ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திருமழிசை ஆழ்வார்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< முதலாழ்வார்கள் – பகுதி 2

thirumazhisaiazhwar

ஆண்டாள் பாட்டி பராசரனையும் வ்யாசனையும் திருவெள்ளறை கோயிலுக்கு அழைத்துச் செல்கிறார். ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்திற்கு வெளியே ஒரு பேருந்தில் ஏறி அமர்கிறார்கள்.

பராசர: பாட்டி, நாம் பேருந்தில் செல்லும் நேரத்தில், நீங்கள் எங்களுக்கு நான்காம் ஆழ்வாரைப் பற்றிச் சொல்வீர்களா?

ஆண்டாள் பாட்டி: நிச்சயமாய் பராசரா! நீங்கள் பிரயாணம் செல்லும் நேரத்திலும் ஆழ்வார்களைப் பற்றிப் பேசுவது  எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

பராசரனும் வ்யாசனும் பாட்டியை நோக்கி புன்னகைக்கிறார்கள். பேருந்து ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்புகிறது.

ஆண்டாள் பாட்டி: நான்காம் ஆழ்வார், பக்திசாரர் என்று அனைவராலும் அழைக்கப்பெறும் திருமழிசையாழ்வார் ஆவார். சென்னை அருகில் உள்ள திருமழிசையில் தை மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். பெற்றோர் பார்கவமுனி, கனகாங்கி ஆவர். இந்த ஆழ்வாரே உலகில் நீண்ட காலம் வாழ்ந்தவராவார். அவர் கிட்டத்தட்ட 4700 ஆண்டுகள் வாழ்ந்தார்.

பராசரனும் வ்யாசனும் ஆச்சரியத்துடன் “4700 ஆண்டுகளா!!!” என்று வாயைப் பிளக்கின்றனர்.

ஆண்டாள் பாட்டி: ஆமாம்!, அவர் பேயாழ்வாரைச் சந்திப்பதற்கு முன் கிட்டத்தட்ட எல்லா தத்துவங்களையும் பின்பற்றி அறிந்தவராவார்.

வ்யாச: ஓ! அவர்களின் சந்திப்பிற்குப் பின்  என்ன நடந்தது?

ஆண்டாள் பாட்டி: பேயாழ்வார் அவருக்குப் பெருமாளைப் பற்றி விளக்கமாக உபதேசம் செய்து, திருமழிசையாழ்வாரை ஸ்ரீவைஷ்ணவத்தில் ஈடுபடுத்தினார்.

பேருந்து சத்திரம் பேருந்து நிலையத்தை அடைகிறது.

ஆண்டாள் பாட்டி: அவருக்கு நம்முள் உறைந்திருக்கும் பெருமாளான அந்தர்யாமியைப் பற்றி அறியத் தனி ஆவல் இருந்தது. கும்பகோணம் ஆராவமுதப் பெருமாளே உகந்து தன் திருநாமத்தை ஆராவமுதாழ்வார் என்றும் ஆழ்வார் பெயரைத் திருமழிசைப்பிரான் என்றும் ஆழ்வாருடன் தன் பெயரை பரிமாற்றம் செய்து கொள்ளும் அளவுக்குத் திருமழிசையாழ்வார் ஆராவமுதனின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

பராசர: ஆஹா! பாட்டி, அவர் பெருமாளுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கிறார்!

ஆண்டாள் பாட்டி: ஆமாம், அப்படித்தான் இருந்தார். ஒரு முறை அவர் ஒரு கிராமத்தில் சென்று கொண்டிருக்கையில், அந்த ஊர் கோயிலுக்குச் சென்றார். பெருமாளோ அவரின் மேலிருந்த பிரியத்தால் ஆழ்வார் எந்தெந்தத் திசையில் சென்றாலும் அவர் சென்ற திசையை நோக்கியே திரும்பிய வண்ணம் இருந்தார். அதுபோலவே, ஆழ்வார் ஆராவமுதன் எம்பெருமானை எழுந்திருந்து பேசுமாறு கேட்டதும் உடனே தன்னுடைய கிடந்த கோலத்திருந்து எழுந்து கொள்ளவே தொடங்கினார்!

பராசரனும் வ்யாசனும் ஆச்சரியத்தில் விழிகள் விரிய “பின்பு என்ன நடந்தது பாட்டி?”.

ஆண்டாள் பாட்டி: ஆழ்வார் திகைத்துப் போய் பெருமாளைத் தன்னுடைய கிடந்த கோலத்திலேயே திரும்ப இருக்குமாறு வேண்டினார். பெருமாளோ இரண்டு மனமாக இருந்தாராகையால் இப்பொழுதும்கூட அவரை சற்றே எழுந்திருப்பது போன்ற திருக்கோலத்தில் காணலாம்.

வ்யாச: எவ்வளவு ஆச்சரியம் பாட்டி. ஒரு நாள் நாமும் அங்கு போய் அந்தப் பெருமாளைச் சேவிக்க வேண்டும் பாட்டி.

ஆண்டாள் பாட்டி: அவசியம் நாம் அங்கு ஒரு முறை போகலாம். அவர் அங்கே  வெகு காலம் இருந்தார். தன்னுடைய அருளிச்செயல்கள் திருச்சந்தவிருத்தம், நான்முகன் திருவந்தாதி ஆகிய இரண்டே இரண்டு பிரபந்தங்களைத் தவிர அனைத்தையும் காவிரி நதியில் வீட்டுவிட்டார். அதற்கு பிறகு இறுதியில் பரமபதத்தை அடைந்து பரமபத எம்பெருமானுக்கு இடையறாத கைங்கர்யங்களை அனுதினமும் செய்து வருகிறார்.

பேருந்து திருவெள்ளறையை அடைகிறது. மூவரும் தாயாரையும் பெருமாளையும் சேவிக்கக் கோயிலுக்குள் செல்கிறார்கள்.

அடியேன் கீதா ராமானுஜ தாஸி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2014/11/beginners-guide-thirumazhisai-azhwar/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment