணைகளுக்குப் பணியுமாறு சொல்ல, பெரிய நம்பியும் கூரத்தாழ்வானும் அவனுடைய ஆணைக்குப் பணிய மறுத்தனர். அரசன் மிகுந்த சினம் கொண்டு, அவர்களுடைய கண்களை பிடுங்குமாறு ஆணையிட்டான். வயதில் மிகவும் முதியவரான பெரிய நம்பி வலி பொறுக்கமுடியாமல் கூரத்தாழ்வானின் மடியில் சாய்ந்து, ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் உயிரை நீத்து, பரமபதத்தை அடைந்தார். இவ்வுயர்ந்த ஆத்மாக்கள் எதனை பற்றியும் கவலைப்படாமல், ஒரு முத்து ஹாரத்தின் நடுவில் பதித்த மாணிக்கம் போன்ற ராமானுஜரைக் காப்பதற்காக அனைத்தையும் தியாகம் செய்தார்கள்? ஒரு ஹாரத்தில் உள்ள முத்துக்களைச் சிதைத்தால் என்னவாகும் ?

பராசரனும் வ்யாசனும் (ஒரே குரலில்): ஹாரமும் சிதைந்து போகும்!

பாட்டி : மிகச்சரி! அது போலத்தான், ராமானுஜர் நம்முடைய ஸம்பிரதாயமான ஒரு முத்து ஹாரத்தின் நடுவில் பதித்த மாணிக்கமாக இருந்தாலும், அனைத்து ஆசார்யர்களும் ஹாரத்தில் இருக்கும் முத்துக்களைப் போல, ஹாரத்தை ஒருங்கே தாங்கி அதன் நடுவில் உள்ள மாணிக்கத்தைக் கவனமாகக் காத்தனர். ஆகையால், நம்முடைய ஆசார்யர்களிடம் நாம் எப்பொழுதும் கடன் பட்டவர்களாவோம்; அவர்களுடைய வாழ்வை நினைத்து மிகுந்த பக்தியோடும் இருக்க வேண்டும்!

பராஸர : பாட்டி, கூரத்தாழ்வானுக்கு என்னவாயிற்று?

பாட்டி : கூரத்தாழ்வான், தம்முடைய கண்களை இழந்தவராய் ஸ்ரீரங்கத்திற்குத் திரும்பினார். அவர் ராமானுஜருடைய சிறந்த சிஷ்யர்களில் ஒருவர்; அவர் வாழ்ந்த காலத்தில் ராமானுஜருடனே எப்பொழுதும் இருந்தார். கூரத்தாழ்வானைப் பற்றியும் ராமானுஜரை பற்றியும் மேலும் உங்களுக்கு அடுத்த முறை நாம் சந்திக்கும் பொழுது சொல்வேன். இப்பொழுது, வேகமாக வீட்டிற்க்குச் செல்லுங்கள். உங்கள் பெற்றோர் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். அப்புறம் அத்துழாய், திருப்பாவைப் பாசுரங்களை நீ சொல்லி அடுத்த முறை நான் கேட்கிறேன்.

குழந்தைகள் பெரிய நம்பியைப் பற்றியும் கூரத்தாழ்வானைப் பற்றியும் எண்ணிக் கொண்டே வீடுகளுக்குத் திரும்பினர்.

அடியேன் கீதா ராமானுஜ தாசி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2016/07/beginners-guide-periya-nambi/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/

ஸ்ரீ வைஷ்ணவம் – பால பாடம் – ஆளவந்தார்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< உய்யக்கொண்டாரும் மணக்கால் நம்பிகளும்

வ்யாசனும் பராசரனும் தங்கள் தோழி அத்துழாயுடன் ஆண்டாள்   பாட்டியின் வீட்டில் நுழைகிறார்கள். ஆண்டாள் பாட்டி தன் கைகளில் பிரசாதத்துடன் அவர்களை வரவேற்கிறார்.

பாட்டி : வா அத்துழாய்! கைகளை அலம்பிக்கொண்டு இந்த பிரசாதத்தை பெற்றுக் கொள். இன்று உத்திராடம், ஆளவந்தாருடைய திருநக்ஷத்ரம்.

பராசர : பாட்டி, போன முறை நீங்கள் எங்களுக்கு யமுனைத்துறைவரைப் பற்றிக் கூறுவதாகச் சொன்னீர்களே, நினைவிருக்கிறதா?

பாட்டி : ஆமாம்! எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நீங்கள் நம்முடைய சிறந்த ஆசார்யர் பற்றி ஞாபகமாய் கேட்பது எனக்கு மகிழ்வளிக்கிறது. இன்று அவரது திருநக்ஷத்ரம். அவருடைய மேன்மைகளைப் பற்றிப் பேசி அறிந்து கொள்ளத் தக்க தருணமே.

வ்யாச : ஆனால் பாட்டி, ஆளவந்தாருடைய திருநக்ஷத்ரம் என்றல்லவா கூறினீர்கள்?

 ஆளவந்தார்காட்டு மன்னார் கோயில்

பாட்டி : ஆமாம். காட்டு மன்னார் கோயிலில் அவதரித்த யமுனைத்துறைவர் பிற்காலத்தில் ஆளவந்தார் என்று பிரசித்தி பெற்று விளங்கினார். அவருடைய தகப்பனார் பெயர் ஈச்வர முனி என்பதாகும். ஆளவந்தார் நாதமுனிகளின் பேரனாவார். இவர் மஹாபாஷ்ய பட்டரிடம் கல்வி பயின்றார். அவர் ஆளவந்தார் என்று சிறப்பாக அழைக்கப்பட்டதற்கு சுவாரஸ்யமான சரித்திரம் ஒன்று உண்டு. அக்காலத்தில் பண்டிதர்கள்,  தலைமைப் பண்டிதருக்கு வரி செலுத்தும் வழக்கம் இருந்து வந்தது. அவ்வாறு, அரச புரோஹிதர் ஆக்கியாழ்வான், தம்முடைய பிரதிநிதிகளை எல்லாப் பண்டிதர்களிடமும் அனுப்பி தமக்கு வரி செலுத்துமாறு செய்தி அனுப்பினார். மஹாபாஷ்ய பட்டர் இத்தகவலால் கவலையுற்றிருக்க யமுனைத்துறைவர் தாம் அதனை கவனித்துக் கொள்வதாக கூறினார். “மலிவான விளம்பரம் தேடும் புலவர்களை அழிப்பேன்” என்று பொருள் படும் ஒரு ச்லோகச் செய்தியை அனுப்பினார்! இந்த செய்தியைக் கண்டு ஆக்கியாழ்வான் சினம் கொண்டு யமுனைத்துறைவரை அரசவைக்கு அழைத்து வருமாறு பணித்தார். யமுனைத்துறைவரோ தமக்கு உரித்த மரியாதைகளை அளித்தால் மாத்திரமே வருவதாகக் கூறினார். எனவே, அரசுனும் பல்லக்கு அனுப்ப யமுனைத்துறைவரும் அரசவைக்கு வந்து சேர்ந்தார். விவாதம் தொடங்கும் முன்பு, பட்டத்து அரசி அரசனிடம் யமுனைத்துறைவரே உறுதியாக வெல்வார் என்றும் அவர் தோற்று விட்டால், அவள் தான் அரசுனுடைய சேவகியாக இருப்பாள் என்றும் கூறினாள். அரசனோ, ஆக்கியாழ்வானே வெல்வார் என்று உறுதியாக எண்ணியிருந்ததால், ஒருகால் யமுனைத்துறைவர் வென்றாரானால், தமது ராஜ்ஜியத்தில் பாதியை அவருக்குக் கொடுப்பதாகவும் கூறினான். இறுதியில் தம்முடைய ஞானத்தின் வன்மையினால், யமுனைத்துறைவர் ஆக்கியாழ்வானை வாதத்தில் வென்றார். ஆக்கியாழ்வானும் யமுனைத்துறைவர் பால் ஈர்க்கப்பட்டவராய், அவருக்கே சிஷ்யரானார். அவர் தோற்றிருந்தாரானால், அரசி ஒரு சேவகியாகியிருக்க வேண்டுமல்லவா – அதிலிருந்து அவளைக் காத்ததால், அவருக்கு “ஆளவந்தார்” என்று அரசி பெயரிட்டழைத்தாள், அவளும் அவருக்கு சிஷ்யையானாள். அரசன் வாக்களித்தபடி அவருக்கு ராஜாங்கத்தில் பாதியும் கிடைத்தது.

வ்யாச : பாட்டி, யமுனைத்துறைவருக்கு நாட்டில் பாதி கிடைத்திருந்தால், அவர் அரசாட்சியல்லவா செய்திருப்பார். நம்முடைய சம்பிரதாயத்தில் எவ்வாறு ஈடுபட்டார்?

அத்துழாய் : அவரை சம்பிரதாயத்தில் அழைத்துக் கொண்டு வந்தவர் உய்யக்கொண்டாருடைய சிஷ்யரான மணக்கால் நம்பியாவார். உய்யக்கொண்டாருடைய சொற்படியே ஆளவந்தாரை நம்முடைய சம்பிரதாயத்தில் ஈர்க்கும் முயற்சியை மணக்கால் நம்பி மேற்கொண்டார்.

பாட்டி : அற்புதம் அத்துழாய்! மிகச்சரியாகச் சொன்னாய்! இது உனக்கு எவ்வாறு தெரியும்?

அத்துழாய்: என்னுடைய அம்மாவும் ஆசார்யர்களைப் பற்றியும் பெருமாளைப் பற்றியும் எனக்கு கதைகள் சொல்வார்.

பாட்டி : ஸ்ரீ ராமானுஜரை தேவப் பெருமாளின் கடாக்ஷத்துடன் நம்முடைய சம்பிரதாயத்தில் அழைத்து வந்தவர் ஆளவந்தாரே.

பராசர : ஆனால் பாட்டி, தேவப்பெருமாள் எவ்வாறு ஆளவந்தாருக்கு உதவினார்?

பாட்டி : அது காஞ்சீபுரத்தில் நடந்தது; அங்கே ஆளவந்தார் இளையாழ்வாரை வரதராஜப் பெருமாள் கோயிலில் கண்டார். அப்பொழுது அவர் ராமானுஜர் என்று பெயர் பெறவில்லை . இளையாழ்வார் அவருடைய குருவான யாதவப் பிரகாசரிடம் பயின்று வந்தார். ஆளவந்தார் தேவப்பெருமாளிடம் இளையாழ்வாரை சம்பிரதாயத்திற்கு அடுத்த தலைவராக ஆக்கிக் கொடுக்கும்படி பிரார்த்தித்தார்.  ஆக, ஒரு தாய் தன் குழந்தைக்கு பரிவூட்டி வளர்ப்பது போன்றே, தேவப்பெருமாளே இளையாழ்வாரை வளர்த்தார். இத்தகைய மேன்மையான ஆளவந்தாருடைய அனுக்கிரகத்தினாலேயே, இளையாழ்வார் சம்பிரதாயத்திற்கு மேன்மையிலும் மேன்மையான கைங்கர்யங்கள் பிற்காலத்தில் புரிந்தார். மேலும் ஆளவந்தார் இளையாழ்வாருக்குத் தேவை எழும் நேரத்தில் வழிகாட்டியாக இருக்கும்படி திருக்கச்சி நம்பியையும் பணித்தார். திருக்கச்சி நம்பியை நினைவிருக்கிறதா?

வ்யாச : ஓ! அவர்தானே பாட்டி தேவப் பெருமாளுக்கு திருவாலவட்ட (விசிறி) கைங்கர்யம் செய்து கொண்டும், தேவப்பெருமாளிடமும் தாயாரிடமும் உரையாடிக் கொண்டிருந்தவர்? நாமும் திருக்கச்சி நம்பியைப் போன்றே பெருமாளிடம் பேச முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அப்படியானால் ஆளவந்தாரும் இளையாழ்வாரும் சந்தித்துக் கொண்டார்களா? ஆளவந்தார் இளையாழ்வாரைத் தம்முடைய சிஷ்யராக ஏற்றுக் கொண்டாரா?

பாட்டி : துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் சந்தித்துக் கொள்ளவே இல்லை ! இளையாழ்வார் ஆளவந்தாரிடம் சிஷ்யராகும் பொருட்டு ஸ்ரீரங்கத்தை வந்து அடையும் முன்பே, ஆளவந்தார் இவ்வுலகைத் துறந்து பரமபதத்தை அடைந்து விட்டார். அவர்களால் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள இயலவில்லையென்றாலும், இளையாழ்வார் ஆளவந்தாருடைய எண்ணங்களைத் தாம் நிறைவேற்றுவதாக பிரதிக்ஞை மேற்கொண்டார். குழந்தைகளே, நான் உங்களை அடுத்த முறை சந்திக்கும்பொழுது ஆளவந்தாருடைய சிஷ்யர்களில் ஒருவரும், பிற்காலத்தில் இளையாழ்வாருடைய ஆசார்யருமாக ஆகி அவரை வழி நடத்திய பெரிய நம்பியைப் பற்றிக் கூறுகிறேன். ஆளவந்தாருக்கு பல சிஷ்யர்கள் இருந்தனர்; அவர்கள் அனைவரும் சேர்ந்தே இளையாழ்வாரை சம்பிரதாயத்தின்பால் ஈடுபடுத்தினர். பெரிய நம்பி மட்டுமல்லாது, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமாலையாண்டான், மாறனேரி நம்பி, திருக்கச்சி நம்பி, திருவரங்கப் பெருமாளரையரும் இன்னும் பலரும் ஆளவந்தாருக்குச் சிஷ்யர்களாக இருந்தனர்.

வ்யாஸன், பராசரன், அத்துழாய் மூவரும்: கேட்பதற்கு  வெகு ஆவலாக இருந்தது பாட்டி. எங்களுக்குப் பெரிய நம்பியைப் பற்றியும் இளையாழ்வாரைப் பற்றியும் சொல்வீர்களா?

பாட்டி: எனக்கு அதை சொல்வதில் மகிழ்ச்சியே என்றாலும், இப்பொழுது வெளியே இருட்டி விட்டது பாருங்கள். உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள்.

குழந்தைகள் ஆளவந்தாரைப் பற்றி எண்ணமிட்டவாறே குதூகலமாக தங்கள் வீடுகளுக்குக் கிளம்பிச் சென்றனர்.

அடியேன் கீதா ராமானுஜ தாசி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2016/07/beginners-guide-alavandhar/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/

 

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – உய்யக்கொண்டாரும் மணக்கால் நம்பிகளும்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< நாதமுனிகள்

வ்யாசனும் பாராசரனும் தம்முடைய தோழியான வேதவல்லியுடன் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள். தம்முடைய கைகளில் பிரசாதத்துடன் ஆண்டாள் பாட்டி அவர்களை வரவேற்கிறார்.

ஆண்டாள் பாட்டி : இந்த பிரசாதத்தை பெற்றுக்கொண்டு உங்களுடைய புதிய தோழியைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்.

வ்யாச : பாட்டி, இவள் தான் வேதவல்லி, விடுமுறையைக் கழிக்க காஞ்சீபுரத்திலிருந்து வந்துள்ளாள். அவளும் நம்முடைய ஆசார்யர்களின் மேன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று எங்களுடன் அழைத்து வந்தோம்.

பராசர : பாட்டி, இன்று ஏதாவது பண்டிகை நாளா என்ன?

ஆண்டாள் பாட்டி : இன்று உய்யக்கொண்டாருடைய திருநக்ஷத்ரம் ஆகும். அவரை புண்டரீகாக்ஷர் என்றும் பத்மாக்ஷர் என்றும் அழைப்பார்கள்.

வ்யாச: பாட்டி, இந்த ஆசார்யரைப் பற்றி எங்களுக்குச் சொல்வீர்களா?

ஆண்டாள் பாட்டி: அவர் திருவெள்ளறை திவ்யதேசத்தில் சித்திரை மாதம், கார்த்திகை நக்ஷத்ரத்திலே அவதரித்தவர். அவருக்கு திருவெள்ளறை  திவ்ய தேசத்து எம்பெருமானின் திருநாமமே சூட்டப்பட்டது. இவரும், குருகைகாவலப்பனும் நாதமுனிகளின் பிரதம சீடர்கள். நாதமுனிகளுக்கு நம்மாழ்வாரின் அருளால் அஷ்டாங்கயோகம் சித்தித்து இருந்தது.

பராசர: அது என்ன யோகம் பாட்டி?

ஆண்டாள் பாட்டி: அது யோகத்தில் ஒருவகை ; இந்த யோகத்தின் மூலம் ஒருவர் தேகத்தைக் குறித்த எண்ணமோ உணர்வோ இன்றி பகவானை இடைவிடாது உணர முடியும். நாதமுனிகள் குருகைகாவலப்பனுக்கு அஷ்டாங்கயோகம் கற்பித்து உய்யக்கொண்டாரும் கற்க விரும்புகிறாரா எனக் கேட்க, உய்யக்கொண்டாரோ “பிணம் கிடக்க மணம் புணரலாமோ?” என்று சொன்னாராம்.

பராச்ர: பாட்டி, அப்படியென்றால், ஒருவர் இறந்து கிடக்கும்போது அங்கே யாரும் மகிழ்ந்து இருக்க முடியாது என்றல்லவா சொன்னார்? இறந்து போனது எவர் பாட்டி?

ஆண்டாள் பாட்டி: அற்புதம் பராசரா ! அவர் சொன்னதன் பொருள் என்னவென்றால், உலகிலுள்ள பல மக்களும் சுக துக்கங்களில் உழன்று கொண்டிருக்க, தனியாக பகவானை தாம் மட்டும் அனுபவிப்பதை எவ்வாறு சிந்திக்க இயலும் என்பதே. இதைக் கேட்டவுடன் நாதமுனிகள் அளவற்ற ஆனந்தமடைந்து உய்யக்கொண்டாரின் பெருந்தன்மையை சிலாகித்தார். அவர் உய்யக்கொண்டாரையும் குருகை காவலப்பனையும் பிற்காலத்தில் தோன்ற இருக்கும் ஈச்வரமுனியுடைய புதல்வருக்கு (நாதமுனிகளின் பேரன்) அஷ்டாங்க யோகத்தையும், திவ்ய ப்ரபந்தத்தையும் பொருளுடன் கற்பிக்கும்படி கட்டளையிட்டார்.

வ்யாஸ: உய்யக்கொண்டாருக்கு சீடர்கள் இருந்தனரா பாட்டி?

பாட்டி : அவருடைய ப்ரதம சிஷ்யர் மணக்கால் நம்பி ஆவார். அவர் பரமபதத்திற்கு ஏகும் சமயத்தில், தமக்கு பின் சம்பிரதாயத்தைக் காக்கும்படி மணக்கால் நம்பியை நியமித்தார். பின்வரக் கூடிய ஆசார்யர்களின் வரிசையில்  ஈச்வரமுனியுடைய குமாரரான யமுனைத்துறைவரை நியமிப்பதன் பொருட்டு அவரைத் தயார் செய்யும்படியும் மணக்கால் நம்பியைப் பணித்தார்.

 

பாட்டி : அவருடைய இயற்பெயர் ராமமிச்ரர் என்பதாகும். அவர் மணக்கால் என்னுமிடத்தில், மாசி மாதம் மக நக்ஷத்திரத்தில் அவதரித்தார். மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரிடத்தில் மிகுந்த பக்தி கொண்டிருந்தது போலவே, மணக்கால் நம்பியும் உய்யக்கொண்டாரிடத்தில் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். உய்யக்கொண்டாருடைய பத்தினியாரின் மறைவுக்குப் பின்பு , ஆசார்யருக்குத் தளிகை செய்யும் கைங்கர்யத்தையும் செய்து, அவருடைய ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்து கொண்டிருந்தார். ஒரு முறை உய்யக்கொண்டாருடைய குமாரத்திகள் நதியில் நீராடிவிட்டு திரும்பும்பொழுது சகதியைக் கடக்க வேண்டி வந்தது. சேற்றில் நடக்க அவர்கள் தயங்க, ராம மிச்ரர் தாமே அந்த சகதியின் மீது கிடந்து, அப்பெண்களை தம் முதுகின் மீது நடந்து கடக்கச் செய்தார். இதை கேட்ட உய்யக்கொண்டார், நம்பியின் ஆழ்ந்த பக்த்தியை உணர்ந்து  மிகவும் மகிழ்ந்தார்.

குழந்தைகள் ஒருமித்த குரலில்: பாட்டி, அடுத்த முறை நாம் சந்திக்கும்போது, எங்களுக்கு யமுனைத்துறைவரின் கதையைக் கூறுகிறீர்களா?

பாட்டி மகிழ்ந்து “அடுத்த தடவை அதனைச் சொல்ல நான் ஆர்வமாக இருக்கிறேன்” என்று சொல்ல குழந்தைகள் தத்தமது வீட்டிற்குக் கிளம்பினார்கள்.

அடியேன் கீதா ராமானுஜ தாசி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2015/10/beginners-guide-uyakkondar-and-manakkal-nambi/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – நாதமுனிகள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< ஆசார்யர்கள் – ஓர் அறிமுகம்

வ்யாசனும் பராசரனும் பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்புகிறார்கள். அவர்களின் தோழியான அத்துழாயையும் உடன் அழைத்து வருகிறார்கள்.

ஆண்டாள் பாட்டி: உங்களுடன் வந்திருப்பது யார்?

வ்யாச: பாட்டி, இவள்தான் எங்களுடைய தோழி, அத்துழாய். நீங்கள் எங்களுக்குச் சொன்ன வைபவங்களில் சிலவற்றை இவளுடன் பகிர்ந்து கொண்டோம். அவளுக்கும் உங்களிடமிருந்து இவற்றைப் பற்றி மேலும் கேட்க ஆவல் தோன்றி விட்டது. எனவே, இவளையும் எங்களுடன் அழைத்து வந்தோம்.

ஆண்டாள் பாட்டி: வா அத்துழாய். நீங்கள் இருவரும் என்னிடமிருந்து கேட்டதோடு மட்டுமின்றி அவற்றை உங்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பராசர: பாட்டி, நாங்கள் ஆசார்யர்கள் பற்றிக் கேட்டு அறிந்து கொள்ள வந்தோம்.

ஆண்டாள் பாட்டி: நல்லது. இன்று நான் நம்முடைய சம்பிரதாயத்தின் சிறப்பை நம்மாழ்வாருடைய அனுக்கிரகத்தினால் மீட்டுக் கொடுத்த ஆசார்யரைப் பற்றி உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

அத்துழாய்: அவர் யார் பாட்டி?

ஆண்டாள் பாட்டி, அத்துழாய்க்கும், வ்யாசனுக்கும், பராசரனுக்கும் சிற்றுண்டிகளையும் பழங்களையும் எடுத்து வருகிறார்.

ஆண்டாள் பாட்டி: அவர் நம்முடைய நாதமுனிகள் தான். வீரநாராயணபுரத்தில் (காட்டுமன்னார் கோயில்) ஈச்வர பட்டாழ்வாருக்குப் புதல்வராக ஸ்ரீமன் நாதமுனிகள் அவதரித்தார். அவரை ஸ்ரீ ரங்கநாதமுனி என்றும் நாதப்ரஹ்மர் என்றும் அழைப்பர். அவர் தெய்வீக இசையிலும் அஷ்டாங்க யோகத்திலும் நிபுணராக இருந்தார். மேலும், இன்றளவிலும் ஸ்ரீரங்கம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற ஸந்நிதிகளில் நடந்து வரும் அரையர் சேவையை ஏற்படுத்தியவர் அவரே!

பராசர: நம்முடைய பெருமாளுக்கு முன்பாக சேவிக்கும் அரையர் சேவையைப் பல முறை பார்த்துள்ளோம் பாட்டி. அரையர் ஸ்வாமி தம் கையில் தாளங்களுடன் மிக அழகாகப் பாடுவார்.

ஆண்டாள் பாட்டி: ஆமாம்!, ஓர் நாள், மேல்நாட்டிலிருந்து (திருநாராயணபுரம் பிரதேசம்) ஒரு ஸ்ரீ வைஷ்ணவக் குழு காட்டு மன்னார் கோயிலுக்கு வந்து திருவாய்மொழியிலிருந்து “ஆராவமுதே….” என்னும் பதிகத்தை மன்னனார் (காட்டு மன்னார் கோவில் எம்பெருமான்) முன்பு பாடிச் சேவித்தனர். பாசுரங்களின் பொருளில் ஈர்க்கப்பட்டவரான நாதமுனிகள், அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களிடம் அந்த பாசுரங்களைப் பற்றி மேலும் கேட்க, அவர்களோ, அந்த 11 பாசுரங்களுக்கு மேல் அறியவில்லை என்றனர். மேலும் தெரிந்து கொள்ள, அவர்கள் நாதமுனிகளை திருக்குருகூருக்குச் செல்லும்படி கூறினர். நாதமுனிகள் மன்னனாரிடமிருந்து விடை பெற்று, ஆழ்வார் திருநகரியைச் சென்றடைந்தார்.

அத்துழாய், வ்யாசன், பராசரன் மூவரும் சிற்றுண்டிகளை உண்டு முடித்து நாதமுனிகளைப் பற்றி ஆழ்ந்து கேட்கின்றனர்.

ஆண்டாள் பாட்டி: அங்கே அவர் மதுரகவியாழ்வாரின் சிஷ்யரான பராங்குச தாசரைக் கண்டார். அவர் நாதமுனிகளுக்குக் கண்ணிநுண் சிறுத்தாம்பு ப்ரபந்தத்தை  உபதேசித்து, அப்பாசுரங்களைத் திருப்புளியாழ்வாருக்கு (நம்மாழ்வார் வசிப்பிடம்) முன்பாக 12000 முறை தொடர்ந்து அனுசந்திக்கும்படி கூறினார். நாதமுனிகள் அஷ்டாங்க யோகத்தை அறிந்தவராதலால்,  நம்மாழ்வரைத் தியானித்து, கண்ணிநுண் சிறுத்தாம்பை 12000 முறைகள் மிகுந்த சிரத்தையுடன் அனுசந்தித்தார். நாதமுனிகளின் பிரார்த்தனைக்கு உகந்து நம்மாழ்வார், அங்கே தோன்றி, அவருக்கு அஷ்டாங்க யோகத்தில் பூரண ஞானத்தையும், 4000 திவ்ய ப்ரபந்தத்தையும், அருளிச் செயல்களின் (திவ்ய ப்ரபந்தம்) விளக்கங்களையும் அவருக்கு அனுக்கிரகித்தார்.

வ்யாச: அப்படியென்றால், ‘ஆராவமுதே’ பதிகம், 4000 திவ்ய ப்ரபந்தத்தின் ஒரு பகுதியா?

ஆண்டாள் பாட்டி: ஆமாம், ஆராவமுதே பதிகம், திருக்குடந்தை எம்பெருமானைப் பற்றியது. அதன் பின்பு, நாதமுனிகள்,  காட்டுமன்னார் கோயிலுக்குத் திரும்பி மன்னனாரிடம் 4000 திவ்ய ப்ரபந்தத்தைச் சமர்ப்பித்தார். மன்னனாரும் நாதமுனிகளிடத்தில் மிகவும் உகப்புடன் திவ்ய ப்ரபந்தத்தைப் பகுத்து அவற்றை மக்களிடையே அடையச் செய்யுமாறு கூறினார். அவ்வாறே அவரும் அருளிச் செயல்களுக்கு இசை கூட்டி, தம்முடைய மருமக்களாகிய கீழையகத்தாழ்வானுக்கும் மேலையகத்தாழ்வானுக்கும் கற்பித்து, பிறருக்குச் சென்றடையும்படி செய்தார். அது மாத்திரமின்றி, தம்முடைய அஷ்டாங்க யோக சித்தியினால், நம்முடைய சம்பிரதாயத்தில் பிற்காலத்தில் தோன்றக்கூடிய ஒரு சிறந்த ஆசார்யரைப் பற்றியும் அறிந்தார். அடுத்த முறை, அவரைப் பற்றி நான்  மேலும் உங்களுக்கு  கூறுவேன்.

குழந்தைகள் ஒருமித்த குரலில்: அவசியம் பாட்டி. அதனைப் பற்றி அறிய நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

அத்துழாய் ஆண்டாள் பாட்டியை நமஸ்கரித்து ஆசி பெற்று தன் வீட்டுக்கு திரும்பிச்செல்ல, வ்யாசனும் பராசரனும் தம்முடைய பள்ளிப் பாடங்களை படிக்க செல்கிறார்கள்.

அடியேன் கீதா ராமானுஜ தாசி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2015/06/beginners-guide-nathamunigal/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஆசார்யர்கள் – ஓர் அறிமுகம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< திவ்ய ப்ரபந்தம் – ஆழ்வார்களின் அரும் பரிசு

ஆசார்ய ரத்ன ஹாரம் – ஆசார்யர்களை ரத்னமாகக் கொண்ட ஒரு ஹாரம்

பராசரனும் வ்யாசனும் பாட்டியைக் காண சிறிது காலம் கழித்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய விடுமுறைக்கு தங்கள் பாட்டி தாத்தாவின் ஊரான திருவல்லிக்கேணிக்கு சென்று திரும்பியிருக்கின்றனர்.

ஆண்டாள் பாட்டி: பராசரா! வ்யாசா! வாருங்கள். திருவல்லிக்கேணியில் விடுமுறை நாட்களை நன்றாக கழித்தீர்களா? .

பராசர: ஆமாம் பாட்டி! அங்கே மிக நன்றாக இருந்தது. நாங்கள் தினமும் பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலுக்குச் சென்று வந்தோம். அது மட்டுமின்றி, அருகிலுள்ள காஞ்சிபுரம் போன்ற பல திவ்ய தேசங்களுக்குச் சென்று வந்தோம்.  ஸ்ரீபெரும்பூதூருக்குச் சென்று எம்பெருமானாரையும் சேவித்து வந்தோம்.

ஆண்டாள் பாட்டி: கேட்பதற்கே மிக நன்றாக இருக்கிறதே. ஸ்ரீபெரும்பூதூர், ராமானுஜர் அவதரித்த ஸ்தலம் ஆகும். அவர் மிக முக்கியமான ஆசார்யர்களில் ஒருவர். அவரைப் பற்றி மேலும் உங்களுக்கு கூடிய சீக்கிரத்திலேயே சொல்வேன். நான் கடந்த முறை உங்களுக்கு ஆசார்யர்களைப் பற்றிச் சொல்லப் போவதாகச் சொன்னேன் இல்லையா? இப்பொழுது சுருக்கமாக அவர்களைப் பற்றி அறிமுகப் படுத்துகிறேன். “ஆசார்ய” என்னும் சொல்லின் பொருளை நீங்கள் அறிவீர்களா?

வ்யாச: ஆசார்யர் என்பவரும் குரு என்பவரும் ஒருவர்தானே பாட்டி?

ஆண்டாள் பாட்டி: ஆமாம். ஆசார்ய என்பதும் குரு என்பதும் ஒத்த சொற்களே. ஆசார்யர் என்பவர் மெய்ப்பொருள் என்ன என்பதனைக் கற்றறிந்து, அதனைத் தான் அனுஷ்டித்து பிறருக்கும் கற்பித்து அவ்வழியில் நடத்துபவர் ஆவார். குரு என்பவர் நம்முடைய அறியாமையை போக்குபவர் ஆவார்.

பராசர: மெய்ப் பொருள் என்பது என்ன பாட்டி?

ஆண்டாள் பாட்டி: வெகு புத்திசாலித்தனமான கேள்வி கேட்டாய் பராசரா! மெய்ப் பொருள் என்பது நாம் யார் என்பதையும், நம்முடைய கடமைகளையும் பொறுப்புகளையும் அறிந்து கொள்வதே. உதாரணமாக, உங்கள் பாட்டியாக எனக்கு உங்களுக்கு நல்ல விஷயங்களையும் குணங்களையும் கற்பிக்கும் கடமை உண்டு. இதை நான் நன்றாக உணர்ந்து கொள்கிறேனே – அதுவே உண்மை அறிவு. அதே போல, நாம் அனைவரும் பகவானுக்கு கீழ்ப்பட்டவர்கள், அவரே நம்மனைவருக்கும் ஸ்வாமி (உடையவர்). அவர் நம்மனைவருக்கும் எஜமானராதலால், அவருக்கு நாம் பணிவிடைகள் செய்ய வேண்டும்; அவரைச் சார்ந்தவர்களகிய நமக்கு, அவருக்கு சேவகம் செய்யும் கடமை உண்டு. இதுவே ‘மெய்ப் பொருளாக’ நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியதாகும். இதனைத் தெரிந்து, இதனைப் பிறருக்கு நடைமுறையில் கற்பிப்பவர்களை ஆசார்யர்கள் என்று அழைக்கிறோம். இந்த மெய்ப் பொருள், வேதம், வேதாந்தம் மற்றும் திவ்ய ப்ரபந்தங்களில் காண்பித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வ்யாச: ஓஹோ! அப்படியானால், முதல் ஆசார்யர் யார்? யாராவது ஒருவர் இந்த உண்மைப் பொருளை முதலில் அறிந்திருந்தால் தானே பிறருக்குக் கற்பிக்க இயலும்.

ஆண்டாள் பாட்டி: எவ்வளவு அறிவார்ந்த கேள்வி கேட்டாய் வ்யாசா. நம்முடைய பெரிய பெருமாள் தான் முதல் ஆசார்யர். நாம் ஆழ்வார்களைப் பற்றி முன்பே பார்த்து விட்டோம். அவர்களுக்கு உண்மையான அறிவை அளித்தது பெருமாளே. ஆழ்வார்களின் வாழ்க்கை முறையில் அவர்கள் பெருமாள் மீது கொண்டிருந்த ஈடுபாட்டையும், அவர்களுடைய திவ்ய ப்ரபந்த அருளிச் செயல்களிள் மெய்ப் பொருளையும் வெளிப்படுத்தினர்.

பராசர: பாட்டி! ஆழ்வார்களின் காலத்திற்குப் பிறகு என்ன நடந்தது?

ஆண்டாள் பாட்டி: ஆழ்வார்கள் பூமியில் சில காலம் இருந்து பிறகு நித்யமாக பெருமாளுடன் இருக்கும் பொருட்டு பரமபதத்திற்கு ஏகினர். இதன் பிறகு நாளடைவில் ஞானம் தேய்ந்து திவ்ய ப்ரபந்தங்கள் கிட்டத்தட்ட மறைந்தே போன ஒரு இருண்ட காலம் இருந்தது. ஆனால் நம்மாழ்வாருடைய காருண்யத்தினால் நமக்கு திவ்ய ப்ரபந்தம் மீண்டும் கிடைத்து. பிற்காலத்தில் பல ஆசார்யர்கள் மூலமாகப் பரவியது. அந்த ஆசார்யர்களைப் பற்றி பின்னால் சொல்கிறேன்.

பராசரனும் வ்யாசனும்: அதனை அறிந்து கொள்ள ஆர்வமாகக் காத்திருக்கிறோம் பாட்டி.

ஆண்டாள் பாட்டி: நல்லது, உங்கள் பெற்றோர் உங்களை இப்பொழுது அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் அடுத்த முறை சந்திக்கும் பொழுது ஆசார்யர்கள் பற்றி மேலும் சொல்கிறேன்.

அடியேன் கீதா ராமானுஜ தாஸி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2015/06/beginners-guide-introduction-to-acharyas/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திவ்ய ப்ரபந்தம் – ஆழ்வார்களின் அரும் பரிசு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< திருமங்கை ஆழ்வார்

 

ஆண்டாள் பாட்டி கண்ணி நுண் சிறுத்தாம்பு ப்ரபந்தத்தைச் சேவித்துக் கொண்டிருக்கிறார். பராசரனும் வ்யாசனும் அங்கே வருகிறார்கள்.

வ்யாச: பாட்டி! இப்பொழுது நீங்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?

ஆண்டாள் பாட்டி: வ்யாசா! நான் திவ்ய ப்ரபந்தத்தில் ஒன்றான கண்ணி நுண் சிறுத்தாம்பு என்னும் ப்ரபந்தத்தைச் சேவித்துக் கொண்டிருந்தேன்.

பராசர: பாட்டி! இது மதுரகவி ஆழ்வார் இயற்றியது தானே?

ஆண்டாள் பாட்டி: ஆமாம். வெகு நன்றாக நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறாயே!

வ்யாச: பாட்டி! ஆழ்வார்களின் சரித்திரத்தை கூறும் பொழுது ஒவ்வொரு ஆழ்வாரும் சில திவ்ய ப்ரபந்தத்தை இயற்றியுள்ளார் என்று கூறினீர்களே. திவ்ய ப்ரபந்தங்களைப் பற்றி எங்களுக்கு விவரமாகச் சொல்லுங்கள் பாட்டி.

ஆண்டாள் பாட்டி: நிச்சயம் சொல்லுகிறேன் வ்யாசா. இவற்றை விவரமாக அறிந்து கொள்வதில் நீங்கள் ஆர்வமாக இருப்பது மிகவும் நல்ல விஷயம். நம்முடைய ஸ்ரீரங்கநாதரும் ஸ்ரீரங்கநாச்சியாரும் திவ்ய தம்பதி என்று அழைக்கப்படுகிறார்கள். பகவானால் அனுக்கிரகிக்கப் பட்டவர்கள் ஆதலால், ஆழ்வார்கள் திவ்யசூரிகள் (தெய்விகமான புனிதமான பிறவிகள்) என்று அழைக்கப் படுவார்கள். ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்கள் (தமிழ் ச்லோகங்கள்) திவ்ய ப்ரபந்தம் (பக்தி இலக்கியம்) என்று அழைக்கப் படுகிறது. ஆழ்வார்களுடைய திவ்ய ப்ரபந்தங்களால் சிறப்பிக்கப்பட்ட க்ஷேத்திரங்கள் திவ்ய தேசம் (திவ்ய ஸ்தலம்) என்று அழைக்கப் படுகிறது.

பராசர: ஆஹா! எவ்வளவு ஆர்வமூட்டும் விஷயம் இது பாட்டி. நீங்கள் திவ்ய ப்ரபந்தங்கள் என்று சொல்கிறீர்களே, அவை என்ன பாட்டி?

ஆண்டாள் பாட்டி: திவ்ய ப்ரபந்தத்தின் பிரதான நோக்கமே எம்பெருமானுடைய கல்யாண குணங்கள், அதிலும் முக்கியமாக பெரிய பெருமாள், திருவேங்கடமுடையான் போன்ற அர்ச்சாவதார எம்பெருமான்களின் கல்யாண குணங்களை  விரித்து உரைப்பது தான், .

வ்யாச: ஆனால், வேதம் தான் நமக்கு மிகவும் முக்கியம் என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோமே பாட்டி. வேதத்திற்கும் திவ்ய ப்ரபந்தத்திற்கும் உள்ள சம்பந்தம்தான் என்ன?

ஆண்டாள் பாட்டி: பெருமாள் ஸ்ரீவைகுன்டத்திலிருந்து அயோத்தியில் ஸ்ரீராமனாக அவதரிக்கும்பொழுது வேதமே ஸ்ரீராமாயணமாக தோன்றியது என்றோர் விளக்கமுண்டு. அது போலவே, பெருமாள் அர்ச்சாவதார எம்பெருமானாக தோன்றும் பொழுது, வேதம் ஆழ்வார்களின் திருவாக்கில் திவ்ய ப்ரபந்தமாகத் தோன்றியது. நாம் இருக்கும் நிலையிலிருந்து பரமபதநாதனைப் பற்றி அறிந்து கொள்வது இயலாதது. எனவே, நாம் எளிதாக நம்முடைய இடத்திலிருந்தே அர்ச்சாவதரப் பெருமாளை அணுகுகிறோம். அதே போல வேதம்/வேதாந்தம் இவைகளை  அறிந்து கொள்வது கடினமானது.  ஆனால் அதே தத்துவங்கள் வெகு எளிதான வகையிலும் சுருக்கமாகவும் ஆழ்வார்களால் திவ்ய ப்ரபந்தமாக விளக்கப்பட்டுள்ளன.

வ்யாச: பாட்டி! அப்படியானால், வேதம் நமக்கு பிரதானமானது இல்லை என்று கொள்ளலாமா பாட்டி?

ஆண்டாள் பாட்டி: அப்படி இல்லை! வேதம், திவ்ய ப்ரபந்தம் ஆகிய இரண்டுமே நமக்கு சம அளவில் முக்கியமானது. பெருமாளைப் பற்றிய புரிதல் ஏற்படுவதற்கான அனைத்து அடிப்படைகளையும் கொண்டது என்பதால் வேதம் பிரதானமானது. ஆனால், பெருமாளுடைய மேன்மையான கல்யாண குணங்களையும் பற்றி அறிந்து மகிழ திவ்ய ப்ரபந்தம் உகந்தது. மேலும், வேதத்தில் விளக்கப்பட்டுள்ள நுட்பமான தத்துவங்களை, நம் பூர்வாசாரியர்கள் அருளிய திவ்ய ப்ரபந்தத்தின் விளக்கங்களின் மூலம் கற்று எளிதாகப் புரிந்து கொள்ளலாம். எனவே, அவரவருடைய சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் வேதம், வேதாந்தம், திவ்ய ப்ரபந்தம் போன்றவற்றைக் கற்க வேண்டும்.

பராசர: திவ்ய ப்ரபந்தத்தின் முக்கிய நோக்கம் யாது பாட்டி?

ஆண்டாள் பாட்டி: சிறிது காலமே இருக்கக்கூடிய இன்ப/துன்ப விஷயங்களில் உள்ள நம்முடைய ஈடுபாட்டைக் களைந்து, ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கும் பரமபதத்தில் எல்லையற்ற இன்பமான, பரமபதத்தில் நித்ய கைங்கர்யங்கள் செய்யும் பொருட்டு நம்மை உய்வித்தலே திவ்ய ப்ரபந்தத்தின் முக்கிய நோக்காகும். ஸ்ரீமன் நாரயணனுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்தலே நமக்கு இயற்கையாக உள்ள விதியாகும், ஆனால்,  உலக விஷயங்களில் ஈடுபாடு கொள்வதால், அந்த உயர்ந்த இன்பத்தை விட்டு நாம் விலகி விடுகிறோம். திவ்ய ப்ரபந்தம் பெருமளுக்கு பரமபதத்தில் நித்ய கைங்கர்யங்கள் செய்வதன் மகத்துவத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

வ்யாச: ஆமாம் பாட்டி! இந்த தத்துவத்தைக் குறித்து முன்னேயே கூட நீங்கள் விளக்கியுள்ளதால், சற்றே புரிகிறார் போல் இருக்கிறது.

பராசர: நம் பூர்வாசார்யர்கள் எவர் பாட்டி?

ஆண்டாள் பாட்டி: நல்ல கேள்வி கேட்டாய் பராசரா! நம்முடைய சம்பிரதாயத்தில் தோன்றிய பல ஆசார்யர்களைப் பற்றி இனிமேல் உங்களுக்கு சொல்லப் போகிறேன். ஆழ்வார்கள் சொற்படி இருந்து காட்டியவர்களாதலால், ஆசார்யர்கள் குறித்து அறிந்து கொண்டு அவ்வழியில் செல்வது நமக்கு மிகவும் அவசியமானதாகும்.

பராசரனும் வ்யாசனும்: நன்றி பாட்டி! நம் ஆசார்யர்கள் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு நாங்கள் ஆவலாகக் காத்திருப்போம்.

அடியேன் கீதா ராமானுஜ தாஸி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2015/02/beginners-guide-dhivya-prabandham-the-most-valuable-gift-from-azhwars/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

 

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திருமங்கை ஆழ்வார்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< திருப்பாணாழ்வார்

தம்முடைய குதிரையான ஆடல்மாவின் மேல் திருமங்கை ஆழ்வார்

ஆண்டாள் பாட்டி, பராசரன் வ்யாசன் மூவரும் உரையூரிலிருந்து இல்லத்திற்குத் திரும்புகிறார்கள்.

ஆண்டாள் பாட்டி: பராசரா, வ்யாசா, இருவரும் உரையூருக்குச் சென்று மகிழ்ச்சியாக இருந்தீர்களா?

பராசரனும் வ்யாசனும்: ஆமாம் பாட்டி. அங்கே சென்று திருப்பாணாழ்வாரைச் சேவித்தது மிக நன்றாக இருந்தது. எங்களுக்குத் திவ்ய தேசங்களுக்குச் சென்று அங்கே உள்ள அர்ச்சாவதார எம்பெருமான்களை சேவிப்பதில் விருப்பமாக இருக்கிறது.

ஆண்டாள் பாட்டி: இப்பொழுது உங்களுக்குப் பல திவ்ய தேசங்களின் சிறப்புகளை காட்டிக் கொடுத்தவரான திருமங்கை ஆழ்வாரைப் பற்றிச் சொல்லப் போகிறேன். அவர் திருநாங்கூர் என்னும் தேசத்திற்கு அருகிலுள்ள   திருக்குறையலூர் என்னும் ஊரில், கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்ரத்தில்  அவதரித்தார். அவர் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் 6 திவ்ய ப்ரபந்தங்களைப் பாடினார். அவருடைய இயற்பெயர் நீலன் (அவர் நீல நிறத்தவராய் இருந்ததனால்) என்பதாகும்.

பராசர: அந்நாட்களில் அவர் எவ்வாறு திவ்ய தேசங்களுக்குப் பயணம் செய்தார் பாட்டி?

ஆண்டாள் பாட்டி: அவரிடம் ஆடல்மா என்று  மிகவும் பலம் பொருந்திய ஒரு குதிரை ஒன்று இருந்தது; அதன் மேல் அவர் எங்கும் சென்று வந்தார்.

வ்யாச: அவருடைய சிறப்புகள் என்ன பாட்டி?

ஆண்டாள் பாட்டி: திருமங்கை ஆழ்வாருக்குத் தனியான பல சிறப்பம்சங்கள் உண்டு. முதலில், அவர் ஒரு சிறந்த வீரர்; ஒரு சிற்றரசை ஆண்டு வந்தார். அப்பொழுது  அவர் குமுதவல்லி நாச்சியாரைப் பார்த்து அவரை விவாஹம் செய்து கொள்ள விரும்பினார். குமுதவல்லி நாச்சியாரோ தாம் யார் ஒருவர் பெருமாளின் பக்தராகவும், பாகவதர்களுக்கு சிறந்த கவனத்துடனும்  அன்போடு கைங்கர்யங்கள் செய்பவராகவும் இருக்கிறாரோ, அவரையே விவாஹம் செய்ய விரும்பவதாக ஆழ்வாரிடம் கூறினார். ஆழ்வார் இதற்கு ஒப்புக்கொண்டு பெருமாளுடைய பக்தராக ஆக, இருவருக்கும் விவாஹம் நடந்தது. ஆழ்வார் பல ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ப்ரசாதம் அளிக்கும் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்தார். ஆனால், நாளடைவில் அவருடைய செல்வங்கள் இதில் கரைந்து போக, கைங்கர்யத்தைத் தொடர்ந்து செய்வதற்கு இயலாமல் போகும் நிலை வந்தது. அதனால், அவர் அருகில் இருந்த காட்டுப் பாதை வழியாக செல்லும் செல்வந்தர்களிடமிருந்து  வழிப்பறி செய்து அந்தப் பொருளைக் கொண்டு பிறருக்கு கைங்கர்யங்களைத் தொடர்ந்தார்.

பராசர: அடடா! நாம் திருடலாமா பாட்டி?

ஆண்டாள் பாட்டி: இல்லை! நாம் ஒருகாலும் அவ்வாறு செய்யக் கூடாது. ஆனால், ஆழ்வாருக்கு பாகவதர்களுக்கு கைங்கர்யங்கள் செய்வதில் இருந்த பெருத்த ஆசையினால், அவர் செல்வந்தர்களிடம் களவாடத் தொடங்கினார். பெருமாளோ, அவரைத் திருத்தி ஞானத்தை ஊட்ட விரும்பினார். அதற்காக அவரும் தாயாரும் புதியதாக திருமணமான செல்வந்தர்கள் போல உருக்கொண்டு பல  உறவினர்கள் சூழ அக்காட்டு வழியே ப்ரயாணம் செய்தனர். செல்வம் ஈட்டும் பொருட்டு வந்த வாய்ப்பாகக் கருதி, ஆழ்வாரும் அவர்களிடம் களவாட முயன்றார். ஆனால் இறுதியில், பெருமாளுடைய அனுக்கிரஹத்தினால், அவர் அங்கு வந்திருப்பது பெருமாளே என்பதை உணர்ந்தார். பெருமாள் ஆழ்வாரை  முற்றிலும் திருத்திப் பூரணமாக அனுக்கிரஹித்தார். பெருமாளையே தம்மை திருத்திப் பணிகொள்ளும்படி செய்தவராகையால், பெருமாளே அவருக்கு மிகவும் மிடுக்கானவர் / மேன்மையானவர் என்று பொருள் படும் “கலியன்” என்ற பெயரைச் சூட்டினார்.  பரகாலன் என்றால் பரமாத்மாவே பயப்படுபவர் என்று பொருள்.

வ்யாச: ஆஹா! எவ்வளவு ஆச்சரியமான் நிகழ்ச்சி! அதன் பின்பு அவர் என்ன செய்தார்?

ஆண்டாள் பாட்டி: மிகவும் உணர்ச்சிவசப்படவராய், அவர் பெருமாளிடம் சரண் புகுந்தார். அதற்குப் பிறகு,  பரந்து விரிந்துள்ள  பாரத  தேசத்தில் பரவியுள்ள உள்ள 80க்கும் மேற்பட்ட பல திவ்ய தேசங்களுக்குப்  பயணம் செய்து அங்குள்ள பெருமாள்களுக்குப் பாடல்கள் பாடினார். அதுவும், வேறு எந்த ஆழ்வார்களாலும் பாடப்படாத 40 பெருமாள்களுக்கு இவர் மாத்திரமே பாசுரங்கள் பாடி அந்த திவ்ய தேசங்களை நமக்குக் காண்பித்துக் கொடுத்தார்.

பராசர: ஓ! நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் – அவரால்தானே நாம் இப்பொழுது அந்த திவ்ய தேசங்களை சேவிக்கிறோம் அதற்காக, அவரிடம்  நாம் எப்பொழுதும் நன்றியோடு இருக்க வேண்டும்.

ஆண்டாள் பாட்டி: நம்முடைய ஸ்ரீரங்கத்திலும் கூட அவர் மதில் சுவர்களை கட்டுவித்தது போன்ற பல கைங்கர்யங்களை செய்துள்ளார். அவர் ஆயுட்காலத்திலேயே, பெருமாள் ஆழ்வாருடைய மைத்துனரிடம் ஆழ்வாரைப் போன்ற விக்ரஹம் செய்து வழிபட்டு வருமாறு ஆணையிட்டிருந்தார். அதற்குச் சில காலத்திற்கு பின்பு, திருமங்கை ஆழ்வார் திருக்குறுங்குடி என்ற திவ்ய தேசத்திற்குச் சென்று, நம்பி எம்பெருமானைச் சிறிது  காலம் வழிபட்டு வந்தார். இறுதியில், எம்பெருமானையே தியானித்து, எம்பெருமானுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்யும் பொருட்டு பரமபதத்திற்கு ஏகினார்.

வ்யாச: ஆழ்வாருடைய சரித்திரத்திலிருந்து, நாங்கள், அர்ச்சாவதார பெருமாளுக்கும் அவருடைய பக்தர்களுக்கும் கைங்கர்யங்கள் செய்வதன் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டோம் பாட்டி.

ஆண்டாள் பாட்டி: ஆமாம், அதுவே நம்முடைய சம்பிரதாயத்தின் உட்கருத்தாகும். இத்துடன், நீங்கள், எல்லா ஆழ்வார்களைப் பற்றியும் அறிந்து கொண்டீர்கள். நான் அடுத்த முறை உங்களுக்கு ஆசாரியர்களைப் பற்றி சொல்லப் போகிறேன்.

பராசரனும் வ்யாசனும்: சரி பாட்டி. நாங்கள் அதை அறிய ஆவலாக உள்ளோம்.

அடியேன் கீதா ராமானுஜ தாசி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2015/02/beginners-guide-thirumangai-azhwar/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org