ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் தாய்மைக் குணம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய அர்ச்சா ரூபமும் குணங்களும்

sriranganachiar-3மறுநாள், பாட்டி பராசரனையும் வ்யாசனையும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வடக்கு உத்தர வீதி (தெரு) வழியாக அழைத்துச்செல்கிறார். அவர்கள் கோவிலில் நுழைந்ததுமே வ்யாசனும் பராசரனும் ஒரு சன்னிதியை வலது புறத்தில் காண்கிறார்கள்.

வ்யாச: பாட்டி, இது யாருடைய சன்னிதி?

ஆண்டாள் பாட்டி: வ்யாச, இது ஸ்ரீரங்கநாயகித் தாயார் சன்னிதியாகும்.

பராசர: ஆனால் பாட்டி, நாம் நேற்றைய புறப்பாட்டில் ஸ்ரீரங்கநாதரை மாத்திரம் தானே பார்த்தோம்.

ஆண்டாள் பாட்டி: அது சரிதான் பராசரா. ஏனென்றால், ஸ்ரீரங்கநாயகித் தாயார் தனது சன்னிதியை விட்டு வெளியே வருவதில்லை. ஸ்ரீ ரங்கநாதருமே தாயாரைக் காண வேண்டுமானால், அவர் இங்கு வருகிறார்.

பராசர: அப்படியா  பாட்டி! அப்படியென்றால் பாட்டி. நாமும் எப்பொழுதும் இங்கு வந்து அவரைக் காணத்தான் வேண்டும். நாம் எப்பொழுது ஸ்ரீரங்கத்தில் இருந்தாலும், கோவிலுக்கு வருவதற்கு இன்னும் ஒரு காரணம் இது, இல்லையா பாட்டி.

தரிசனம் முடிந்து மூவரும், தாயார் சன்னிதியை விட்டு வெளியே வருகிறார்கள்.

ஆண்டாள் பாட்டி: நான் இப்பொழுது உங்கள் இருவரையும் ஒரு கேள்வி கேட்கப்போகிறேன். நீங்கள் இருவரும் மாலையில் விளையாடி விட்டு வீட்டிற்குத் தாமதமாகத் திரும்பினால், உங்கள் தந்தை எவ்வாறு நடந்து கொள்வார் ?

வ்யாச: பாட்டி, அச்சமயங்களில் அவர் கோபம் கொள்வார் பாட்டி.

ஆண்டாள் பாட்டி: அப்பொழுது அவர் உங்களைத் தண்டிப்பாரா ?

பராசர: அது மிகவும் அரிது பாட்டி. அவர் கோபமாக இருக்கும் சமயங்களில் எங்கள் அம்மா அவரைத் தடுத்து விடுவார்.

ஆண்டாள் பாட்டி: அதுபோலவே, நாம் பெருமாளின் விருப்பத்திற்கு மாறான செய்கைகளில் ஈடுபடும் பொழுது, அவர் நம்மை அதற்காகத் தண்டிக்கலாம் என்று எண்ணும் பொழுது, தாயார் பெருமாளிடம் நமக்காக பரிந்து பேசி நம்மைத் தண்டனைகளில் இருந்து காக்கிறார். .

பராசர: அப்படியானால் நீங்கள் சொன்னது சரி பாட்டி, அவர் நமது தாயைப் போன்றவர்.

ஆண்டாள் பாட்டி: நம்பெருமாள் நம்மைக் காப்பதற்காகவே கையில் ஆயுதங்கள் தரிக்கிறார்; ஆனால் தாயாரோ மிக மென்மையானவரானதால், தன் திருக்கைகளில் தாமரைப் பூக்களை மட்டுமே வைத்திருக்கிறார். பெருமாளைப் போய்ச் சேவிக்க நாம் ரங்கா ரங்கா கோபுரத்தைக் கடந்து, நாழி கேட்டான் வாசல், கருடர் சன்னிதி, த்வஜஸ்தம்பம் ஆகியவற்றைக் கடந்தபின் தான் ஸ்ரீ ரங்கநாதர் சன்னிதியை அடைகிறோம். ஆனால், வடக்கு உத்தர வீதியில் நுழைந்ததுமே, தாயார் சன்னிதியை அடைந்து விடலாம். . அவர் நமக்கு அத்தனை அருகில் இருக்கிறார்.

வ்யாச: ஆமாம் பாட்டி.

ஆண்டாள் பாட்டி: சீதா தேவியுமே காகாசுரனை ஸ்ரீ ராமரிடம் இருந்து ரக்ஷித்தார். இந்திரனின் புதல்வனான காகாசுரன் காக்கையின் உருவில் வந்து  அவரைத் துன்புறுத்தினான். ஸ்ரீ ராமர் அவனைத் தண்டிக்க இருந்தார். ஆனால் அவள் தன் கருணையினால் காகாசுரனை ஸ்ரீ ராமரின் கோபத்தில் இருந்து காத்தார். அது போலவே, ஸ்ரீ ராமர் ராவணனை வதம் செய்த பின் , அசோக வனத்தில் இருந்த அனைத்து ராக்க்ஷசிகளையும் காத்தார். அவர்கள் சீதையை துன்புறுத்தி இருந்ததனால், ஹனுமார் அவர்களை அழிக்க விரும்பினார். ஆனால், சீதையோ ஹனுமானிடம் அவர்கள் வேறு வழியின்றி இராவணனின் ஆணைக்கிணங்க அச்செயல்களில் அவர்கள் ஈடுபட்டு விட்டதாக கருணையோடு  பரிந்து பேசிக் காக்கிறார். ஆக, தாய்மைக்கே உண்டான கருணையோடு, நம் ஒவ்வொருவரையும் எப்பொழுதுமே காக்க முயல்கிறார்.

sita-rama-kakasuraசீதாப்பிராட்டி காகாசுரனைக் காத்தல்

sita_with_rakshasisராக்க்ஷசிகள் சீதாப்பிராட்டியைச் சூழ்ந்திருத்தல்

பராசரனும் வ்யாசனும்: நம் அனைவரையும் அவர் அவ்வாறே காப்பார் என்று நம்புகிறோம் பாட்டி.

ஆண்டாள் பாட்டி: நிச்சயமாக. அவர் எப்பொழுதுமே நமக்காகப் பெருமாளிடம் பரிவதே தனது முதல் கடமையாகக் கொண்டிருக்கிறார்.

பராசர: அவர் செய்வது அது மட்டும் தானா பாட்டி? அதாவது, பெருமாளிடம் நமக்காக பரிந்து பேசுவது மட்டும் தானா?

ஆண்டாள் பாட்டி: ஆமாம். பெருமாள் நம்மை ஏற்றுக்கொள்ளும் வரை அதைச் செய்கிறாள். பெருமாள் நம்மை ஏற்றுக்கொண்டதுமே, அவள் பெருமாளுடன் அமர்ந்து நம்முடைய பக்தியையும் கைங்கர்யங்களையும் அனுபவிக்கிறாள்.

வ்யாச: அது எவ்வாறு பாட்டி?

ஆண்டாள் பாட்டி: இது மிக எளிது. நீ உன் பெற்றோர்களுக்குக் கைங்கர்யங்கள் புரியும் போது, உன் தந்தைக்கு மாத்திரம் தானா செய்கிறாயா?

பராசர: இல்லை, பாட்டி. தாய், தந்தை இருவரின் மேலும் சமமாக எங்களுக்கு அன்பு உண்டு. அவர்கள் இருவருக்கும் கைங்கர்யம் செய்வதே எங்கள் விருப்பம்.

ஆண்டாள் பாட்டி: இப்பொழுது புரிந்தது இல்லையா? அதுபோலவே, நாம் அனைவரும் பெருமாளை அடைய அவரிடம் நமக்காகப் பரிந்து நமக்கு உதவி செய்கிறாள். ஆனால், பெருமாளிடம் நாம் சென்று விட்டாலோ, அவளும் பெருமாளுடன் நம்முடைய அன்பையும் பக்தியையும் ஏற்றுக்கொள்கிறாள்.

namperumal-nachiar_serthi2தாயாரும் நம்பெருமாளும் – பங்குனி உத்திரத் திருநாளில்

பராசரனும் வ்யாசனும்: ஆஹா! இது புரிந்து கொள்ள எவ்வளவு எளிதாக இருக்கிறது பாட்டி. அடுத்த முறை இன்னும் நிறையக் கேட்க ஆசையாய் இருக்கிறது. இப்பொழுது சற்று நேரம் நாங்கள் வெளியே பொய் விளையாடிவிட்டு வருகிறோம் பாட்டி.

பராசரனும் வ்யாசனும் விளையாடுவதற்கு வெளியே ஓடுகிறார்கள்!

அடியேன் கீதா ராமானுஜ தாஸி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2014/08/beginners-guide-sri-mahalakshmis-motherly-nature/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

1 thought on “ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் தாய்மைக் குணம்”

Leave a Comment