ஸ்ரீ வைஷ்ணவம் – பால பாடம் – ஆளவந்தார்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< உய்யக்கொண்டாரும் மணக்கால் நம்பிகளும்

வ்யாசனும் பராசரனும் தங்கள் தோழி அத்துழாயுடன் ஆண்டாள்   பாட்டியின் வீட்டில் நுழைகிறார்கள். ஆண்டாள் பாட்டி தன் கைகளில் பிரசாதத்துடன் அவர்களை வரவேற்கிறார்.

பாட்டி : வா அத்துழாய்! கைகளை அலம்பிக்கொண்டு இந்த பிரசாதத்தை பெற்றுக் கொள். இன்று உத்திராடம், ஆளவந்தாருடைய திருநக்ஷத்ரம்.

பராசர : பாட்டி, போன முறை நீங்கள் எங்களுக்கு யமுனைத்துறைவரைப் பற்றிக் கூறுவதாகச் சொன்னீர்களே, நினைவிருக்கிறதா?

பாட்டி : ஆமாம்! எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நீங்கள் நம்முடைய சிறந்த ஆசார்யர் பற்றி ஞாபகமாய் கேட்பது எனக்கு மகிழ்வளிக்கிறது. இன்று அவரது திருநக்ஷத்ரம். அவருடைய மேன்மைகளைப் பற்றிப் பேசி அறிந்து கொள்ளத் தக்க தருணமே.

வ்யாச : ஆனால் பாட்டி, ஆளவந்தாருடைய திருநக்ஷத்ரம் என்றல்லவா கூறினீர்கள்?

 ஆளவந்தார்காட்டு மன்னார் கோயில்

பாட்டி : ஆமாம். காட்டு மன்னார் கோயிலில் அவதரித்த யமுனைத்துறைவர் பிற்காலத்தில் ஆளவந்தார் என்று பிரசித்தி பெற்று விளங்கினார். அவருடைய தகப்பனார் பெயர் ஈச்வர முனி என்பதாகும். ஆளவந்தார் நாதமுனிகளின் பேரனாவார். இவர் மஹாபாஷ்ய பட்டரிடம் கல்வி பயின்றார். அவர் ஆளவந்தார் என்று சிறப்பாக அழைக்கப்பட்டதற்கு சுவாரஸ்யமான சரித்திரம் ஒன்று உண்டு. அக்காலத்தில் பண்டிதர்கள்,  தலைமைப் பண்டிதருக்கு வரி செலுத்தும் வழக்கம் இருந்து வந்தது. அவ்வாறு, அரச புரோஹிதர் ஆக்கியாழ்வான், தம்முடைய பிரதிநிதிகளை எல்லாப் பண்டிதர்களிடமும் அனுப்பி தமக்கு வரி செலுத்துமாறு செய்தி அனுப்பினார். மஹாபாஷ்ய பட்டர் இத்தகவலால் கவலையுற்றிருக்க யமுனைத்துறைவர் தாம் அதனை கவனித்துக் கொள்வதாக கூறினார். “மலிவான விளம்பரம் தேடும் புலவர்களை அழிப்பேன்” என்று பொருள் படும் ஒரு ச்லோகச் செய்தியை அனுப்பினார்! இந்த செய்தியைக் கண்டு ஆக்கியாழ்வான் சினம் கொண்டு யமுனைத்துறைவரை அரசவைக்கு அழைத்து வருமாறு பணித்தார். யமுனைத்துறைவரோ தமக்கு உரித்த மரியாதைகளை அளித்தால் மாத்திரமே வருவதாகக் கூறினார். எனவே, அரசுனும் பல்லக்கு அனுப்ப யமுனைத்துறைவரும் அரசவைக்கு வந்து சேர்ந்தார். விவாதம் தொடங்கும் முன்பு, பட்டத்து அரசி அரசனிடம் யமுனைத்துறைவரே உறுதியாக வெல்வார் என்றும் அவர் தோற்று விட்டால், அவள் தான் அரசுனுடைய சேவகியாக இருப்பாள் என்றும் கூறினாள். அரசனோ, ஆக்கியாழ்வானே வெல்வார் என்று உறுதியாக எண்ணியிருந்ததால், ஒருகால் யமுனைத்துறைவர் வென்றாரானால், தமது ராஜ்ஜியத்தில் பாதியை அவருக்குக் கொடுப்பதாகவும் கூறினான். இறுதியில் தம்முடைய ஞானத்தின் வன்மையினால், யமுனைத்துறைவர் ஆக்கியாழ்வானை வாதத்தில் வென்றார். ஆக்கியாழ்வானும் யமுனைத்துறைவர் பால் ஈர்க்கப்பட்டவராய், அவருக்கே சிஷ்யரானார். அவர் தோற்றிருந்தாரானால், அரசி ஒரு சேவகியாகியிருக்க வேண்டுமல்லவா – அதிலிருந்து அவளைக் காத்ததால், அவருக்கு “ஆளவந்தார்” என்று அரசி பெயரிட்டழைத்தாள், அவளும் அவருக்கு சிஷ்யையானாள். அரசன் வாக்களித்தபடி அவருக்கு ராஜாங்கத்தில் பாதியும் கிடைத்தது.

வ்யாச : பாட்டி, யமுனைத்துறைவருக்கு நாட்டில் பாதி கிடைத்திருந்தால், அவர் அரசாட்சியல்லவா செய்திருப்பார். நம்முடைய சம்பிரதாயத்தில் எவ்வாறு ஈடுபட்டார்?

அத்துழாய் : அவரை சம்பிரதாயத்தில் அழைத்துக் கொண்டு வந்தவர் உய்யக்கொண்டாருடைய சிஷ்யரான மணக்கால் நம்பியாவார். உய்யக்கொண்டாருடைய சொற்படியே ஆளவந்தாரை நம்முடைய சம்பிரதாயத்தில் ஈர்க்கும் முயற்சியை மணக்கால் நம்பி மேற்கொண்டார்.

பாட்டி : அற்புதம் அத்துழாய்! மிகச்சரியாகச் சொன்னாய்! இது உனக்கு எவ்வாறு தெரியும்?

அத்துழாய்: என்னுடைய அம்மாவும் ஆசார்யர்களைப் பற்றியும் பெருமாளைப் பற்றியும் எனக்கு கதைகள் சொல்வார்.

பாட்டி : ஸ்ரீ ராமானுஜரை தேவப் பெருமாளின் கடாக்ஷத்துடன் நம்முடைய சம்பிரதாயத்தில் அழைத்து வந்தவர் ஆளவந்தாரே.

பராசர : ஆனால் பாட்டி, தேவப்பெருமாள் எவ்வாறு ஆளவந்தாருக்கு உதவினார்?

பாட்டி : அது காஞ்சீபுரத்தில் நடந்தது; அங்கே ஆளவந்தார் இளையாழ்வாரை வரதராஜப் பெருமாள் கோயிலில் கண்டார். அப்பொழுது அவர் ராமானுஜர் என்று பெயர் பெறவில்லை . இளையாழ்வார் அவருடைய குருவான யாதவப் பிரகாசரிடம் பயின்று வந்தார். ஆளவந்தார் தேவப்பெருமாளிடம் இளையாழ்வாரை சம்பிரதாயத்திற்கு அடுத்த தலைவராக ஆக்கிக் கொடுக்கும்படி பிரார்த்தித்தார்.  ஆக, ஒரு தாய் தன் குழந்தைக்கு பரிவூட்டி வளர்ப்பது போன்றே, தேவப்பெருமாளே இளையாழ்வாரை வளர்த்தார். இத்தகைய மேன்மையான ஆளவந்தாருடைய அனுக்கிரகத்தினாலேயே, இளையாழ்வார் சம்பிரதாயத்திற்கு மேன்மையிலும் மேன்மையான கைங்கர்யங்கள் பிற்காலத்தில் புரிந்தார். மேலும் ஆளவந்தார் இளையாழ்வாருக்குத் தேவை எழும் நேரத்தில் வழிகாட்டியாக இருக்கும்படி திருக்கச்சி நம்பியையும் பணித்தார். திருக்கச்சி நம்பியை நினைவிருக்கிறதா?

வ்யாச : ஓ! அவர்தானே பாட்டி தேவப் பெருமாளுக்கு திருவாலவட்ட (விசிறி) கைங்கர்யம் செய்து கொண்டும், தேவப்பெருமாளிடமும் தாயாரிடமும் உரையாடிக் கொண்டிருந்தவர்? நாமும் திருக்கச்சி நம்பியைப் போன்றே பெருமாளிடம் பேச முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அப்படியானால் ஆளவந்தாரும் இளையாழ்வாரும் சந்தித்துக் கொண்டார்களா? ஆளவந்தார் இளையாழ்வாரைத் தம்முடைய சிஷ்யராக ஏற்றுக் கொண்டாரா?

பாட்டி : துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் சந்தித்துக் கொள்ளவே இல்லை ! இளையாழ்வார் ஆளவந்தாரிடம் சிஷ்யராகும் பொருட்டு ஸ்ரீரங்கத்தை வந்து அடையும் முன்பே, ஆளவந்தார் இவ்வுலகைத் துறந்து பரமபதத்தை அடைந்து விட்டார். அவர்களால் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள இயலவில்லையென்றாலும், இளையாழ்வார் ஆளவந்தாருடைய எண்ணங்களைத் தாம் நிறைவேற்றுவதாக பிரதிக்ஞை மேற்கொண்டார். குழந்தைகளே, நான் உங்களை அடுத்த முறை சந்திக்கும்பொழுது ஆளவந்தாருடைய சிஷ்யர்களில் ஒருவரும், பிற்காலத்தில் இளையாழ்வாருடைய ஆசார்யருமாக ஆகி அவரை வழி நடத்திய பெரிய நம்பியைப் பற்றிக் கூறுகிறேன். ஆளவந்தாருக்கு பல சிஷ்யர்கள் இருந்தனர்; அவர்கள் அனைவரும் சேர்ந்தே இளையாழ்வாரை சம்பிரதாயத்தின்பால் ஈடுபடுத்தினர். பெரிய நம்பி மட்டுமல்லாது, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமாலையாண்டான், மாறனேரி நம்பி, திருக்கச்சி நம்பி, திருவரங்கப் பெருமாளரையரும் இன்னும் பலரும் ஆளவந்தாருக்குச் சிஷ்யர்களாக இருந்தனர்.

வ்யாஸன், பராசரன், அத்துழாய் மூவரும்: கேட்பதற்கு  வெகு ஆவலாக இருந்தது பாட்டி. எங்களுக்குப் பெரிய நம்பியைப் பற்றியும் இளையாழ்வாரைப் பற்றியும் சொல்வீர்களா?

பாட்டி: எனக்கு அதை சொல்வதில் மகிழ்ச்சியே என்றாலும், இப்பொழுது வெளியே இருட்டி விட்டது பாருங்கள். உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள்.

குழந்தைகள் ஆளவந்தாரைப் பற்றி எண்ணமிட்டவாறே குதூகலமாக தங்கள் வீடுகளுக்குக் கிளம்பிச் சென்றனர்.

அடியேன் கீதா ராமானுஜ தாசி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2016/07/beginners-guide-alavandhar/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/

 

Leave a Comment