ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
<< பிள்ளை லோகாசார்யரின் சிஷ்யர்கள்
ஆண்டாள் பாட்டி ஒரு மாலை கட்டிக் கொண்டே தன் வீட்டு ஜன்னலின் வழியே வெளியே கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எப்பொழுதும் தன்னை பார்க்க வரும் குழந்தைகள், தன் வீட்டை நோக்கி ஓடி வருவதைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டாள். தன் கையிலிருந்த மாலையை பெரிய பெருமாளுக்கும் தாயாருக்கும் சாற்றி விட்டு அவர்களை வரவேற்றாள்.
பாட்டி: வாருங்கள் குழந்தைகளே! இன்றைக்கு யாரைப்பற்றித் தெரிந்துகொள்ளப் போகிறோம் தெரியுமா?
குழந்தைகள் எல்லோரும்: வேதாந்தாசார்யர்.
பாட்டி: யார் அவருக்கு அந்த பெயரை இட்டார்கள் தெரியுமா?
வ்யாசன்: பெரிய பெருமாள் தான் அவருக்கு அந்தப் பெயரை இட்டார். சரி தானே பாட்டி?
பாட்டி: சரியாகச் சொன்னாய் வ்யாசா. அவரது இயற்பெயர் வேங்கடநாதன். அனந்தசூரி தோத்தாரம்பை என்ற திவ்யதம்பதிக்கு காஞ்சிபுரத்தில் பிறந்தவர் அவர்.
பராசரன்: அவர் சம்பிரதாயத்தில் ஈடுபடத் தொடங்கியது பற்றிச் சொல்லுங்கள், பாட்டி
பாட்டி: நடாதூர் அம்மாளின் காலக்ஷேப கோஷ்டியில் கிடாம்பி அப்புள்ளார் என்ற சிறந்த ஸ்ரீவைஷ்ணவர் இருந்தார். வேதாந்தாசார்யாரை, சிறு வயதிலேயே அவரது தாய்மாமனான கிடாம்பி அப்புள்ளா ர் காலக்ஷேப கோஷ்டிக்கு அழைத்துச்சென்றார். ஸ்ரீ நடாதூர் அம்மாள் அவரை, மற்ற சித்தாந்தங்களை வென்று, விஷிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை, உறுதியாக நிலைநாட்டுவார் என்று ஆசீர்வதித்து இருந்தார்.
அத்துழாய்: அவரது ஆசீர்வாதம் உண்மையாயிற்றே !
பாட்டி (புன்னகையுடன்): பெரியோர்களின் ஆசீர்வாதம் என்றைக்கும் பொய்க்காது, அத்துழாய்!
வேதவல்லி: அவர் திருவேங்கடமுடையானின் திருமணியின் அம்சம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மை தானே, பாட்டி ?
பாட்டி: ஆம், நீ சொல்வது சரி தான். அவர் ஸம்ஸ்க்ருதத்திலும், தமிழிலும், மணிப்ரவாளத்திலும் நூறுக்கும் மேற்பட்ட க்ரந்தங்களை எழுதி இருக்கிறார்.
வ்யாசன்: ஆ, நூறா?
பாட்டி: ஆம். அவற்றுள் சில – தாத்பர்ய சந்த்ரிகை (ஸ்ரீமத் பகவத் கீதையின் மேலான பாஷ்யம்), தத்வடீகை, ந்யாயஸித்தாஞ்சனம், சததூஷணி, ஆஹாரநியமம் ஆகியன.
பராசரன்: பாட்டி, ஒருவராலேயே எப்படி கடினமான தத்துவ விஷயங்களைப் பற்றியும் அடிப்படை ஆஹாரநியமங்களைப் பற்றியும் ஒரு சேர எழுத முடிகிறது என்று எண்ண எனக்கு வியப்பாக இருக்கிறது.
பாட்டி: நமது பூர்வாசார்யர்களின் ஞானம் கடலளவு ஆழமானதாக இருந்தது, பராசரா ! அவருக்கு ” ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர்” (அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்) என்ற பெயரை நம் தாயாரே (ஸ்ரீ ரங்கநாச்சியார்) சூட்டி இருக்கிறாள் என்றால் அவரது ஞானம் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
அத்துழாய்: மேலும் சொல்லுங்கள் பாட்டி, அவரைப் பற்றிய தகவல்களெல்லாம் கேட்பதற்கு சுவையாக இருக்கிறது.
பாட்டி: வேதாந்தாசார்யருக்கு “கவிதார்க்கிக கேசரி” (கவிகளுக்குள்ளே சிங்கம் போன்றவர் ) என்ற பெயரும் உண்டு. ஒரு சமயம் அவர் க்ருஷ்ணமிச்ரர் என்ற அத்வைதியுடன் 18 நாட்களுக்கு வாதப்போர் புரிந்தார். வேதாந்தசார்யார் ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்ற க்ரந்தத்தையும் எழுதினார், ஒரு ஆணவப் பண்டிதனின் சவாலுக்கு பதிலளிக்க. நம்பெருமாளின் திவ்யபாதுகைகளைப் பற்றிய 1008 வரிகள் கொண்ட க்ரந்தமாகும் இது.
வேதவல்லி: உண்மையாகவே பாராட்டுக்குரியது தான்! இவரைப் போன்ற உயர்ந்த ஆசார்யர்கள் இத்தகைய உயர்ந்த சாதனைகளை புரிந்திருந்த போதும், அடக்கத்துடன் இருந்திருக்கின்றனரே!
பாட்டி: அழகாய்ச் சொன்னாய் வேதவல்லி. வேதாந்த தேசிகனும் மற்ற ஆசார்யர்களும் பரஸ்பரம் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் பழகிக்கொண்டனர். அவருடைய அபீதிஸ்தவத்தில், அவர் நம்பெருமாளிடம் “எம்பெருமானே, நான் ஸ்ரீரங்கத்தில் பரஸ்பர நலம் விரும்பிகளின் திருவடித்தாமரைகளின் கீழ் வாசம் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். மணவாள மாமுனிகள், எறும்பியப்பா , வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர், சோளசிம்மபுரத்து தொட்டையாசார்யார் (சோளிங்கர்) ஆகியோரெல்லாம் அவரது க்ரந்தங்களை தமது க்ரந்தங்களில் மேற்கோள் காட்டி இருக்கிறார்கள். வேதாந்தாசார்யருக்கு பிள்ளை லோகாசார்யரிடம் மிகுந்த அபிமானம் இருந்தது. இதனை அவர் எழுதிய “லோகாச்சார்ய பஞ்சாஸத்” என்ற நூலிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த க்ரந்தம் திருநாராயணபுரத்தில் (மேலக்கோட்டை, கர்நாடக மாநிலம்) முறையாக அநுஸந்திக்க படுகிறது.
பராசரன்: வேதாந்தாசார்யர் ராமானுஜரை எவ்வாறு கருதினார் ?
பாட்டி: வேதாந்தாசார்யருக்கு ஸ்ரீ ராமானுஜர் மேல் இருந்த பக்தி தெரிந்ததே. ந்யாஸ திலகம் என்ற அவருடைய க்ரந்தத்தில் “உக்த்ய தனஞ்ஜய’ என்ற வரியில் , அவர் பெருமாளிடம் நீர் மோக்ஷம் அளிக்காவிடிலும் ராமானுஜ சம்பந்தத்தால் எனக்கு மோட்சம் நிச்சயம் உண்டு என்று உரைக்கிறார்.
வ்யாசன்: நம் ஆசார்யர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறதே, பாட்டி.
பாட்டி: ஆம்! 1717 ஆம் ஆண்டு ‘வேதாந்தாசார்ய விஜயம்’ என்றும் ‘ஆசார்ய சம்பு’ என்றும் ஸம்ஸ்க்ருதத்தில் கௌசிக கவிதார்க்கிக சிம்ம வேதாந்தாசார்யர் என்பவர் எழுதிய க்ரந்தம், வேதாந்தாசார்யரின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது க்ரந்தங்களையும் பற்றி விளக்கக் கூடியது.
அத்துழாய்: நல்லது பாட்டி, இன்றைக்கு வேதாந்தாசார்யரின் ஸம்ஸ்க்ருதப் புலமை, அவரது தமிழறிவு, அடக்கம், பக்தி ஆகியவற்றைப் பற்றியெல்லாம் அறிந்தோம்.
பாட்டி: ஆம், குழந்தைகளே. இவரை போன்ற உயர்ந்த ஆத்மாக்களை எப்பொழுதும் நினைவில் கொள்வோம். இப்பொழுது நீங்களெல்லாம் வீட்டிற்கு செல்லும் நேரம் வந்து விட்டது.
குழந்தைகள் (ஒன்றாக) : நன்றி பாட்டி!
அடியேன் பார்கவி ராமானுஜ தாசி
ஆதாரம் : http://pillai.koyil.org/index.php/2019/02/beginners-guide-vedhanthacharyar/
வலைத்தளம் – http://pillai.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/
குழந்தைகளுக்குத் தக்க வாறு எழுதும் இவருக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.
As a father I am really really proud of you
Appa