ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஆண்டாள் பாட்டி ஆழ்வார்களைப் பற்றி வ்யாசனுக்கும் பராசரனுக்கும் விளக்கிக் கொண்டு இருக்கிறார்.
வ்யாச: பாட்டி, இப்பொழுது நாங்கள் முதலாழ்வார்களைப் பற்றியும் திருமழிசையாழ்வாரைப் பற்றியும் கேட்டு அறிந்து கொண்டோம். அடுத்தவர் யார் பாட்டி?
ஆண்டாள் பாட்டி: ஆழ்வார்களுள் முதன்மையானவரான நம்மாழ்வரைப் பற்றி நான் சொல்லுகிறேன். அவருடைய அன்பைப் பெற்ற அவரின் சிஷ்யர் மதுரகவி ஆழ்வாரைப் பற்றியும் சிறிது கூறுகிறேன்.
நம்மாழ்வார் – ஆழ்வார் திருநகரி, மதுரகவி ஆழ்வார் – திருக்கோளூர்
பராசர: நாங்கள் அவர்களைப் பற்றி உங்களிடமிருந்து கேட்க வெகு ஆவலாக உள்ளோம் பாட்டி.
ஆண்டாள் பாட்டி: நம்மாழ்வார் என்றால் தமிழில் “நம் ஆழ்வார்” என்று பொருள். அவருக்கு அந்தத் திருநாமத்தை அளித்து பெருமைப்படுத்தியது பெருமாளே. நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அவதரித்தார். அவர் அந்த பிரதேசத்தின் அரசன் / நிர்வாகியான காரி என்பவருக்கும் அவரது பத்தினி உடையநங்கைக்கும் மகனாக அவதரித்தார். காரிக்கும் உடையநங்கைக்கும் நீண்ட காலம் பிள்ளைகள் இல்லாததால், அவர்கள் திருக்குறுங்குடிக்கு சென்று திருக்குறுங்குடி நம்பியிடம் பிரார்த்தித்தனர். நம்பி அவர்களிடம் தாமே அவர்களின் குழந்தையாகப் பிறப்பதாக அருளினார். பின்பு காரியும் உடையநங்கையும் ஆழ்வார் திருநகரிக்குத் திரும்ப, விரைவிலேயே உடையநங்கைக்கு ஒரு அழகான பிள்ளை பிறந்தது. அவர் பெருமாளின் அம்சமாகவே கருதப்படுகிறார். சில சமயங்களில் அவர் விஷ்வக்சேனரின் அம்சமாகவும் கருதப்படுவதுண்டு.
வ்யாச: ஓ! நல்லது. அப்படியானால் அவர் பெருமாளே தானா?
ஆண்டாள் பாட்டி: அவருடைய சிறப்புகளையும் மேன்மையையும் கண்டால், நிச்சயமாய் நாம் அவ்வாறு சொல்லிவிடலாம். ஆனால், அவர் இந்த உலகில் அனாதி காலமாகத் திரிந்து கொண்டிருந்த ஜீவாத்மாக்களில் ஒருவர் என்றும் ஸ்ரீமன் நாரயணனின் அளப்பறிய கருணையினால் அனுக்கிரஹிக்கப்பட்டவர் தாம் என்று அவரே அறிவித்திருக்கிறார் என்று நம் ஆசாரியர்கள் விளக்கியுள்ளனர். ஆகையினால், நாம் அனைவரும் ஒப்புக்கொள்வது அவர் பெருமாளின் நேர் அருளுக்கு இலக்கானவர் என்பதே.
பராசர: ஆமாம் பாட்டி, நீங்கள் தொடக்கத்தில் பெருமாள் நாம் அனைவரும் பெருமாளை அடையும் பொருட்டு சிலரைப் பூரண ஞானத்துடன் அனுக்கிரஹித்து அவர்களை ஆழ்வார்களாக ஆக்கினார் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது பாட்டி.
ஆண்டாள் பாட்டி: மிகச்சரி பராசரா! நீங்கள் இருவரும் இந்த முக்கியக் குறிப்புகளை நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. சரி, நம்மாழ்வாரின் அவதாரத்திற்குத் திரும்ப வருவோம், அவர் பிற குழந்தைகளைப் போல பிறந்திருந்தாலும், அவர், சராசரிக் குழந்தைகளைப் போல உண்ணவோ, உறங்கவோ, வேறு செயல்களைச் செய்யவோ இல்லை. அவரின் பெற்றோர் தொடக்கத்தில் கவலையுற்று, 12ஆம் நாளில், ஆதிநாதப் பெருமாள் கோவிலுக்குச் சென்று அவரைப் பெருமாளின் முன்பு கிடத்தினர். மற்ற குழந்தைகளிலிருந்து அவர் வேறுபட்டு இருந்ததால், அவருக்கு மாறன் (பிறரிலிருந்து மாறுபட்டவர்) என்று பெயரிட்டனர். அவருடைய தனியான சுபாவத்தைக் கண்டு, அவருடைய பெற்றோர் அவரை ஒரு தெய்வீகமான பிறவியாக கருதி, அவரை, கோவிலின் தெற்கு பக்கத்தில் இருந்த ஒரு புனிதமான புளிய மரத்தின் கீழே கிடத்தி, அவரை மிகுந்த பக்தியோடு வழிபட்டனர். அதன் பின்பு அந்த புளிய மரத்தின் கீழேயே அவர் 16 ஆண்டுகள் ஒரு வார்த்தையும் கூறாமல் இருந்தார்.
வ்யாச: அப்படியானால், அத்தனை காலமும் அவர் என்ன செய்து கொண்டு இருந்தார்? அதன் பின்பாவது அவர் பேசினார ?
ஆண்டாள் பாட்டி: அவர் அவதரித்த காலத்திலேயே அனுக்கிரஹம் பெற்றவராகையால், பெருமாளைக் குறித்து ஆழ்ந்த தியானத்திலேயே அவர் எப்பொழுதும் இருந்து வந்தார். இறுதியில், மதுரகவி ஆழ்வாரின் வருகையே அவரை பேசச் செய்தது.
பராசர: மதுரகவி ஆழ்வார் யார் பாட்டி? அவர் என்ன செய்தார்?
ஆண்டாள் பாட்டி: மதுரகவி ஆழ்வார் திருக்கோளூர் என்ற ஊரில் சித்திரை மாதம், சித்திரை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர். அவர் ஒரு சிறந்த அறிஞர் மட்டுமல்லாது ஸ்ரீமன் நாரயணனின் பக்தரும் ஆவார்; அவர் நம்மாழ்வாரைக் காட்டிலும் வயதில் மூத்தவர்; திருவயோத்தியைக்கு யாத்திரை செய்திருந்தார். அவர் மாறனைப் பற்றி முன்பே கேள்வியுற்றிருந்தார். அந்த சமயத்தில் பிரகாசமான ஒளிக் கீற்று ஒன்றை தென் திசையிலிருந்து கண்டு, அந்த ஒளிக்கீற்றைத் தொடர்ந்து செல்ல, அது இறுதியில் மாறன் இருந்து வந்த ஆழ்வார் திருநகரி கோவிலில் முடிந்தது!
வ்யாச: நம்மாழ்வார் மதுரகவியாழ்வாருடன் பேசினாரா?
ஆண்டாள் பாட்டி: ஆம், பேசினார்! மதுரகவியாழ்வார் அவருடன் ஒரு திவ்யமான உரையாடலில் ஈடுபட இறுதியில் ஆழ்வார் பேசினார். அவருடைய சிறப்பையும் மேன்மையையும் உணர்ந்து கொண்ட மதுரகவியாழ்வார் அப்பொழுதே அவருடைய சிஷ்யராகி கற்றுக்கொள்ளப்பட வேண்டிய அடிப்படைக் கொள்கைகளை அவரிடம் கற்றார். பிறகு அவர் இருந்த காலம் வரையில் நம்மாழ்வாருக்குக் கைங்கர்யங்கள் புரிந்து வந்தார்.
பராசர: ஓ, எவ்வளவு நல்ல செயல். அப்படியானால் உண்மையான ஞானத்தை கற்றறிய வயது ஒரு அடிப்படை இல்லையா ? இங்கேயானால் நம்மாழ்வாரைக் காட்டிலும் மூத்தவரானாலும் மதுரகவியாழ்வார், நம்மாழ்வாரிடம் கொள்கைகளைக் கற்றுக் கொண்டிருக்கிறார்.
ஆண்டாள் பாட்டி: மிக நன்றாக கவனித்து வருகிறாயே பராசரா! ஆமாம், ஒருவர் ஒரு ஞானியிடமிருந்து கற்றறிய வேண்டுமானால், அஞ்ஞானி தம்மைக் காட்டிலும் இளையவரானாலும், பணிவோடு இருக்க வேண்டும். ஸ்ரீவைஷ்ணவர்களின் உண்மையான லட்சணமான இதையே தான் மதுரகவியாழ்வார் வெகு நன்றாக அங்கே நடத்திக் காண்பித்தார். சில ஆண்டுகளுக்குப் பின் தம்முடைய 32ஆவது வயதில், பெருமாளிடமிருந்து பிரிந்து இருப்பதை அதற்கு மேலும் தாங்க மாட்டாமல், பரமபதத்திற்குச் செல்ல நம்மாழ்வர் விரும்புகிறார். பெருமாளுடைய மேன்மைகளை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகிய நான்கு பிரபந்தங்களில் பாடி, பெருமாளின் காருண்யத்தால் பெருமாளுக்குப் பரமபதத்தில் நித்ய கைங்கர்யங்கள் செய்யும் பொருட்டு அங்கே சென்று அடைகிறார்.
வ்யாச: பரமபதத்தை அடைவதற்கு அது மிகச் சிறு வயதல்லவா பாட்டி!
ஆண்டாள் பாட்டி: ஆமாம், ஆனால் அவர் எல்லையற்ற நித்யமான பேரின்பத்தை அடையவே விரும்பினார். ஆகையால், இவ்வுலகத்தை விடுத்து அங்கே அடைந்தார். அதன் பின்பு மதுரகவியாழ்வார், கொதிக்கும் நதி நீரில் கிடைக்கப் பெற்ற நம்மாழ்வருடைய அர்ச்சா விக்கிரகத்தை இந்த திவ்ய தேசத்தில் நிர்மாணித்து வழிபாட்டு முறையை ஏற்படுத்தினார். அவர் நம்மாழ்வாரின் சிறப்பை “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்ற பிரபந்தத்தில் இயற்றினார். அவர் அந்தப் பகுதியெங்கும் நம்மாழ்வாரின் மகிமைகளைப் பரப்பி, ஆழ்வாரின் சிறப்புகளை எங்கும் நிறுவினார்.
பராசர: அப்படியானால், மதுரகவியாழ்வாரால் தான் நாம் நம்மாழ்வாரின் மகிமைகளை முழுமையாக அறிந்து கொள்கிறோமா?
ஆண்டாள் பாட்டி: ஆமாம். அவர் நம்மாழ்வாரிடம் முழுமையாக ஈடுபட்டு இருந்து, அவ்வாறு நம்மாழ்வாரிடம் கொண்டிருந்த ஈடுபாட்டாலேயே மேன்மையடைந்தார். பாருங்கள், பெருமாளுடைய அடியார்களுக்கு பெருமாளைக் காட்டிலும் அதிக சிறப்பு. ஆகையால், பெருமாளுடைய அடியார்களுக்கு செய்யும் சிறப்பு, பெருமாளுக்குச் செய்யும் சிறப்பைக் காட்டிலும் உயர்ந்ததாகக் கருதப்படும். நாமும், பெருமாளுடைய அடியார்களுக்கு நம்மால் இயன்ற வரையில் கைங்கர்யங்கள் செய்ய முயல வேண்டும்.
வ்யாசனும் பராசரனும்: நிச்சயமாக பாட்டி. இதை நாங்கள் மனதில் கொண்டு அத்தகைய வாய்ப்புகளுக்குக் காத்திருப்போம்.
ஆண்டாள் பாட்டி: இன்று நாம் நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் இருவரைப் பற்றி அறிந்து கொண்டோம். இப்பொழுது நாம் நம்மாழ்வாரின் சன்னிதிக்குப் போய் சேவிக்கலாம்.
அடியேன் கீதா ராமானுஜ தாஸி
ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2014/11/beginners-guide-nammazhwar-and-madhurakavi-azhwar/
வலைத்தளம் – http://pillai.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org