ஸ்ரீமதே சடகோபயா நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸநாதன தர்மம் என்கிற ஸ்ரீவைஷ்ணவம் ஒரு மிகப் பழமையான மதம். இதைப் பல உயர்ந்த ஞானிகள் பரப்பியுள்ளனர். த்வாபர யுகத்தின் முடிவில், பாரத தேசத்தின் தென் திசையில் பல புண்ணிய நதிக்கரைகளில் ஆழ்வார்கள் அவதரிக்கத் தொடங்கினர். கடைசி ஆழ்வார் கலி யுகத்தின் ஆரம்பத்தில் அவதரித்தார். வ்யாச ரிஷி, ஸ்ரீ பாகவத புராணத்தில் ஸ்ரீமந் நாராயணின் பக்தர்கள் பாரதத்தின் தென் திசையில் பல நதிக்கரைகளில் அவதரிப்பர்கள் என்றும் எம்பெருமானைப் பற்றிய உண்மை அறிவை பலருக்கும் உணர்த்துவர்கள் என்றும் கூறியுள்ளார். பகவானிடத்தில் ஆழ்ந்ததால் இவர்கள் ஆழ்வார்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஆழ்வார்கள் பதின்மர் – பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப் பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார். மதுரகவி ஆழ்வார் ஆசார்ய நிஷ்டர். ஆண்டாள் பூமி பிராட்டியின் அவதாரம். இவர்கள் இருவரையும் சேர்த்தால் ஆழ்வார்கள் பன்னிருவர் என்றும் சொல்லலாம். ஆழ்வார்கள் (ஆண்டாளைத் தவிர) எம்பெருமானால் ஸம்ஸாரத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டு மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள். அதாவது சித், அசித், ஈச்வர தத்துவங்களைப் பற்றிய உண்மை அறிவை பகவானால் அருளப் பெற்று, அழிந்து போன பக்தி மற்றும் ப்ரபத்தி மார்க்கத்தை மீண்டும் நிலைநாட்டியவர்கள். எம்பெருமான் அவர்களுக்கு முக்காலத்தையும் உணரும்படி அருள் செய்தான். ஆழ்வார்கள் தங்களுடைய பகவத் அநுபவத்தின் வெளிப்பாடான அருளிச்செயல் எனக் கூறப்படும் 4000 திவ்ய ப்ரபந்தத்தைப் பாடியுள்ளார்கள்.
ஆழ்வார்களின் காலத்துக்குப் பிறகு ஆசார்யர்கள் தோன்றினார்கள். நம்முடைய ஸத் ஸம்ப்ரதாயத்தை நாதமுனிகள் தொடக்கமாக, எம்பெருமானார் நடுவாக, மணவாள மாமுனிகள் ஈறாக பல ஆசார்யர்கள் வளர்த்துள்ளார்கள். இன்றளவும் இந்த ஆசார்ய பரம்பரை எம்பெருமானார் மற்றும் மணவாள மாமுனிகளால் ஏற்படுத்தப்பட்ட ஆசார்ய பீடங்களால் தொடர்ந்து வருகிறது. நம் ஆசார்யர்கள் அருளிச்செயல்களின் ஆழ் பொருளை உணர்த்தும் பல வ்யாக்யானங்களை எழுதியுள்ளார்கள். இந்த வ்யாக்யானங்களே நாம் படித்து அனுபவிப்பதற்காக அவர்கள் விட்டுச் சென்ற மிகப்பெரிய செல்வம். ஆழ்வார்களின் அருளைப் பெற்ற ஆசார்யர்கள் பாசுரங்களின் அர்த்தங்களை பல கோணங்களில் அலசி ஆராய்ந்து விளக்கி உள்ளார்கள்.
முதலில் ஆழ்வார்களைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்
1. பொய்கை ஆழ்வார்
திருவெக்கா (காஞ்சீபுரம்)
ஐப்பசி – திருவோணம்
முதல் திருவந்தாதி
எம்பெருமானின் பரத்வத்தில் (மேன்மை குணத்தில்) ஊறியவர்.
காஞ்ச்யாம் ஸரஸி ஹேமாப்ஜேஜாதம் காஸார யோகிநம்
கலயே ய: ச்ரிய:பத்யே ரவிம் தீபம் அகல்பயத்
செய்யதுலாவோணத்திற் செகத்துதித்தான் வாழியே
திருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே
வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே
வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே.
2. பூதத்தாழ்வார்
திருக்கடல்மல்லை
ஐப்பசி – அவிட்டம்
இரண்டாம் திருவந்தாதி
எம்பெருமானின் பரத்வத்தில் (மேன்மை குணத்தில்) ஊறியவர்.
மல்லாபுரவராதீசம் மாதவீ குஸுமோத்பவம்
பூதம் நமாமி யோ விஷ்ணோ: ஞானதீபம் அகல்பயத்
அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே
நல்லதிருக் கடன்மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தைதிரியிட்ட பிரான் வாழியே
எழின்ஞானச் சுடர் விளக்கையேற்றினான் வாழியே
பொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே.
3. பேயாழ்வார்
திருமயிலை (மைலாப்பூர்)
ஐப்பசி – சதயம்
மூன்றாம் திருவந்தாதி
எம்பெருமானின் பரத்வத்தில் (மேன்மை குணத்தில்) ஊறியவர்.
த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் யோ விஷ்ணும் ரமயா மயிலாதிபம்
கூபே ரக்தோத்பலே ஜாதம் மஹதாஹ்வயம் ஆச்ரயே
திருக்கண்டேனென நூறுஞ் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்தவள்ளல் வாழியே
மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே
மலர்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே
நெருக்கிடவேயிடைகழியில் நின்ற செல்வன் வாழியே
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணையிப் பெருநிலத்தில் வாழியே
4. திருமழிசை ஆழ்வார்
திருமழிசை
தை – மகம்
நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்
எம்பெருமானின் அந்தர்யாமித்வத்தில் ஊறியவர். மேலும், ஸ்ரீமந் நாராயணனுக்கே அடிமைப்பட்டிருக்க வேண்டும் என்றும் மற்ற தேவதைகளைச் சாரக்கூடாது என்றும் உணர்த்தியவர்.
சக்தி பஞ்சமய விக்ரஹாத்மநே சூக்திகாரஜித சித்த ஹாரிணே
முக்திதாயக முராரி பாதயோர் பக்திஸார முநயே நமோ நம:
அன்புடனந்தாதி தொண்ணூற்றாறுரைத்தான் வாழியே
அழகாருந் திருமழிசையமர்ந்த செல்வன் வாழியே
இன்பமிகு தையில் மகத்திங்குதித்தான் வாழியே
எழிற்சந்தவிருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே
முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே
முழுப்பெருக்கில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே
நன்புவியில் நாலாயிரத்தெழுநூற்றான் வாழியே
நங்கள் பத்திசாரன் இருநற்பதங்கள் வாழியே
5. நம்மாழ்வார்
ஆழ்வார் திருநகரி
வைகாசி – விசாகம்
திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி
க்ருஷ்ணாவதாரத்தில் ஊறியவர். வைஷ்ணவர்களுக்குத் (மற்றைய ஆழ்வார்களுக்கும்) தலைவர். நான்கு வேதங்களின் சாரத்தை நான்கு ப்ரபந்தங்களில் அருளியவர்.
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேந மத் அந்வயாநாம்
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா
ஆனதிருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே
ஆசிரியமேழுபாட்டளித்த பிரான் வாழியே
ஈனமறவந்தாதியெண்பத்தேழீந்தான் வாழியே
இலகுதிருவாய்மொழி ஆயிரத்தொரு நூற்றிரண்டுரைத்தான் வாழியே
வானணியு மாமாடக் குருகை மன்னன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
சேனையர்கோன் அவதாரஞ் செய்தவள்ளல் வாழியே
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே
6. மதுரகவி ஆழ்வார்
திருக்கோளூர்
சித்திரை – சித்திரை
கண்ணிநுண் சிறுத் தாம்பு
நம்மாழ்வாரிடத்தில் ஊறியவர். ஆசார்ய பக்தியின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர்.
அவிதித விஷயாந்தரஸ் சடாரேர் உபநிஷதாம் உபகான மாத்ர போக:
அபி ச குண வசாத் ததேக சேஷி மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து
சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியே
திருக்கோளூரவதரித்த செல்வனார் வாழியே
உத்தரகங்காதீரத்து உயர்தவத்தோன் வாழியே
ஒளிகதிரோன் தெற்குதிக்கவுகந்துவந்தோன் வாழியே
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே
பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே
மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே.
7. குலசேகராழ்வார்
திருவஞ்சிக்களம்
மாசி – புனர்பூசம்
பெருமாள் திருமொழி, முகுந்த மாலை
ஸ்ரீ ராமாவதாரத்தில் ஊறியவர். பாகவதர்களிடத்திலும் திவ்ய தேசங்களிலும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்று உணர்த்தியவர்.
குஷ்யதே யஸ்ய நகரே ரங்கயாத்ரா தினே தினே
தமஹம் சிரஸா வந்தே ராஜாநம் குலசேகரம்
அஞ்சனமா மலைப்பிறவியாதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணையடைந்துய்ந்தோன் வாழியே
வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே
மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
அஞ்சலெனக் குடப்பாம்பிலங்கையிட்டான் வாழியே
அநவரதமிராமகதை அருளுமவன் வாழியே
செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே.
8. பெரியாழ்வார்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆனி – ஸ்வாதி
திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி
க்ருஷ்ணாவதாரத்தில் ஊறியவர். பகவானுக்கு மங்களாசாஸநம் செய்ய வேண்டியதின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர்.
குருமுகம் அநதீத்ய ப்ராஹவேதாந் அஶேஷாந்
நரபதி பரிக்லுப்தம் ஶுல்கமாதாது காம:
ஶ்வஶுரம் அமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜ குல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி
நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்றறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே
சொல்லரிய ஆனிதனிற் சோதிவந்தான் வாழியே
தொடைசூடிக் கொடுத்தாள் தான் தொழுந்தமப்பன் வாழியே
செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே
சென்றுகிழியறுத்து மால் தெய்வமென்றான் வாழியே
வில்லிபுத்தூர் நகரத்தை விளங்க வைத்தான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே.
9. ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்தூர்
திருவாடிப்பூரம் (ஆடி – பூரம்)
திருப்பாவை, நாச்சியார் திருமொழி
க்ருஷ்ணாவதாரத்தில் ஊறியவர். பூமிப் பிராட்டியின் அவதாரம். இந்த லோகத்தில் உள்ள அனைவரின் உஜ்ஜீவனத்திற்காகவும் அவதரித்தவர்.
நீளா துங்க ஸ்தநகிரி தடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் ஸித்தம் அத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம் யாபலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய:
திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கர்க்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே
மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே
10. தொண்டரடிப் பொடி ஆழ்வார்
திருமண்டங்குடி
மார்கழி – கேட்டை
திருமாலை, திருப்பள்ளியெழுச்சி
ஸ்ரீரங்கநாதனிடத்தில் ஊறியவர். நாம ஸங்கீர்த்தனம், சரணாகதி மற்றும் பாகவதர்களின் பெருமைகளை உணர்த்தியவர்.
தமேவ மத்வா பரவாசுதேவம்
ரங்கேசயம் ராஜவதர்ஹணீயம்
ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே
மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே
தெண்டிரை சூழரங்கரையே தெய்வமென்றான் வாழியே
திருமாலையொன்பதஞ்சுஞ் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே
தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே
11. திருப்பாணாழ்வார்
உறையூர்
கார்த்திகை – ரோஹிணி
அமலனாதிபிரான்
ஸ்ரீரங்கநாதனிடத்தில் ஊறியவர். பெரிய பெருமாளின் திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு மங்களாசாஸனம் செய்தவர்.
ஆபாத சூடம் அநுபூய ஹரிம் சயானம்
மத்யே கவேரது ஹிதுர் முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிச்சிகாய மநவை முநிவாஹநம் தம்
உம்பர்தொழும் மெய்ஞ்ஞானத்துறையூரான் வாழியே
உரோகிணிநாள் கார்த்திகையிலுதித்தவள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வந்தபிரான் வாழியே
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே
அம்புவியில் மதிளரங்கரகம் புகுந்தான் வாழியே
அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே.
12. திருமங்கை ஆழ்வார்
திருக்குரையலூர்
கார்த்திகை – கார்த்திகை
பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம்
பல திவ்ய தேசங்களைத் தன் ஆடல் மா குதிரையில் சென்று ஈடுபட்டு மங்களாசாஸனம் செய்தவர். ஸ்ரீரங்கம் முதலிய திவ்ய தேசங்களில் பல கைங்கர்யங்கள் செய்தவர்.
கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகாரம்
யஸ்ய கோபி: ப்ரகாசாபிர் ஆவித்யம் நிஹதம் தம:
கலந்த திருக்கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே
காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே
நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தோன் வாழியே
நாலைந்துமாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே
இலங்கெழுகூற்றிருக்கையிருமடலீந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழீந்தான் வாழியே
வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே.
குகார: அந்தகார வாச்ய சப்த: – கு என்கிற எழுத்து அறிவைச் சூழ்ந்துள்ள இருளைக் குறிக்கும். ருகார: தந் நிவர்த்தக: – ரு என்கிற எழுத்து அந்த இருளை போக்குமத்தைக் குறிக்கும். ஆக, குரு என்பது, அந்தகாரமாகிய இருளை விலக்கி உண்மை அறிவை உணர்த்தி நல்வழிப்படுத்துபவரைக் குறிக்கும். குரு மற்றும் ஆசார்ய என்கிற இரண்டும் ஒரே அர்த்தத்தால் ஆன்மிக அறிவு கொடுக்கும் ஆசிரியரைக் குறிக்கும்.
ஓராண் வழி குரு பரம்பரை என்பது குரு-சிஷ்ய என்கிற முறையில் சாஸ்த்ரங்களின் தாத்பர்யத்தைத் தொடர்ந்து உணர்த்தி வரும் ஆசிரிய பரம்பரையைக் குறிக்கும்.
நம்முடைய ஓராண் வழி குரு பரம்பரை லக்ஷ்மீநாதனான ஸ்ரீ ரங்கநாதனில் தொடங்கி, உலகுக்கே ஆசார்யனான ஸ்ரீ ராமானுஜர் என்கிற ஜகதாசார்யனை நடுவாகக் கொண்டு, ஸ்ரீ ரங்கநாதனால் ஸ்ரீ ரங்கத்தில் தன்னுடைய ஆசார்யனாக அபிமானிக்கப்பட்ட மணவாள மாமுனிகளை ஈறாகக் கொண்டது. இந்த ஓராண் வழி ஆசார்யர்களைப் பற்றி இப்பொழுது சிறிது காண்போம்.
13. பெரிய பெருமாள்
(ஸ்ரீமந் நாராயணன்)
பங்குனி – ரேவதி
பகவத் கீதை, ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தனியன்
ப்ரசித்தமாக என்று ஸ்ரீ ரங்கநாதன் அழைக்கப்படும் முதல் ஆசார்யன். பரமபதத்தில் இருந்து இரங்கி ஸத்ய லோகத்தில் எழுந்தருளி – ப்ரஹ்மாவால் வழிபடப் பெற்றவர். பின்பு அயோத்யாவில் இரங்கி ஸூர்ய வம்ஸ ராஜாக்களால் (இராமன் உள்பட) வழிபடப் பட்டார். பின்பு விபீஷணனால் திருவரங்கத்துக்கு வந்தார்.
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆஶ்ரயே
சிந்தாமணி மிவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந:
திருமகளும் மண்மகளும் சிறக்கவந்தோன் வாழியே
செய்யவிடைத்தாய்மகளார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில்வீற்றிருக்கு மிமையவர்கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலை யெய்தினான் வாழியே
அரியதயரதன் மகனாயவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துவமும் ஆயினான் வாழியே
பெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே பெரியபெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே.
14. பெரிய பிராட்டியார்
ஸ்ரீ மஹாலக்ஷ்மி
பங்குனி – உத்ரம்
ப்ரசித்தமாக ஸ்ரீ ரங்கநாயகி என்று அழைக்கப்படுபவர். பகவானின் திவ்ய மஹிஷி. பகவானின் தயையே வடிவாக எடுத்தவர். எம்பெருமானை அடைவதற்கு புருஷகார பூதையாக நம் பூர்வாசார்யர்களால் கொண்டாடப்படுபவர்.
நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரூ விப்ரம பேதத:
ஈஶேஶிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத்
பங்கயப் பூவிற்பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்தர நாள் பாருதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்களெழில் சேனைமன்னர்க்கு இதமுரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே
15. ஸேனை முதலியார்
விஷ்வக்ஸேனர்
ஐப்பசி – பூராடம்
பரமபதத்தில் பகவானின் ஸேனாதிபதியாக விளங்குபவர். எம்பெருமானின் ப்ரதிநிதியாக அனைத்தையும் நிர்வகிப்பவர். சேஷாஸனர் என்று அழைக்கப்படுபவர் – அதாவது பகவானின் ப்ரசாதத்தை முதலில் உண்பவர்.
ஸ்ரீரங்கசந்த்ர மஸமிந்திரயா விஹர்த்தும்
விந்யஸ்ய விச்வசித சிந்நயநாதிகாரம்
யோ நிர்வஹத்ய நிஶமங்குளி முத்ரயைவ
ஸேனான்யம் அந்ய விமுகாஸ் தமஶி ஶ்ரியாம
ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கிதமுரைத்தான் வாழியே
எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே.
16. நம்மாழ்வார்(சடகோபன்)
ஆழ்வார் திருநகரி
வைகாசி – விசாகம்
திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி
வைஷ்ணவ குல பதி என்றும் ப்ரபந்ந ஜந கூடஸ்தர் என்றும் கொண்டாடப்படுபவர் – ஸ்ரீவைஷ்ணவர்களின் தலைவர். மாறன், பராங்குசன், குருகூர் நம்பி என்றும் அழைக்கப்படுபவர்.
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேந மத் அந்வயாநாம்
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா
திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே
திருவான திருமுகத்துச் செவ்வியென்றும் வாழியே
இருக்குமொழி என்னென்ஞ்சில் தேக்கினான் வாழியே
எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே
கருக்குழியில் புகா வண்ணம் காத்தருள்வோன் வாழியே
காசினியில் ஆரியனைக் காட்டினான் வாழியே
வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி தம் பிரான் வாழி வாழி வாழியே
17. நாதமுனிகள்(ஸ்ரீரங்கநாத முனி)
காட்டு மன்னார் கோயில் (வீர நாராயண புரம்)
ஆனி அனுஷம்
ந்யாய தத்வம், யோக ரஹஸ்யம், புருஷ நிர்ணயம்
நம்மாழ்வாரின் அவதார ஸ்தலத்தில் சென்று ஆழ்வாரை த்யானித்து 4000 திவ்ய ப்ரபந்தத்தையும் அதன் அர்த்தங்களையும் பெற்றுத் தந்தவர்.
நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஞான வைராக்ய ராஶயே
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே
ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்கு உபதேசமருளிவைத்தான் வாழியே
பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே
பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே
18. உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்)
திருவெள்ளறை
சித்திரை – கார்த்திகை
4000 திவ்ய ப்ரபந்தத்தை அர்த்தத்துடன் நாதமுனிகளிடத்தில் கற்று அதை மேலும் வளர்த்தவர்.
நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பாத பங்கஜே
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குல நாதாய தீமதே
வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பிதொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்கவந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால் அரங்க மணவாளர் வளமுரைப்போன் வழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே.
19. மணக்கால் நம்பி
ஸ்ரீ ராம மிஸ்ரர்
மணக்கால் (ஸ்ரீரங்கத்துக்கு அருகில்)
மாசி – மகம்
யாமுனாசார்யரைத் திருத்தி ஒரு சிறந்த ஆசார்யனாக ஆக்கியவர்.
அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம்
தேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னிவைப்போன் வாழியே
தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
தாசரதி திருநாமம் தழைக்கவந்தோன் வாழியே
தமிழ் நாதமுனியுகப்பைத் தாபித்தான் வாழியே
நேசமுடனாரியனை நியமித்தான் வாழியே
நீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே
மாசிமகம் தனில் விளங்க வந்துதித்தான் வாழியே
மால்மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே.
20. ஆளவந்தார் (யாமுனாசார்யர்)
காட்டு மன்னார் கோயில் (வீர நாராயண புரம்)
ஆடி – உத்ராடம்
கீதார்த்த ஸங்க்ரஹம், ஆகம ப்ராமாண்யம், சதுஸ்லோகி, ஸ்தோத்ர ரத்னம், முதலியன
யத் பதாம்போருஹத்யாந வித்வஸ்தாஶேஷ கல்மஷ:
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம்
மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்தான் வாழியே
மறை நான்கும் ஓருருவில் மகிழ்ந்துகற்றான் வாழியே
பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே
பாடியத்தோன் ஈடேறப் பார்வைசெய்தோன் வாழியே
கச்சி நகர் மாயனிரு கழல் பணிந்தோன் வாழியே
கடக உத்தராடத்துக் காலுதித்தான் வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே
21. பெரிய நம்பி (மஹா பூர்ணர்)
ஸ்ரீரங்கம்
மார்கழி – கேட்டை
திருப்பதிக் கோவை
ஆளவந்தாரிடமும் ராமானுஜரிடமும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ராமானுஜரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வந்தவர்.
கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா
பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம:
அம்புவியில் பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே
உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே
ஓங்கு தனுக் கேட்டைதனில் உதித்த பிரான் வாழியே
வம்பவிழ்தார் வரதருரை வாழி செய்தான் வாழியே
மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே
எம்பெருமானார் முனிவர்க்கு இதமுரைத்தான் வாழியே
எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே.
22. எம்பெருமானார் (ஸ்ரீ ராமானுஜர்)
ஸ்ரீபெரும்பூதூர்
சித்திரை – திருவாதிரை
ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம், வேதார்த்த ஸங்க்ரஹம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம் மற்றும் நித்ய க்ரந்தம்
விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை வளர்த்த முக்கிய ஆசார்யர். ஸம்ப்ரதாயத்தை எல்லா இடத்திலும் பரப்பியவர்.
யோநித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்யே
அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே
23. எம்பார் (கோவிந்தப் பெருமாள்)
மதுர மங்கலம்
தை – புனர்பூசம்
விஞ்ஞான ஸ்துதி, எம்பெருமானார் வடிவழகு பாசுரம்
எம்பெருமானாரின் திருவடி நிழலாகக் கொண்டாடப்படுபவர். பகவத் விஷயத்தில் சிறந்த ரசிகர், இதர விஷயங்களில் பரம விரக்தர்.
ராமானுஜ பதச் சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ
ததா யத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் வி ஶ்ரமஸ்தலீ
பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே
பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருளுரைப்போன் வாழியே
மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே
மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே
தேவுமெப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே
திருமலைநம்பிக் கடிமை செய்யுமவன் வாழியே
பாவையர்கள் கலவியிருள் பகலென்றான் வாழியே
பட்டர்தொழும் எம்பார் பொற்பதமிரண்டும் வாழியே
24. பராசர பட்டர்
ஸ்ரீரங்கம்
வைகாசி – அனுஷம்
ஸ்ரீரங்கராஜ ஸ்தவம், அஷ்ட ச்லோகி, ஸ்ரீ குண ரத்ன கோசம், முதலியன.
ஸ்ரீ பராசர பட்டார்ய ஸ்ரீரங்கேஶ புரோஹித:
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ஶ்ரேயஸே மேஸ்து பூயஸே
தென்னரங்கர் மைந்தன் எனச் சிறக்கவந்தோன் வாழியே
திருநெடுந்தாண்டகப் பொருளைச் செப்புமவன் வாழியே
அன்னவயல் பூதூரன் அடி பணிந்தோன் வாழியே
அனவரதம் எம்பாருக்கு ஆட்செய்வோன் வாழியே
மன்னுதிருக்கூரனார் வளமுரைப்போன் வாழியே
வைகாசியனுடத்தில் வந்துதித்தோன் வாழியே
பன்னுகலை நால்வேதப் பயன்தெரிந்தோன் வாழியே
பராசரனாம் சீர் பட்டர் பாருலகில் வாழியே
25. நஞ்சீயர் (வேதாந்தி)
திருநாராயணபுரம்
பங்குனி – உத்ரம்
திருவாய்மொழி 9000 படி மற்றும் சில வ்யாக்யானங்கள்
பட்டரால் திருத்தப்பட்டவர். அத்வைத வித்வானாக இருந்து, பட்டரின் முயற்சியால் உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவரானவர். பட்டரின் சிஷ்யர்களில் சிறந்து விளங்கியவர். வேதாந்தாசார்யர் என்றும் வழங்கப்படுபவர்.
நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே
யஸ்ய வாகம்ருதஸார பூரிதம் புவந த்ரயம்
தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே
சீமாதவனென்னும் செல்வனார் வாழியே
பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே
பங்குனியில் உத்தரநாள் பாருதித்தான் வாழியே
ஒண்டொடியாள் கலவிதன்னை யொழித்திட்டான் வாழியே
ஒன்பதினாயிரப்பொருளை யோதுமவன் வாழியே
எண்டிசையும் சீர் பட்டர் இணையடியோன் வாழியே
எழில்பெருகும் நஞ்சீயர் இனிதூழி வாழியே
26. நம்பிள்ளை (லோகாசார்யர்)
நம்பூர்
கார்த்திகை – கார்த்திகை
திருவாய்மொழி 36000 படி மற்றும் சில வ்யாக்யானங்கள்
ஸம்ஸ்க்ருத/த்ராவிட சாஸ்த்ரங்களில் சிறந்த நிபுணர். முதன் முதலில் திருவாய்மொழிக்கு ஸ்ரீரங்கம் கோயிலிலேயே விரிவான உபந்யாஸங்கள் செய்தவர். திருமங்கை ஆழ்வாரின் புனர் அவதாரமாகக் கொண்டாடப்படுபவர்.
வேதாந்த வேத்ய அம்ருத வாரிராஶேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம்
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம்
தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே
திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே
தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே
தாமரைக் கை இணையழகும் தடம் புயமும் வாழியே
பாமருவும் தமிழ்வேதம் பயில் பவளம் வாழியே
பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே
நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே
நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே
27. வடக்கு திருவீதிப் பிள்ளை (ஸ்ரீ க்ருஷ்ண பாதர்)
ஸ்ரீ ரங்கம்
ஆனி – ஸ்வாதி
திருவாய்மொழி 36000 படி வ்யாக்யானம்
நம்பிள்ளையின் அந்தரங்க சிஷ்யர். நம்பிள்ளையின் ஈடு வ்யாக்யானத்தை ஏடு படுத்தியவர். பிள்ளை லோகாசார்யர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்கிற இரண்டு புத்ர ரத்னங்களைக் கொடுத்தவர்.
ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி ஶிரஸா ஸதா
யத் ப்ரஸாதப் ப்ரபாவேந ஸர்வ ஸித்திரபூந்மம
ஆனிதனிற் சோதிநன்னா ளவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைப்போன் வாழியே
தானுகந்த நம்பிள்ளை தாள்தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்லவுலகாரியனை நமக்களித்தான் வாழியே
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே
28. பிள்ளை லோகாசார்யர்
ஸ்ரீரங்கம்
ஐப்பசி – ஶ்ரவணம்
முமுக்ஷுப்படி, தத்வ த்ரயம், ஸ்ரீவசன பூஷணம் முதலிய 18 ரஹஸ்ய க்ரந்தங்களும் பிறவும்
உயர்ந்த ரஹஸ்ய க்ரந்தங்களை அனைவரும் எளிதாக அறியும்படி எழுதிய பரம காருணிகர்.
லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம:
அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே
ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே
முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே
நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே
நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே
உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே
உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே
29. திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீ ஶைலேஶர்)
குந்தீ நகரம் (கொந்தகை)
வைகாசி – விசாகம்
பெரியாழ்வார் திருமொழி ஸ்வாபதேசம்
நம்மாழ்வாருக்கும் அவரின் திருவாய்மொழிக்குமே வாழ்ந்தவர். ஆழ்வார் திருநகரியைப் புனர் நிர்மாணம் செய்து எம்பெருமானாருக்கு தனிக் கோயில் அமைத்தவர்.
நம ஸ்ரீஶைலநாதாய குந்தீ நகர ஜந்மநே
ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்யஸாலிநே.
வையகமெண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
ஐயன் அருண்மாரி கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
அழகாரும் எதிராசர் அடிபணிவோன் வாழியே
துய்யவுலகாரியன் தன் துணைப்பதத்தோன் வாழியே
தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே
30. மணவாள மாமுனிகள் (ரம்ய ஜாமாத்ரு முனி)
ஆழ்வார் திருநகரி
ஐப்பசி – திருமூலம்
ஸ்தோத்ரங்கள், தமிழ் ப்ரபந்தங்கள், வ்யாக்யானங்கள்
எம்பெருமானாரின் புனர் அவதாரம். திருவாய்மொழி ஈடு வ்யாக்யானத்தை ஸ்ரீ ரங்கநாதன் மற்றும் அவன் பரிவாரங்களுக்கு முன்பாக ஓராண்டு உபந்யாஸம் செய்தவர். அதன் முடிவில், ஸ்ரீ ரங்கநாதன் மாமுனிகளை ஆசார்யனாக ஏற்றுக் கொண்டு ஸ்ரீஶைலேஶ தயாபாத்ரம் தனியனை ஸமர்ப்பித்தான்.
ஸ்ரீஶைலேஶ தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்
இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே
ஏராருமெதிராசரெனவுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் : http://pillai.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org