ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
பராசரன், வ்யாசன், வேதவல்லி, அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள்.
பாட்டி : வாருங்கள் குழந்தைகளே! இன்று நம் நம்முடைய ஆசார்யர்களுக்குள் அடுத்தவரான பராசர பட்டரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்; இவர் எம்பாருடைய சிஷ்யர், எம்பாரிடத்திலும் எம்பெருமானாரிடத்திலும் மிகுந்த பக்தி கொண்டிருந்தவர். நான் உங்களுக்கு முன்னம் சொன்னது போலே, எம்பெருமானார், பராசரர் மற்றும் வ்யாச மஹரிஷிகளிடம் தம் நன்றியினை வெளிப்படுத்தும் விதமாக, கூரத்தாழ்வானுடைய இரண்டு புதல்வர்களுக்கும் பராசர பட்டர் என்றும் வேத வ்யாச பட்டர் என்றும் பெயரிட்டார். இதன் மூலம் ஆளவந்தாரிடத்தில் அவர் செய்த மூன்று உறுதிகளில் ஒன்றினை நிறைவேற்றினார். கூரத்தாழ்வானுக்கும் அவருடைய மனைவி ஆண்டாளுக்கும் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளின் பிரசாதத்தின் அனுக்கிரஹத்தினால் பராசர பட்டரும் வேத வ்யாச பட்டரும் பிறந்தனர்.
கூரத்தாழ்வானின் இரு புறங்களிலும் அவர் புதல்வர்கள் பராசர பட்டர் மற்றும் வேத வ்யாச பட்டர்
பராசர : பாட்டி, எனக்கும் வ்யாசனுக்கும் இவர்களின் பெயர்கள் தான் இடப்பட்டுள்ளனவா?
பாட்டி : ஆமாம் பராசரா. குழந்தைகளுக்கே பொதுவாக ஆசார்யர்கள், பெருமாள், தாயார் பெயர்களே இடப்படும்; ஏனென்றால் அவர்களை அழைக்கும் வழியிலும் பெருமாள், தாயார், ஆசார்யர்களுடைய திவ்ய நாமங்களைச் சொல்லவும், அவர்களுடையக் கல்யாண குணங்களையும் எண்ணிப்பார்க்கவும் வாய்ப்பாக இருக்கும். இல்லையென்றால், இந்த அவசர யுகத்தில், தனியாக நேரம் ஒதுக்கி பெருமாளுடைய திவ்ய நாமங்களையும் அவருடைய மேன்மையைப் பற்றியும் நினைத்துப் பார்க்க இயலுமா? ஆனால், இப்பொழுது எல்லாம் மாறிவிட்டது. மக்கள் குழந்தைகளுக்கு நாகரீகமான பெயர்களை சூட்டுகிறார்கள்; அவைகளில் பொருளும் இல்லை; அவை பெருமாளையோ, தாயாரையோ, ஆசார்யர்களையோ நினைவூட்டும் வண்ணமும் இல்லை.
ஸ்ரீரங்கத்திற்கு வந்த பின், ஆழ்வான் தினமும் உணவுக்காக உஞ்சவ்ருத்தி (பிக்ஷை எடுத்தல்) செய்து வந்தார்; ஒரு நாள் பலத்த மழையினால், ஆழ்வானால் உஞ்சவ்ருத்திக்காக வெளியே செல்ல இயலவில்லை; ஆழ்வானும் அவர் மனைவி ஆண்டாளும் அன்று உண்ணாமலே இரவினைக் கழிக்க நேர்ந்தது. அன்று இரவு, , கோயிலில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்வதன் பொருட்டு செய்யப்படும் மணியின் ஓசையைக் கேட்டார் ஆண்டாள்; எம்பெருமானிடம் “இங்கோ ஆழ்வான், உம்முடைய உண்மையான பக்தர் பிரசாதம் ஏதுமின்றி இருக்கிறார், நீரோ, நல்ல போகம் அனுபவிக்கிறீர்” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார். இதனை உணர்ந்த பெரிய பெருமாள், தம் பிரசாதத்தை உத்தம நம்பியின் மூலம் உரிய கோயில் மரியாதைகளுடன் ஆழ்வானுக்கும் ஆண்டாளுக்கும் அனுப்பி வைத்தார். பிரசாதம் வந்ததைக்கண்ட ஆழ்வான் பிரமித்துப் போனார். உடனே ஆண்டாளிடம் “எம்பெருமானிடம் முறையிட்டாயோ?” என்று வினவ ஆண்டாள் தாம் ப்ரார்த்தித்ததை ஒப்புக்கொண்டார். ஆழ்வானுக்குத் தங்களுக்காக பிரசாதத்தை வேண்டியதில் வருத்தமே. தான் இரண்டு கையளவு மட்டுமே பிரசாதத்தை பெற்றுக்கொண்டு எஞ்சியவற்றை ஆண்டாளிடம் கொடுத்து விட்டார். அந்த இருகையளவு ப்ரசாதத்தினால் பின்னாளில் அவர்கள் இரண்டு அழகிய குழந்தைகளைப் பெற்றனர்.
வ்யாச: பாட்டி, பட்டருக்கு எம்பார் எவ்வாறு ஆசார்யராக ஆனார்?
பாட்டி: இரண்டு குழந்தைகளும் பிறந்தவுடன் அவர்களைக் காணும் பொருட்டு எம்பெருமானார் குழந்தைகளை அவரிடத்தில் அழைத்துவருமாறு எம்பாரிடம் கூறினார். எம்பார் இரண்டு குழந்தைகளைக் கண்டவுடனே அவ்விருவரும் ஸம்ப்ரதாயத்தின் பொருட்டு உதித்தவர்கள் என்று கண்டுகொண்டார். அப்பிள்ளைகளின் முகத்தில் இருந்த திவ்யதேஜஸ்ஸை பார்த்தவர், உடன் அக்குழந்தைகளுக்கு எத்தீங்கும் நேராதிருக்க ரக்ஷையாக த்வய மஹாமந்த்ரத்தை அனுசந்தித்தார். அவ்விரு குழந்தைகளையும் கண்ட எம்பெருமானார் த்வயத்தினால் அவர்களுக்கு ஸம்ப்ரதாயத்தில் தொடர்பு ஏற்பட்டு விட்டதை உணர்ந்தார். எம்பாரிடம் கேட்க, அவர் அக்குழந்தைகளின் ரக்ஷையாக தாம் த்வயத்தை அனுசந்தித்ததை கூறினார். அவ்விரு குழந்தைகளுக்கும் த்வயத்தை உபதேசித்ததனால், அவர்களுக்கு எம்பாரே ஆசார்யராக ஆனார். இரு குழந்தைகளும் எம்பாரிடமும் தம் தந்தை ஆழ்வானிடமும் கற்று வளர்ந்தனர். இரண்டு குழந்தைகளும் பெரிய பெருமாளின் கடாக்ஷத்தினால் பிறந்தவர்களாகையால், அக்குழந்தைகள் பெரியபெருமாளிடமும் பெரியபிராட்டியிடமும் (ஸ்ரீரங்கநாச்சியாரிடமும்) மிகுந்த அன்புகொண்டிருந்தனர். எம்பெருமானாரும் ஆழ்வானிடம் பராசரபட்டரைப் பெரியபெருமாளுக்குத் தத்துப்பிள்ளையாகக் கொடுக்குமாறு கூற ஆழ்வானும் அவ்வாறே செய்தார். பட்டர் மிகச் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது ஸ்ரீரங்கநாச்சியாரே அவருடைய சந்நிதியில் அப்பிள்ளையை வளர்த்தார் என்று கூறுவார்கள். பட்டர் பெரியபெருமாளிடமும் பிராட்டியிடம் அத்தகைய அன்புகொண்டிருந்தார். ஒரு சமயம் பட்டர் சில பாசுரங்களைப் பெருமாள் சந்நிதியில் சொல்லிவிட்டு வெளியே வந்தார். பட்டரைக் கண்ட ராமானுஜர், பட்டரை தம்மைப்போல நினைத்து நடக்குமாறு அனந்தாழ்வானையும் மற்ற சிஷ்யர்களையும் பணித்தார். ராமானுஜர் பட்டரிடம் தம்மையே கண்டார். பட்டரே பிற்காலத்தில் தர்சனப்ரவர்த்தகராக (ஸம்ப்ரதாயத்தின் தலைவர்) விளங்குவார் என்று ராமானுஜர் அறிந்திருந்தார். வெகுசிறு பிராயத்திலேயே பட்டர் மிகுந்த அறிவாற்றல் பெற்றிருந்தார். அவர் அறிவாற்றலையும் ஞானத்தையும் காட்டும் பல கதைகள் உண்டு.
அத்துழாய்: அவர் அறிவாற்றலைப் பற்றிய சில கதைகளைச் சொல்லுங்கள் பாட்டி.
பாட்டி: ஒரு சமயம், பட்டர் வீதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஸர்வஜ்ஞ பட்டன் என்னும் ஓர் வித்வான் அவ்வழியில் ஒரு பல்லக்கில் வந்தார். ராமானுஜர் போன்ற மஹாபண்டிதர்கள் இருந்து வந்த ஸ்ரீரங்கத்தில் ஒருவர் பல்லக்கில் வந்ததைக் கண்டு துணுக்குற்ற பட்டர், அவரிடம் சென்று தம்முடன் வாதத்திற்கு அழைத்தார். பட்டரைச் சிறுபிள்ளை என்றெண்ணிய ஸர்வஜ்ஞ பட்டன், பட்டரிடம் தம்மை எந்த ஒரு கேள்வி கேட்டாலும் தாம் விடையளிப்பதாகச் சொன்னார். பட்டர் உடனே ஒரு கை நிறைய மணலை எடுத்துக் கொண்டு அதில் எவ்வளவு மணல் இருக்கிறது என்று கேட்டார். ஸர்வஜ்ஞ பட்டன் வாயடைத்துப் போய், தமக்குத் தெரியாது என்று சொன்னார். பட்டர் உடனே “ஒரு கையளவு” என்று விடை சொல்லியிருக்கலாமே என்று கேட்டார். பட்டருடைய அறிவாற்றலால் வியப்புற்ற ஸர்வஜ்ஞ பட்டன் அக்கணமே பல்லக்கிலிருந்து கீழிறங்கி பட்டரை அவருடைய தோளில் தாமே சுமந்து கொண்டு அவருடைய பெற்றோரிடம் அழைத்துச் சென்றார்.
வேதவல்லி: என்ன ஒரு புத்திசாலித்தனமான விடை அது!
பாட்டி: பட்டர் சிறு வயதிலேயே சிறந்த அறிவுக்கூர்மையும், எளிதில் எந்த ஒரு விஷயத்தையும் க்ரஹிக்கும் திறனையும் பெற்றவாராக இருந்தார். ஒரு சமயம் அவரது குருகுல வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, பட்டர் வீதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அச்சமயம் அந்த வழியே வந்த ஆழ்வான், வகுப்பில் கற்காமல் விளையாடிக் கொண்டிருந்ததது ஏன் என்று கேட்க, பட்டர் “ஒவ்வொரு நாளும் அதே சந்தையை திரும்ப திரும்ப சொல்லிக் கொடுக்கிறார்கள்” என்று கூறினார் – ஒரு சந்தையை 15 நாட்கள் திரும்பச் சொல்வார்கள். ஆனால் பட்டரோ முதல் நாள் சொல்லிக்கொடுக்கும் பொழுதே அதை மனதில் வாங்கிக் கொள்வார். ஆழ்வான் சோதிப்பதற்காக ஒரு பாசுரத்தைச் சொல்லச் சொல்லவும், பட்டர் அதை எளிதாகச் சொல்லி விட்டார்.
வ்யாச: தந்தையைப் போல பிள்ளை !
பாட்டி (சிரித்தவாறு): அதேதான்! பட்டர் தம் தந்தையைப் போலவே சிறந்த ஞானமும் நினைவாற்றலும் பெற்றிருந்தார். ஆழ்வான் போலவே பட்டரும் அடக்கம், பெருந்தன்மை ஆகிய குணங்களையும் கொண்டிருந்தார். ஒரு தடவை ஸ்ரீரங்கம் கோயிலில் நாய் ஒன்று நுழைந்துவிட்டது. பொதுவாக இது போன்ற சமயங்களில், அர்ச்சககர்கள் கோயிலைச் சுத்தி செய்யும் பொருட்டு கோயிலுக்கு ஸம்ப்ரோக்ஷணம் செய்வர். எனவே அர்ச்சகர்கள் ஒரு லகு (சிறிய) ஸம்ப்ரோக்ஷணம் செய்ய முடிவெடுத்தனர். இதனைக் கேள்வியுற்ற பட்டர், தாம் ஒவ்வொரு நாளும் கோயிலுக்குள் சென்றிருந்த போதிலும், ஸம்ப்ரோக்ஷணமேதும் செய்யாதிருக்கையில் ஒரு நாய் சென்றால் ஸம்ப்ரோக்ஷணம் செய்வது ஏன் என்று பெரிய பெருமாளிடம் கேட்டார். அவர் அத்தனை பெரிய ஞானியாயிருந்தும் தம்மை ஒரு நாயைக்காட்டிலும் கீழாக எண்ணுமளவுக்கு தன்னடக்கம் கொண்டிருந்தார். அவர் தாம் தேவலோகத்தில் தேவனாக பிறப்பதைக் காட்டிலும் ஸ்ரீரங்கத்தில் ஒரு நாயாக பிறப்பதையே விரும்புவதாகச் சொன்னவர்!
வேதவல்லி: பாட்டி, ரங்கநாச்சியாரே பட்டரை வளர்த்தார் என்றால், தேவப்பெருமாள் திருக்கச்சி நம்பியிடம் பேசியதைப் போல பெருமாளும் பிராட்டியும் பட்டரிடம் பேசியதுண்டா?
பாட்டி: ஆமாம் வேதவல்லி, நீ சொன்னது சரியே! பட்டரும் ஸ்ரீரங்கம் பெருமாளிடமும் பிராட்டியிடமும் பேசினவரே. உங்கள் எல்லாருக்கும், பகல்பத்து உத்சவத்தில் வைகுந்த ஏகாதசியின் முதல் நாளான பத்தாம் திருநாளன்று, நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் காட்சி கொடுப்பார் என்று தெரியும் தானே. அன்று அவர் ரங்கநாச்சியாரின் எல்லா ஆபரணங்களையும் சாத்திக்கொண்டு தாயாரைப் போலவே அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி கொடுப்பார். அதுபோன்ற ஒரு திருநாளில் நம்பெருமாள் பட்டரை அழைத்துத் தாம் தாயார் போலவே இருக்கிறாரா என்று கேட்டார். தாயாரின் மீதே அதிக பாசம் கொண்ட பட்டரோ, மிகுந்த அன்புடனும் பரிவுடனும் நம்பெருமாளைப் பார்த்து அனைத்து அலங்காரங்களும் மிகப் பொருத்தமாக இருந்தாலும் தாயாரின் திருக்கண்களில் காணும் கருணை எம்பெருமானின் கண்களில் காணப் பெறவில்லை என்று சொன்னார். பட்டர் தம் தாயாரான ரங்கநாச்சியாரிடத்தில் கொண்டிருந்த அன்பு அத்தகையது ஆகும்.
என்னதான் பட்டருடைய உபன்யாசங்களைக் கேட்டு அவர்பால் ஈர்க்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சிஷ்யர்கள் இருந்தாலும் பட்டரைப் பிடிக்காத சிலர் இருக்கத்தான் செய்தனர். இது மேன்மக்களுக்கு நேர்வது இயல்பே. இது ராமானுஜருக்கும் கூட நேர்ந்த ஒன்றுதான். ஒரு தடவை பட்டரை விரும்பாத ஒரு சிலர், பொறாமையினாலும் வெறுப்பு மிகுதியாலும் அவரை வையத் தொடங்கினர். வ்யாசா, உன்னை யாரேனும் திட்டினால் நீ என்ன செய்வாய்?
வியாச: நான் அவரிடம் திரும்பி சத்தம் போடுவேன். நான் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்?
பாட்டி: இதையே தான் வளர்ந்த பெரியவர்கள் கூட செய்வார்கள். ஆனால் பட்டர் என்ன செய்தார் தெரியுமா? தம்மை வைதவர்களுக்கு தம்முடைய விலை உயர்ந்த சால்வையையும் ஆபரணங்களையும் பரிசளித்தார்.
பட்டர் “ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும் – எம்பெருமானின் கல்யாணகுணங்களைப் போற்ற வேண்டும், தம்முடைய குறைகளைக் குறித்து வருந்தவும் வேண்டும். அடியேன் எம்பெருமானின் கல்யாண குணங்களைப் போற்றுதலில் ஈடுபட்டிருந்ததில் அடியேனின் குறைகளைக் குறித்து வருந்த மறந்து போய் விட்டேன், அதனை நினைவூட்டி அடியேனுக்கு உபகாரம் செய்தமைக்காக உமக்குப் பரிசளிக்க வேண்டும்” என்றும் கூறி, அவருக்குத் தம் நன்றியைத் தெரிவித்தார். அத்தகைய பெருந்தன்மை பொருந்தியவர் அவர்.
பராசர: பாட்டி, ராமானுஜர், பட்டரிடம் நஞ்சீயரை நம் ஸம்ப்ரதாயத்திற்குள் கொணருமாறு பணித்தார் என்று சொன்னீர்களே, அதை பட்டர் எவ்வாறு செய்தார் ?
பராசர பட்டர் (தம் திருவடியில் நஞ்சீயருடன்) – ஸ்ரீரங்கம்
பாட்டி: நீ இதனை நினைவில் வைத்திருக்கிறாயே, சுட்டிதான்! ஆமாம், ராமானுஜரின் ஆஜ்ஞைப்படி, பட்டர் நஞ்சீயரை ஸம்பிரதாயத்திற்குள் கொணருவதற்காகத் திருநாராயணபுரம் சென்றார். இந்த இடத்தைப் பற்றி நீங்கள் முன்னால் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். எப்பொழுது என்று யாருக்காவது நினைவுண்டா?
வேதவல்லி: எனக்குத் தெரியும். ராமானுஜர் சீர்திருத்திய பல கோயில்களில் ஒன்று திருநாராயணபுரம். ராமானுஜர் மேல்கோட்டையில் கோயில் நிர்வாகத்தைச் சீர்திருத்தி வைத்தார்.
பாட்டி: பலே வேதவல்லி! ராமானுஜர் துலுக்க அரசனிடமிருந்து செல்வப்பிள்ளை உத்சவ மூர்த்தியை மீட்டுத் திருநாராயணபுரத்திற்குத் திரும்பக் கொண்டு வந்து கோயில் நிர்வாகத்தைச் செவ்வனே நடைபெறும் வண்ணம் செய்தார். பட்டர் அங்கே மாதவாசார்யரின் (நஞ்சீயரின் இயற்பெயர்) ததீயாராதனக் கூடத்திற்குச் (பாகவதர்களுக்கு அமுது செய்விக்கும் இடம்) சென்றார். அங்கே சென்று சாப்பிடாமல் காத்திருக்க, அதனைக் கண்ட மாதவாசார்யர் அவரிடம் சாப்பிடாததற்குக் காரணத்தையும் அவருக்கு வேண்டியது என்னவென்றும் கேட்க, பட்டர் அவருடன் தம் வாதம் செய்ய வேண்டும் என்றும் சொன்னார். பட்டரைப் பற்றி கேள்வியுற்றிருந்த மாதவாசார்யர் (பட்டரன்றி வேறொருவரும் அவரிடம் வாதிடத் துணிய மாட்டார்களாதலால்) வாதத்திற்கு ஒப்புக் கொண்டார். பட்டர் முதலில் திருநெடுந்தாண்டகத்திலிருந்தும் தொடர்ந்து சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட அதற்கேற்ற கருத்துக்களை உரைத்து எம்பெருமானின் மேன்மையையும் பரத்துவத்தையும் நிரூபிக்க, மாதவாசார்யர் தோல்வியை ஒப்புக் கொண்டு பட்டரின் திருவடித்தாமரைகளில் பணிந்து அவரைத் தம் ஆசார்யனாகக் கொண்டார். பட்டர், அவருக்கு நம் ஸம்ப்ரதாயத்தின் கருத்துக்களையும் கற்பித்து, அவரை முக்கியமாக அருளிச்செயல் முதலானவற்றை கற்குமாறும் பணித்தார். பின்பு பட்டர் அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கத்தைச் சென்றடைந்தார். பட்டர் ஸ்ரீரங்கத்தை அடையும் பொழுது அங்கு அவருக்கு மிகச்சிறப்பான வரவேற்பு காத்திருந்தது. அவருக்காக ஆவலாகக் காத்திருந்த பெரியபெருமாள் நடந்தவற்றை அவரிடமே மிகுந்த ஆர்வத்துடன் கேட்டறிந்தார். பட்டர் வாதத்தில் வெற்றி பெற்றதில் உகப்புடனிருந்த பெரியபெருமாள், அவரை தம்மிடம் இன்னொரு முறை திருநெடுந்தாண்டகம் பாடுமாறு கேட்டார்.
பட்டர் நம்பெருமாள் மற்றும் ரங்கநாச்சியாரின் திருமேனியில் மிகவும் ஈடுபட்டிருந்தார். ஒரு தடவை பட்டர் சில பாசுரங்களையும் அவற்றின் பொருளையும் பெரியபெருமாளின் முன்னால் பாட, உகந்த பெருமாளும் அவருக்கு தாம் மோக்ஷம் அப்போதே அளிப்பதாகக் கூற, மகிழ்வுடன் பட்டர், ஒருக்கால் பரமபதத்தில் பெருமாள் நம்பெருமாள் போல் இல்லாது போனால், தாம் பரமபதத்தில் ஒரு துளையிட்டு உடனே ஸ்ரீரங்கத்திற்கு திரும்பி வந்துவிடுவேன் என்று சொன்னார். மற்றோரு தடவை அனந்தாழ்வான் பரமபதநாதனுக்கு 2 திருக்கைகளா அல்லது 4 திருக்கைகளா என்று வினவ, பட்டர் அவருக்கு இரண்டு திருக்கைகள் இருந்தால் அவர் பெரியபெருமாள் போல் இருப்பார், நான்கு திருக்கைகள் இருந்தால் அவர் நம்பெருமாள் போல் இருப்பார் என்றும் சொன்னார். பட்டர் நம்பெருமாளையன்றி வேறொருவர் பேரிலும் ஈடுபட்டவரல்ல. பெருமாளின் எல்லாத் திருமேனியையும் அவர் நம்பெருமாளாகவே கண்டார். நம்பெருமாள் அவருக்கு மோக்ஷமளிக்க, தம் திருத்தாயாரான ஆண்டாளின் ஆசியுடன் இவ்வுலகைத்துறந்து பரமபதத்தில் எம்பெருமானுக்கு நித்யகைங்கர்யங்களைச் செய்யும் பொருட்டு மற்ற ஆசார்யர்களைச் சென்றடைந்தார். நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை ப்ரகாசிக்கச் செய்யும் பணியை தமக்கு அடுத்த ஆசார்யரான நஞ்சீயரிடம் அளித்தார்.
அத்துழாய்: பாட்டி, பட்டரின் வாழ்க்கையை கேட்கவே சுவாரஸ்யம்தான். நம்பெருமாளிடம் அவருக்கு இருந்த பக்தியும், அவர்களுடைய பிணைப்பும் மனத்தை உருக்குபவை. அத்தகைய ஆதர்ச பர்த்தாவையும் புத்ரர்களையும் பெற்ற ஆண்டாள் அம்மையார் மிகுந்த பேறு பெற்றவர்.
பாட்டி: மிகச்சரியாக சொன்னாய், அத்துழாய்! உண்மையிலேயே ஆண்டாள் மிகுந்த பேறு பெற்றவர்தாம். நாளை நான், உங்களுக்கு அடுத்த ஆசார்யரான நஞ்சீயரைப் பற்றிச் சொல்வேன். இப்பொழுது இந்தப் பழங்களைப் பெற்று உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள்.
குழந்தைகள் பட்டரையும் அவர் திவ்யமான சரித்திரத்தைப் பற்றிய எண்ணங்களுடன் தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள்.
அடியேன் கீதா ராமானுஜ தாசி
ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2016/08/beginners-guide-bhattar/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/