ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
<< திருவவதாரம்
பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.
பாட்டி தன் அகத்து எம்பெருமானுக்காக புஷ்பம் கட்டிக்கொண்டிருந்தாள். வாருங்கள் குழந்தைகளே! கை கால்களை அலம்பிக்கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த திருப்பணியாரங்களைத் தருகிறேன்.
பராசரன்: சென்ற முறை ராம ஜனனம் பற்றிக் கூறினீர்கள் பாட்டி. மேலும் ராம கதையைக் கேட்க ஆசையாக இருக்கிறது.
பாட்டி: சொல்கிறேன் கேளுங்கள். தசரத மன்னன் புத்திரர்கள் அவதரித்ததைக் கொண்டாடும் வகையில் நாடு நகரத்தில் உள்ள அனைவர்க்கும் பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினான். பின்பு புத்திரர்களுக்கு ஜாத கர்மம் முதலிய சடங்குகள் அனைத்தையும் சிறப்பாகச் செய்தான்.
அத்துழாய்: நாடு முழுவதும் திருவிழா போல் தோற்றமளித்திருக்கும். மக்களனைவரும் கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள். கேட்கும்போதே ஆனந்தமாக இருக்கிறது பாட்டி.
பாட்டி: ஆம் அச்சமயத்தில் தேவர்கள் பூமழை பொழிந்தார்கள், கந்தர்வர்கள் ஆகாயத்தில் மிக இனிமையாக பாடி மகிழ்ந்தனர். மக்கள் அனைவரும் குதூகலித்தனர். அக்குமாரர்கள் நால்வரும் நாளடைவில் வேத சாஸ்திரங்களைக் கற்று, தனுர் வேதத்திலும் வல்லமை பெற்று உலகத்திற்கு நன்மை செய்வதிலே மிக விருப்பங்கொண்டு, நற்குணங்களனைத்திற்கும் இருப்பிடமாகத் திகழ்ந்தனர். நால்வர்களில் ராமபிரான் தன் தந்தை தசரதனுக்குப் பணிவிடை செய்வதிலே மிக விருப்பம்கொண்டான். லக்ஷ்மணன் ராமபிரானுக்குத் தொண்டு செய்வதான பெரும் செல்வத்தை மேன்மேலும் பெருகச் செய்துகொண்டிருந்தான். ஸ்ரீராமனும், லக்ஷ்மணனும் இணைபிரியாமல் இருப்பார்கள். லக்ஷ்மணன் எவ்வாறு ராமனைவிட்டு பிரியாதிருப்பானோ அதுபோல சத்ருகனன் பரதனை விட்டு பிரியாதிருப்பான். பரதனுக்கு சத்ருகனன் தன் உயிரினும் மேலாக இருந்தான்.
வேதவல்லி: நால்வரும் எவ்வாறு உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்தார்களோ அவர்கள் அருளினால் நாங்களும் எங்கள் உடன் பிறந்தவர்ககுடன் ஒற்றுமையாக வாழ்வோம் பாட்டி. மற்ற மூவரும் ஆம் என்றனர்.
வியாசன்: சகோதர ஒற்றுமைக்கு இவர்களே சிறந்த முன் உதாரணமாக வாழ்ந்திருக்கிறார்கள்.
பாட்டி: ஆமாம். ஸ்ரீராமனுடைய சரித்திரத்தைக் கேட்கக் கேட்க நற்பண்புகள் வளரும். இப்படிப்பட்ட சிறந்த குணங்களைப்பெற்ற புத்திரர்களினால் தசரதன் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தான். நீங்களும் உங்கள் பெற்றோர்கள் மனம் மகிழும்படி நடந்துகொள்ளவேண்டும். குழந்தைகள் நால்வரும் நிச்சயமாக நீங்கள் கூறியபடி நடந்துகொள்வோம் பாட்டி என்றனர்.
பாட்டி: நீங்கள் கூறுவதைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் சொல்கிறேன் கேளுங்கள். நாட்கள் கடந்தன. புதல்வர்கள் நால்வருக்கும் திருமணம் செய்ய தகுந்த வயது வரக்கண்டு ஆனந்தத்துடன் அவர்களது திருமணம் குறித்து புரோஹிதருடனும், உறவினர்களுடனும் கூடி ஆலோசித்துக் கொண்டிருக்கையில் விசுவாமித்ர முனிவர் தசரத மன்னனைக் காண அவ்விடம் வந்தார். மன்னனும் அம்மாமுனியைக் கண்டு மகிழ்ந்து தன் புரோகிதரான வசிஷ்டமுனிவருடன் கூடி நன்கு வரவேற்று அமரச்செய்தான். விசுவாமித்ர முனியும் களிப்படைந்து மன்னனையும் வசிஷ்ட வாமதேவர் முதலிய ரிஷிகளை நலம் விசாரித்தார். பின்பு மன்னன் விசுவாமித்திர முனிவரைப் பூஜித்து முனிவரே நான் புதல்வர்களின் திருமணம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கையில் தாங்கள் தற்செயலாய் வந்து எனக்கு காட்சியளித்தது எனக்கு அளவற்ற ஆனந்தத்தைக் கொடுக்கிறது. நீர் எந்த பயனைக் குறித்து வந்தீரோ அதைச் சொன்னால் உம்முடைய அருளினால் அதை நிறைவேற்ற விரும்புகிறேன். உம்முடைய கட்டளையை நான் நிறைவேற்றுவேனோ மாட்டேனோ என்று சந்தேகப்படவேண்டாம். நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றான்.
வேதவல்லி: விசுவாமித்திர முனிவர் மன்னனிடம் எதைப் பெறுவதற்காக வந்தார் பாட்டி? கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது.
பாட்டி: சுவாரசியத்துடன் காத்திருங்கள். நீங்கள் அடுத்தமுறை வரும்பொழுது கூறுகிறேன். இப்பொழுது இருட்டிவிட்டதால் உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள்.
குழந்தைகள் நால்வரும் தங்கள் அகத்திற்குப் புறப்பட்டார்கள்.
அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி
வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org