ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
பராசரன், வ்யாசன், வேதவல்லி, அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள்.
பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு கொஞ்சம் ப்ரசாதம் தருகிறேன். நாளைய தினத்திற்கு என்ன சிறப்பு தெரியுமா? நாளைக்கு ஆளவந்தாரின் திருநக்ஷத்ரம் ஆகும், ஆடி, உத்ராடம். உங்களில் யாருக்கு ஆளவந்தாரை நினைவிருக்கிறது ?
அத்துழாய் : எனக்கு நினைவிருக்கிறது. அவர் தாம் ராமானுஜரை ஸம்ப்ரதாயத்திற்குள் அழைத்துவர தேவப் பெருமாளை ப்ரார்த்தித்தவர்.
வ்யாச : ஆமாம். மேலும், அவர் பரமபதத்தை அடைந்த பிறகு அவருடைய திருமேனியில் அவருடைய ஈடேறாத மூன்று ஆசைகளை குறித்தவாறு மடங்கியிருந்த அவருடைய மூன்று விரல்களைக் கண்டு ராமானுஜர் அவற்றை நிறைவேற்ற ப்ரதிக்ஞை செய்தார். ராமானுஜர் ப்ரதிக்ஞைகளை செய்தவுடன் அவ்விரல்கள் பிரிந்தன.
பராசர : ராமானுஜருக்கும் ஆளவந்தாருக்கும் இடையே இருந்த உறவு மனத்தாலும் ஆன்மாவினாலும் இயைந்தது, தேஹத்திற்கு அப்பாற்பட்டது என்று நீங்கள் சொன்னதும் எங்களுக்கு நினைவிருக்கிறது பாட்டி.
பாட்டி : மிகச்சரி! நாளை அவருடைய திருநக்ஷத்ரம் ஆகும். இந்தாருங்கள், இப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். ராமானுஜரை ஸம்ப்ரதாயத்திற்குள் கொணர்ந்த மஹாசார்யரை மறவாமல் நாளை நீங்கள் எல்லாரும் கோயிலுக்கு சென்று சேவிக்க வேண்டும். மேலே இன்று நம்முடைய அடுத்த ஆசார்யரான எம்பாரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். எம்பார் மதுரமங்கலத்தில் கமலநயன பட்டருக்கும் ஸ்ரீதேவி அம்மாளுக்கும் புதல்வராக அவதரித்தவர். பிறப்பில் அவருக்கு இட்ட பெயர் கோவிந்தப் பெருமாள் என்பதாகும். அவரை கோவிந்த பட்டர், கோவிந்த தாசர், ராமானுஜபதச் சாயையார் என்றும் அழைப்பார்கள். அவர் எம்பெருமானாருடைய (தாயாரின் தங்கையின் பிள்ளை) தம்பியாவார், ராமானுஜருக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து அவரைக் காப்பாற்றியவரும் அவர் தாம்.
வேதவல்லி : உயிருக்கு இருந்த ஆபத்தா? நான் ராமானுஜருக்கு ஒரு முறைதான் ஆபத்து ஏற்பட்டது, அதிலிருந்து அவரைக் கூரத்தாழ்வானும் பெரிய நம்பியும் தாம் காப்பாற்றினார்கள் என்று எண்ணியிருந்தேனே. அவருக்கு எத்தனை ஆபத்துகள் தான் நேர்ந்தன பாட்டி?
பாட்டி : பல தடவைகள்! அவற்றை நான் நேரம் வரும்பொழுது சொல்கிறேன். அவருடைய குருவான யாதவப்ரகாசர் தாம் முதலில் அவரை முதலில் கொல்ல எண்ணிணார். வேதங்களின் உட்பொருளைக் குறித்து ராமானுஜருக்கும் யாதவப்ரகாசருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது. யாதவப்ரகாசர் வேதத்தின் சில வாக்கியங்களுக்கான பொருளை தவறாகவும் திரிபாகவும் கூறி வந்தார். ராமானுஜர், அவற்றைக் கேட்கும் பொழுது மிகவும் வருந்தி நம் விசிஷ்டாத்வைத ஸம்ப்ரதாயத்தில் கூறியுள்ள உண்மை கருத்தினை தெரிவிப்பார். யாதவப்ரகாசர் அத்வைதியாகையால், அவற்றுக்கு ராமானுஜர் கூறும் விளக்கங்களை ஒப்புக் கொண்டதில்லை. ராமானுஜர் கூறி வந்த பொருள் உண்மையென்று அறிந்தவராகையால் அவரைத் தமக்குப் போட்டியாகக் கருதத் தொடங்கினார். ஆசார்யர் என்ற நிலைக்கு ராமானுஜர் தமக்குப் போட்டியாக வந்து விடுவார் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது; ஆனால் ராமானுஜருக்கோ அது போன்ற நோக்கமே இல்லை. இது யாதவப்ரகாசரின் மனத்தில் ராமானுஜர் மீது வெறுப்பும் பொறாமையும் கொள்ளக் காரணமாக அமைந்தது. அவர் வாரணாசிக்கு யாத்திரையாக தம் சிஷ்யர்களுடன் செல்லும் பொழுது ராமானுஜரைக் கொல்ல வேண்டும் என்று திட்டமிட்டார். இச்சூழ்ச்சியினை அறிந்த கோவிந்தப் பெருமாள் ராமானுஜரை அக்குழுவுடனான யாத்திரையினைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டாமென்று எச்சரித்தார். அவர் ராமானுஜரைத் தமது உயிரைக் காக்கும் பொருட்டு தெற்கில் காஞ்சிபுரம் நோக்கி செல்லுமாறு கேட்டுக் கொண்டார். ராமானுஜரும் அவ்வாறே செய்து அவரது குருவின் சூழ்ச்சியிலிருந்து தப்பித்தார். இவ்வாறு கோவிந்தப் பெருமாள் ராமானுஜரை ஆபத்திலிருந்து காத்தார்.
வ்யாச : பாட்டி, கோவிந்தப் பெருமாளும் யாதவப்ரகாசரின் சிஷ்யரா?
பாட்டி : ஆமாம் வ்யாசா. ராமானுஜர், கோவிந்தப் பெருமாள் இருவருமே யாதவப்ரகாசரிடம் கல்வி பயின்று கொண்டிருந்தவர்கள். ராமானுஜர் தம்மைக் காத்துக் கொள்ளும் பொருட்டு தெற்கு திசையில் சென்றாலும், கோவிந்தப்பெருமாள் யாத்திரையில் தொடர்ந்து சென்று சிவபக்தராகி காளஹஸ்தி என்னும் இடத்தில் தங்கி உள்ளங்கை கொண்ட நாயனார் என்று அழைக்கப்படலானார். இதனை அறிந்த ராமானுஜர், கோவிந்தப் பெருமாளை திருத்தி நம் ஸம்ப்ரதாயத்தில் திருப்பும் பொருட்டு தம் மாமாவாகிய பெரிய திருமலை நம்பியை அனுப்பினார். பெரிய திருமலை நம்பியும் காளஹஸ்த்திக்கு சென்று நம்மாழ்வாருடைய பாசுரங்களையும் ஆளவந்தாருடைய ஸ்தோத்ர ரத்னத்தின் ச்லோகங்களையும் கொண்டு கோவிந்தப் பெருமாளைத் திருத்தினார். கோவிந்தப் பெருமாளும் தம் தவறை உணர்ந்து நம் ஸம்ப்ரதாயத்திற்குத் திரும்பினார். ஆக குழந்தைகளே, ஆளவந்தார் பரமபதித்து விட்டாலும் ராமானுஜரை மட்டுமின்றி அவரது சகோதரராகிய கோவிந்தப் பெருமாளையும் நம் ஸம்ப்ரதாயத்திற்குள் ஈர்க்கக் கருவியாக இருந்தார். நம் ஸம்ப்ரதாயத்திற்குள் அவரை ஈர்த்த பெரிய திருமலை நம்பியே அவருக்கு ஆசார்யராக பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்தார். பெரிய திருமலை நம்பியும் திருப்பதிக்கு திரும்ப செல்ல அவருடன் கோவிந்தப் பெருமாளும் சென்று தம் ஆசர்யருக்கு கைங்கர்யங்கள் செய்யலானார். இங்கு நாம் கவனிக்க வேண்டிய பொருள் என்னவென்றால் கோவிந்தப் பெருமாளை திருத்தும் பொருட்டு ராமானுஜரும் பெரிய திருமலை நம்பியுமே அவரிடத்தில் சென்றார்களேயன்றி, அவர்களை அவர் அணுகவேயில்லை. தம் சிஷ்யர்களின் மேன்மைக்காக இத்தகைய அக்கறை கொண்டு அவர்களிடம் சென்று திருத்துவோரை க்ருபா மாத்ர ப்ரசன்னாசார்யர்கள் என்பர். எம்பெருமான் போன்றே அளவற்ற அன்போடும் கருணையோடும் சிஷ்யர்களை நோக்கிச் செல்கின்றனர். கோவிந்தப் பெருமாளுக்கு ராமானுஜர், பெரிய திருமலை நம்பி இருவருமே க்ருபா மாத்ர ப்ரசன்னாசார்யர்கள்தாம்.
பராசர : பாட்டி, கோவிந்தப் பெருமாளைப் பற்றி மேலும் சொல்லுங்கள். அவர் என்ன கைங்கர்யங்கள் செய்தார்?
பாட்டி: கோவிந்தப் பெருமாள் தம் ஆசார்யர் பெரிய நம்பியினிடத்தில் கொண்டிருந்த அபிமானத்தைக் காட்ட பல சம்பவங்கள் உள்ளன. ஒரு தடவை தம் ஆசார்யருக்கான படுக்கையினைத் தயாரிக்கும் பொழுது அவரே அதில் படுத்துப் பார்த்தார். நம்பி கோவிந்தப் பெருமாளை அது குறித்து விசாரித்தார். கோவிந்தப் பெருமாள், அம்மாதிரிச் செய்வதனால் தம் ஆசார்யரின் படுக்கை பாதுகாப்பாகவும் சரியாகவும் இருத்தலே தம் நோக்கம் என்றும், அதனால் தாம் நரகத்துக்கே போவதானாலும் பொருட்டில்லை என்றும் பதிலளித்தார். இதனைக் கொண்டு அவர் தம்மையே கருத்தில் கொள்ளாமல், ஆசார்யரிடத்தில் கொண்டிருந்த அபிமானத்தையும் ஆசார்யருடைய திருமேனியின் மீது அவர் கொண்டிருந்த கவனத்தையும் புரிந்து கொள்ளலாம். அக்காலகட்டத்தில் ராமானுஜர் ஸ்ரீராமாயணத்தின் சாரத்தை, பெரிய நம்பியிடமிருந்து கற்றுக்கொள்ள திருப்பதியில் இருந்தார். ஒரு வருட காலம் நம்பியிடமிருந்து கற்றுக்கொண்டு அவர் அங்கிருந்து புறப்பட ராமானுஜரைத் தம்மிடம் ஏதாவது பெற்றுக் கொள்ளுமாறு நம்பி கூறினார். ராமானுஜர் கோவிந்தப் பெருமாளைக் கேட்க, நம்பியும் உகப்புடன் ராமானுஜருக்குத் தொண்டு புரியும் பொருட்டு கோவிந்தப் பெருமாளைக் கொடுக்க ஒப்புக்கொள்கிறார். இதனை அறிந்த கோவிந்தப் பெருமாள், பெரிய திருமலை நம்பியிடமிருந்து பிரிவதை எண்ணிச் சோகமடைந்தார்.
வ்யாச : பாட்டி, நம்பி ஏன் கோவிந்தப் பெருமாளை ராமானுஜருடன் அனுப்பினார்? கோவிந்தப் பெருமாள் தம் ஆசார்யருக்கு அபிமானத்துடன் கைங்கர்யங்கள் புரிந்து கொண்டிருக்கும் பொழுது அவரை விட்டு ஏன் பிரிய வேண்டும்?
பாட்டி : வ்யாசா, கோவிந்தப் பெருமாள் ராமானுஜருக்குப் பல தொண்டுகள் புரிந்தே நம் ஸம்ப்ரதாயத்தில் முக்கிய இடம் பெற்றவர். அவருடைய குழந்தைப் பருவத்திலிருந்தே அவர் ராமானுஜரிடம் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தார். ராமானுஜர் பரமபதத்திற்கு ஏகியதும், பராசர பட்டரையும் ராமானுஜரின் மற்ற சிஷ்யர்களையும் வழி நடத்தினார். அவருக்கு இத்தனை பொறுப்புகளும் ஆற்ற வேண்டிய கடமைகளும் இருந்ததாலேயே, தம் ஆசார்யர் பெரிய திருமலை நம்பியை விட்டு பிரியும் தியாகத்தைச் செய்து ராமானுஜரைத் தம் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார். பிற்காலதில் அவர் ராமானுஜரையே தம் அனைத்தாகவும் ஏற்றுக்கொண்டு, ராமானுஜரின் திருமேனி அழகைக் காட்டும் பாசுரம் ஒன்றையும் அருளினார். இதை “எம்பெருமானார் வடிவழகு பாசுரம்” என்று அழைப்பார்கள். நான் போன தடவை சொன்னது போலவே, ஸம்ப்ரதாய விஷயங்களில் பொதுவான நன்மையின் பொருட்டு, தியாகங்கள் செய்ய நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அதைத் தான் கோவிந்தப் பெருமாளும் செய்தார்.
அத்துழாய் : கோவிந்தப் பெருமாளுக்கு விவாகம் நடந்ததா? அவருக்குக் குழந்தைகள் இருந்தனரா?
பாட்டி : கோவிந்தப் பெருமாள் எல்லோரிடத்திலும் எப்பொருளிலும் எம்பெருமானையே காணுமளவுக்கு பகவத் விஷயத்தில் ஈடுபட்டிருந்தவர். அவருக்கு விவாகம் நடந்திருந்தாலும், கோவிந்தப் பெருமாள் பகவத் விஷயத்தில் கொண்டிருந்த ஈடுபாட்டைக் கண்டு, எம்பெருமானார் அவருக்கு ஸந்யாஸாச்ரமத்தில் ஈடுபடுத்தி அவருக்கு எம்பார் என்று பெயரும் இட்டார். அவருடைய இறுதி நாட்களில், எம்பார் இத்தகைய சிறந்த ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை மேலே நடத்திச் செல்லுமாறு பராசர பட்டரைப் பணித்தார். எக்காலத்திலும் எம்பெருமானாருடைய பாதக்கமலங்களை தியானித்து “எம்பெருமானார் திருவடிகளே சரணம்” என்று அனுசந்தித்துக் கொண்டு இருக்குமாறு அவர் பராசர பட்டரைப் பணித்தார். தம்முடைய ஆசார்யர் ராமானுஜரின் திருவடித் தாமரைகளை தியானித்த வண்ணம், தம்முடைய ஆசார்யரிடம் அவர் அளித்த ப்ரதிக்ஞையகளை நிறைவேற்றியபின், தம்முடைய ஆசார்யருக்கு மேலும் கைங்கர்யங்கள் செய்யும் பொருட்டு எம்பார் பரமபதத்தை அடைந்தார். தம்முடைய ஆசார்யர் நடத்திய வழியில், பட்டரும் அப்பழுக்கற்ற குன்றாத மரபு கொண்ட நம் ஸம்ப்ரதாயத்தை மேலும் வழிநடத்தினார்.
வேதவல்லி : பட்டரைப் பற்றி இன்னும் சொல்லுங்கள் பாட்டி.
பாட்டி : பட்டரைப் பற்றி மேலும் நான் அடுத்த தடவை உங்களுக்குச் சொல்வேன். இப்பொழுது இருட்டி விட்டதால் உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள். நாளைய ஆளவந்தார் திருநக்ஷத்ர தினத்தில் கோயிலுக்கு மறவாமல் செல்லுங்கள்.
குழந்தைகள் ஆளவந்தார், பெரிய திருமலை நம்பி, ராமானுஜர், எம்பாரைப் பற்றி எண்ணியவாறு தங்கள் வீடுகளுக்குப் புறப்படுகின்றனர்.
அடியேன் கீதா ராமானுஜ தாசி
ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2016/08/beginners-guide-embar/
வலைத்தளம் – http://pillai.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/