ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – குலசேகர ஆழ்வார்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும்

வ்யாசனும் பராசரனும் ஆண்டாள் பாட்டியிடம் சென்று ஆழ்வார் கதைகளை தொடர்ந்து சொல்லுமாறு கேட்கிறார்கள்.

ஆண்டாள் பாட்டி: வ்யாசா, பராசரா! இன்று உங்களுக்கு அரசனும் ஆழ்வாருமான ஒருவரைப் பற்றி கூறப் போகிறேன்.

kulasekarazhwar

வ்யாச: அது யார் பாட்டி? அவர் பெயர் என்ன? அவர் எங்கே எப்பொழுது பிறந்தார் ? அவருடைய சிறப்பு என்ன?

ஆண்டாள் பாட்டி: அவர் பெயர் குலசேகர ஆழ்வார். அவர் கேரளத்திலுள்ள திருவஞ்சிக்களத்தில் மாசி மாதம் புனர்பூச நக்ஷத்ரத்தில் அவதரித்தவர். அவர் க்ஷத்ரிய குலத்தில் பிறந்தவர்.

பராசர: க்ஷத்ரியர்  என்பதன் பொருள் என்ன பாட்டி?

ஆண்டாள் பாட்டி: க்ஷத்ரியர் என்றால் பொதுவாக நிர்வாகிகள் என்று பொருள், அரசர், சக்கரவர்த்தி போன்றோர். அவர்கள் நாட்டை ஆண்டு மக்களைக் காப்பவர்கள்.

வ்யாச: ஓ, ஸ்ரீ ரங்கத்திலுள்ள நம் அனைவரையும் பாதுகாத்து ஆளும் நம்முடைய ரங்கராஜாவைப் போல்!

ஆண்டாள் பாட்டி: ஆம். நம்முடைய பெருமாள்தான் அனைவருக்கும் அரசர். ஆனால் ஒவ்வொரு பிரதேசத்தையும் ஓர் அரசர் ஆள்வார், அவ்வாறு ஆளும் அரசர் அந்தப் பகுதி மக்களால் பெரிதும் மதிக்கப்படுவர். கதைக்குத் திரும்ப வருவோம், அவர் க்ஷத்ரிய குலத்தில் பிறந்ததனால், அவர் தாம் மிகவும் ஸ்வதந்த்ரன் என்றும் அனைத்தையும் கட்டுப்படுத்துபவர் தாமே என்றெல்லாம் எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் ஸ்ரீமன் நாரயணனின் காருண்யத்தினால் அவருக்குத் தாம் பரிபூரணமாக பெருமாளுக்கு அடிமைப்பட்டவர் என்று உணர்ந்து, பெருமாளுடைய மேன்மைகளைக் கேட்டு அறிவதிலும் பெருமாளுடைய பக்தர்களைப் போற்றிக் காப்பதிலும் பெரும் ஈடுபாடு தோன்றியது.

பராசர: பாட்டி, பெருமாளுடைய பக்தர்களுக்குக் கைங்கர்யங்கள் செய்வதில் நாம் மதுரகவி ஆழ்வார் போல இருக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னது இப்பொழுது நினைவுக்கு வருகிறது. அவர் அது போல் இருந்தாரா பாட்டி?

ஆண்டாள் பாட்டி: மிகச்சரி பராசரா. ஆம். குலசேகராழ்வார் ஸ்ரீராமாயணத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். பாருங்கள், நம்முடைய சம்பிரதாயத்தில் “ஸ்ரீராமரை” அன்போடு “பெருமாள்“ என்று அழைக்கிறோம். குலசேகர ஆழ்வார், ஸ்ரீராமாயணத்திலும் ஸ்ரீராமரிடத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தவராகையால், அவர் “குலசேகரப் பெருமாள்” என்றே அழைக்கப்படுகிறார். அவர் ஒவ்வொரு நாளும் சிறந்த அறிஞர்களிடத்தில் ஸ்ரீராமாயணம் கேட்டு அந்த நிகழ்ச்சிகளில் ஆழ்ந்து விடுவார். அவ்வாறு ஒருமுறை ராமாயணக் கதை கேட்கும் பொழுது, ராமரைத் தாக்க 14000 ராக்ஷசர்கள் சேர்ந்து வந்தனர் என்று கேட்டுக் கொண்டிருந்தார்; கேட்டவுடன் ஸ்ரீராமருக்குத் தொண்டு செய்யும் பொருட்டு தம்முடைய படைகளை ஆயத்தம் ஆகுமாறு அழைத்தார். பின்பு, பெருமாளுடைய அடியார்கள் அவரிடம் ராமர் தனியாகவே ராக்ஷசர்களை வென்று விட்டார் என்று கூறி அமைதியடைச் செய்தனர்

வ்யாச: இவ்வாறு பெருமாளைப் பற்றி கேட்பதிலேயே முழுமையாக ஈடுபட்டிருந்தவர் தன் நாட்டை எவ்வாறு வழி நடத்தினார் பாட்டி?

ஆண்டாள் பாட்டி: நல்ல கேள்வி கேட்டாய்! அவரால் தன் ராஜ்யத்தின் மேல் கவனம் செலுத்த இயலவில்லை. அவருடைய அமைச்சர்கள் அவருக்கு பாகவதர்களின் மீதிருந்த பிணைப்பை விலக்கத் திட்டமிட்டனர். அவர்கள் அரண்மனைக் கோயிலில் இருந்த  பெருமாளுடைய அட்டிகையைக் கவர்ந்து, அதைத் திருடியது பாகவதர்கள் என்று அரசரிடம் கூறினர். அவர் தம்முடைய அமைச்சர்களின் கூற்றை நம்பவில்லை. அந்தக் காலத்தில் ஒருவர் பேல் குற்றம் சாட்டப்பட்டால், அவர் தாம் குற்றமற்றவர் என்பதனை  நிரூபிக்க பாம்பு இருக்கும் ஒரு குடத்துக்குள் தன்னுடைய கையை விட்டு  நிரூபிப்பது வழக்கத்தில் இருந்தது. இவ்வாறு செய்வதற்கு மிகுந்த மனோதிடமும் தன்னம்பிக்கையும் தேவை. அரசர் ஒரு பானைக்குள் பாம்பை விட்டு எடுத்து வரும்படி ஆணையிட்டார். மனத்துணிவுடன் தன்னுடைய கையை குடத்துக்குள் விட்டு, பாகவதர்கள் எந்தப் பிழையும் செய்யாதவர்கள் என்று நிரூபித்தார்!

பராசர: எத்தகைய செயல் செய்தார் பாட்டி!

ஆண்டாள் பாட்டி: ஆம்! ஸ்ரீராமர் பெரிய பெருமாள் (ஸ்ரீரங்கநாதர்) மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தது போலவே, குலசேகர ஆழ்வாரும் பெரிய பெருமாள் மேலும் ஸ்ரீரங்கத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

வ்யாச: ஸ்ரீ ராமருக்கும் பெரிய பெருமாளுக்கும் என்ன சம்மந்தம் பாட்டி?

ஆண்டாள் பாட்டி: அயோத்தியில் ஸ்ரீராமரால் திருவாராதனப் பெருமாளாக ஆராதித்தக்கப் பட்டவர் பெரிய பெருமாள்! திருவாராதனப் பெருமாள் என்றால் நம் இல்லங்களில் வழிபாடு செய்யப்படும் பெருமாள். அவ்வாறு, ஸ்ரீராமர் பெரிய பெருமாளை ஆராதித்தார். ஆனால் அந்தப் பெருமாளை தம்முடைய அன்புக்குகந்த பக்தனான விபீஷணனுக்குப் பரிசாக அளித்து விட்டார். விபீஷணன் பெரிய பெருமாளை இலங்கைக்கு  எழுந்தருளப்பண்ணிச் செல்லும் வழியில் ஸ்ரீரங்கத்தில் சந்தியாவந்தனம் செய்யும் பொருட்டு நின்றார். சந்தியாவந்தனம் செய்து முடித்து விட்டு அவர் இலங்கைக்குப் பயணத்தை தொடர எண்ண, பெரிய பெருமாள் விபீஷணனிடம் தாம் அந்த இடத்தை மிக விரும்புவதாகவும் அந்த இடத்திலேயே தெற்கு திசையிலுள்ள இலங்கையை நோக்கி இருக்க விரும்புவதாகச் சொல்ல, விபீஷணன் பெரிய பெருமாளின் விருப்பத்திற்கேற்ப அவரை அங்கேயே விட்டு இலங்கைக்குச் சென்றார். இவ்வாறு பெரிய பெருமாள் ஸ்ரீரங்கத்தை வந்தடைந்து அங்கேயே  இது வரை இருந்து வருகிறார்.

பராசர: ஆஹா! கேட்பதற்கே மிக ஆச்சரியமாய் இருக்கிறது பாட்டி. இது வரை எங்களுக்குப் பெருமாளுக்கும் (ஸ்ரீ ராமர்) பெரிய பெருமாளுக்கும் உள்ள சம்மந்தம் என்ன என்பதே தெரியாது பாட்டி.

ஆண்டாள் பாட்டி: அதனாலேயே குலசேகர ஆழ்வாரும் ஸ்ரீரங்கத்தின் மீதும் பெரிய பெருமாள் மேலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு நாளும் ஸ்ரீரங்கத்தைத் தரிசிக்கும் பொருட்டு தம்முடைய ராஜ்யத்தை விட்டுப் புறப்படுவார். ஆனால் அவருடைய அமைச்சர்கள் அவருடைய ஆட்சி தடைபடாமல் தொடரும் பொருட்டு ஏதோ ஒரு காரணம் கூறி அவரை நிறுத்திய வண்ணம் இருந்தனர். நாளடைவில், அவர் தம்முடைய அரச பாரத்தை விட்டு ஸ்ரீ ரங்கத்தை வந்தடைந்தார். எம்பெருமானின் சிறப்பைப் பெருமாள் திருமொழி என்னும் பிரபந்தத்தால் அவர் பாடி, ஸ்ரீ ரங்கத்தில் சில காலம் இருந்து வந்தார். இறுதியில் இவ்வுலகை விட்டு பரமபதத்தை அடைந்து, பெருமாளுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்கிறார்.

வ்யாஸ: ஆழ்வார்கள் பெருமாளின் மேலேயே முழு ஈடுபாடு கொண்டிருந்தவர்களாதலால், ஆழ்வார்களைப் பற்றி நாங்கள் கேட்கும் பொழுதெல்லாம், பெருமாளைக் குறித்து மேலும் அறிந்து கொள்கிறோம் பாட்டி!

ஆண்டாள் பாட்டி: ஆமாம், நாமும் பெருமாள் பேரிலும் அவருடைய அடியவர்கள் மீதும் ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும். வாருங்கள், இப்பொழு குலசேகர ஆழ்வார் சன்னிதிக்கு சென்று அவரைச் சேவிக்கலாம்.

வ்யாசனும் பராசரனும்: நிச்சயமாக பாட்டி. இப்பொழுதே சென்று சேவிக்கலாம்.

அடியேன் கீதா ராமானுஜ தாஸி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2014/11/beginners-guide-kulasekarazhwar/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment