ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
வ்யாசன், பராசரன், அத்துழாய், வேதவல்லி நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.
பாட்டி : வாருங்கள் குழந்தைகளே . கை கால்களை அலம்பிக்கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த பழங்களைத் தருகிறேன். ஆளவந்தார் திருநக்ஷத்ரத்தை நன்கு கொண்டாடினீர்களா ?
பராசரன் : மிகவும் சிறப்பாகக் கொண்டாடினோம் பாட்டி. ஆளவந்தார் ஸந்நிதிக்குச் சென்று ஸேவித்தோம்🙏. அங்கு திருநக்ஷத்ர வைபவத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள். எங்கள் அப்பா ஆளவந்தாரின் வாழித் திருநாமத்தை எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அதை எங்கள் அகத்தில் நாங்கள் ஸேவித்தோம் பாட்டி.
பாட்டி : கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது😊
வேதவல்லி : பாட்டி , போனமுறை நீங்கள் எங்களுக்குக் கைங்கர்யத்தின் மேன்மையைப் பற்றிக் கூறுவதாகச் சொன்னீர்களே , நினைவிருக்கிறதா?
பாட்டி : ஆமாம் ! எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நீங்கள் ஞாபகமாய் கேட்பது எனக்கு மகிழ்வளிக்கிறது. கைங்கர்யம் என்பது எம்பெருமானுக்கும் அவன் அடியவர்களுக்கும் செய்யும் தொண்டு. நாம் செய்யும் கைங்கர்யமானது எம்பெருமானுடைய திருவுள்ள உகப்பிற்காகவும், திருமுக மலர்ச்சிக்காகவும் இருத்தல் வேண்டும்.
வ்யாசன்: எம்பெருமானுக்குத் திருவுள்ளம் உகக்கும் என்றால் , எங்களுக்கும் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருக்கிறது. எவ்வாறு அவனுக்குக் கைங்கர்யம் செய்யலாம் பாட்டி?
பாட்டி : நாம் மனத்தினாலும், வாக்கினாலும், சரீரத்தாலும் எம்பெருமானுக்குக் கைங்கர்யங்கள் செய்யலாம். இதனையே ஆண்டாள் நாச்சியாரும் தன் திருப்பாவை ஐந்தாம் பாசுரத்தில் வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, தூமலர் தூவித்தொழுது எம்பெருமானின் திருவுள்ளத்தை உகக்கச் செய்யலாம் என்று கூறுகிறாள். எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை மனத்தினால் சிந்திப்பது மானசீக கைங்கர்யம் ஆகும். அவனுடைய திருநாமங்களை வாயாரப் பாடுவதும் அவனைப் பற்றியும் , அவன் அடியார்களின் மேன்மையை பற்றிப் பேசுவதும் , மிக முக்கியமாக ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும் பூர்வாசார்யர்கள் அருளிச்செய்த ஸ்தோத்ரங்களையும் பாடுவதால் எம்பெருமான் மிகவும் ப்ரீதி அடைகின்றான். அதுவே நாம் அவனுக்குச் செய்யும் வாசிக கைங்கர்யம். அவன் எழுந்தருளியிருக்கும் இடத்தைத் தூய்மைப் படுத்துதல், கோலமிடுதல், புஷ்பம் / மாலை தொடுத்தல், சந்தனம் அரைத்துக் கொடுத்தல் போன்றவை அவனுக்கு நாம் செய்யும் சரீர கைங்கர்யங்களாகும். நீங்கள் இக்கைங்கர்யங்களை உங்கள் அகத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கும் அவசியம் செய்யவேண்டும்.
பராசரன்: மிகவும் அழகாக விளக்கினீர்கள் பாட்டி. எங்கள் அப்பா செய்யும் திருவாராதனத்தில் நாங்கள் ஆசையாகப் பங்கு கொள்வோம்.
பாட்டி : மிக்க மகிழ்ச்சி☺️. நீங்கள் உங்களால் இயன்ற கைங்கர்யங்களை உங்கள் அகத்து எம்பெருமானுக்குச் செய்ய வேண்டும். சிறு பிள்ளைகள் செய்யும் கைங்கர்யத்தை எம்பெருமான் மிகவும் உகப்போடு ஏற்றுக் கொள்வான்.
அத்துழாய் : நானும் வேதவல்லியும் கோலமிடுதல் , புஷ்பம் தொடுத்தல் போன்ற கைங்கர்யங்களில் ஈடுபடுவோம் பாட்டி .
பாட்டி : மிக்க மகிழ்ச்சி☺️. மிகவும் முக்கியமாக, எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வதை விட அவன் அடியார்களுக்கு அவர்கள் திருவுள்ளம் உகக்கும்படி நாம் கைங்கர்யங்கள் செய்ய வேண்டும். {இதற்கு உதாரணம்} எம்பெருமான் ஸ்ரீராமனுக்கு லக்ஷ்மணன் அனைத்துவித கைங்கர்யங்களையும் செய்தான் (பகவத் கைங்கர்யம்). ஆனால் சத்ருக்னன் எம்பெருமான் ஸ்ரீராமனின் அடியவனான பரதாழ்வானுக்குக் கைங்கர்யம் செய்தான் (பாகவத கைங்கர்யம்). {மற்றொரு உதாரணம்} நம்மாழ்வார் உண்ணும் சோறும், பருகும் நீரும் , திண்ணும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்றிருந்தார். ஆனால் மதுரகவி ஆழ்வாரோ தேவுமற்றறியேன் குருகூர் நம்பி என நம்மாழ்வாரைத் தவிர வேறொன்றும் அறியாதவராக வாழ்ந்தார். இதன் மூலமாக அவன் அடியவர்களுக்கு அடியவர்களாய் இருப்பதே எம்பெருமானின் திருவுள்ளத்தை மகிழ்விக்கும் எனத் தெளிவாகிறது.
அத்துழாய்: நீங்கள் சொன்னதைப் போல எம்பெருமானின் அடியவர்களுக்கு அடியவர்களாய் நாங்கள் இருந்து எம்பெருமானின் திருவுள்ளத்தை உகக்கச் செய்வோம் பாட்டி. அவர்களுக்கு எவ்வாறு கைங்கர்யம் செய்ய வேண்டும்?
பாட்டி: எம்பெருமானுடைய அடியவர்கள் நம் குடிசைக்கு (தங்கள் அகத்தை குடிசை என்று கூறுவது ஸ்ரீவைஷ்ணவர்களின் மரபு) எழுந்தருளும்போது அவர்களைச் சேவித்து வரவேற்க வேண்டும். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை மிகவும் பணிவுடன் செய்ய வேண்டும். அவர்களிடமிருந்து எம்பெருமான் , ஆழ்வார் , ஆசார்யர்களின் வைபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வது மிகவும் சிறப்பாகும். இது போன்ற பல வழிகளில் நாம் எம்பெருமானுடைய அடியவர்களுக்குக் கைங்கர்யம் செய்யலாம்.
அத்துழாய்: தாங்கள் கூறியதை நினைவில் கொண்டு எம்பெருமானுடைய அடியவர்களின் கைங்கர்யங்களில் எங்களை நிச்சயமாக ஈடுபடுத்திக் கொள்வோம் பாட்டி
மற்ற மூவரும் ஆம் என்றனர்.
பாட்டி: மிக நல்லது குழந்தைகளே. நீங்கள் ஆர்வமாக நான் சொல்வதைக் கேட்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது☺️.
வேதவல்லி : நீங்கள் கூறுவதைக் கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. மேலும் சொல்லுங்களேன் பாட்டி.
பாட்டி: நீங்கள் அடுத்தமுறை வரும்போது எம்பெருமானிடமும் , அவன் அடியவர்களிடமும் செய்யக் கூடாத அபச்சாரங்களைப் பற்றிக் கூறுகிறேன். இப்போது இருட்டி விட்டதால் உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள்.
குழந்தைகள் பாட்டி கூறியதை எண்ணியவாறு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டனர்.
அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாசி 🙏
ஆதாரம் : http://pillai.koyil.org/index.php/2018/10/beginners-guide-kainkaryam/
வலைத்தளம் – http://pillai.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/