ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
<< பிள்ளை லோகாசார்யரும் அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரும்
பராசரனும் , வ்யாசனும் , அத்துழாய் மற்றும் வேதவல்லியோடு ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்குள் பிள்ளை லோகாசார்யரின் சிஷ்யர்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் நிறைந்த ஆர்வத்தோடு நுழைகிறார்கள்.
பாட்டி: வாருங்கள் குழந்தைகளே! எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் முகங்களில் உற்சாகம் தெரிகிறதே !
வ்யாசன்: நமஸ்காரம் பாட்டி. நாங்கள் எல்லாரும் நலமாக இருக்கிறோம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? ஆம் பாட்டி, நீங்கள் சொல்வது சரி தான். பிள்ளை லோகாசார்யரின் சிஷ்யர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்.
பாட்டி: ஆம் குழந்தைகளே, நானும் உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்ளக் காத்திருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நாம் சென்ற முறை கலந்துரையாடினது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அவரது சிஷ்யர்களின் பெயர்களை யாராவது சொல்கிறீர்களா?
அத்துழாய்: பாட்டி, அவர்களது பெயர்கள் எனக்கு நினைவிருக்கிறது! கூரகுலோத்தமதாசர், விளாஞ்சோலைப் பிள்ளை, திருமலையாழ்வார் (திருவாய்மொழிப்பிள்ளை), மணப்பாக்கத்து நம்பி, கோட்டூர் அண்ணர், திருப்புட்குழி ஜீயர், திருக்கண்ணங்குடிப்பிள்ளை, கொல்லிகாவலதாசர்.
பாட்டி: நல்லது அத்துழாய், நீங்கள் நினைவில் கொண்டிருப்பது நன்று! இன்று விரிவாகப் பார்க்கலாம். முதலில் நான் உங்களுக்கு கூரகுலோத்தமதாசரைப் பற்றிச் சொல்கிறேன்.
குழந்தைகள்: சரி, பாட்டி!
பாட்டி: கூரகுலோத்தமதாசர் ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர். திருமலையாழ்வாரை (திருவாய்மொழிப்பிள்ளை) நம் ஸம்ப்ரதாயத்திற்குத் திரும்பிக்கொண்டு வந்ததில் முக்கிய பணியாற்றினார். பிள்ளைலோகாசார்யரின் அத்யந்த சிஷ்யராய் இருந்து அவருடன் திருவரங்கனுலாவிற்குச் (முகலாய படையெடுப்பின் பொழுது நம்பெருமாளுடன் சென்றது ) சென்றார். கூரகுலோத்தமதாசர், திருமலையாழ்வாரைத் திருத்த பல முயற்சிகள் எடுத்ததால், மாமுனிகள் “கூரகுலோத்தமதாசம் உதாரம்” (மிகுந்த கருணையுடையவர் என்றும் தாராள குணம் படைத்தவர் என்றும் ) என்று சிறப்பிக்கிறார். பின், திருமலையாழ்வார் மிகுந்த நன்றியோடு கூரகுலோத்தமதாசரைப் பணிந்து தாசரோடே தங்கியிருந்து அவர் பரமபதித்த பிறகு ஆழ்வார்திருநகரிக்குச் சென்றார். ஸ்ரீவசனபூஷணத்தில், ஒரு சிஷ்யனுக்கு “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது நிச்சயமாக கூரகுலோத்தமதாசருக்கும் திருமலையாழ்வாருக்கும் தகும். ஆகையால் நாம் அனைவரும் பிள்ளை லோகாசார்யரின் திருவடியை நினைவில் கொண்ட கூரகுலோத்தமதாசரை நினைவில் கொள்வோம்.
வேதவல்லி: பாட்டி, நாங்கள் அனைவரும் கூரகுலோத்தமதாசரைப் பற்றித் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி. ஒரு ஆசார்யனை சிஷ்யன் எப்படி மதிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டோம்.
பாட்டி: ஆம் வேதவல்லி, அனைவரும் “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்” என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் இப்பொழுது விளாஞ்சோலைப் பிள்ளை என்னும் மற்றோரு முக்கிய சிஷ்யரைப் பற்றிப் பார்ப்போம்.
வ்யாசன்: பாட்டி, எனக்கு அவர்க்கு ஏன் “விளாஞ்சோலைப் பிள்ளை” என்ற பெயர் வந்ததென்று தெரியும். திருவனந்தபுரத்து பத்மநாபஸ்வாமி திருக்கோயிலின் கோபுரத்தைத் தரிசிப்பதற்காக விளாமரங்களை ஏறியதால் அவருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது.
பாட்டி: நன்று, வ்யாஸா, நீ சொன்னது சரியே. ஈழவ குலத்தில் பிறந்ததால், அவர் கோவிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. பெருமாளைத் தரிசிக்க, விளாமரத்தை ஏறி மங்களாசாஸனம் செய்வார். பிள்ளை லோகாசார்யரின் அருளால், ஈடு, ஸ்ரீபாஷ்யம், தத்வத்ரயம், மற்றும் பல ரஹஸ்யக் க்ரந்தங்களை, பிள்ளை லோகாசார்யரின் தம்பியான அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரிடம் கற்றார்.
விளாஞ்சோலைப் பிள்ளை ஸ்ரீவசனபூஷணத்தை தனது ஆசார்யரான பிள்ளை லோகாசார்யரிடம் கற்றார். அதன் பொருளைச் சொல்வதில் வல்லவரானார். அவர் ஸ்ரீவசனபூஷணத்தின் திரண்ட கருத்துக்களை “ஸப்தகாதை” என்னும் க்ரந்தத்தில் சாதித்தார்.
பராசரன்: விளாஞ்சோலைப் பிள்ளையின் ஆசார்யபிமானத்தைக் கண்டு மிகுந்த ஆச்சர்யம் அடைகிறோம்.
பாட்டி: ஆம் பராசரா, அவர் செய்த மிகப்பெரிய கைங்கர்யமானது அவரது ஆசார்யனின் ஆணைப்படி திருமலையாழ்வாருக்கு உபதேசங்கள் செய்தது. பிள்ளை லோகாசார்யர், ஸ்ரீவசனபூஷணத்தின் அர்த்தங்களை விளாஞ்சோலைப் பிள்ளை திருமலையாழ்வாருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டுமென விரும்பினார். விளாஞ்சோலைப் பிள்ளையின் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சியைப் பற்றி உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
அத்துழாய்: பாட்டி, எங்களுக்கு அந்த நிகழ்வைப் பற்றிச் சொல்லுங்களேன்.
பாட்டி: நீங்களெல்லாம் அதனை கேட்க ஆர்வமாய் இருப்பீர்களென எனக்குத் தெரியும். உங்களுடன் ஸத்விஷயம் பகிர்ந்து கொள்வது எனது கடமையாகும், ஆகையால் கவனமாகக் கேளுங்கள்!
ஒரு நாள், நம்பூதிரிகள் பத்மநாபஸ்வாமிக்கு திருவாராதனம் செய்து கொண்டிருந்தார்கள். விளாஞ்சோலைப் பிள்ளை கோவிலுக்குள் நுழைந்தார். பெருமாளைத் தரிசிப்பதற்காக சந்நிதிக்கு மூன்று வாயில்கள் இருப்பது நாமெல்லோரும் அறிந்ததே. விளாஞ்சோலைப் பிள்ளை பெருமாளின் திருவடித் தாமரைகளைக் காட்டும் வாயிலுக்கு அருகில் நின்றிருந்தார். அந்தக் காலத்தில் அவருக்கு கோயிலின் உள்ளே வர அனுமதி இல்லாததால், அவரைக் கண்டு திடுக்கிட்ட நம்பூதிரிகள், கோயில் கதவைச் சாற்றிவிட்டு வெளியே செல்லத் தொடங்கினர்.
அதே நேரத்தில், விளாஞ்சோலைப் பிள்ளையின் சில சிஷ்யர்கள் கோவிலுக்குள் நுழைந்து அவர்களது ஆசார்யரான விளாஞ்சோலைப் பிள்ளை தன் சரீரத்தை விட்டு தனதாசார்யரான பிள்ளை லோகாசார்யரின் திருவடியை அடைந்தாரென தெரிவித்தனர். அவர்கள் திருப்பரியட்டத்தையும் (எம்பெருமானின் பிரசாதமான வஸ்திரம்) எம்பெருமான் சூடிக்களைந்த மாலைகளையும், விளாஞ்சோலைப் பிள்ளையின் சரமத்திருமேனிக்குச் (பூதவுடலுக்கு) சாற்றுவதற்காக வாங்க வந்திருந்தனர்.
இதனைக் கேட்டவுடன் , நம்பூதரிகள் திகைத்து, விளாஞ்சோலைப் பிள்ளையின் மேன்மையைப் புரிந்து கொண்டனர். பின் அவர்கள் பெருமாளின் திருப்பரியட்டத்தையும் மாலைகளையும் அவர்களுக்குக் கொடுத்தனர்.
வேதவல்லி: பாட்டி, எனக்கு விளாஞ்சோலைப் பிள்ளையின் இறுதி தருணங்களைப் பற்றிக் கேட்கையில் மயிர்கூச்சல் ஏற்படுகிறது.
வ்யாசன்: ஆம் பாட்டி, எனக்கும் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வருகிறது. ஈழவ குலத்தில் உதித்த ஒருவரை நம் ஸம்ப்ரதாயத்தில் எவ்வாறு மதித்திருக்கிறோம் என்பது தெரிகிறது.
பாட்டி: ஆகட்டும் குழந்தைகளே, இன்று உங்களுடன் பொழுது நன்றாகக் கழிந்தது. இன்று நாம் கற்றுக்கொண்டதை நினைவில் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். அடுத்த முறை நான் உங்களுக்கு திருவாய்மொழிப் பிள்ளையைப் பற்றி விரிவாகச் சொல்கிறேன்- விரைவில் சந்திப்போம்!
குழந்தைகள் அனைவரும் ஆண்டாள் பாட்டி வீட்டை விட்டு, தங்களின் கலந்துரையாடலைப் பற்றி எண்ணிக்கொண்டே மகிழ்ச்சியாக செல்கிறார்கள்
அடியேன் பார்கவி ராமாநுஜதாசி
ஆதாரம் : http://pillai.koyil.org/index.php/2018/05/beginners-guide-pillai-lokacharyars-sishyas/
வலைத்தளம் – http://pillai.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/