ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – நாதமுனிகள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< ஆசார்யர்கள் – ஓர் அறிமுகம்

வ்யாசனும் பராசரனும் பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்புகிறார்கள். அவர்களின் தோழியான அத்துழாயையும் உடன் அழைத்து வருகிறார்கள்.

ஆண்டாள் பாட்டி: உங்களுடன் வந்திருப்பது யார்?

வ்யாச: பாட்டி, இவள்தான் எங்களுடைய தோழி, அத்துழாய். நீங்கள் எங்களுக்குச் சொன்ன வைபவங்களில் சிலவற்றை இவளுடன் பகிர்ந்து கொண்டோம். அவளுக்கும் உங்களிடமிருந்து இவற்றைப் பற்றி மேலும் கேட்க ஆவல் தோன்றி விட்டது. எனவே, இவளையும் எங்களுடன் அழைத்து வந்தோம்.

ஆண்டாள் பாட்டி: வா அத்துழாய். நீங்கள் இருவரும் என்னிடமிருந்து கேட்டதோடு மட்டுமின்றி அவற்றை உங்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பராசர: பாட்டி, நாங்கள் ஆசார்யர்கள் பற்றிக் கேட்டு அறிந்து கொள்ள வந்தோம்.

ஆண்டாள் பாட்டி: நல்லது. இன்று நான் நம்முடைய சம்பிரதாயத்தின் சிறப்பை நம்மாழ்வாருடைய அனுக்கிரகத்தினால் மீட்டுக் கொடுத்த ஆசார்யரைப் பற்றி உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

அத்துழாய்: அவர் யார் பாட்டி?

ஆண்டாள் பாட்டி, அத்துழாய்க்கும், வ்யாசனுக்கும், பராசரனுக்கும் சிற்றுண்டிகளையும் பழங்களையும் எடுத்து வருகிறார்.

ஆண்டாள் பாட்டி: அவர் நம்முடைய நாதமுனிகள் தான். வீரநாராயணபுரத்தில் (காட்டுமன்னார் கோயில்) ஈச்வர பட்டாழ்வாருக்குப் புதல்வராக ஸ்ரீமன் நாதமுனிகள் அவதரித்தார். அவரை ஸ்ரீ ரங்கநாதமுனி என்றும் நாதப்ரஹ்மர் என்றும் அழைப்பர். அவர் தெய்வீக இசையிலும் அஷ்டாங்க யோகத்திலும் நிபுணராக இருந்தார். மேலும், இன்றளவிலும் ஸ்ரீரங்கம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற ஸந்நிதிகளில் நடந்து வரும் அரையர் சேவையை ஏற்படுத்தியவர் அவரே!

பராசர: நம்முடைய பெருமாளுக்கு முன்பாக சேவிக்கும் அரையர் சேவையைப் பல முறை பார்த்துள்ளோம் பாட்டி. அரையர் ஸ்வாமி தம் கையில் தாளங்களுடன் மிக அழகாகப் பாடுவார்.

ஆண்டாள் பாட்டி: ஆமாம்!, ஓர் நாள், மேல்நாட்டிலிருந்து (திருநாராயணபுரம் பிரதேசம்) ஒரு ஸ்ரீ வைஷ்ணவக் குழு காட்டு மன்னார் கோயிலுக்கு வந்து திருவாய்மொழியிலிருந்து “ஆராவமுதே….” என்னும் பதிகத்தை மன்னனார் (காட்டு மன்னார் கோவில் எம்பெருமான்) முன்பு பாடிச் சேவித்தனர். பாசுரங்களின் பொருளில் ஈர்க்கப்பட்டவரான நாதமுனிகள், அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களிடம் அந்த பாசுரங்களைப் பற்றி மேலும் கேட்க, அவர்களோ, அந்த 11 பாசுரங்களுக்கு மேல் அறியவில்லை என்றனர். மேலும் தெரிந்து கொள்ள, அவர்கள் நாதமுனிகளை திருக்குருகூருக்குச் செல்லும்படி கூறினர். நாதமுனிகள் மன்னனாரிடமிருந்து விடை பெற்று, ஆழ்வார் திருநகரியைச் சென்றடைந்தார்.

அத்துழாய், வ்யாசன், பராசரன் மூவரும் சிற்றுண்டிகளை உண்டு முடித்து நாதமுனிகளைப் பற்றி ஆழ்ந்து கேட்கின்றனர்.

ஆண்டாள் பாட்டி: அங்கே அவர் மதுரகவியாழ்வாரின் சிஷ்யரான பராங்குச தாசரைக் கண்டார். அவர் நாதமுனிகளுக்குக் கண்ணிநுண் சிறுத்தாம்பு ப்ரபந்தத்தை  உபதேசித்து, அப்பாசுரங்களைத் திருப்புளியாழ்வாருக்கு (நம்மாழ்வார் வசிப்பிடம்) முன்பாக 12000 முறை தொடர்ந்து அனுசந்திக்கும்படி கூறினார். நாதமுனிகள் அஷ்டாங்க யோகத்தை அறிந்தவராதலால்,  நம்மாழ்வரைத் தியானித்து, கண்ணிநுண் சிறுத்தாம்பை 12000 முறைகள் மிகுந்த சிரத்தையுடன் அனுசந்தித்தார். நாதமுனிகளின் பிரார்த்தனைக்கு உகந்து நம்மாழ்வார், அங்கே தோன்றி, அவருக்கு அஷ்டாங்க யோகத்தில் பூரண ஞானத்தையும், 4000 திவ்ய ப்ரபந்தத்தையும், அருளிச் செயல்களின் (திவ்ய ப்ரபந்தம்) விளக்கங்களையும் அவருக்கு அனுக்கிரகித்தார்.

வ்யாச: அப்படியென்றால், ‘ஆராவமுதே’ பதிகம், 4000 திவ்ய ப்ரபந்தத்தின் ஒரு பகுதியா?

ஆண்டாள் பாட்டி: ஆமாம், ஆராவமுதே பதிகம், திருக்குடந்தை எம்பெருமானைப் பற்றியது. அதன் பின்பு, நாதமுனிகள்,  காட்டுமன்னார் கோயிலுக்குத் திரும்பி மன்னனாரிடம் 4000 திவ்ய ப்ரபந்தத்தைச் சமர்ப்பித்தார். மன்னனாரும் நாதமுனிகளிடத்தில் மிகவும் உகப்புடன் திவ்ய ப்ரபந்தத்தைப் பகுத்து அவற்றை மக்களிடையே அடையச் செய்யுமாறு கூறினார். அவ்வாறே அவரும் அருளிச் செயல்களுக்கு இசை கூட்டி, தம்முடைய மருமக்களாகிய கீழையகத்தாழ்வானுக்கும் மேலையகத்தாழ்வானுக்கும் கற்பித்து, பிறருக்குச் சென்றடையும்படி செய்தார். அது மாத்திரமின்றி, தம்முடைய அஷ்டாங்க யோக சித்தியினால், நம்முடைய சம்பிரதாயத்தில் பிற்காலத்தில் தோன்றக்கூடிய ஒரு சிறந்த ஆசார்யரைப் பற்றியும் அறிந்தார். அடுத்த முறை, அவரைப் பற்றி நான்  மேலும் உங்களுக்கு  கூறுவேன்.

குழந்தைகள் ஒருமித்த குரலில்: அவசியம் பாட்டி. அதனைப் பற்றி அறிய நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

அத்துழாய் ஆண்டாள் பாட்டியை நமஸ்கரித்து ஆசி பெற்று தன் வீட்டுக்கு திரும்பிச்செல்ல, வ்யாசனும் பராசரனும் தம்முடைய பள்ளிப் பாடங்களை படிக்க செல்கிறார்கள்.

அடியேன் கீதா ராமானுஜ தாசி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2015/06/beginners-guide-nathamunigal/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/

Leave a Comment