ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – முதலாழ்வார்கள் – பகுதி 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< முதலாழ்வார்கள் – பகுதி 1

ஆண்டாள் பாட்டியும், வ்யாசனும் பராசரனும் முதலாழ்வார்கள் சன்னிதியை விட்டு வெளியே வருகிறார்கள்.

பராசர: பாட்டி, முதலாழ்வார்களை இப்பொழுது நன்றாக சேவித்தோம். இந்த 3 ஆழ்வார்களுமே எப்பொழுதும் சேர்ந்தே இருப்பார்களா பாட்டி?

mudhalAzhwargaL-thirukkovalur-with-perumALதிருக்கோவலூர் எம்பெருமானுடன் முதலாழ்வார்கள் – திருக்கோவலூரில்

ஆண்டாள் பாட்டி: நல்ல கேள்வி. அவர்கள் சேர்ந்தே இருப்பதற்கு காரணம் உண்டு. அதை விளக்குகிறேன். ஒரு நல்ல நாளில், பெருமாளின் தெய்வீக சங்கல்பத்தினால், அவர்கள், திருக்கோவலூருக்கு ஒருவர் பின் ஒருவராக வந்து அடைந்தனர். அதுவோ மழைக்காலம். பலமாக மழை பொழிந்து கொண்டு இருந்தது. திருக்கோவலூரில் ம்ருகண்டு என்று ஒரு ரிஷி ஒரு ஆசிரமத்தில் இருந்து வந்தார். அவரது ஆசிரமத்தின் முன்பு, ஒரு சிறு இடைகழி இருந்தது. முதலில் பொய்கை அழ்வார் அங்கு வந்து சேர்ந்து, மழையிலிருந்து அங்கு ஒதுங்கினார். சற்று நேரம் அங்கே ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.

பராசர: தனியாகவா? அவருக்கு பயமாய் இருக்காதா?

ஆண்டாள் பாட்டி: இல்லை பராசரா! அவர் எப்பொழுதும் பெருமாளையே சிந்தித்துக் கொண்டு இருந்ததால், அவருக்கு பயமே தோன்றாது. அந்த சமயத்தில், பூதத்தாழ்வார் மழையிடையே அங்கு வந்து அந்த இடைகழியில் நுழைய அனுமதி கேட்டார். பொய்கையாழ்வார் சொன்னார் “இங்கே கொஞ்சமாகத்தான் இடம் இருக்கிறது. ஒருவர் படுக்கலாம், ஆனால், இருவர் உட்காரலாம், எனவே தயவு செய்து உள்ளே வாருங்கள்”. பூதத்தாழ்வார் மகிழ்வுடன் உள்ளே நுழைந்து இருவரும் அருகருகே உட்காருகிறார்கள். சற்று நேரத்திலேயே, பேயாழ்வார் மழையிலிருந்து ஒதுங்கி ஓடி வந்து அந்த கழியின் உள்ளே நுழைய அனுமதி கோருகிறார். பொய்கையாழ்வார் சொல்கிறார் “நன்று, இங்கே இடம் குறைவாகத்தான் இருக்கிறது, ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்; எனவே தயவு செய்து உள்ளே வாருங்கள், நாம் அனைவரும் நிற்கலாம்”. இதைக் கேட்டவுடன் பேயாழ்வார், மகிழ்வுடன் உள்ளே நுழைய, மூவரும் குளிரால் நடுங்கியபடி நிற்கின்றனர்.  பிறகு அவர்கள் தங்களுக்குள்ளே பேசி ஒருவரைப் பற்றி பிறர் அறிந்துக்கொண்டு தாங்கள் மூவரும் ஒத்த ஈடுபாடு கொண்டு இருப்பதை அறிந்து மகிழ்கிறார்கள்; பெருமாளின், திவ்யமான நாமங்கள், ரூபஙள், கல்யாண குணங்களைப் பற்றி பேசி மகிழ்ந்தனர்.

வ்யாச: ஆஹா! எவ்வளவு நல்ல நிகழ்ச்சி! உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் பாட்டி, இப்பொழுது இங்கே பெரியபெருமாள் இருப்பது போல, அச்சமயம் பெருமாளும் கூட அங்கே இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்.

ஆண்டாள் பாட்டி: பொறு, அந்த நிகழ்ச்சி இன்னும் முற்றுப் பெறவில்லை. நீ அங்கே அடுத்து நடந்ததை மிக நன்றாகவே ஊகித்துவிட்டாய்! பெருமாளின் லீலை இன்னும் தொடர்ந்து வருகிறது. தன்னுடைய அடியார்களின் சேர்க்கையை கண்ட பெருமாள், இப்பொழுது அதில் கலந்து கொள்ளவும் விரும்பினார். எனவே, அவரும் அந்த இடைகழியில் நுழைந்து இருந்த இடத்தில் நெருக்கத் தொடங்கினார். இருளில் திடீரென்று இட நெருக்கத்தை உணர்ந்த மூன்று ஆழ்வார்களும் நடப்பது என்ன; தாங்கள் அறியாமல் அங்கே நுழைந்தவர் யார் என்று வியந்தனர். எனவே, முதலில் பொய்கையாழ்வார் “வையம் தகளியா” என்று உலகத்தையே விளக்காக உருவகம் செய்து பாடத் தொடங்கினார். பிறகு, பூதத்தாழ்வார் “அன்பே தகளியா” என்று தன்னுடைய அன்பையே விளக்காக உருவகம் செய்து பாடினார். இந்த விளக்குகளால் அந்த இடத்தில் சிறிதே வெளிச்சம் தெரிய, முதலில் பேயாழ்வார் ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன் ஸ்ரீமன் நாராயணனும் அந்த இடைகழியில் தங்களிடையே இருப்பதைக் காண்கிறார். உடனே, அவர் “திருக்கண்டேன் …” (ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன் கூடிய ஸ்ரீமன் நாராயணனின் திவ்யமான காட்சியைக் கண்டேன், அவருடைய திவ்யமான அழகான பிரகாசமான ரூபத்தைக் கண்டேன், அவருடைய தெய்வீகமான சங்கம் சக்கரம் ஆகியவற்றைக் கண்டேன்) என்று பாடத் தொடங்கினார். மூன்று ஆழ்வார்களும் ஒருங்கே  தாயாருடனான பெருமாளின் தெய்வீகமான காட்சியை கண்டு அனுபவித்தனர்.

பராசர: எவ்வளவு ஆச்சரியம் பாட்டி. அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்!

ஆண்டாள் பாட்டி: ஆமாம் – அவர்கள் பெரும் மகிழ்ச்சியையே அடைந்தனர். தாயாரும் பெருமாளும் கூட பெரும் மகிழ்வு கொண்டனர். இந்த ஆச்சரியமான நிகழ்ச்சிக்குப் பின், அவர்கள் மற்ற பல கோவில்களிலுள்ள அர்ச்சாவதார எம்பெருமானை சென்று சேவித்தனர். பிறகு தாம் வாழ்ந்த காலம் வரையில் மூவரும் ஒன்றாகவே இருந்து, இறுதியில் பரமபதத்திற்கு ஏகி, பெருமாளுடன் எப்பொழுதும் கைங்கர்யம் செய்கின்றனர்.

வ்யாசனும் பராசரனும்: இந்த நிகழ்ச்சியைக் கேட்கவே வியப்பாக இருக்கிறதே. நாம் இப்பொழுது அடுத்த ஆழ்வாரின் வாழ்க்கையைப் பற்றிக் கேட்கலாமா?

ஆண்டாள் பாட்டி: நீங்கள் அதற்கு அடுத்த முறை வரையில் காத்திருக்க வேண்டும். நீங்கள் விளையாடும் நேரம் இது, ஆகவே வெளியில் சென்று சற்று நேரம் விளையாடி மகிழுங்கள், அதற்குள் நான் போய் பெருமாளுக்கு சற்று உணவு தயார் செய்கிறேன், அந்த ப்ரசாதத்தையே நாம் இன்று இரவு உண்ணலாம்.

வ்யாசனும் பராசரனும்: நிச்சயமாய் பாட்டி, நாங்கள் இதைப்பற்றி நாளை உங்களிடமிருந்து மேலும் கேட்டுத் தெரிந்து கொள்வோம்.

அடியேன் கீதா ராமானுஜ தாஸி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2014/11/beginners-guide-mudhalazhwargal-part-2/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment