ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.
பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு பெருமாள் அமுது செய்த பழங்களைத் தருகிறேன். நான் உங்களுடன் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டேன். அடுத்ததாக குலசேகர ஆழ்வார் அனுபவித்த ராம சரித்திரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
வியாசன்: குலசேகர ஆழ்வார் ராமபிரானிடத்தில் மிகவும் அன்பு கொண்டவர். அவர் அனுபவித்த ராம சரித்திரத்தைக் கேட்க ஆசையாக இருக்கிறது பாட்டி.
அத்துழாய் : பாட்டி, எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் ராமனாக அவதரிக்கக் காரணம் என்ன ??
பாட்டி: சொல்கிறேன் கேளுங்கள் குழந்தைகளே. தேவர்கள் ஒரு சமயம் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை திருப்பாற்கடலுக்குச் சென்று சேவித்தார்கள். அப்பொழுது அரக்கர்களால் தாங்கள் மிகவும் துன்பப்படுவதாகவும் அவர்கள் கொடுமைகளிலிருந்து காத்தருளும்படி எம்பெருமானை சரணடைந்தார்கள். எம்பெருமானும் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க தான் பூவுலகில் ராமனாக அவதரித்து அரக்கர்களை அழிப்பதாக தேவர்களிடம் கூறினார்.
பராசரன்: அரக்கர்களை அழிப்பதற்காக எம்பெருமான் ராமனாக அவதரித்தார் என்று கூறினீர்கள் பாட்டி. இதை எம்பெருமான் தான் இருக்கும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து செய்திருக்க முடியுமே? பிறகு ஏன் மனிதனாக அவதரித்தார் ?
பாட்டி : நல்ல கேள்வி கேட்டாய் பராசரா. சொல்கிறேன் கேள். எம்பெருமான் தான் நினைத்த மாத்திரத்தில் எதையும் செய்துமுடிக்கும் ஆற்றல் படைத்தவன். ஆனால் அவனுடைய அவதாரத்திற்கு காரணம் உண்டு. தன் அடியவர்களுக்கு தீங்கு இழைப்பவர்களை அழிப்பதற்கும், அடியவர்களை காப்பதற்கும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் எம்பெருமான் தன் மேன்மையை மறைத்துக்கொண்டு அவதாரம் எடுக்கிறான். நம் போன்ற மனிதர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்கவே ராமனாக எம்பெருமான் அவதரித்தான்.
அத்துழாய் : எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனே நமக்கு முதல் ஆசார்யன் என்று தாங்கள் கூறியது நினைவிருக்கிறது பாட்டி. அவர் ராமனாக எங்கு , யாருக்குப் பிள்ளையாக அவதரித்தார் ? ராமாவதாரத்தில் எம்பெருமான் நமக்கு கற்றுக்கொடுத்த விஷயங்கள் என்னவென்று தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது பாட்டி.
பாட்டி : இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த தசரதன் அயோத்தி நகரத்தை ஆண்டு வந்தான். தசரதன் மிகுந்த வலிமையானவன், தர்ம நெறி தவறாமல் வாழ்ந்தவன் , இனிமையான சொற்களையே பேசுபவன் , பகைவரையெல்லாம் பறந்தோடச் செய்தவன், தன் நாட்டில் நல்லாட்சி புரிந்து தன் நாட்டு மக்களை சுகமாக வாழச்செய்தவன். அவன் தனக்கு நீண்ட காலமாக புத்திரனுண்டாக வேண்டி தவம் செய்து கொண்டிருப்பினும் புத்திரனுண்டாகவில்லை என்று தனக்குள் சிந்தித்துக்கொண்டிருக்கையில் பிள்ளை பிறக்கும் பொருட்டு அச்வமேதயாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு தோன்றியது. உடனே தன் மந்திரிகளின் தலைவனான சுமந்திரனைப் பார்த்து நீ என்னுடைய குருக்கள் , புரோஹிதர்கள் யாவரையும் விரைவில் அழைத்து வா என்று கட்டளையிட்டான். அவ்வாறே சுமந்திரனும் விரைவாகச் சென்று ஸூயஜ்ஞா , வாமதேவர், ஜாபாலி , காச்யபர் , தசரத அரசனின் குல குருவாகிய வசிஷ்டர் மற்றுமுள்ள உயர்ந்த அந்தணர்களையும் அரச மாளிகைக்கு அழைத்து வந்தான். தசரதன் அவர்கள் அனைவரையும் பூஜித்து மரியாதைகள் செய்து தனக்கு தோன்றிய எண்ணத்தைக் கூறி அச்வமேதயாகத்தை நீங்கள் தான் இனிதாக நிறைவேற்றியருள வேணும் என்றான். தசரதனுடைய அச்வமேதயாகம் புத்திரகாமேஷ்டி யாகத்துடன் கூட சிறப்பாக நிறைவேறியது. ஓராண்டுகள் சென்றது. யாகத்தின் பலனாக தசரத சக்ரவர்த்தியின் மூன்று மனைவிகளுக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள். கௌஸல்யா தேவிக்கு ராமனும், கைகேயிக்கு பரதனும் , சுமித்திரைக்கு லக்ஷ்மணன், சத்ருக்கனன் என்ற இரு பிள்ளைகளும் பிறந்தார்கள்.
வேதவல்லி: ஆக ராமபிரான் தேவர்களின் துன்பத்தைப் போக்குவதற்காக தசரத மன்னனுக்கு பிள்ளையாக அவதரித்தாரா?
பாட்டி: ஆமாம் வேதவல்லி. எம்பெருமான் தசரதனுக்கு மகனாக அவதரித்து அவன் குலமாகிய இக்ஷ்வாகு குலத்திற்கே பெருமை சேர்த்தான். தேவர்களையும் அரக்கர்களின் கொடுமைகளிலிருந்து காத்தான். இதையே குலசேகர ஆழ்வார், தான் அருளிச்செய்த பெருமாள் திருமொழியில், வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண்முழுதுமுயக் கொண்ட வீரன் என்று அழகாக குறிப்பிடுகிறார். அதாவது உயர்ந்த சூரிய குலத்திற்கே பெருமை சேர்க்கும் விளக்காக எம்பெருமான் ஸ்ரீராமனாக அவதரித்து, தேவர்கள் எல்லோருடைய துன்பத்தையும் போக்கினான் என்பது பொருள். மேலும், கடும் தவம் புரியும் ரிஷி முனிகளாலும் காண்பதற்கு அறிய எம்பெருமான், தன் மேன்மையை மறைத்துக்கொண்டு மனிதனாக அவதரித்து, நம் போன்ற மனிதர்கள் எவ்வாறு நன்னெறியுடன் வாழ வேண்டும் என்பதைத் தன் ராமாவதாரத்தில் வெளிப்படுத்தினான். எண்ணிலடங்காத திருக்கல்யாண குணங்களைக் கொண்டவன் ராமபிரான். தாய் , தந்தை , குரு மற்றும் பெரியோர்களிடம் பணிவுடன் நடந்துகொள்வது , உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று பிரித்துப் பார்க்காது நட்புடன் பழகுவது, எப்பொழுதும் கனிவுடன் பேசுவது , எடுத்த செயலை முடித்தே ஆகவேண்டும் என்ற உறுதி , அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பது , எந்த சூழ்நிலையிலும் உண்மையை மட்டுமே பேசுவது , தன்னை சரணடைந்தவர்களைக் காப்பது என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ராமபிரானைப் பற்றி நாம் கற்பதே உயர்ந்த ஞானத்தைக் கொடுக்கும். இதையே நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ? என்கிறார். அதாவது கற்க விரும்புபவர்கள் (உயர்ந்த ஞானத்தைப் பெற விரும்புபவர்கள்) தசரத சக்கரவர்த்தித் திருமகன் ராமபிரானின் பண்பையும் பெருந்தன்மையையும் விட்டு வேறொன்றைக் கற்க நினைப்பார்களா? மாட்டார்கள் என்கிறார். அவன் வாழ்ந்து காட்டிய வழியில் நாமும் வாழ முயற்சித்தாலே, நம் வாழ்க்கை செம்மையாகும்.
குழந்தைகள் நால்வரும் ராமபிரானுடைய திருக்கல்யாண குணங்களைப் பாட்டி சொல்லக்கேட்டு இத்தனை நற்குணங்களும் ஒருவருக்கே அமையப் பெறுவது என்பது மிக அறிது. ராமனைப் பற்றிக் கேட்கும் பொழுதே துளியேனும் அவருடைய நல்ல குணங்களை நாங்களும் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது பாட்டி.
பாட்டி : மிக்க மகிழ்ச்சி. சிறுவயதிலிருந்தே நற்பண்புகளை வளர்த்துக்கொள்வது மிக அவசியம். ராமபிரானுடைய இன்னருளால் உங்களுக்கு இந்த எண்ணம் தோன்றியுள்ளது. நிச்சயம் நீங்கள் நற்பண்புள்ளவர்களாக இருப்பீர்கள்.
குழந்தைகளும் பாட்டி கூறிய ராம சரித்ரத்தை எண்ணியவாறு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டனர்.
அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி
வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org