ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஆண்டாள் பாட்டி வ்யாசனையும் பராசரனையும் ஸ்ரீ ரங்கத்தின் முதலாழ்வார்களின் சன்னிதிக்கு அழைத்துச் செல்ல திட்டமிடுகிறார்.
ஆண்டாள் பாட்டி: வ்யாசா, பராசரா! இன்று நாம் கோவிலில் முதலாழ்வார்களின் சன்னிதிக்கு செல்லலாம். .
வ்யாசனும் பராசரனும்: நல்லது பாட்டி. இப்பொழுதே செல்லலாம்.
ஆண்டாள் பாட்டி: நாம் அவர்களின் சன்னிதிக்கு நடந்து செல்லும் நேரத்தில் அவர்களைப் பற்றி சிறிது சொல்கிறேன். முதல் என்றால் முதலில். ஆழ்வார் என்பதன் பொருளை நாம் முன்பே அறிந்திருக்கிறோம் – பக்தியில் ஆழ்ந்திருப்பவர். ஆக, முதலாழ்வார்களே பன்னிரு ஆழ்வார்களில் முதன்மையானவர்கள்.
வ்யாச: ஏன் முதலாழ்வார்கள் என்று பன்மையில் சொல்கிறீர்கள்? “முதல்” ஆழ்வார் என்று ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்களா என்ன ?
ஆண்டாள் பாட்டி: ஆஹா, மிக நல்ல கேள்வி. ஆமாம், அழ்வார்களில் முதல் மூன்று ஆழ்வார்கள் சேர்த்தே சொல்லப்படுவார்கள்.
பராசர: ஏன் பாட்டி? அவர்கள் பஞ்ச பாண்டவர்களைப்போன்று எப்பொழுதும் ஒன்றாகவே இருப்பார்களா?
ஆண்டாள் பாட்டி: வெகு நல்ல மேற்கோள் பராசரா! ஆமாம் – முதல் 3 ஆழ்வார்களும் மூன்று வெவ்வேறு இடங்களில் அவதரித்திருந்தாலும், ஒரு தெய்வீகமான நிகழ்வினால், ஒன்று சேர்க்கப்பட்டு, திருக்கோவலூர் என்ற திவ்ய தேசத்தில் சந்தித்துக் கொண்டு ஸ்ரீமன் நாராயணனைத் தொழுது அனுபவித்தனர். அந்த நிகழ்வுக்குப்பின் அவர்கள் பொதுவாகவே ஒன்றாகவே குறிக்கப் பெறுகிறார்கள்.
வ்யாச: அது என்ன தெய்வீகமான நிகழ்வு பாட்டி? அதைப் பற்றி அறிந்து கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன்.
ஆண்டாள் பாட்டி: நிச்சயமாய் நான் உங்களுக்கு அந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கூறுகிறேன். ஆனால் அதற்கு முன்னால் நாம் 3 ஆழ்வார்களைப் பற்றி சற்று தெரிந்து கொள்ளலாம். முதல் ஆழ்வார் பொய்கையாழ்வார் – சரோ யோகி. இரண்டாம் ஆழ்வார் பூதத்தாழ்வார் – பூத யோகி. மூன்றாம் ஆழ்வார் பேயாழ்வார் என்று அழைக்கப்படுவார் – மஹதாஹ்வயர்.
பராசர: அவர்கள் எங்கு, எப்போழுது அவதாரம் செய்தனர் பாட்டி?
ஆண்டாள் பாட்டி: அவர்கள் மூவரும் சென்ற யுகமான துவாபரயுகத்தில் (கிருஷ்ண்ர் அவதாரம் செய்த யுகம்) அவதரித்தனர். மூவருமே புஷ்பங்களில் அவதரித்தனர். பொய்கையாழ்வார் ஐப்பசி மாதத்தில், திருவோண நட்சத்திரத்தில், காஞ்சிபுரம் திருவெக்காவில் ஒரு பொய்கையில் அவதரித்தார். பூதத்தாழ்வார் ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில், தற்காலத்தில் மஹாபலிபுரம் என்று அழைக்கப்பெறும் திருக்கடல்மல்லையில் ஒரு குளத்தில் அவதரித்தார். பேயாழ்வார் ஐப்பசி மாதம் ஸதய நட்சத்திரத்தில், இப்பொழுது மயிலாப்பூர் என்று விளங்கும் திருமயிலையில் ஒரு கிணற்றில் அவதாரம் செய்தார்.
வ்யாச: ஆஹா! அவர்கள் பூக்களில் இருந்து அவதாரம் செய்தனரா! அப்படியென்றால் அவர்களுக்கு தாய் தந்தையர் இருக்கவில்லையா ?
ஆண்டாள் பாட்டி: ஆமாம். அவர்கள் பிறக்கும் பொழுதே பகவானின் கருணையைப் பெற்றிருந்தனராகையால், அவர்கள் தமது தாய் தந்தையாக தாயாரையும் பெருமாளையுமே கருதினர்.
பராசர: ஓ! எவ்வளவு ஆச்சரியமான விஷயம் இது. பின்பு அவர்கள் எவ்வாறு சந்தித்துக் கொண்டனர், அந்த தெய்வீகமான நிகழ்ச்சிதான் என்ன?
ஆண்டாள் பாட்டி: அதுவா! அவர்கள் தனிதனியாக வெவ்வேறு ஷேத்திரங்களுக்கு யாத்திரை செய்து பகவானைப் பல இடங்களிலும் சேவித்துக் கொண்டிருந்தனர்; கோவிலுக்கு செல்வது, பெருமாளை சேவிப்பது, அங்கேயே சில நாள்கள் தங்குவது, பின்பு அடுத்த கோவிலுக்கு செல்வது என்பதே அவர்கள் வாழ்க்கை முறையாக இருந்தது.
வ்யாச: கேட்பதற்கே வியப்பாக இருக்கிறதே – எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் இருக்கலாம். நாமும் அவ்வாறே இருக்கலாம் என்று ஆசை தோன்றுகிறதே பாட்டி.
ஆண்டாள் பாட்டி: ஆம். நாம் இப்பொழுது முதலாழ்வார்கள் சன்னிதியை அடைந்து விட்டோம். நாம் உள்ளே சென்று அவர்களைத் தரிசிக்கலாம். திரும்பி வந்த பின்பு அவர்கள் வாழ்க்கையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.
அடியேன் கீதா ராமானுஜ தாஸி
ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2014/11/beginners-guide-mudhalazhwargal-part-1/
வலைத்தளம் – http://pillai.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org
Danyosi. Bala padam sooper.