ஸ்ரீராமாயணம் பாலபாடம் – வஸிஷ்ட முனிவர் இக்ஷ்வாகு வம்சாவளியை எடுத்துரைத்தல்

ஸ்ரீராமாயணம் பாலபாடம்

<< மிதிலை அடைந்தார் தசரதர்

பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.

பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள்.

பராசரன்: சென்ற முறை தசரதர் மிதிலாபுரி வந்து சேர்ந்து ஜனகரோடு ஸம்பாஷித்தமை பற்றித் தெரிவித்தீர்கள் பாட்டி.

பாட்டி: ஆமாம் பராசரா. வஸிஷ்ட முனிவர் ஜனக மன்னனின் சபையில் தசரத மன்னனின் வம்ச பரம்பரையை எடுத்துரைத்ததைப் பற்றி இன்று உங்களுக்குச் சொல்கிறேன்.

அத்துழாய்: சொல்லுங்கள் பாட்டி. கேட்க ஆர்வமாக இருக்கிறோம்.

பாட்டி: ஜனக மன்னவன் புரோஹிதரான சதானந்தரை விளித்து “ஸ்வாமி! என்னுடைய இளைய தம்பி குசத்வஜனென்பவன் இக்ஷுமதியென்கிற நதியின் கரையில் ஸாங்காச்யையென்னும் நகரில் வாழ்கின்றானல்லவா? அவனை நான் காண ஆசைப்படுகிறேன்; அவனும் இங்கு வந்து ஸீதா விவாஹ வைபவத்தைக் கண்டுகளிக்கவேணும்’ என்று பேசிக்கொண்டிருக்கையில், அங்கு வேலைக்காரர் சிலர் வந்துசேர, அவர்களுக்கு ஜனக மன்னன் கட்டளையிட்டனுப்ப, அவர்கள் குதிரைகளின் மீது ஏறிக்கொண்டு புறப்பட்டுப் போயினர்.

ஸாங்காச்யா நகரத்தில் அவர்கள் குசத்வஜரைக் கண்டு செய்தி சொல்ல, அவரும் கேட்டுக்களித்து உடனே புறப்பட்டு மிதிலைமாநகர் வந்து சேர்ந்து, தமையனாரான ஜனகரையும் புரோஹிதரான சதானந்தரையும் கண்டு வணங்கி ஆஸனத்தில் அமர்ந்தனர்.

பிறகு தசரதமன்னவரும் புரோஹிதர் முதலானாரோடு கூட அவ்விடம் வரவழைக்கப்பட்டு வந்து சேர்ந்து, தமது வம்ச பரம்பரையைத் தம் குலகுருவான வஸிஷ்டர் எடுத்துரைப்பர் என்று கூறினவளவிலே, வஸிஷ்ட மாமுனிவர் விசுவாமித்திரருடைய அனுமதியையும் பெற்றுக்கொண்டு வம்சாவளியை எடுத்துரைக்கத் தொடங்கினர்.

ப்ரஹ்மனிடத்தில் நின்று மரீசி தோன்றினார். மரீசியின் புதல்வர் – காசியபர். காசியபரிடமிருந்து – விவஸ்வான் தோன்றினன். விவஸ்வானது புத்திரர் – மனுப்ரஜாபதி. மனுப்ரஜாபதியின் குமாரர் – இக்ஷ்வாகு. இந்த இக்ஷ்வாகுவே அயோத்தியை முந்துற அரசாண்டவர். இக்ஷ்வாகுவின் புத்திரர் – குக்ஷி. குக்ஷியின் புதல்வர் – விகுக்ஷி. விகுக்ஷியின் புத்திரர் – பாணர். பாணருடைய புத்திரர் – அநரண்யர். அநரண்யருடைய புத்திரர் – ப்ருது. ப்ருதுவின புத்திரர் – திரிசங்கு. திரிசங்குவின் மகன் – துந்துமாரன். துந்துமாரனுடைய மகன் – மாந்தாதா. மாந்தாதாவின் மகன் – ஸுஸந்தி. ஸுஸந்தியின மக்கள் – துருவஸந்தி, ப்ரஸேனஜித். துருவஸந்தியின் புத்திரர் – பரதர். பரதருடைய புதல்வர் – அஸிதர். ஸகரனது புதல்வன் – அஸமஞ்சன். அஸமஞ்சனுடைய புத்திரன் – திலீபன். திலீபனுடைய புத்திரர் – பகீரதர். பகீரதருடைய புத்திரர் – ககுத்ஸ்தர். ககுத்ஸ்தருடைய புத்திரர் – ரகு. ரகுவின் புத்திரன் – ப்ரவ்ருத்தன். ப்ரவ்ருத்தனுடைய மகன் – சங்கணன். சங்கணனுடைய புத்திரர் – ஸுதர்சனர். ஸுதர்சனருடைய புத்திரர் – அக்நிவருணர். அக்நிவருணருடைய புத்திரர் – சீக்ரகர். சீக்ரகருடைய பிள்ளை – மரு. மருவின் மகன் – ப்ரசுச்ருகன். ப்ரசுச்ருகனுடைய மகன் – அம்பரீஷன். அம்பரீஷனது புத்திரன் – நஹுஷன். நஹுஷனது புதல்வன் – யயாதி. யயாதியின் புத்திரர் – நாபாகர். நாபாகருடைய புத்திரர் – (இந்த) தசரதர். இவருடைய புத்திரர்களே இந்த ராம லக்ஷ்மணர்கள்.

ஜனகமன்னவரே! இங்ஙனம் பரமபவித்திரமான பெரிய வம்சத்திற் பிறந்த இக்குமாரர்களுக்காக உமது புதல்விகளை வரிக்கின்றேன்; கன்னிகாதானம் செய்து கொடுக்கவேண்டும் – என்று கூறி முடித்தனர் வஸிஷ்டமுனிவர்.

வேதவல்லி: கேட்பதற்கே மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது பாட்டி.

வ்யாஸன்: அடுத்ததாக ஜனகமன்னன் தமது வம்சாவளியை எடுத்துரைத்தாரா பாட்டி?

பாட்டி: ஆமாம் வ்யாஸா. அடுத்தமுறை நீங்கள் வரும்போது அவற்றைச் சொல்லுகிறேன். இப்பொழுது இருட்டிவிட்டதால் உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள்.

குழந்தைகளும் பாட்டி கூறியதை எண்ணியவாறு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டார்கள்.

அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment