ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.
பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு பெருமாள் அமுது செய்த பழங்களைத் தருகிறேன். இந்த மாதத்தின் சிறப்பு என்னவென்று தெரியுமா?
பராசரன் : நான் சொல்கிறேன் பாட்டி. நீங்கள் எங்களுக்கு சொல்லியது நினைவிருக்கிறது. மணவாள மாமுனிகள் அவதரித்த மாதம் இது. ஐப்பசி மாதம் மூலம் திருநக்ஷத்திரம் .
வேதவல்லி : ஆமாம். மேலும் முதலாழ்வார்கள் , சேனை முதலியார் மற்றும் பிள்ளை உலகாசிரியரும் இதே மாதத்தில் தான் அவதரித்தார்கள். சரியா பாட்டி?
பாட்டி : மிக நன்றாக சொன்னீர்கள். இதுவரை ஆழ்வார்கள், ஆசார்யர்கள், அனுஷ்டானம், கைங்கர்யம் பற்றிய விஷயங்களைப் பார்த்தோம். அடுத்ததாக அபசாரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
வ்யாசன் : அபசாரம் என்றால் என்ன பாட்டி ?
பாட்டி : அபசாரம் என்பது எம்பெருமானிடத்திலும், அவன் அடியார்களிடத்திலும் புரியும் குற்றம். நாம் எப்பொழுதும் அவனுக்கும், அவன் அடியார்களுக்கும் திருவுள்ளமுகக்கும்படி நடந்துகொள்ள வேண்டும். அவனுக்கும், அவன் அடியார்களுக்கும் எந்த ஒரு செயல் திருவுள்ளமுகக்கவில்லையோ அதுவே அபசாரம் ஆகும் . நாம் தவிர்க்க வேண்டிய அபசாரம் / குற்றங்களைப் பற்றிக் காண்போம்.
அத்துழாய் : பாட்டி , சற்று விரிவாக கூறுங்களேன்.
பாட்டி : சொல்கிறேன் கேளுங்கள். எம்பெருமானுடைய அடியவர்களிடத்தில்/பாகவதர்களிடத்தில் இழைக்கப்படும் குற்றம் பாகவத அபசாரமாகும். பகவத் அபசாரத்தை விட பாகவத அபசாரம் மிகக் கொடியது, மிகப்பெரிய பாவச்செயல். எம்பெருமான் ஒருபொழுதும் தன் அடியவர்களின் துன்பத்தைப் பொறுக்கமாட்டான். அதனால் நாம் ஒருபொழுதும் பாகவதர்களிடத்தில் அபசாரப்படக்கூடாது. இப்பொழுது நான் சொல்லப்போகும் பட்டியல் தவிர்க்கவேண்டிய பாகவத அபசாரமாகும்.
- நம்மை மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களுக்குச் சமம் என்று எண்ணக்கூடாது. மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களைக் காட்டிலும் நம்மைத் தாழ்ந்தவர்கள் என்று நினைவில் கொள்ளவேண்டும்.
- எவரையும் நம் மனதினாலோ, வாக்கினாலோ, செயல்களினாலோ புண்படுத்தக்கூடாது.
- ஸ்ரீவைஷ்ணவர்கள் எவரையும் அவர்கள் பிறப்பு, அறிவு, வாழ்க்கை முறை, செல்வம், தோற்றம் இவற்றை வைத்து அவமதிக்கக்கூடாது. இது இருபாலினத்தவர்களுக்கும் பொருந்தும்.