ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
வ்யாசனும் பாராசரனும் தம்முடைய தோழியான வேதவல்லியுடன் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள். தம்முடைய கைகளில் பிரசாதத்துடன் ஆண்டாள் பாட்டி அவர்களை வரவேற்கிறார்.
ஆண்டாள் பாட்டி : இந்த பிரசாதத்தை பெற்றுக்கொண்டு உங்களுடைய புதிய தோழியைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்.
வ்யாச : பாட்டி, இவள் தான் வேதவல்லி, விடுமுறையைக் கழிக்க காஞ்சீபுரத்திலிருந்து வந்துள்ளாள். அவளும் நம்முடைய ஆசார்யர்களின் மேன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று எங்களுடன் அழைத்து வந்தோம்.
பராசர : பாட்டி, இன்று ஏதாவது பண்டிகை நாளா என்ன?
ஆண்டாள் பாட்டி : இன்று உய்யக்கொண்டாருடைய திருநக்ஷத்ரம் ஆகும். அவரை புண்டரீகாக்ஷர் என்றும் பத்மாக்ஷர் என்றும் அழைப்பார்கள்.
வ்யாச: பாட்டி, இந்த ஆசார்யரைப் பற்றி எங்களுக்குச் சொல்வீர்களா?
ஆண்டாள் பாட்டி: அவர் திருவெள்ளறை திவ்யதேசத்தில் சித்திரை மாதம், கார்த்திகை நக்ஷத்ரத்திலே அவதரித்தவர். அவருக்கு திருவெள்ளறை திவ்ய தேசத்து எம்பெருமானின் திருநாமமே சூட்டப்பட்டது. இவரும், குருகைகாவலப்பனும் நாதமுனிகளின் பிரதம சீடர்கள். நாதமுனிகளுக்கு நம்மாழ்வாரின் அருளால் அஷ்டாங்கயோகம் சித்தித்து இருந்தது.
பராசர: அது என்ன யோகம் பாட்டி?
ஆண்டாள் பாட்டி: அது யோகத்தில் ஒருவகை ; இந்த யோகத்தின் மூலம் ஒருவர் தேகத்தைக் குறித்த எண்ணமோ உணர்வோ இன்றி பகவானை இடைவிடாது உணர முடியும். நாதமுனிகள் குருகைகாவலப்பனுக்கு அஷ்டாங்கயோகம் கற்பித்து உய்யக்கொண்டாரும் கற்க விரும்புகிறாரா எனக் கேட்க, உய்யக்கொண்டாரோ “பிணம் கிடக்க மணம் புணரலாமோ?” என்று சொன்னாராம்.
பராச்ர: பாட்டி, அப்படியென்றால், ஒருவர் இறந்து கிடக்கும்போது அங்கே யாரும் மகிழ்ந்து இருக்க முடியாது என்றல்லவா சொன்னார்? இறந்து போனது எவர் பாட்டி?
ஆண்டாள் பாட்டி: அற்புதம் பராசரா ! அவர் சொன்னதன் பொருள் என்னவென்றால், உலகிலுள்ள பல மக்களும் சுக துக்கங்களில் உழன்று கொண்டிருக்க, தனியாக பகவானை தாம் மட்டும் அனுபவிப்பதை எவ்வாறு சிந்திக்க இயலும் என்பதே. இதைக் கேட்டவுடன் நாதமுனிகள் அளவற்ற ஆனந்தமடைந்து உய்யக்கொண்டாரின் பெருந்தன்மையை சிலாகித்தார். அவர் உய்யக்கொண்டாரையும் குருகை காவலப்பனையும் பிற்காலத்தில் தோன்ற இருக்கும் ஈச்வரமுனியுடைய புதல்வருக்கு (நாதமுனிகளின் பேரன்) அஷ்டாங்க யோகத்தையும், திவ்ய ப்ரபந்தத்தையும் பொருளுடன் கற்பிக்கும்படி கட்டளையிட்டார்.
வ்யாஸ: உய்யக்கொண்டாருக்கு சீடர்கள் இருந்தனரா பாட்டி?
பாட்டி : அவருடைய ப்ரதம சிஷ்யர் மணக்கால் நம்பி ஆவார். அவர் பரமபதத்திற்கு ஏகும் சமயத்தில், தமக்கு பின் சம்பிரதாயத்தைக் காக்கும்படி மணக்கால் நம்பியை நியமித்தார். பின்வரக் கூடிய ஆசார்யர்களின் வரிசையில் ஈச்வரமுனியுடைய குமாரரான யமுனைத்துறைவரை நியமிப்பதன் பொருட்டு அவரைத் தயார் செய்யும்படியும் மணக்கால் நம்பியைப் பணித்தார்.
பாட்டி : அவருடைய இயற்பெயர் ராமமிச்ரர் என்பதாகும். அவர் மணக்கால் என்னுமிடத்தில், மாசி மாதம் மக நக்ஷத்திரத்தில் அவதரித்தார். மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரிடத்தில் மிகுந்த பக்தி கொண்டிருந்தது போலவே, மணக்கால் நம்பியும் உய்யக்கொண்டாரிடத்தில் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். உய்யக்கொண்டாருடைய பத்தினியாரின் மறைவுக்குப் பின்பு , ஆசார்யருக்குத் தளிகை செய்யும் கைங்கர்யத்தையும் செய்து, அவருடைய ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்து கொண்டிருந்தார். ஒரு முறை உய்யக்கொண்டாருடைய குமாரத்திகள் நதியில் நீராடிவிட்டு திரும்பும்பொழுது சகதியைக் கடக்க வேண்டி வந்தது. சேற்றில் நடக்க அவர்கள் தயங்க, ராம மிச்ரர் தாமே அந்த சகதியின் மீது கிடந்து, அப்பெண்களை தம் முதுகின் மீது நடந்து கடக்கச் செய்தார். இதை கேட்ட உய்யக்கொண்டார், நம்பியின் ஆழ்ந்த பக்த்தியை உணர்ந்து மிகவும் மகிழ்ந்தார்.
குழந்தைகள் ஒருமித்த குரலில்: பாட்டி, அடுத்த முறை நாம் சந்திக்கும்போது, எங்களுக்கு யமுனைத்துறைவரின் கதையைக் கூறுகிறீர்களா?
பாட்டி மகிழ்ந்து “அடுத்த தடவை அதனைச் சொல்ல நான் ஆர்வமாக இருக்கிறேன்” என்று சொல்ல குழந்தைகள் தத்தமது வீட்டிற்குக் கிளம்பினார்கள்.
அடியேன் கீதா ராமானுஜ தாசி
ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2015/10/beginners-guide-uyakkondar-and-manakkal-nambi/
வலைத்தளம் – http://pillai.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/