ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஆழ்வார்கள் – ஓர் அறிமுகம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< ஸ்ரீமன் நாராயணனின் தெய்வீகமான காருண்யம்

ஆண்டாள் பாட்டி : வ்யாசா, பராசரா! நான் காட்டழகியசிங்கர் (நரசிம்மப் பெருமாளுக்கான தனிக்கோவில்) சன்னிதிக்கு சென்றுகொண்டு இருக்கிறேன். என்னுடன் வருகிறீர்களா?

வ்யாச: நிச்சயமாய் பாட்டி. நாங்கள் உங்களுடன் வருகிறோம். கடந்த முறை நீங்கள் எங்களுக்கு ஆழ்வார்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தீர்கள். அவர்களைப்பற்றி இன்னும் எங்களுக்கு சொல்லுகிறீர்களா?

ஆண்டாள் பாட்டி: நீங்கள் கேட்டது நல்லதாக போயிற்று. உங்கள் இருவருக்குமே ஆழ்வார்களைப் பற்றி இப்பொழுது சொல்கிறேன்.

மூவருமே காட்டழகியசிங்கப் பெருமாள் சன்னிதியை நோக்கி நடக்கத் தொடங்குகிறார்கள்.

ஆண்டாள் பாட்டி: ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவராவர். அவர்களுடைய பாசுரங்களை (பாடல்களை) ‘நாலாயிர (4000) திவ்ய ப்ரபந்தம்’ என்று வழங்குகிறோம். நான் நேற்று சொல்லிக் கொண்டிருந்த அமலனாதிபிரான் கூட, திவ்ய ப்ரபந்தமே.

பராசர: ஓ! அந்த 12 ஆழ்வார்கள் யார், பாட்டி?

Azhwars

ஆண்டாள் பாட்டி: 12 ஆழ்வார்கள் – பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், மதுரகவியாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் ஆவர்.

வ்யாச: நல்லது பாட்டி. அவர்கள் தாம் பெருமாளுடைய பெருங்கருணைக்கு பாத்திரமானவர்களா?

ஆண்டாள் பாட்டி: ஆமாம், வ்யாசா. அவர்கள் பகவானின் பூரணமான கடாக்ஷம் பெற்றவர்கள். அத்தகைய அருளைப் பெற்றபின், உலகிலுள்ள பிறரின் மேலுள்ள கருணையினால், பெருமாளின் அருளை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே பாசுரங்களாகப் பாடினார்கள். இந்த பாசுரங்களின் வாயிலாக நாம் பகவானைப் பற்றி புரிந்து கொண்டு அவருடைய மேன்மையை அனுபவிக்கலாம்.

வ்யாச: அப்படியென்றால் அவர்கள் தாம் பெருமாளின் தனிப்பெருங்கருணைக்கு பாத்திரமானவர்களா?

ஆண்டாள் பாட்டி: ஆம் வ்யாசா! அவர்கள் பகவானின் பரிபூரணமான அருளைப் பெற்றவர்கள். அவ்வாறான அருளைப் பெற்றபின், இந்த உலகிலுள்ள பிற மக்களின் மேல் கொண்ட அக்கறையினால், பல்லாயிரம் ஆன்டுகளுக்கு முன்பே பெருமாளின் கருணையை தங்களின் பாசுரங்களின் வாயிலாக பகிர்ந்து கொண்டனர். இந்த பாசுரங்களைக் கொண்டுதான் நம் பகவானைக் குறித்தும் அவர் சிறப்புகளைக் குறித்தும் அறிந்து கொள்கிறோம்.

பராசர: அப்படியா பாட்டி, நாம் பகவானை வேதங்களின் மூலம் அறிந்து கொள்கிறோம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

ஆண்டாள் பாட்டி: ஆமாம், நிச்சயமாய்! ஆனால் வேதம் மிகப் பெரியது. பல நுட்பமான விஷயங்கள் வேதத்தில் ஸமஸ்க்ருதத்தில் விளக்கப்பட்டு உள்ளது; அவைகளை ஆழ்ந்து அறிந்தாலன்றி விளங்கிக் கொள்வது கடினம். ஆனால் வேதத்தின் உட்கருத்துக்களை, ஆழ்வார்கள் எளிய தமிழ் மொழியில் 4000 பாசுரங்களால் பாடியுள்ளனர். உங்களுக்குத்தான் தெரியுமே! வேதத்தின் உட்கருத்து பெருமாளின் மேன்மையைக் குறித்தே. மேலும் ஆழ்வார்களின் அத்தகைய ஞானம் பெருமாளின் நேர் அருளைப் பெற்றதனாலேயேயன்றி அவர்களின் சுய முயற்சியால் அல்ல – ஆகையால் இது இன்னும் சிறப்பானது.

வ்யாச: ஆமாம், நாங்கள் இப்பொழுது புரிந்து கொண்டோம். நீங்கள் இந்த விஷயங்களை எங்களுக்கு விளக்குகிறது போலவே பெருமாளைப் பற்றி எளிய முறையிலும் ஆழமாகவும் ஆழ்வார்கள் கருணையொடு விளக்கியுள்ளனர்.

ஆண்டாள் பாட்டி: இது ஒரு மிக நல்ல உதாரணம் வ்யாசா ! இப்பொழுது நீங்கள் நினைவுபடுத்திப் பாருங்கள், பெருமாள் ஐந்து நிலைகளில் – பரமபதநாதனாக, வ்யூஹமாக, அவதாரங்களாக, அந்தர்யாமியாக, அர்ச்சாரூபத்திலும் இருக்கிறார் என்று முன்பு நாம் அறிந்து கொண்டோமே. வெவ்வேறு ஆழ்வார்களும் பெருமாளின் வெவ்வேறு நிலைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தனர்.

பராசர: ஓ! எங்களுக்கு ஸ்ரீ ரங்கநாதனின் மேல் உள்ள ஈடுபாடு போலவே ஒவ்வொரு ஆழ்வாருக்கும் தனித்தனியாக பிரியமான பெருமாள் மேல் ஈடுபாடு கொண்டிருந்தனரா?

ஆண்டாள் பாட்டி: ஆமாம். முதலாழ்வார்கள் (முதல் 3 ஆழ்வார்கள் – பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்) பரமபதநாதனான பெருமாளின் மேன்மையில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தனர். திருமழிசையாழ்வார் அந்தர்யாமியின் (அனைவரின் இதயத்திலும் உறைந்திருக்கும் பெருமாள்) மேல் மிக ஈடுபாடு கொண்டிருந்தார். நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் கிருஷ்ணனிடம் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தனர். குலசேகர ஆழ்வார் ஸ்ரீராமனிடம் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். தொண்டரடிப்பொடியாழ்வாரும் திருப்பாணாழ்வாரும் ஸ்ரீ ரங்கநாதனிடம் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தனர். திருமங்கையாழ்வாரோ அனைத்து அர்ச்சாவதாரப் பெருமாளிடமும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

வ்யாசனும் பராசரனும்: பாட்டி, நீங்கள் மதுரகவியாழ்வாரை விட்டு விட்டீர்களே.

ஆண்டாள் பாட்டி: கூர்ந்து கவனிக்கிறீர்களே, நல்லது. மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரிடம் கொண்ட பக்தியில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார்.

ஆண்டாள் பாட்டி பெருமாளுக்காக ஒரு பூக்கடையில் பூக்கள் வாங்க நிற்கிறார்.

பராசர: பாட்டி, எங்களுக்கு ஒவ்வொரு ஆழ்வாரைப் பற்றியும் சொல்லுங்களேன்.

ஆண்டாள் பாட்டி: நிச்சயமாய். ஆனால் இப்பொழுது கோயிலை அடைந்து விட்டோம். அதனால் இப்பொழுது உள்ளே சென்று அவரது தரிசனம் பெற்று அவர் மேன்மையைக் காணலாம். அடுத்த முறை நான் உங்களுக்கு ஒவ்வொரு ஆழ்வாரைப் பற்றியும் விளக்கமாகக் கூறுகிறேன். .

வ்யாசனும் பராசரனும்: சரி பாட்டி. இப்பொழுது உள்ளெ செல்லலாம் – இதற்கு மேலும் நரசிம்மனைக் காணாமல் இருக்க எங்களால் முடியாது.

அடியேன் கீதா ராமானுஜ தாஸி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2014/10/beginners-guide-introduction-to-azhwars/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment