ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – அழகிய மணவாள மாமுனிகள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< திருவாய்மொழிப் பிள்ளை

ஆண்டாள் பாட்டி மணவாள மாமுனிகளைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலுடன் வந்த குழந்தைகளை வரவேற்றாள்.

பாட்டி: வாருங்கள் குழந்தைகளே, எல்லோரும் கோடை விடுமுறையை எப்படிக் கழித்தீர்கள் ?

பராசரன்: பாட்டி, விடுமுறை நன்றாகக் கழிந்தது. இப்பொழுது நாங்கள் மணவாள மாமுனிகளைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம். அவரைப் பற்றிச் சொல்கிறீர்களா?

பாட்டி: சரி குழந்தைகளே. அவர் ஆழ்வார் திருநகரி என்னும் ஊரில் திகழக்கிடந்தான் திருநாவீறுடையப்  பிரானுக்கும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் ஆதிசேஷனுடைய அவதாரமாய் யதிராஜருடைய புனராவதாரமாய் (மறுபிறவியாய்)  பிறந்தார். அவருக்கு அழகிய மணவாளன் (அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்றும்) என்று பெயரிட்டனர். அவர் சாமான்ய சாஸ்திரம் (அடிப்படை சித்தாந்தம் ) மற்றும் வேதாத்யயனத்தை அவரது தகப்பனாரிடம் கற்றார்.

வ்யாசன்: பாட்டி, திருவாய்மொழிப் பிள்ளை அவரது ஆசார்யன் அல்லவோ?

பாட்டி: ஆம் வ்யாஸா, திருவாய்மொழிப் பிள்ளையின் பெருமைகளைக் கேட்டு, அவரிடம் சரணாகதி செய்தார். அருளிச்செயல்களைக் கற்றுத் தேர்ந்தவரான இவர், திருவாய்மொழி மற்றும் ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானமும் மிகவும் சிறப்பாக வழங்குவார். ராமானுஜரின் மீது இவருக்கு அளவில்லாப் பற்று இருந்ததால் அவருக்கு ஆழ்வார்திருநகரியில் பவிஷ்யதாசார்யன் சந்நிதியில் நிறைந்த கைங்கர்யம் செய்தார். யதீந்த்ரரின் (ஸ்ரீ ராமானுஜர்) மேல் அவர் வைத்திருந்த எல்லையில்லா அன்பினால் அவருக்கு யதீந்த்ர ப்ரவணர் (யதீந்த்ரரின் மேல் ஆசை மிகுந்தவர்) என்ற பெயர் ஏற்பட்டது .

பின்னர் அவரது ஆசார்யரின் நியமனம் நினைவுக்கு வந்ததால் ஸ்ரீரங்கத்திற்குச் சென்று வாழ்ந்து நம் ஸம்ப்ரதாயத்தைப் பரவச்செய்தார். ஸ்ரீரங்கத்திற்குச் சென்ற பிறகு ஸந்யாஸாச்ரமத்தை ஏற்று ‘அழகிய மணவாள முனிகள்’ என்றும் ‘பெரிய ஜீயர்’ என்றும் விளங்கலானார். 

முமுக்ஷுப்படி, தத்வத்ரயம், ஸ்ரீவசனபூஷணம் ஆகிய ரஹஸ்ய க்ரந்தங்களுக்கு வேதம், வேதாந்தம், இதிஹாசங்கள், புராணங்கள், அருளிசெயல்களிலிருந்து  மேற்கோள்கள் காட்டி வ்யாக்யானங்கள் எழுதினார். 

இராமானுச நூற்றந்தாதி, ஞானசாரம்,  சரம உபாய நிஷ்டையை (ஆசார்யனே எல்லாம் என்ற புரிதல்) விளக்கும் ப்ரமேய சாரம் ஆகியவற்றுக்கு மாமுனிகள் உரைகள் எழுதினார். சில ஸ்ரீவைஷ்ணவர்களின் கோரிக்கைக்கு இணங்க திருவாய்மொழி மற்றும் நம்மாழ்வாரின் மேன்மையை விளங்கச்செய்யும் திருவாய்மொழி நூற்றந்தாதியை  எழுதினார். பூர்வாசார்யர்களின் போதனைகளை, அவர்களது பிறந்த இடங்கள், திருநக்ஷத்ரங்கள், திருவாய்மொழி மற்றும் ஸ்ரீவசனபூஷணத்தை உயர்த்திக் காட்டும் வகையில்   உபதேச ரத்தின மாலையைத்  தொகுத்தார். 

மாமுனிகள் திவ்யதேச யாத்திரைகள் பல செய்து அனைத்து பெருமாள்களுக்கும், ஆழ்வார்களுக்கும்  மங்களாஸாசனங்கள் செய்தார்.

வேதவல்லி: மாமுனிகளைப் பற்றியும் அவரது கைங்கர்யங்களைப் பற்றியும் கேட்பதற்கே வியப்பாக உள்ளது, பாட்டி!

பாட்டி: ஆம் வேதவல்லி, நம்பெருமாளுக்குக் கூட நம்மாழ்வார் அருளிய  திருவாய்மொழியின் வ்யாக்யானமாகிய ஈடு முப்பத்தாறாயிரப்படியின்  காலக்ஷேபத்தை  மாமுனிகளிடம் கேட்க வேண்டும் என்று ஆசை இருந்தது. மாமுனிகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் பத்து மாதத்திற்குக் காலக்ஷேபம் செய்து ஆனி  திருமூலத்தன்று சாற்றுமுறை செய்தார்.

srisailesa-thanian-small

சாற்றுமுறை நிறைவேறிய பிறகு, நம்பெருமாள், அரங்கநாயகம் என்ற பெயர்கொண்ட  சிறுவனாக மாமுனிகளின் முன்னே வந்து “ஸ்ரீசைலேச தயாபாத்திரம் தீபக்த்யாதி குணார்ணவம்” என்கிற ச்லோகத்தை அஞ்சலி முத்திரையுடன் (தன் இரு கைகளையும் கூப்பிக் கொண்டு) சொன்னார். அனைவரும் மெய்சிலிர்த்துப் போய் இந்தச் சிறுவன் நம்பெருமாளே என்று புரிந்துகொண்டனர். 

பராசரன்: நம்பெருமாளாலேயே கவுரவிக்கப்படுதல் பெரிய பெருமையாயிற்றே. பாட்டி, இதனால் தான் நாம் அனைத்து சேவாகாலங்களையும் இந்த தனியனோடே தொடங்குகிறோமா?

பாட்டி: ஆம், பராசரா. எம்பெருமான் இந்தத் தனியனை அனைத்து திவ்யதேசங்களுக்கும் அனுப்பி சேவாகாலத் தொடக்கத்திலும் முடிவிலும் இதனை அனுசந்திக்கச் சொன்னார். திருவேங்கடமுடையானும் திருமாலிருச்சோலை அழகரும் இந்தத் தனியனை அருளிச்செயல் அனுசந்தானத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் அனுசந்திக்க வேண்டுமாறு பணித்தனர்.

தன் இறுதி நாட்களில், மிகுந்த சிரமத்தோடே, மாமுனிகள் ஆசார்ய ஹ்ருதயத்திற்கு  பாஷ்யம் (உரை) எழுதினார். தன் திருமேனியை விட்டு பரமபதத்திற்கு ஏக முடிவு செய்தார். ஆர்த்தி ப்ரபந்தத்தை அனுசந்தித்துக் கொண்டே இந்த சம்சாரத்திலிருந்து தன்னை விடுவித்து ஏற்றுக்கொள்ளுமாறு எம்பெருமானாரை ப்ரார்த்தித்தார். பின், எம்பெருமானின் அனுக்ரஹத்தால், மாமுனிகள் பரமபதத்திற்கு ஏகினார். அச்சமயம் செய்தி கேட்டு, பொன்னடிக்கால் ஜீயரும் ஸ்ரீரங்கத்திற்குத்  திரும்ப வந்து, மாமுனிகளுக்கு அனைத்தச்  சரம கைங்கர்யங்களையும் செய்தார்.

அத்துழாய்: பாட்டி, மாமுனிகளைப் பற்றி பேசியதால் நாங்கள் அனைவரும் மிகுந்த பயனடைந்தோம். அவரது திவ்ய சரித்திரத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. 

பாட்டி: எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே , அத்துழாய். பெரியபெருமாளாலேயே ஆசார்யனாக ஏற்றுக் கொள்ளப்பட்டதால், மாமுனிகளோடு ஆசார்ய ரத்னஹாரம் முடிவடைந்து ஓராண்வழி குருபரம்பரையும் முற்றுப்பெறுகிறது.

நமது அடுத்த சந்திப்பில், மாமுனிகளின் சிஷ்யர்களான அஷ்டதிக்கஜங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

அடியேன் பார்கவி ராமானுஜதாசி 

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2018/06/beginners-guide-mamunigal/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

1 thought on “ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – அழகிய மணவாள மாமுனிகள்”

  1. ஸ்வாமி அதி அற்புதம். எளிய நடையில் மிகுந்த புரிதலுடண் இருக்கிரது.

    Reply

Leave a Comment