ஸ்ரீராமாயணம் பாலபாடம் – கொடுத்த வாக்கை நிறைவேற்றிய தசரதன்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீராமாயணம் பாலபாடம்

<< விசுவாமித்ர முனிவரின் வருகை

பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.

பாட்டி தன் அகத்து எம்பெருமானுக்கு சமர்ப்பிப்பதற்காக மாலைக் கட்டிக்கொண்டிருந்தாள். வாருங்கள் குழந்தைகளே கை கால்களை அலம்பிக்கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் (பால்) கொண்டு வருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள்.

பாட்டி : நாம் ஸ்ரீராமாயணத்தில் எந்த கட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைவிருக்கிறதா?

அத்துழாய்: நன்கு நினைவிருக்கிறது பாட்டி. தசரத மன்னன் தன் அரசவையில் ஆலோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் விசுவாமித்ர முனிவர் அங்கு வந்து மன்னனிடம் எதையோ வேண்டிப் பெறுவதற்காக வந்தார் என்று சொன்னீர்கள்.

பாட்டி : சரியாகச் சொன்னாய் அத்துழாய்.

வ்யாசன்: எதைப் பெறுவதற்காக வந்தார்? தசரத மன்னன் முனிவர் வேண்டியதைக் கொடுத்தாரா? சொல்லுங்கள் பாட்டி. கேட்க ஆவலாக இருக்கிறது.

பாட்டி : சொல்கிறேன் கேளுங்கள். விசுவாமித்திர முனிவர் அகமகிழ்ந்து தசரத மன்னனை நோக்கி, ஓ தரணியாளனே! உயர்ந்த சூரிய குலத்தில் பிறந்து இக்ஷ்வாகு குலத்திற்கு பெருமை சேர்த்து, வசிஷ்டரின் இன்னருளைப் பெரும் பாக்யம் உன்னைப் போன்றவனுக்கே தகும். நான் உன்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்லப்போகிறேன். அதை நீ செய்ய ஒப்புக்கொள்ளவேண்டும். நீ சொன்ன சொல் தவறக்கூடாது. இவ்வுலக நன்மையின் பொருட்டு நான் யாகம் செய்யத்தொடங்கி தீக்ஷையிலிருக்கிறேன். அதற்கு ராக்ஷஸர்கள் மிகவும் இடையூறு விளைவிக்கின்றனர். எனது விரதத்தைக் கெடுப்பதற்காக மாரீசன், ஸுபாஹு என்ற ராக்ஷஸர்கள் இருவரும் யாகவேதிக்கு நாற்புறத்திலும் மாம்ஸங்களையும், ரத்த வெள்ளத்தையும் பொழிகின்றனர். அதனால் மிகவும் வருத்தமடைந்து அவ்விடத்தை விட்டு வந்துவிட்டேன். என் சாபத்தால் அவர்களை அழித்திருக்க முடியும். ஆனால் யாகம் செய்யும் தருணத்தில் கோபம் கொள்ளக்கூடாது என்பதை நீயும் அறிவாய். அதனால் என் யாகத்தை காப்பதற்கு உன் மூத்த மகன் ராமனை என்னுடன் நீ இப்பொழுது அவசியம் அனுப்பவேண்டும் என்றார்.

வேதவல்லி: ராமனை எவ்வாறு தசரதன் கொடுப்பார்? இதைக்கேட்டு அவர் மனம் கலங்கியிருக்குமே, என்ன நடந்தது பாட்டி?

பாட்டி: இதைக்கேட்ட மன்னன் கலங்கி மிகவும் வருந்தினான். ஆனால் விசுவாமித்திர முனிவர் தசரத மன்னனிடம், ராமன் சிறு பிள்ளையாக இருக்கிறான், அவன் எவ்வாறு ராக்ஷஸர்களை அழிக்கமுடியும் என்று எண்ணாதே. அவன் மிகவும் பராக்கிரமம் கொண்டவன். அவனையொழிய மற்றெவராலும் அந்த ராக்ஷஸர்களை வெல்லமுடியாது. மேலும் நான் ராமனுக்கு பலவகை நன்மைகளையும் செய்வேன். ராமனுடைய பராக்கிரமத்தைப் பற்றி நான் அறிவேன். நான் மட்டுமில்லை வசிஷ்ட முனிவரும் நன்கு அறிவார். தவத்தில் நிலைநின்ற மற்றுமுள்ள இம்முனிவர்கள் எல்லோரும் அறிவார்கள். இப்பூவுலகில் தர்மம் தழைத்தோங்கி நிற்கவேண்டுமென்று நீ விரும்பினால், ராமனை என்னுடன் அனுப்பிவைக்க வேண்டும். அவனுடைய உதவி எனக்கு பத்து நாட்கள் வரையிலுமே வேண்டும். அதனால் உனக்கு மிகுந்த நன்மையும், புகழும் உண்டாகும். சிறிதும் யோசிக்காமல் இப்பொழுது ராமனை என்னுடன் அனுப்பிவைக்கவேண்டும் என்றார். மன்னன் இதைக்கேட்டு தான் அமர்ந்த சிம்ஹாசனத்திலிருந்து நடுங்கி விழுந்து மூர்ச்சித்தான்.

பராசரன்: பிறகு என்ன நடந்தது பாட்டி? மன்னனுக்கு என்ன நேர்ந்தது? ராமனை விசுவாமித்திர முனிவர் அழைத்துச் சென்றாரா ?

பாட்டி : சில நேரம் கழிந்தபின் தெளிந்த மன்னன், விச்வாமித்ர முனிவரே! சிவந்த தாமரைப் போன்ற அழகிய திருக்கண்களையுடைய ராமன் மிகவும் மென்மையானவன். மேலும் யுத்தம் செய்வதற்குத் தகுந்த வயதும் நிரம்பவில்லை. என்னைவிட்டு அகலாத இச்சிறுபிள்ளை எவ்வாறு யுத்தம் செய்ய இயலும்? இவ்வயதில் விளையாடிக் கொண்டிருக்கவேண்டிய இவன், யுத்தம்செய்யத் தகுந்தவனல்லன். ஆனால் நான் சொன்ன சொல் தவறமாட்டேன். என் கட்டளைக்கடங்கிய படைகளுடன் நானே உங்களுடன் வந்து அக்கொடிய ராக்ஷஸர்களுடன் யுத்தம் செய்கிறேன். மேலும் கோடிக்கணக்கான ராக்ஷஸர்கள் வந்தாலும் அவர்களொருவரையும் விடாது அழிக்கிறேன். என் ராமனை அழைத்துச் செல்லவேண்டாம். அவனை விட்டு ஒரு நொடிப்பொழுதும் என்னால் உயிர்தரிக்க முடியாது. முனிவரே! என் பிள்ளையை அழைத்துக்கொண்டு செல்ல வேண்டுமென்று தங்கள் திருவுள்ளம் இருந்தால், நால்வகைச் சேனையுடன்கூடிய என்னையும் அழைத்துச் செல்லவேண்டுமென வேண்டுகிறேன் என்றார்.

வியாசன்: முனிவர், மன்னனின் வேண்டுதலுக்கு ஒப்புக்கொண்டாரா? என்ன நடந்தது பாட்டி. கேட்பதற்கு மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.

பாட்டி: விச்வாமித்ர முனிவர் மன்னனின் வேண்டுதலுக்கு சம்மதிக்கவில்லை. மன்னனை நோக்கி “அரசனே! நான் விரும்பியதை நிறைவேற்றுவேன் என்று உறுதிமொழி கொடுத்து, அதை நிறைவேற்ற மறுக்கிறாய். உயர்ந்த குலத்தில் பிறந்து, இவ்வாறு சொன்ன சொல் தவறுவது அழகல்ல. இப்படியே நீ உன்னை நாடி வருபவர்களுக்குப் பொய் சத்தியம் செய்து நன்றாக வாழ்ந்திரு” என்று கோபத்துடன் கூறினார். விச்வாமித்ர முனிவர் கோபம் கொள்ளும்பொழுது, பூமி நடுங்கியது. முனிவரின் கோபத்தால் என்ன நேருமோ என்று தேவர்களும் அஞ்சினர். இதைக்கண்ட வசிஷ்ட முனிவர் தசரதனை நோக்கி “மன்னனே! உயர்ந்த இக்ஷ்வாகு குலத்தில் உதித்த நீ , சொன்ன சொல் தவறக்கூடாது. உம்முடைய குலப் பெருமையே கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதும் , தர்மத்தை நிலை நாட்டுவதுமே. விச்வாமித்ர முனிவர் தர்மமே வடிவு கொண்டவர். இம்மூவுலகிலுள்ள பலவகைப்பட்ட வில்வித்தைகளை இவர் நன்கு அறிந்தவர். இவர் அறிந்த அஸ்திரங்களை இதுவரையிலும் எவரும் தெரிந்துகொள்ளவில்லை. இனியும் தெரிந்துகொள்ளப்போவதில்லை. உன் பிள்ளை சிறியவனாக இருக்கிறான் என்று விச்வாமித்ர முனிவருடன் அனுப்ப மறுக்காதே. கவலை வேண்டாம் முனிவர் பார்த்துக்கொள்வார். அவ்வரக்கர்கள் அனைவரையும் விச்வாமித்ர முனிவர் ஒருவரே அழிக்க வல்லவர். ஆயினும் உனது மகனுக்கு நன்மை செய்யும்பொருட்டு உன்னிடம் வந்து இப்படி கேட்கின்றார்”. இவ்வாறு வசிஷ்ட முனிவர் சொன்ன சொற்களைக் கேட்டுத் தசரத மன்னன் மனக்கலக்கம் தீர்ந்து, தெளிந்து ராமனை விச்வாமித்ர முனிவருடன் அனுப்ப மனங்கொண்டான்.

அத்துழாய்: மேலும் சொல்லுங்கள் பாட்டி. நீங்கள் மிகவும் அழகாக இவ்விஷயங்களைச் சொன்னீர்கள். கேட்க ஆவலாக இருக்கிறது.

பாட்டி: அடுத்தடுத்த விஷயங்களை நாளை உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்பொழுது இருட்டிவிட்டதால் உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருப்பார்கள்.

குழந்தைகள் பாட்டி சொன்ன கதையை எண்ணியவாறு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டனர்.

அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment