ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
<< ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் தாய்மைக் குணம்
ஸ்ரீ ரங்கநாதன் – திருப்பாணாழ்வார்
ஒரு இனிய ஞாயிற்றுக்கிழமை காலையில் பாட்டி அமலனாதிபிரான் பிரபந்த பாசுரங்களைச் சேவிப்பதை வ்யாசனும் பராசரனும் கேட்கிறார்கள்.
பராசர: பாட்டி, நீங்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் இதை தினமுமே சொல்லக் கேட்டிருக்கிறோமே!
ஆண்டாள் பாட்டி : பராசரா, இந்தப் பிரபந்தத்திற்கு அமலனாதிபிரான் என்று பெயர். இதனை இயற்றியவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வார்.
வ்யாச: ஆழ்வார்கள் என்பவர் எவர்? அமலனாதிபிரான் என்றால் என்ன? இதனைப்பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது பாட்டி, நீங்கள் எங்களுக்குச் சொல்கிறீர்களா?
ஆண்டாள் பாட்டி: நான் நிச்சயமாக ஆழ்வார்களைப் பற்றியும் அவர்களின் அருளிச் செயல்களையும் உங்களுக்கு கூறுகிறேன், ஆனால் அதற்கு முன்னால் நீங்கள் ஸ்ரீரங்கநாதனைப் பற்றி அறிய வேண்டியது இன்னும் இருக்கிறது.
வ்யாச: அது என்ன, பாட்டி?
ஆண்டாள் பாட்டி: நீங்கள் இருவருமே அவரது காருண்யத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
பராசர: அதனைச் சொல்லுங்களேன் பாட்டி.
ஆண்டாள் பாட்டி: இப்பொழுது நான் சொல்லப் போவதை புரிந்து கொள்ளச் சற்றுக் கடினமாக இருக்கலாம், ஆகையால், கவனமாகக் கேட்க வேண்டும், என்ன? நம்முடைய முந்தைய உரையாடல்களில் நாம் ஸ்ரீமன் நாராயணன் எவ்வாறு பரமபதத்தில் இருந்து ஸ்ரீ ரங்கநாதனாக, ஸ்ரீ ராமனாக கிருஷ்ணனாக பல அர்ச்சாவதார எம்பெருமானாக இறங்கி வந்திருக்கிறார் என்றும் கண்டோம். அவர் நம் ஒவ்வொருவரிலும் கூட அந்தர்யாமியாக இருக்கிறார்.
பராசரனும் வ்யாசனும் ஆண்டால் பாட்டியின் ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்த கவனத்தோடு கேட்கிறார்கள்.
ஆண்டாள் பாட்டி: நம்முடைய முந்தைய உரையாடல்களிலிருந்து அவர் எதற்காக இத்தனை ரூபங்கள் கொண்டுள்ளார் என்று உங்களால் நினைவுபடுத்திச் சொல்ல முடியுமா?
பராசரனும் வ்யாசனும்: ஓ, சொல்ல முடியும் பாட்டி! அவர் நம்மனைவரின் மேலும் எவ்வளவு விருப்பம் கொண்டுள்ளார் என்று எங்களுக்குத் தெரியுமே பாட்டி ! அதனால் அவர் இங்கு நம்முடன் இருப்பதற்காக இறங்கி வந்திருக்கிறார்.
ஆண்டாள் பாட்டி: அற்புதம்! நீங்கள் அடிப்படைக் கொள்கையை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவர் நம்முடன் இருப்பதற்காக மட்டுமல்லாமல், இறுதியில் அவருடன் நம்மை பரமபதத்திற்கு அழைத்துச் செல்லவும் கூட நம்மிடையே வந்திருக்கிறார்.
பராசர: ஏன் பாட்டி? அந்த இடத்திற்கு ஏன் அத்தனைச் சிறப்பு? அது ஸ்ரீ ரங்கத்தைக் காட்டிலும் சிறந்ததா?
பரமபதத்தில் (ஸ்ரீவைகுண்டத்தில்) பரமபதநாதன்
ஆண்டாள் பாட்டி: ஹாஹா! உண்மைதான்; ஸ்ரீரங்கம் மிகவும் நல்ல இடமே. ஆனால், பரமபதம் என்பது நித்தியமான அருள் நிறைந்த இடம்; அங்கே அவருக்குத் தொடர்ந்து தொண்டுகள் புரிய நமக்கு எண்ணிறந்த வாய்ப்புகள் உண்டு. இங்கே நாம் கோவிலுக்குச் செல்கிறோம், உற்சவங்களில் கலந்து கொள்கிறோம் இல்லையா, ஆனால், ஏதோ ஒரு சமயத்தில், இவைகள் முடிந்து நாம் வீட்டுக்குத் திரும்பி வந்து வேறு காரியங்களையும் செய்ய வேண்டுமே. ஆனால், பரமபதத்தில் அது போன்ற இடைவெளியே கிடையாது; எல்லையற்ற இன்பமே. .
வ்யாச: ஆஹா! இது தான் எனக்கு பிடித்தம் – எல்லையற்ற கடாக்ஷமே !
ஆண்டாள் பாட்டி: அது மட்டுமில்லை, இங்கே நம்முடைய தேஹத்தின் சக்தியோ ஒரு அளவுக்கு உட்பட்டது – நாம் சோர்ந்து போகிறோம், சில சமயங்களில் காய்ச்சல், குளிர் பிடித்துக் கொள்கிறது. ஆனால் பரமபதத்திலோ, நமக்கு இவைகளுக்கு உட்படாத ஒரு தெய்வீக உருவம் கிடைக்கும். நித்தியமான கைங்கர்யங்களில் சோர்வோ அலுப்போ இன்றி எப்பொழுதும் ஈடுபடலாம். .
பராசர: அது மேலும் உயர்வானதாயிற்றே! நம்மை பரமபதத்திற்க்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக அவர் என்ன செய்கிறார் ?
ஆண்டாள் பாட்டி: நல்ல கேள்வி. அதற்காக, அவருடய அளவற்ற கருணையினால் அவர் பல செயல்கள் புரிகிறார். கருணை என்றால் பிறருக்கு இரக்கத்தினால் செய்யும் உதவியாகும். அதற்காக அவர் ஸ்ரீ ராமனாக, கிருஷ்ணனாக, ரங்கநாதனாக, ஸ்ரீநிவாசனாக இறங்கி வந்திருக்கிறார். ஆனாலும் நம்மில் பலரை அவருக்குள் அவரால் எடுத்துச் செல்ல இயலவில்லை, ஏனென்றால், பெரும்பாலானோர் அவரே அனைத்தைக் காட்டிலும் மேன்மையானவர் என்று ஒப்புக்கொள்வதோ, அவரைக் குறித்துத் தெளிவாக உணர்ந்து கொள்வதோ இல்லை.
வ்யாச: ஏன் தம் முன்னே இருந்தும் மக்கள் அவரைக் குறித்து புரிந்து கொள்வதில்லை?
ஆண்டாள் பாட்டி: ஏனென்றால்,அவர் அத்தனை பெரியவர். அதனால், சிலர் அவரைக் கண்டு பொறாமை கொள்கிறார்கள், மற்றும் சிலர் அவருடய மேன்மையைக் கண்டு அவரை அணுகுவதற்குப் பயப்படுகின்றனர்.
பராசர: ஓ அப்படியா! இது ஆழ்வார்களிடம் கொண்டு செல்கிறது என்று நான் கருதுகிறேன்.
ஆண்டாள் பாட்டி: கெட்டிக்காரன் நீ! ஆமாம், பெருமாள் ஒரு வழி யோசித்தார். வேட்டையாடுபவர்கள் மான்களை எவ்வாறு பிடிப்பார்கள் என்று தெரியுமா? அவர்கள் முதலில் கடும் முயற்சி செய்து ஒரு மானைப் பிடிப்பார்கள். அந்த மான் பிற மான்களைத் தன்னிடம் ஈர்ப்பதற்கு அதைப் பழக்குவார்கள். பிற மான்கள், முதலில் பிடிக்கப்பட்ட மானிடம் ஈர்க்கப்படும் போது, அவைகள் அனைத்தையும் ஒரு சேர வேட்டைக்காரன் பிடித்து விடுவான்.
வ்யாச: ஆமாம் பாட்டி. இதே தந்திரத்தைக் கொண்டு யானைகளையும் பிடிப்பதைப் பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
ஆண்டாள் பாட்டி: ஆமாம். அதே போல, பெருமாள், தன்னுடைய கருணையினால் அனைவருக்கும் உதவும் பொருட்டு, ஒரு சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குத் தன்னிடம் அளவற்ற பக்தியையும், பூரணமான ஞானத்தையும் மற்றும் அனைத்தோடும் அணுக்ரஹிக்கிறார். அது போன்றோர், பெருமாளின் மேலுள்ள பக்தியில் ஆழ்ந்து ஈடுபட்டதனால் அவர்களை ஆழ்வார்கள் என்று அழைக்கிறோம்.
பராசர: ஆக, ஆழ்வார்கள் மூலமாக, பலர் அவரிடம் பக்தி கொண்டு அவரை அடைகிறார்கள். ஆஹா! பெருமாள் எவ்வளவு சிறந்த திட்டம் வகுத்துள்ளார்!
ஆண்டாள் பாட்டி: ஆமாம், அது அவருடைய சிறந்த கருணையினாலேயே! நினைவில் கொள்ளுங்கள், யாரும் தன்னுடைய முயற்சியினால், ஆழ்வாராக ஆவதில்லை. பகவானுடைய கருணையினால் மட்டுமே ஒருவர் ஆழ்வாராக ஆக முடியும். ஏனென்றால், தன்னுடைய சுய முயற்சியால் சிறிது பக்தி பகவானிடத்தில் ஏற்படலாம், ஆனால் ஒருவன் பகவானிடத்தில் பூரணமான பக்தி கொள்ள, அவருடைய எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமாக வேண்டும். அதேபோல, யாருமே தன்னுடைய முயற்சியினால் எத்தனைதான் முயன்றாலும் சிறிதளவே ஞானத்தையே வளர்த்துக் கொள்ளமுடியும் – எதிலுமே முழு ஞானத்தைப் பெற வேண்டுமானால், யாதும் ஆறிந்தவரான பகவானால் மட்டுமே அதைப் பிறருக்கு அளிக்க முடியும்.
பராசர: ஆமாம் பாட்டி, இப்பொழுது நாங்கள் புரிந்து கொண்டோம். இந்தக் கொள்கைகளை நீங்கள் எவ்வளவு நன்றாக எங்களுக்குப் புரிய வைத்துள்ளீர்கள். நீங்களே பாருங்களேன், இது புரிந்து கொள்ளச் சற்று சிரமம் என்று கூறியதனால், நாங்கள் கண்களையும் இமைக்காமல் கூர்ந்து கேட்டுக்கொண்டோம்.
ஆண்டாள் பாட்டி: ஆமாம். இப்பொழு உங்களை விளையாட அனுமதிப்பதற்கு முன்னால், நீங்கள் என்னிடம் கேட்ட அமலனாதிபிரானைப் பற்றி உங்களுக்கு சற்றே விளக்குகிறேன். அது பெரிய பெருமாளின் திவ்யமான அழகை முழுவதும் அனுபவித்து திருப்பாணாழ்வர் செய்த அருளிச்செயல். அதில் அவர் ஐந்தாவது பாசுரத்தில் ஸ்ரீ ரங்கநாதனிடம் என்னுடைய பாவங்களில் இருந்து என்னை விடுவித்து, உம்மை நான் உணர்ந்து கொண்டு, உம்மை அடைவதற்க்கு, நீர் பல ஆண்டுகளாக தவம் செய்கிறீர் எந்று கூறுகிறார். இங்கேதான் ஸ்ரீமன் நாராயணின் கருணையைக் குறித்து நாம் பேசத் தொடங்கினோம். இப்பொழுது இந்த முழு விஷயத்தைக் குறித்தும் நீங்கள் நன்றாகப் புரிந்து கொண்டீர்கள். இப்பொழுது நீங்கள் இருவருமே சற்று நேரம் விளையாடி விட்டு வரலாம்.
பராசரனும் வ்யாசனும்: நன்றி பாட்டி. நாங்கள், சீக்கிரமே திரும்பி வந்து ஆழ்வார்கள் குறித்து மேலும் கேட்டு அறிந்து கொள்கிறோம்.
அடியேன் கீதா ராமானுஜ தாஸி
ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2014/09/beginners-guide-sriman-narayanas-divine-mercy/
வலைத்தளம் – http://pillai.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org
Pl send me informatiin about Azhwar Acharya lufe stories