ஸ்ரீராமாயணம் பாலபாடம் – மிதிலை அடைந்தார் தசரதர்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீராமாயணம் பாலபாடம்

<< சிவதனுசை முறித்த ராமன்

பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.

பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள்.

பராசரன்: சென்ற முறை, ஜனகமன்னன் தன் மந்திரிகளிடம் விவாஹமுகூர்த்தப்பத்திரிகை கொடுத்துத் தசரத மன்னனை அழைத்து வருமாறு உத்தரவிட்டதாகச் சொல்லிமுடித்தீர்கள்.

பாட்டி: ஆமாம் பராசரா. ஜனக மன்னனுடைய கட்டளையின்படியே அவருடைய மந்திரிகள் அயோத்தி நகர்க்குச் சென்று சேர்ந்து, தசரத மன்னனைக் காணப்பெற்றார்கள். பிறகு கைகூப்பிக்கொண்டு, ”மன்னர் மணியே! மிதிலை மன்னர் ஜனகர் உமது யோகக்ஷேமங்களை விசாரித்தார். மேலும், தன் புதல்வியான ஸீதைக்கு விவாஹசுல்கமாக வைக்கப்பட்டிருந்த சிவதனுசை, வெகுகாலமாக ஒருவராலும் அசைக்கவும் முடியாதபடியிருந்து, இப்பொழுது உம்முடைய தவப்புதல்வனான ராமபிரானால் எடுத்து வளைக்கப்பட்டு முறிந்தபடியால், முன்னமே செய்த உறுதிமொழியின்படி ஸீதையை ராமபிரானுக்குத் திருக்கல்யாணம் செய்துகொடுப்பதாக நிச்சயித்திருப்பதை நீங்கள் ஒப்புக்கொண்டு, உங்கள் பரிவாரத்தோடு மிதிலா நகர்க்கு விஜயம் செய்து சுபகாரியத்தைச் சடக்கென நிறைவேற்றிக்கொடுக்கவேணும் என்று வேண்டிக்கொள்கிறார்” என்று தசரத மன்னனிடம் விண்ணப்பம் செய்தார்கள்.

வேதவல்லி: தசரத மன்னன் இந்த விஷயத்தைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பாரல்லவா பாட்டி?

பாட்டி: ஆமாம் வேதவல்லி. அந்த விஷயத்தைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த தசரத்த மன்னன் வசிஷ்டர், வாமதேவர் முதலிய முனிவர்களையும், மந்திரிகளையும் அழைப்பித்து, அந்த சுபச் செய்தியை அறிவித்து, எல்லோருமாக மறுதினமே புறப்பட்டு மிதிலா நகர்க்குச் செல்லவேண்டுமென்று முடிவெடுத்தார்.

அத்துழாய்: மறுநாள் தசரத மன்னன் தன்னுடைய பரிவாரங்களோடு மிதிலை நகர்க்குப் புறப்பட்டாரா? மேலே என்ன நடந்தது என்று சொல்லுங்கள் பாட்டி.

பாட்டி: ஆமாம் அத்துழாய். மறுநாள் காலையில் தசரத மன்னன் தன்னுடைய சேனைகளையும், பல்லக்குகளையும், தேர்களையும், காலாட் படைகளையும், புரோஹிதர்களையும் முன்னே புறப்படச்செய்து, தானும் புறப்பட்டு நான்கு நாட்கள் கடந்து ஐந்தாம் நாளில் யாவரும் மிதிலா நகரை அடைந்தார்கள்.

வ்யாசன்: ஆஹா! இவர்கள் வருகையானது மிகவும் ப்ரஹ்மாண்டமாக இருந்திருக்கும் போலிருக்கிறதே பாட்டி?

பாட்டி: ஆமாம். இவர்கள் வருகையறிந்து மிகவும் மகிழ்ச்சியோடு ஜனக மன்னன் முறையாக வரவேற்றார். பெரும் புகழையுடைய தசரத மன்னர் தன் பரிவாரங்களோடு எழுந்தருளியிருப்பது தனக்கும் தன் குலத்திற்கும் பெரும் பாக்கியம் என்று வாயாரச் சொல்லிக்கொண்டு மகிழ்ந்தார். இப்போது நடைபெற்று வருகின்ற எனது வேள்வியின் முடிவில் விவாஹசுப முகூர்த்தத்தை நிறைவேற்றிக்கொடுக்கவேணும் என்று ஜனக மன்னர் தசரத மன்னரைப் பிரார்த்திக்க, அதற்கு தசரத மன்னர், ”கன்னிகையைக் கொடுக்க கடமைப்பட்டிருக்கின்ற நீர் எந்த சுப முகூர்த்தத்தில் கொடுக்கின்றீரோ அந்த சுப முகூர்த்தத்தில் நாங்கள் பெற்றுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம்” என்றார். இப்படி இருவரும் அழகாக வார்த்தையாடிக் கொண்டு அந்த இரவை மகிழ்ச்சியாக கழித்தனர்.

பராசரன்: கேட்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது பாட்டி. மேலும் சொல்லுங்கள்.

பாட்டி: இதே ஆவலோடு நாளைவரை காத்திருங்கள் குழந்தைகளே. நாளை நீங்கள் வரும்போது மேலும் சுவையான பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். இப்பொழுது இருட்டிவிட்டதால் உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள்.

குழந்தைகளும் பாட்டி கூறியதை எண்ணியவாறு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டார்கள்.

அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி

வலைத்தளம் –  http://pillai.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment