ஸ்ரீராமாயணம் பாலபாடம் – ஸரயூ நதிக்கரையில் மந்திர உபதேசம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீராமாயணம் பாலபாடம்

<< கொடுத்த வாக்கை நிறைவேற்றிய தசரதன்

பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.

பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு பெருமாள் அமுது செய்த பழங்களைத் தருகிறேன்.

குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த பழங்களை உண்டார்கள்.

அத்துழாய்: பாட்டி, சென்ற வாரம் தசரத மன்னன் ஸ்ரீராமனை விசுவாமித்ர முனிவருடன் காட்டிற்கு அனுப்ப ஒப்புக்கொண்டார் என்று சொல்லி முடித்தீர்கள். மேலும் சொல்லுங்கள் பாட்டி.

பாட்டி: சொல்கிறேன் குழந்தைகளே கேளுங்கள். மன்னன் ஸ்ரீராமனையும், லக்ஷ்மணனையும் அழைத்து நல்லாசி வழங்கி முனிவருடன் அனுப்பிவைத்தார். ராமபிரான் முனிவருடன் புறப்படும்பொழுது, தேவர்கள் துந்துபி வாத்தியங்கள் முழங்கி பூமழை பொழிந்தனர். விச்வாமித்ர முனிவர் முன்னே நடந்தார். அவர் பின்னே வில்லும் கையுமாக ஸ்ரீ ராமன் தொடர்ந்தான். லக்ஷ்மணனும் வில் ஏந்தி ராமபிரானை பின் தொடர்ந்தான். பின்பு அம்மூவரும் ஒன்றரை யோஜனை தூரம் கடந்து ஸரயூ நதியின் தென்கரையை அடைந்தார்கள்.

வ்யாசன்: ராஜகுமாரர்களாக ராஜ போகத்துடன் வாழ்ந்து பழகிய ராம லக்ஷ்மணர்கள் எவ்வாறு இவ்வளவு தூரம் நடந்து சென்றார்கள் பாட்டி ?

பாட்டி: ராஜாதி ராஜனான எம்பெருமான் தன்னுடைய போக ஸ்தானமான ஸ்ரீவைகுண்டத்தை விட்டு இப்பூவுலகில் சாமான்ய ராஜனுக்கு மகனாக அவதரித்தவன். அறப்பெரியவன் தன்னுடைய உயர்நிலையைப் பொருட்படுத்தாமல் தன்னைத் தாழ்த்திக்கொண்டு அவதரித்தது மட்டுமில்லாமல், தன் போகங்களை ஒதுக்கிவிட்டு தேவர்களுடைய துன்பம் களைவதற்காக, ராமாவதாரத்தில் மேற்கொண்ட முதல் பயணம் இது.

பராசரன்: ராமனுடைய எளிமையான குணம் நன்கு வெளிப்படுகின்றது பாட்டி. மேலும் லக்ஷ்மணன் ராமனுக்குச் செய்யும் தொண்டாகிற செல்வத்தைப் பெருக்குவதிலே ஆர்வம் காட்டியிருப்பது அழகாக வெளிப்படுகின்றது.

பாட்டி : ஆம் மிகச் சரியாக சொன்னாய் பராசரா. ராமனுக்கு நிழல் போல லக்ஷ்மணன் திகழ்ந்தான். ராமனை விட்டு ஒரு நொடிப்பொழுதும் லக்ஷ்மணன் பிரிந்திருக்கமாட்டான். அதனால் இருவருமே முனிவருடைய யாகத்தைக் காப்பதற்காகப் பயணம் மேற்கொண்டனர்.

வேதவல்லி: ஸரயூ நதியின் தென்கரையில் சிறிது நேரம் இளைப்பாறினார்களா பாட்டி ? மேலும் சொல்லுங்கள்.

பாட்டி: சொல்கிறேன் கேளுங்கள். விசுவாமித்ர முனிவர் ராமா என்று இனிமையாக அழைத்து, குழந்தையே ஜலத்தை எடுத்து ஆசமனம் செய்; மிகவும் சக்தி வாய்ந்த பல மந்திரங்களைக் கொண்ட பலை என்றும் அதிபலை என்றும் இரண்டு மந்திரங்களை உனக்கு உபதேசிக்கிறேன். அவ்விரு மந்திரங்களையும் நீ ஜபித்திக்கொண்டிருந்தால் தோள் வலிமையில் உனக்கு நிகர் வேறொருவனும் அகப்படமாட்டான். உடல் மற்றும் மனம் வலிமை அடையும். இம்மந்திரத்தைப் பெறத் தகுதியானவனாக நீயே இருக்கிறாய். இம்மந்திரத்தை நீ உபதேசம் பெறுவதனால் உனக்கு வெகு பலன்களைக் கொடுக்கும். நீயும் இந்த உயர்ந்த இரண்டு மந்திரத்தை உலகில் தகுதியுள்ளவர்களுக்கு உபதேசித்து பரவச்செய்வாய் என்று கூறினார்.

அத்துழாய்: சகல சாஸ்திரத்திற்கும், மந்திரத்திற்கும் ஆதாரமான எம்பெருமான் தன்னுடைய க்ருஷ்ணாவதாரத்தில், எவ்வாறு சாந்தீபனி முனிவரிடம் 64 கலைகளை 64 நாட்களில் கற்றாரோ, அதுபோல இருக்கிறது பாட்டி, எம்பெருமான் தன்னுடைய ராமாவதாரத்தில் ஏதுமறியாத குழந்தை போல இம்முனிவரிடம் மந்திரங்களைப் பெறுவது.

பாட்டி: மிக அழகாக உவமானம் சொன்னாய் அத்துழாய். மேலும் சொல்கிறேன் கேளுங்கள். ஸ்ரீராமன், முனிவரின் வார்த்தைகளைக் கேட்டு, ஆசமனம் செய்து பரிசுத்தனாகி அவ்விரு மந்திரத்தையும் அவரிடமிருந்து உபதேசமாகப் பெற்றான். விச்வாமித்ர முனிவர் ராமனின் சிரத்தையைக் கண்டு ஆனந்தமடைந்தார். ராமபிரானும் தனக்கு மந்திரத்தை உபதேசித்த விச்வாமித்ர முனிவருக்கு க்ருதக்ஞதையோடு (நன்றி உணர்வோடு) குருவிற்குச் செய்யவேண்டிய உபசாரங்கள் அனைத்தையும் நன்கு செய்தான். அம்மூவரும் அன்றிரவுப் பொழுது ஸரயூ நதிக்கரையில் ஆனந்தமாக கழித்தார்கள்.

வேதவல்லி: ராமபிரான் தன்னுடைய குருவிடம் பணிவாக நன்றியுணர்வோடு இருப்பது கேட்டு, நாங்களும் அவன் அருளால் இக்குணங்களைப் பெற வேண்டுகிறோம் பாட்டி. எல்லா நற்குணங்களுக்கும் ராமன் ஒருவனே சிறந்த உதாரணமாக திகழ்ந்திருக்கிறான் பாட்டி. நீங்கள் மிக அழகாக எங்களுக்கு ராம சரித்திரத்தை எடுத்துரைக்கிறீர்கள். மேலும் சொல்லுங்கள் கேட்க ஆவலாக இருக்கிறது.

பாட்டி: இப்பொழுது இருட்டிவிட்டது. உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள். அடுத்தமுறை வரும்பொழுது மேலும் சொல்கிறேன்.

குழந்தைகள் பாட்டி கூறியதை எண்ணியவாறு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டார்கள்.

அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி

வலைத்தளம் –  http://pillai.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment