ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
பராசரன், வ்யாசன் இருவரும், வேதவல்லியுடனும் அத்துழாயுடன் ஆண்டாள் பாட்டியின் வீட்டில் நுழைகிறார்கள்.
பராசர : பாட்டி, ராமானுஜருடைய வாழ்கையைப் பற்றியும், அவருடைய அனைத்து சிஷ்யர்களைப் பற்றியும் சொல்வதாக நேற்று சொன்னீர்களே.
பாட்டி: ஆமாம். அவருடைய சிஷ்யர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் ராமானுஜர் கொண்டிருந்த ஒரு மிகச் சிறந்த அம்சத்தைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது என்னவென்றால், அவருடைய தோற்றத்திற்கு முன்னால், அவருடைய அவதாரத்தைப் பற்றி சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே, நம்மாழ்வார் மதுரகவியாழ்வாருக்கு முன்னறிவித்து விட்டார்; அதனை நாதமுனிகளுக்கும் முன்னறிவித்தார். சரமோபாய நிர்ணயம் என்ற ஒரு சிறந்த க்ரந்தம் உண்டு; அது எம்பெருமானாரின் மேன்மைகளை முழுமையாக உரைக்கும் – இதில் நம்மாழ்வாருக்கும் – நாதமுனிகளுக்கும் இடையே எம்பெருமானாரின் அவதாரம் குறித்து நடந்த உரையாடலைப் பதிவு செய்யும். நம்மாழ்வார் மதுரகவியாழ்வாருக்கு அளித்த எம்பெருமானாரின் திவ்ய திருமேனி இன்றும் ஆழ்வார்திருநகரியில், பவிஷ்யதாசார்யன் சன்னிதியில் இன்றளவும் ஆராதிக்கப்பட்டு வருகிறது.
ராமானுஜர் – ஆழ்வார்திருநகரி
வ்யாச : ஆஹா! அப்படியானால், ஆழ்வாரும் சில ஆசார்யர்களும் அவருடைய அவதாரத்தைப் பற்றி முன்பே அறிந்திருந்தனர். எவ்வளவு ஆச்சர்யம் பாட்டி. அவருடைய வாழ்க்கையைக் குறித்து மேலும் சொல்லுங்கள்.
பாட்டி: ஆமாம், ராமானுஜர் வைஷ்ணவ சித்தாந்தத்தை நம் தேசத்தின் பல மூலை முடுக்குகளிலும் பிரசாரம் செய்தார். அதில் அவருக்கு பல இடங்களில் எதிர்ப்பு இருந்தது; சில இடங்களில் ஆதரவும் இருந்தது. ராமானுஜர் தம் அன்பினாலும் ஞானத்தினாலும் அனைத்து மக்களையும் ஈர்த்தார். அவர் காஞ்சிபுரத்தில் இருந்த பொழுது, அவருக்கு தஞ்சம்மாளுடன் விவாகம் நடைபெற்றது, பிறகு அவர் தேவப் பெருமாளிடம் ஸந்யாஸாச்ரமம் பெற்றார், அப்பொழுது அவர் தன்னுடைய மருமகனான முதலியாண்டானைத் தவிர அனைத்து உடைமைகளையும் விடுவதாக உறுதி பூண்டார்.
வ்யாச: பாட்டி, அவர் ஏன் விவாகம் செய்து கொண்டபின் ஸந்யாஸாச்ரமம் மேற்கொள்ள வேண்டும்? அவர் க்ருஹஸ்தராக இருந்து கொண்டே அவருடைய அனைத்து கைங்கர்யங்களையும் செய்திருக்கலாமே?
பாட்டி : வ்யாசா, அதற்குப் பல காரணங்கள் இருந்தன. முதலானது, அவருக்கும் அவருடைய மனைவிக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. இரண்டாவது, ஒரு மேன்மையான நோக்கம் உனக்கு இருக்குமானால் சில தியாகங்களை செய்யத்தான் வேண்டும். வைஷ்ணவ சித்தாந்தத்தை நம் தேசத்தின் பல மூலை முடுக்குகளிலுள்ள மக்களிடம் அவர் கொண்டு சென்றார் என்பது நாமெல்லோரும் அறிந்ததுதானே. உதாரணமாக, நம் தேசத்தைக் காவல் காக்கும் உன்னத லட்சியத்திற்காக நம் வீரர்கள், தம் அன்பான உறவினர்களையும் நன்பர்களையும் விட்டு வந்து அப்பணியினை செய்கிறார்கள் அல்லவா? அது போலத்தான், ராமானுஜர் தம் மனதில் ஒரு சிறந்த நோக்கத்தைக் கொண்டிருந்தார். வேதங்களின் உட்கருத்தை வெளிப்படுத்துதலே தம் நோக்கம் என்பதனை அவர் நன்றாக அறிந்திருந்தார். அதனால் அவர் ஸந்யாஸம் பெற்றுக் கொண்டார். அவர் ஜீயராக ஆனவுடனேயே, சிறந்த பண்டிதர்களாண முதலியாண்டானும் கூரத்தாழ்வானும் ராமானுஜருக்கு சிஷ்யர்களானார்கள்.
அத்துழாய் : அவ்வளவு பெரிய பொறுப்பு ஒரு சுமை தானே? ராமானுஜர் தனியாக எப்படி அதனை நிறைவேற்றினார்?
பாட்டி : இல்லை அத்துழாய்! அது ஒரு சுமையே அன்று. உன்னுடைய பணியில் ஆர்வம் மிகுந்து இருந்தால் அது உனக்கு ஒரு சுமையாகத் தோன்றாது. மேலும், ராமானுஜர் எக்காலத்திலும் தனியாக இல்லை அவர் எக்காலத்திலும் அவருடைய சிறந்த சிஷ்யர்களான, முதலியாண்டான், கூரத்தாழ்வான், எம்பார், அனந்தாழ்வான், கிடம்பியாச்சான், வடுக நம்பி, பிள்ளை உறங்காவில்லிதாசர் போன்றோருடனேயே இருந்தார், அவர்கள் அவரை நாளும் கருத்தாகக் காத்து அவருக்குத் தொன்டு செய்து வந்தனர். அவருடைய லட்சியங்களிற்கான பயணத்தில் அவர்கள் எக்காலத்திலும் அவருடனேயே இருந்தார்கள். அவரைத் தாக்கவும், ஏன் கொல்லவுமே பல முயற்சிகள் அக்காலத்தில் இருந்தன. அது போன்ற சமயங்களில், எம்பார், கூரத்தாழ்வான் போன்றோர் தம் ஆசாரியரைக் காக்கும் பொருட்டு அவர்கள் ஆந்த ஆபத்துகளுக்கு உள்ளானார்கள். சைவ அரசனின் நாட்டிற்கு கூரத்தாழ்வானும் பெரிய நம்பியும் சென்று அவர்களின் கண்களை இழந்ததனை அறிவீர்களல்லவா? அத்தகைய சிறந்த சிஷ்யர்கள் சூழ இருந்த ராமானுஜரும் பல கோயில்களில் நிர்வாக சீர்திருத்தம் செய்யும் பணியை சிறப்பாக நடத்தினார்.
ராமானுஜர் – ஸ்ரீரங்கம்
வேதவல்லி : ஆமாம் பாட்டி, ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற கோயில்களின் நிர்வாகம், சட்ட திட்டங்கள், வழக்கங்களெல்லாம் ராமானுஜரால் நிறுவப்பட்டவை என்று நான் கேட்டிருக்கிறேன். அதனைப் பற்றி எங்களுக்குச் சொல்கிறீர்களா?
பாட்டி : அது சரிதான் வேதவல்லி. வேதங்களில் சொல்லப்பட்ட வழக்கங்களை எல்லாம் அவர் நிலைநாட்டினார். அவர் மிகுந்த கவனத்தோடு இந்தத் திட்டங்களை நிறுவி, அவ்வனைத்தும் சரிவர நடைபெறும் வண்ணம் செய்தார். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அதிகாரியாக இருந்தவர் பெரிய கோயில் நம்பி என்னும் ஒருவர். நான் முன்னே சொன்னது போல, கோயில் நிர்வாகத்தில் அவர் செய்ய விரும்பிய மாற்றங்களைச் செயல்படுத்த அவருக்கு பெரிய கோயில் நம்பி சுலபத்தில் அனுமதித்து விடவில்லை. அதனால் பெரிய கோயில் நம்பியை ஸ்ரீவைஷ்ணவ தர்மத்தில் கொண்டு வரவும் அவருக்கு அதற்கான வழியினை காட்டவும் ராமானுஜர் கூரத்தாழ்வானை அனுப்பி வைத்தார். பெரிய கோயில் நம்பியும் ஆழ்வானின் வழிகாட்டுதலினால், ராமானுஜரிடம் சரணடைந்தார், பிற்காலத்தில் திருவரங்கத்தமுதனார் என்று அழைக்கப்பட்டார். அவர் பிற்காலத்தில் ராமானுஜரைப் போற்றி இராமானுச நூற்றந்தாதியினை இயற்றினார். திருவேங்கடமுடையானை வேறு விதமாக இதர பிரிவினர்கள் கூறி வந்தனர் என்பதனையும் அவர் விஷ்ணுவே என்ற அடையாளத்தை அவருக்கு ஏற்படுத்தியவர் ராமானுஜர்தாம் என்றும் தெரியுமா?
ராமானுஜர் – திருமலை
பராசர : என்ன? நாம் எல்லோரும் திருவேங்கடமுடையான் ஸ்ரீமஹாவிஷ்ணுவேதான் என்றுதான் அறிவோமே? எப்பொழுது இதில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது?
பாட்டி : ஆம்! திருவேங்கடமுடையான் மஹாவிஷ்ணுவேதான். ஆனால், அதற்கு மாறாக கூறிக்கொண்டிருந்தவர்கள் சிலரும் இருந்தனர். சிலர் அவரை ருத்ரன் என்றும் வேறு சிலர் அவர் ஸ்கந்தனின் ரூபம் என்றும் கூறிக்கொண்டிருந்தனர். இதனைச் செவியுற்ற ராமானுஜர் திருப்பதிக்குச் சென்றார். அதில் அவருக்கு மிகவும் வருத்தம். அங்கே சென்று திருவேங்கடமுடையானுடைய சங்கத்தையும் சக்கரத்தையும் அடையாளப்படுத்தி அவரை நிலைநாட்டினார். ஆக, திருப்பதியில் ராமானுஜர் கோயில் நிர்வாகம் மாத்திரமன்றி வேறு சில கைங்கர்யங்களையும் செய்தார். இதனாலேயே ராமானுஜரைத் திருவேங்கடமுடையானுடடை ஆசாரியர் என்று கொண்டாடுவார்கள். அங்கேதான், ராமானுஜர் ராமாயணத்தின் சாரத்தை அவருடைய மாமாவான திருமலை நம்பியிடம் கற்றார். இதற்கு பின்னால் அவர் வேறு பல கோயில்களின் கைங்கர்யங்களை நிறுவினார், அவற்றுள் பிரதானமானது திருநாராயணபுரம் ஆகும்.
ராமானுஜர் – திருநாராயணபுரம்
அத்துழாய் : பாட்டி, அக்காலத்தில் மேல்கோட்டையில் இருந்த ஜைனர்கள் ராமானுஜருக்கு ஊறு செய்தார்கள் என்று நான் கேட்டிருக்கிறேன் பாட்டி.
வ்யாச : நான்கூட திருநாராயணபுரத்து பெருமாளை துலுக்கர்கள் படையெடுத்து கவர்ந்து சென்று விட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
பாட்டி : ஆம், அது உண்மைதான். கோயில்களின் மேம்பாட்டிற்கும் நம் சம்பிரதாயத்தின் மேன்மைக்கும் அவர் பல சீர்த்திருத்தங்களை செய்யும் பணியில் ராமானுஜர் பல இன்னல்களை நேர்கொண்டார். மாற்றம் என்பதனை பலரும் விரும்பி ஏற்பதில்லையே. எல்லோரும் தம்முடைய வழிமுறைகளில் பழகிவிடுவதால், அது சரியானாலும் தவறானாலும், அதற்கான மாற்றங்களையோ மாற்றம் செய்ய முன்வரும் நபரையோ, அவர்கள் ஏற்பதில்லை. இது நம் சமுதாயத்தின் பொதுவான அணுகுமுறைதான். இன்றைய நாளில் கூட மாற்றம் என்பது கடினமே, என்றால், 1000 ஆண்டுகுளுக்கு முன்பு இருந்த திடமான நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள், ராமானுஜர் அதற்கான மாற்றங்களை செய்ய, பலத்த எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் நித்யமான உண்மையை ஜைன பண்டிதர்கள் ஏற்கத் தயங்கினார்கள். ஒரே சமயத்தில் 1000 ஜைன பண்டிதர்களோடு வாதிடுமாறு ராமானுஜருக்கு சவாலை முன்வைத்தார்கள். ராமானுஜர் தம்முடைய உண்மை ஸ்வரூபமான 1000 தலைகளைக் கொண்ட ஆதிசேஷனுடைய ஸ்வரூபத்தை எடுத்துக் கொண்டு ஒரே நேரத்தில் அவர்களுடைய கேள்விகள் அனைத்திற்கும் விடை சொல்லி, அவர்களை வாதத்தில் வென்றார்.
திருநாராயணபுரம் கோயில் உத்சவமூர்த்தியான செல்வப்பிள்ளைப் பெருமாளை துலுக்கர்களின் படையெடுப்பின்போது கவர்ந்து சென்று விட்டனர்; செல்வப்பிள்ளைப் பெருமாளை படையெடுத்த அரசனுடைய மகளின் அந்தப்புரத்தில் அவள் மிகுந்த அன்போடும் பரிவுடனும் கொண்டாடி வந்தாள். ராமானுஜர் செல்வப்பிள்ளையை மீட்டுச் செல்ல வந்த பொழுது, அவருடைய பிரிவினை அவளால் தாங்க இயலவில்லை.
அத்துழாய் : இது ஆண்டாள் கிருஷ்ணருடைய பிரிவினை தாங்க மாட்டாமல் இருந்தது போல்தானா!
பாட்டி : ஆமாம், ஆண்டாளைப் போலவேதான். அந்த மன்னனுடைய மகளுக்கு செல்வப்பிள்ளையை ராமானுஜருடன் அனுப்பி வைக்கும் எண்ணமே தாங்கமாட்டாததாக இருந்தது. இறுதியில் ராமானுஜர், அரசனுடைய மகளுக்கும் செல்வப்பிள்ளைக்கும் விவாகம் செய்து வைத்தார். இது பெருமாளின் மேல் உண்மையான பக்தியும் அன்பும் கொள்வது மதத்திற்கும் குலத்திற்கும் அப்பாற்பட்டது என்பதனை மறுபடியும் நமக்குக் காட்டிக் கொடுக்கிறது.
கூரத்தாழ்வான் – ராமானுஜர் – முதலியாண்டான்
வ்யாச : பாட்டி, ராமானுஜர் எவ்வாறு ஆளவந்தாருடைய மூன்று ஆசைகளை நிறைவேற்றினார் என்று நீங்கள் எங்களுக்குச் சொல்லவே இல்லையே.
பாட்டி : கூரத்தாழ்வான் இரண்டு குழந்தைகளால் அனுக்கிரஹிக்கப்பட்டார். ராமானுஜர் அவரின் இரண்டு புதல்வர்களுக்கும் வியாசன் என்றும் பராசரன் என்றும் பெயரிட்டு அவ்விரு ரிஷிகளின் மேன்மைக்கு அடையாளப்படுத்தினார், இதன் மூலம் அவர் ஆளவந்தாரிடத்தில் தாம் செய்த முதல் ப்ரதிக்ஞையை நிறைவேற்றினார். பிற்காலத்தில் எம்பார் என்று வழங்கப்பட்ட கோவிந்த பட்டருக்குச் சிறிய கோவிந்த பட்டர் என்று ஓர் இளைய தம்பி இருந்தார், அவருடைய புதல்வருக்கு பராங்குசநம்பி என்ற நம்மாழ்வாரின் அடையாளப் பெயரிட்டார்; இதன் மூலம் இரண்டாவது ப்ரதிக்ஞை நிறைவேறியது. இறுதியாக, அவர் மூன்றாம் ப்ரதிக்ஞையை ஸ்ரீபாஷ்யம் இயற்றியதன் மூலம் நிறைவேற்றினார். ஸ்ரீபாஷ்யத்தை இயற்றுவதற்காக ராமானுஜர், காஷ்மீரத்திற்கு கூரத்தாழ்வானுடன் பயணப்பட்டார்.
வேதவல்லி : காஷ்மீரத்தில் என்ன நடந்தது?
பாட்டி : ராமானுஜர், ஸ்ரீபாஷ்யம் இயற்றுவதுற்குத் தேவையான ஒரு குறிப்பு க்ரந்தத்தைப் (புத்தகத்தை) பெறுவதற்காக கூரத்தாழ்வானுடன் காஷ்மீரத்திற்கு ப்ரயாணமானார். அவர் அந்த க்ரந்தத்தைப் பெற்றபின், தங்களிடம் இருந்த க்ரந்தத்தை ராமானுஜர் தம்முடைய நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதைப் பொறுக்கமுடியாத சிலர், அவர்களைத் தொடர்ந்து வந்து, அந்தப் புத்தகத்தைப் பறித்துச் சென்றனர்.
வ்யாச : எவ்வளவு கொடுஞ்செயல்!
பாட்டி : ஆமாம்! ஆனால் அவர்கள் அந்த க்ரந்த்தத்தை பெறும் முன்பே ஆழ்வான் அந்த மொத்த க்ரந்தத்தையும் ஸ்ரீபாஷ்யம் எழுதுவதற்குத் தேவையான உட்பொருளையும் மனப்பாடம் செய்து விட்டார்.
வ்யாச : ஒரு மொத்த க்ரந்தத்தையும் மனப்பாடம் செய்துவிட்டாரா? அது எப்படி முடியும் பாட்டி? நான் கூட அப்படி என்னுடைய பாடப் புத்தகங்களை அது போல மனப்பாடம் செய்தால் எப்படி இருக்கும்?
பாட்டி (சிரித்தபடி) : கூரத்தாழ்வான் ராமானுஜருக்கு ஒரு சிஷ்யராக மாத்திரமல்ல, அவர் ராமானுஜருக்கு ஒரு பரிசு போலவும் பெரிய நிதியாகவும் இருந்தார். ராமானுஜருடைய அணுக்கத்தினால் மற்றவர்கள் மேன்மையுற்றனர் என்பது இருக்க, ராமானுஜரே தாம் கூரத்தாழ்வானுடைய அணுக்கத்தினால் தாம் மேன்மையுற்றதாக கூறுவார். அவர் பெரிய பண்டிதராயிருந்தும் கூட, தம் மனதினை ராமானுஜருடைய உறைவிடமாக கொண்டிருந்தவர்; கர்வமோ அகம்பாவமோ என்பது கிஞ்சித்தும் அவர் மனதில் இருந்ததே இல்லை.
கூரத்தாழ்வானின் உதவியுடன், ராமானுஜர் ஸ்ரீபாஷ்யத்தினை இயற்றியதன் மூலம், அவர் ஆளவந்தாரிடம் தாம் இயற்றிய கடைசி ப்ரதிக்ஞையையும் நிறைவேற்றினார். ஸ்ரீரங்கத்தை ஆண்ட சைவ அரசனுடைய இறப்புக்குப் பின், ராமானுஜர் ஸ்ரீரங்கத்திற்குத் திரும்ப வந்து அடைந்தார்.
இறுதியில் இவ்வுலகை விட்டுப் பரமபதத்திற்கு ஏகும் முன், ஆளவந்தாரைப் போலவே, ராமானுஜர் நம் சம்பிரதாயத்தை மேலும் கொண்டு செல்லும் விடிவிளக்காக ஆழ்வானின் போற்றத்தக்க குமாரரான பராசர பட்டரை நிர்ணயித்தார். பட்டருக்கும் பிற சிஷ்யர்களுக்கும் எம்பாரை நாடி எம்பாரிடம் மேலும் உபதேசங்கள் பெறுமாறு பணித்தார்.
பிற சிஷ்யர்களிடம் தம்மிடம் இருப்பது போலவே பட்டரிடத்தினில் நடக்குமாறு பணித்தார். எவ்வாறு ஆளவந்தார் ராமானுஜரை நம் சம்பிரதாயத்திற்குள் கொண்டு வரப் பெரிய நம்பியைப் பணிதாரோ, அதே போல பட்டரிடம் நஞ்சீயரையும் நம் சம்பிரதாயத்திற்குள் கொண்டு வருமாறும் பணித்தார். பின்பு தம் ஆசார்யர்களான பெரிய நம்பியையும் ஆளவந்தாரையும் தியானித்தவாறு ஸ்ரீமன் நாராயணனின் உறைவிடமான பரமபதத்தில் நித்யமான கைங்கர்யங்கள் செய்யும் பொருட்டு இவ்வுலகை நீத்தார். சிறிது காலத்தில் ராமானுஜரின் பிரிவினை தாங்க இயலாமல், எம்பாரும் பரமபதத்திற்கு ஏகினார்.
பராசர : பாட்டி, ராமானுஜரின் தேஹம் இன்றும் ஸ்ரீரங்கதில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது நிஜமா?
பாட்டி : ஆமாம் பராசரா, அது உண்மைதான்; நாம் நம்முடைய சிறந்த ஆசார்யர்களைக் குறித்து சொல்லும்பொழுது, எவ்வாறு பெருமாளுக்கு உயர்த்தி சொல்வோமோ, அதே போல திருமேனி என்று சொல்கிறோம். ராமானுஜருடைய சரம திருமேனி ஸ்ரீரங்கம் கோயிலில் அவருடைய சன்னிதியில் அவருடைய அர்ச்சா திருமேனிக்குக் கீழே பாதுகாக்கப்படுகிறது. இப்பொழுது ராமானுஜருடைய சன்னிதியாக நாம் சேவிப்பது முன் காலத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதருடைய வசந்த மண்டபமாக இருந்தது. இப்பொழுது நாம் ராமானுஜருடைய திருவடித் தாமரைகளையும் ஸ்ரீரங்கநதனுடைய திருவடித் தாமரைகளையும் நமக்கு நம் ஆசார்யர்களைப் பற்றியும் அவர்களின் மேன்மையை அறிந்து கொள்ளும் ஆர்வத்தைக் கொடுக்க ப்ரார்த்தித்துக் கொள்வோம். நேரமாகிறது, இப்பொழுது நீங்கள் எல்லாரும் புறப்படுங்கள். நாம் அடுத்த முறை சந்திக்கும் பொழுது, நான் உங்களுக்கு ராமானுஜருடைய பல சிஷ்யர்களைப் பற்றியும், அவர்களின் சிறப்பையும், ராமானுஜருடைய திக்விஜயத்தில் அவர்கள் ஆற்றிய தொண்டினைப் பற்றியும் சொல்வேன்.
குழந்தைகள் அனைவரும் ராமானுஜரைப் பற்றியும் அவர் செய்த பல கைங்கர்யங்களையும், அவர் எதிர்கொண்ட பல இன்னல்களையும், அவர் நம் சம்பிரதாயத்தின் சிறந்த ஆசார்யனாக எவ்வாறு வெளிப்பட்டார் என்றும் எண்ணியவாறு புறப்பட்டுச் செல்கின்றனர்.
அடியேன் கீதா ராமானுஜ தாசி
ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2016/08/beginners-guide-ramanujar-2/
வலைத்தளம் – http://pillai.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/