ஸ்ரீ வைஷ்ணவம் – பால பாடம் – பெரிய நம்பி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< ஆளவந்தார்

பராசரனும் வ்யாசனும் பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களுடன், கையில் ஒரு பரிசுடன் அத்துழாயும் வருகிறாள்.

பாட்டி : இங்கு என்ன பரிசு வென்றாய் கண்ணே?

வ்யாஸ : பாட்டி, எங்களுடைய பள்ளியில் நடந்த மாறுவேடப் போட்டியில் அத்துழாய் ஆண்டாள் வேடமிட்டு, திருப்பாவையிலிருந்து சில பாடல்கள் பாடினாள், முதல் பரிசும் வென்றாள்.

பாட்டி : மிக நன்று அத்துழாய்! நீ பாடிய அப்பாசுரங்களை இன்று நான் உங்களுக்குப் பெரிய நம்பியைப் பற்றிச் சொன்னபின்பு கேட்கப் போகிறேன்.

வ்யாசன், பராசுரன், அத்துழாய் மூவரும் ஒன்றாக: இளையாழ்வாரைப் பற்றியும் கூட, பாட்டி!

பாட்டி : ஆமாம். நான் சென்ற முறை சொன்னது போலே, பெரிய நம்பி ஆளவந்தாருடைய பிரதம சிஷ்யர்களில் ஒருவர். அவர் ஸ்ரீரங்கத்தில் மார்கழி மாதத்தில் கேட்டை நக்ஷத்ரத்தில் அவதரித்தவர். அவர்தாம், இளையாழ்வாரை காஞ்சீபுரத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வந்தவர். ஒருபுறம் பெரிய நம்பி இளையாழ்வாரைக் காண காஞ்சிக்குப் பயணிக்க, மறுபுறம் இளையாழ்வாரோ பெரிய நம்பியைக் காணும் பொருட்டு ஸ்ரீரங்கத்திற்குப் புறப்பட்டார்.

பராசர : பாட்டி, இளையாழ்வார் காஞ்சீபுரத்தில் யாதவ ப்ரகாசரிடத்தில் சிஷ்யராயிருக்கையில், அவர் ஏன் ஸ்ரீரங்கத்திற்குப் புறப்பட்டார்?

பாட்டி : மிக நல்ல கேள்வி! ஆளவந்தார், திருக்கச்சி நம்பியை இளையாழ்வாருக்குத் தேவை ஏற்படும் சமயத்தில் தகுந்த வழி காட்டும்படி பணித்தார் என்று நான் சென்ற தடவை சொன்னது நினைவிருக்கிறதா? இளையாழ்வருக்குத் தம்முடைய குரு யாதவ ப்ரகாசருடைய கருத்துக்களில் வேறுபாடுகள் தோன்றத் தொடங்க, அவர் மனத்தில் எழுந்த பல சந்தேகங்கள் கருமேகங்கள் போன்று மறைக்க, அவர் திருக்கச்சி நம்பியை அது குறித்து அணுகினார். பின்பு திருக்கச்சி நம்பி அதை பற்றி யாரிடம் கேட்பார்?

அத்துழாய் : தேவப் பெருமாள்!

பாட்டி : அற்புதம்! இளையாழ்வாருக்கு எப்பொழுதும் அபயம் அளித்து வந்த தேவப் பெருமாள்தான் அவரை பெரிய நம்பியிடம் சென்று, பெரிய நம்பியிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டு அவரின் சிஷ்யராகும்படி கூறினார். இரவின் இருளை காலையில் உதிக்கும் சூரியக் கிரணங்கள் போக்குவது போன்று, இளையாழ்வாரின் மனத்தில் இருந்து வந்து சந்தேகங்களைப் போக்கினார். இவ்வாறாக இளையாழ்வார் காஞ்சிக்குப் புறப்பட, பெரிய நம்பி இளையாழ்வாரைக் காணும் பொருட்டு காஞ்சிக்கு ப்ரயாணம் செய்து கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் மதுராந்தகம் என்னும் இடத்தில் சந்தித்துக் கொள்ள, பெரிய நம்பி இளையாழ்வாருக்கு அங்கேயே பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து, அவரை நம் சம்பிரதாயத்தில் கொணர்ந்தார்.

வ்யாச : அட ஆமாம், அங்கேதானே நம்முடைய மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் இருக்கிறது. போன விடுமுறைக்கு அங்கே சென்றிருந்தோமே! ஆனால், அவர் ஏன் இளையாழ்வாரை சம்பிரதாயத்திற்குள் அழைத்து வர காஞ்சிக்கோ ஸ்ரீரங்கத்திற்கோ செல்லவில்லை ? ஏன் அதனை அங்கே மதுராந்தகத்திலேயே செய்தார்?

பெரிய நம்பி – ஸ்ரீரங்கம்

பாட்டி: பெரிய நம்பி, இளையாழ்வாரின் மீது மிகுந்து அபிமானமும் அன்பும் கொண்டிருந்த ஒரு சிறந்த ஆசார்யர். அவர் இது போன்ற நல்ல செயல்களை தாமதிக்கலாகாது என்பதனை அறிந்திருந்தார்; இளையாழ்வாருக்கும் அதே உணர்வு. குழந்தைகளே, இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன, நம்முடைய சம்பிரதாயத்திற்கு ஸம்பந்தப்பட்ட எந்த நல்ல செயல்களையோ, கைங்கர்யங்கள் செய்வதையோ நாம் காலம் தாழ்த்தவே கூடாது என்பதே! எவ்வளவு சீக்கிரம் செய்கிறோமோ, அவ்வளவு நல்லது. பெருமாளுடைய பக்தர்களிடையே வேறுபாடு பார்க்காமல், ஒவ்வொருவருடனும் அன்புடனும் மதிப்புடனும் நடப்பதே நம்முடைய சம்பிரதாயத்தின் உட்கருத்தாகும்; இதனைப் பெரிய நம்பி அறிந்தவர். அவர் தம்முடைய சிஷ்யரான ராமானுஜர் மீது மிகுந்து அன்பு கொண்டிருந்தார்; நம்முடைய சம்பிரதாயத்தின் விடிவெள்ளியான ராமானுஜருக்காக உயிர் துறக்கும் அளவுக்கு!

வ்யாச : அவர் உயிரைத் தியாகம் செய்தாரா? எதற்காக அவ்வாறு செய்தார் பாட்டி?

பாட்டி : ஒரு சமயம், தன்னுடைய ஆணைகளை ஒப்புக்கொள்வதற்காக ராமானுஜரை சைவ அரசன் தன்னுடைய அரசவைக்கு வருமாறு சொன்னான். ராமானுஜருக்குப் பதிலாக அவருடைய சிறந்த சிஷ்யர்களில் ஒருவரான கூரத்தாழ்வான், தம்முடைய ஆசார்யர் போல கோலம் பூண்டு வயதில் மிகவும் முதிர்ந்த பெரிய நம்பியுடன் அரசவைக்குச் சென்றார். பெரிய நம்பி தம்முடன் தம் மகளையும் அழைத்து சென்றார்; அவள் பெயர் அத்துழாய்!

அத்துழாய் : என் பெயரும் அதுவேதான் !

பாட்டி : ஆமா, அதே தான்! அரசன் தன்னுடைய ஆணைகளுக்குப் பணியுமாறு சொல்ல, பெரிய நம்பியும் கூரத்தாழ்வானும் அவனுடைய ஆணைக்குப் பணிய மறுத்தனர். அரசன் மிகுந்த சினம் கொண்டு, அவர்களுடைய கண்களை பிடுங்குமாறு ஆணையிட்டான். வயதில் மிகவும் முதியவரான பெரிய நம்பி வலி பொறுக்கமுடியாமல் கூரத்தாழ்வானின் மடியில் சாய்ந்து, ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் உயிரை நீத்து, பரமபதத்தை அடைந்தார். இவ்வுயர்ந்த ஆத்மாக்கள் எதனை பற்றியும் கவலைப்படாமல், ஒரு முத்து ஹாரத்தின் நடுவில் பதித்த மாணிக்கம் போன்ற ராமானுஜரைக் காப்பதற்காக அனைத்தையும் தியாகம் செய்தார்கள்? ஒரு ஹாரத்தில் உள்ள முத்துக்களைச் சிதைத்தால் என்னவாகும் ?

பராசரனும் வ்யாசனும் (ஒரே குரலில்): ஹாரமும் சிதைந்து போகும்!

பாட்டி : மிகச்சரி! அது போலத்தான், ராமானுஜர் நம்முடைய ஸம்பிரதாயமான ஒரு முத்து ஹாரத்தின் நடுவில் பதித்த மாணிக்கமாக இருந்தாலும், அனைத்து ஆசார்யர்களும் ஹாரத்தில் இருக்கும் முத்துக்களைப் போல, ஹாரத்தை ஒருங்கே தாங்கி அதன் நடுவில் உள்ள மாணிக்கத்தைக் கவனமாகக் காத்தனர். ஆகையால், நம்முடைய ஆசார்யர்களிடம் நாம் எப்பொழுதும் கடன் பட்டவர்களாவோம்; அவர்களுடைய வாழ்வை நினைத்து மிகுந்த பக்தியோடும் இருக்க வேண்டும்!

பராஸர : பாட்டி, கூரத்தாழ்வானுக்கு என்னவாயிற்று?

பாட்டி : கூரத்தாழ்வான், தம்முடைய கண்களை இழந்தவராய் ஸ்ரீரங்கத்திற்குத் திரும்பினார். அவர் ராமானுஜருடைய சிறந்த சிஷ்யர்களில் ஒருவர்; அவர் வாழ்ந்த காலத்தில் ராமானுஜருடனே எப்பொழுதும் இருந்தார். கூரத்தாழ்வானைப் பற்றியும் ராமானுஜரை பற்றியும் மேலும் உங்களுக்கு அடுத்த முறை நாம் சந்திக்கும் பொழுது சொல்வேன். இப்பொழுது, வேகமாக வீட்டிற்க்குச் செல்லுங்கள். உங்கள் பெற்றோர் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். அப்புறம் அத்துழாய், திருப்பாவைப் பாசுரங்களை நீ சொல்லி அடுத்த முறை நான் கேட்கிறேன்.

குழந்தைகள் பெரிய நம்பியைப் பற்றியும் கூரத்தாழ்வானைப் பற்றியும் எண்ணிக் கொண்டே வீடுகளுக்குத் திரும்பினர்.

அடியேன் கீதா ராமானுஜ தாசி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2016/07/beginners-guide-periya-nambi/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/

Leave a Comment