ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – அபசாரங்கள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< கைங்கர்யம்

பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.

பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு பெருமாள் அமுது செய்த பழங்களைத் தருகிறேன். இந்த மாதத்தின் சிறப்பு என்னவென்று தெரியுமா?

பராசரன் :  நான் சொல்கிறேன் பாட்டி. நீங்கள் எங்களுக்கு சொல்லியது நினைவிருக்கிறது. மணவாள மாமுனிகள் அவதரித்த மாதம் இது. ஐப்பசி மாதம் மூலம் திருநக்ஷத்திரம் .

வேதவல்லி : ஆமாம். மேலும் முதலாழ்வார்கள் , சேனை முதலியார் மற்றும் பிள்ளை உலகாசிரியரும் இதே மாதத்தில் தான் அவதரித்தார்கள். சரியா பாட்டி?

பாட்டி : மிக நன்றாக சொன்னீர்கள். இதுவரை ஆழ்வார்கள், ஆசார்யர்கள், அனுஷ்டானம், கைங்கர்யம் பற்றிய விஷயங்களைப் பார்த்தோம். அடுத்ததாக அபசாரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
வ்யாசன் : அபசாரம் என்றால் என்ன பாட்டி ?
பாட்டி : அபசாரம் என்பது எம்பெருமானிடத்திலும், அவன் அடியார்களிடத்திலும் புரியும் குற்றம். நாம் எப்பொழுதும் அவனுக்கும், அவன் அடியார்களுக்கும் திருவுள்ளமுகக்கும்படி நடந்துகொள்ள வேண்டும். அவனுக்கும், அவன் அடியார்களுக்கும் எந்த ஒரு செயல் திருவுள்ளமுகக்கவில்லையோ அதுவே அபசாரம் ஆகும் . நாம் தவிர்க்க வேண்டிய அபசாரம் / குற்றங்களைப் பற்றிக் காண்போம்.
அத்துழாய் : பாட்டி , சற்று விரிவாக கூறுங்களேன்.
பாட்டி : ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சாஸ்த்ரமே ஆதாரம்/வழிகாட்டி. நம் பூர்வாசார்யர்கள் சாஸ்த்ரத்தின் மீது அதீத நம்பிக்கையுடன் தங்களது அனுஷ்டானங்களை மிகச்சரியாகக் கடைபிடித்தார்கள். நாமும் எம்பெருமானிடமும் , அவன் அடியார்களிடமும் அபசாரப்படாமல் இருத்தல் வேண்டும். இப்பொழுது நாம் அபசாரத்தின் வகைகளைப் பற்றிக் காண்போம். முதலில் பகவத் அபசாரத்தைப் பற்றிக் காண்போம்.

வியாசன் : எம்பெருமானிடத்தில் இழைக்கப்படும் குற்றமே பகவத் அபசாரம். சரியா பாட்டி ?
பாட்டி : சரியாக சொன்னாய். இப்பொழுது நான் சொல்லப்போகும் பட்டியல் தவிர்க்கவேண்டிய பகவத் அபசாரம் ஆகும். அவை 
  • ஸ்ரீமந்நாராயணனுக்கு நிகராக/சமமாக அவனால் படைக்கப்பட்ட இதர தேவதைகளான பிரமன், சிவன், வாயு, வருணன்,  இந்த்ரன் போன்றவர்களை நினைப்பது குற்றமாகும் / பகவத் அபசாரம் ஆகும் .

  • ஸ்ரீவைஷ்ணவனான பின்பு எம்பெருமானை தவிர இதர தேவதைகளைப் பூசிப்பது/தொழுவது கூடாது. அனைத்தும் எம்பெருமானிடத்திலிருந்தே தோன்றியது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

  • நித்ய கர்மாநுஷ்டானங்களைக் கடைபிடிக்காமல் இருப்பதும் பகவத் அபசாரம் ஆகும். நித்ய கர்மாநுஷ்டானங்கள் எம்பெருமான் நமக்கிட்ட கட்டளை. அதனால் அவருடைய திருவார்த்தைகளுக்கு அடிபணிய வேண்டும். அவருடைய கட்டளைகளுக்கிணங்க நாம் நடக்கவில்லை என்றால் நாம் அபசாரம் செய்கிறோம் என்பதாகும். நான் நித்ய கர்மாநுஷ்டானங்களைப் பற்றி முன்பு உங்களுக்கு கூறியது நினைவிருக்குமென நம்புகிறேன்.
பராசரன் : ஆம் பாட்டி. வியாசனும் நானும் தினமும் சந்தியாவந்தனத்தைத் தவறாமல் செய்கிறோம்.

பாட்டி : நீங்கள் நித்ய கர்மாநுஷ்டானங்களைக் கடைபிடிப்பது எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.
  • அடுத்து முக்கியமாக நாம் தவிர்க்க வேண்டியது ராமன், க்ருஷ்ணன் போன்ற அவதாரங்களை சாமான்ய அல்லது விசேஷ சக்தியுள்ள மனிதர்கள் என்றெண்ணுவது. எம்பெருமான் தன் அடியார்கள் மீதுள்ள அன்பினாலும் கருணையினால் மட்டுமே தன்னை தாழ்த்திக்கொண்டு நம்மை ரக்ஷிக்கும் பொருட்டு அவதரித்தார் என்பதை உணரவேண்டும்.

  • நம்மை ஸ்வதந்த்ரர்கள் என்றெண்ணி இந்த உலகத்தில் உரிமை கொண்டாடுவது (என் உடைமை என்றெண்ணுவது ) தவறான செயலாகும். எல்லாவற்றிற்கும் உரிமையாளன் எம்பெருமான் ஒருவனென்று அறிந்துகொள்ள வேண்டும்.
  • எம்பெருமானைச் சேர்ந்த பொருட்களைக் களவாடுதல் குறிப்பாக அவனுடைய உடைமைகளான வஸ்த்ரம் , திருவாபரணம் , அசையாச் சொத்துக்களான நிலம் போன்றவற்றைத் திருடுவது , அவ்வாறு எண்ணுவதும் கூட மிகப்பெரிய பாவச்செயலாகும்.
பாட்டி : சொல்கிறேன் கேளுங்கள். எம்பெருமானுடைய அடியவர்களிடத்தில்/பாகவதர்களிடத்தில் இழைக்கப்படும் குற்றம் பாகவத அபசாரமாகும். பகவத் அபசாரத்தை விட பாகவத அபசாரம் மிகக் கொடியது, மிகப்பெரிய பாவச்செயல். எம்பெருமான் ஒருபொழுதும் தன் அடியவர்களின் துன்பத்தைப் பொறுக்கமாட்டான். அதனால் நாம் ஒருபொழுதும் பாகவதர்களிடத்தில் அபசாரப்படக்கூடாது. இப்பொழுது நான் சொல்லப்போகும் பட்டியல் தவிர்க்கவேண்டிய பாகவத அபசாரமாகும்.
  • நம்மை மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களுக்குச் சமம் என்று எண்ணக்கூடாது. மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களைக் காட்டிலும் நம்மைத் தாழ்ந்தவர்கள் என்று நினைவில் கொள்ளவேண்டும்.
  • எவரையும் நம் மனதினாலோ,  வாக்கினாலோ, செயல்களினாலோ புண்படுத்தக்கூடாது.
  • ஸ்ரீவைஷ்ணவர்கள் எவரையும் அவர்கள் பிறப்பு, அறிவு, வாழ்க்கை முறை, செல்வம், தோற்றம் இவற்றை வைத்து அவமதிக்கக்கூடாது. இது இருபாலினத்தவர்களுக்கும் பொருந்தும்.

பாட்டி : நம் பூர்வாசார்யர்கள் , மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களை / பாகவதர்களை மிகவும் உயர்வாக கௌரவத்துடன் நடத்தினார்கள். எப்பொழுதும் எம்பெருமான் அடியவர்களின் திருவுள்ளம் வருந்தும்படி நடந்ததில்லை.

Leave a Comment