ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திருவாய்மொழிப் பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< பிள்ளை லோகாசார்யரின் சிஷ்யர்கள்

ஆண்டாள் பாட்டி எப்பொழுதும் போல மடப்பள்ளியில் வேலைகள் செய்து கொண்டிருக்கையில் குழந்தைகள் பிள்ளை லோகாச்சார்யரின் சிஷ்யர்களைப் பற்றி மேலும் கேட்டுத்தெரிந்து கொள்ளும் பொருட்டு பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள். பாட்டி புன்சிரிப்புடன் அவர்களை வரவேற்றாள். ஸ்ரீரங்கநாதரின் பிரசாதங்களைக்  குழந்தைகளுக்குக்  கொடுப்பதற்காக தயாராக காத்திருந்தாள்.

பாட்டி: வாருங்கள் குழந்தைகளே. பெருமாள் பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் எல்லாருக்கும் சென்ற முறை நாம் பேசியது நினைவிருக்கிறதா?

வ்யாசன் : பாட்டி, நாம் கூரகுலோத்தமதாசர், விளாஞ்சோலைப் பிள்ளை ஆகியோரைப் பற்றித் தெரிந்து கொண்டோம்.  “ஆசார்ய அபிமானமே  உத்தாரகம்“ என்றும் தெரிந்து கொண்டோம்.

பாட்டி: உங்களைக் கண்டு பெருமையாக இருக்கிறது, குழந்தைகளே. இன்று நான் மற்றுமொரு ஆசார்யரான பிள்ளைலோகாசார்யரின் சிஷ்யர், திருமலை ஆழ்வார் என்பவரைப் பற்றிச் சொல்கிறேன்.

அத்துழாய்:  பாட்டி, ஆழ்வாரின் திருவாய்மொழியின் மீது கொண்டிருந்த பற்றின் காரணத்தாலேயே திருமலை ஆழ்வாருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது என்று கேட்டிருக்கிறேன். சரியா, பாட்டி?

பாட்டி: மிகச் சரி அத்துழாய். அவர் திருவாய்மொழிப் பிள்ளை என்று அழைக்கப்பட்டார்; ஸ்ரீசைலேசர், சடகோபதாசர் என்ற பெயர்களும் உண்டு. அவர் நம்மாழ்வார் மீதும் ஆழ்வாரின் திருவாய்மொழியின் மீதும் கொண்டிருந்த ஈடுபாட்டினால் அவருக்கு அப்பெயர் ஏற்பட்டது. திருமலையாழ்வாருக்கு, அவரது சிறுபிராயத்திலேயே பிள்ளைலோகாசார்யரின் திருவடித்தாமரைகளில் பஞ்ச ஸம்ஸ்காரம் நடந்தது. ஆனால் சில காலத்திலேயே திருமலையாழ்வார் நம் சம்பிரதாயத்திலிருந்து விலகி மதுரை மன்னருக்கு  முக்கிய ஆலோசகராக ஆனார். 

வ்யாசன் : ஓ, அப்படி என்றால் திருமலையாழ்வாரை நம் சம்பிரதாயத்தின் பக்கம் திருப்பியவர் யார், பாட்டி?

பாட்டி : குழந்தைகளே, உங்கள் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். பிள்ளைலோகாசார்யர் அவருடைய அந்திம காலத்தில் கூரகுலோத்தமதாசரையும்  இதர சிஷ்யர்களையும் திருமலையாழ்வாரை  திருத்தி நம் சம்பிரதாயத்தில் ஈடுபடுத்துமாறு பணித்தார்.

வேதவல்லி: பாட்டி, திருமலையாழ்வாரை  கூரகுலோத்தமதாசர் எவ்வாறு  திருத்தினார்? எங்களுக்குச்  சொல்லுங்கள் பாட்டி. 

பாட்டி: சொல்கிறேன். ஒரு தடவை, திருமலையாழ்வார் தம் பல்லக்கில் வலம் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் ஆழ்வாரின் திருவிருத்தப் பாசுரங்களைச் சொல்லிக்கொண்டிருந்த கூரகுலோத்தமதாசரைக் கண்டார். பிள்ளைலோகாசார்யரின் ஆசி பெற்றிருந்தவராகையால் அவர் தாசரின் மேன்மையை உணர்ந்தார்.  பல்லக்கிலிருந்து இறங்கிய திருமலையாழ்வார், திருவிருத்தத்தின் கருத்துகளைத் தமக்கு உபதேசிக்குமாறு தாசரிடம் கேட்டார். 

பராசர : பாட்டி, திருமலையாழ்வார் தாசரிடம் கற்றதனைப் பற்றி எங்களுக்கு மேலும் சொல்லுங்களேன்.

பாட்டி :  உபதேசிக்கும் பொருட்டு தாசர் திருமலையாழ்வாரிடம்  செல்ல அங்கே திருமலையாழ்வார், பிள்ளைலோகாசார்யரின் தனியனைக் கூறியவாறே திருமண்காப்பு தரித்துக் கொண்டதைக் கண்டு மிக உகப்படைந்தார். ஆனால் திருமலையாழ்வாரால் சில சமயங்களில் வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாமல் போயிற்று; அதற்காக அவர் தாசரிடம் மன்னிப்பை  வேண்டினார். அதனை ஏற்றுக்கொண்ட தாசரும் அவருக்கு தன் சேஷ பிரசாதத்தைக் (மீதமான உணவு)  கொடுத்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் அதனைப்  பெற்ற திருமலையாழ்வார், அது முதல் உலக விஷயங்களிலிருந்து முற்றும் விலகி, தம்முடைய அத்தனை அதிகாரத்தையும் இளவரசனிடம் ஒப்படைத்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.

தாசரின் இறுதிக் காலத்தின் பொழுது, அவர் திருமலையாழ்வாரை திருக்கண்ணங்குடிப் பிள்ளையிடம் சென்று அவரிடம் திருவாய்மொழியின் பொருளைக் கற்குமாறு பணித்தார்.  அதன் பின், அவர் ரஹஸ்யார்த்தங்கள் அனைத்தையும் விளாஞ்சோலைப் பிள்ளையிடம் கற்றறிந்தார். அதன் பின்னர் நம் சம்பிரதாயத்தை தலைமையேற்று நடத்துமாறு திருமலையாழ்வாரை, தாசர் நியமித்தார். தாசர் பரமபதத்தை அடைந்தவுடன் திருமலையாழ்வார் பிள்ளைலோகாசார்யரை த்யானித்துக்கொண்டே தாசருக்கு அத்தனை சரம கைங்கர்யங்களையும் (இறுதி சடங்கு) மிகச் சிறப்பாகச் செய்தார்.

வ்யாசன் : பாட்டி, அதன் பின் திருமலையாழ்வார் நம் சம்பிரதாயத்தை ஏற்று நடத்தினாரா ?

பாட்டி : இல்லை வ்யாசா. நான் முன்பே சொன்னது போலே, திருமலையாழ்வார் திருக்கண்ணங்குடிப் பிள்ளையிடம் சென்று திருவாய்மொழியைக் கற்கலானார். அவர் அதன் ஒவ்வொரு பாசுரத்தின் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ள விரும்பினார். எனவே அதனைக் கற்க அவரை பிள்ளை, திருப்புட்குழிஜீயரிடம் அனுப்பினார். ஆனால், துரதிர்ஷ்டவசத்தால் அவர் அங்கு செல்லும் முன்பாகவே, ஜீயர் பரமபதத்தை அடைந்து விட்டார். மிகுந்த நிராசை அடைந்த திருமலையாழ்வார், தேவப்பெருமாளுக்கு (காஞ்சிபுர வரதர்) மங்களாசாஸனம் செய்ய எண்ணினார்.

பராசர: பாட்டி,  இந்த சம்பவம் ராமானுஜர் ஆளவந்தாரைக் காணச்செல்ல, அவர் செல்வதற்கு சற்று முன்பாக ஆளவந்தார் பரமபதித்ததை போலவே இருக்கிறது. சரிதானே பாட்டி?

பாட்டி: மிகச்சரி பராசரா. அதன் பின்பு தேவப்பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்வதற்காக அங்கே சென்றார்; அங்கே அவரை அனைவரும் வரவேற்றனர், தேவப்பெருமாளும் அவருடைய ஸ்ரீசடகோபம், மாலை, சாற்றுப்படி (சந்தனக்குழம்பு)  ஆகியவற்றை அளித்து அனுக்ரஹித்தார். தேவப்பெருமாள், நாலூர்ப்பிள்ளையை திருமலையாழ்வாருக்கு திருப்புட்குழி ஜீயரிடமிருந்து கற்க இயலாது போன, அருளிச்செயல்களின் (திவ்யபிரபந்தம்) கருத்துக்களையும் திருவாய்மொழி ஈடு  வ்யாக்கியானத்தையும் போதிக்குமாறு பணித்தார்.  

உபதேசிப்பதில் நாலூர்பிள்ளை மிக மகிழ்வடைந்தாலும், தம்முடைய மூப்பின் காரணமாக அவரால் திருமலையாழ்வாருக்கு சரிவர கற்பிக்க இயலாது என்று தோன்ற, தேவப்பெருமாளும் நாலூர்பிள்ளையின் புதல்வரான நாலூராச்சான்பிள்ளையைத்  திருமலையாழ்வாருக்கு உபதேசிக்க பணித்தார்.  இந்த வாக்கினை மிகுந்த மகிழ்வுடன் ஏற்ற நாலூர் பிள்ளை, திருமலையாழ்வாரை  நாலூராச்சான் பிள்ளையிடம் உகப்புடன் அழைத்து சென்று அவருக்கு ஈடையும் அருளிச்செயல் பொருளையும் உபதேசிக்குமாறு பணித்தார். இந்த நிகழ்ச்சியை கேள்வியுற்ற திருநாராயணபுரத்து ஆயி, திருநாராயணபுரத்துப்பிள்ளை ஆகியோரும் மற்றும் சிலரும் தாங்களும் அருளிச்செயலின் பொருளையும் ஈடு விஷயத்தையும் அறிந்து கொள்ளும் பொருட்டு, நாலூராச்சான் பிள்ளையையும்  திருமலையாழ்வாரையும் திருநாராயணபுரத்தில் தங்கி அங்கே காலக்ஷேபங்களைத் தொடர வேண்டினர். அவர்களின் அழைப்பை ஏற்று திருநாராயணபுரத்திற்கு அவர்களிருவரும் சென்று காலக்ஷேபத்தைத் தொடர்ந்து நடத்தி பூர்த்தி செய்தனர். அங்கே திருமலையாழ்வார் ஈட்டின் ஆழ்ந்த கருத்துக்களைக் கற்றார். அவரையும் அவருடைய தொண்டுணர்வையும் கண்டு மகிழ்ச்சியுற்ற நாலூராச்சான் பிள்ளை தம்முடைய திருவாராதனப் பெருமாளை திருமலையாழ்வாருக்குக்  கொடுத்தார். இந்த வழியில் ஈடு 36000 படி நாலூராச்சான் பிள்ளை வாயிலாக, 3  சிறந்த ஞானிகளுக்கு – திருமலையாழ்வார், திருநாராயணபுரத்துஆயி, திருநாராயணபுரத்துப் பிள்ளை ஆகியோருக்குக்  கிடைத்தது. இதற்கு பிறகு திருமலையாழ்வார் ஆழ்வார்திருநகரிக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக வசிக்க விரும்பினார்.

வ்யாசன் : ஆழ்வார்திருநகரி நம்மாழ்வாரின் அவதாரத்தலம் தானே? சிதிலமடைந்திருந்த ஆழ்வார்திருநகரியைத் திரும்பவும் நிர்மாணித்தவர் திருமலையாழ்வார்தான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த சரித்திரத்தை சொல்லுங்கள் பாட்டி.

பாட்டி : நீ சொன்னது சரியே வ்யாசா. ஆழ்வார்திருநகரியைத் திருமலையாழ்வார் சென்றடைந்த பொழுது அந்த இடமே ஒரு காடு போல காட்சியளித்தது. முகலாயர்களின் படையெடுப்பின் பொழுது, ஆழ்வார் ஆழ்வார்திருநகரியை  விட்டு கேரள/கர்நாடக எல்லைப் பகுதிக்குச் சென்றிருந்தார். மிகுந்த முயற்சியோடு   திருமலையாழ்வார் அந்த இடத்தைச் சுத்தம் செய்து நகரத்தையும் கோவிலையும்  புணர்நிர்மாணம் செய்து கோவிலின் ஆகமத்தையும் நிறுவினார். அவரே மதுரை மன்னனின் துணையுடன் ஆழ்வாரையும் திரும்ப அழைத்துக் கொணர்ந்தார். அவர் ஆழ்வார் மீதும் திருவாய்மொழியின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். திருவாய்மொழியைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்ததாலேயே அவர் திருவாய்மொழிப்பிள்ளை என்று அழைக்கப்பட்டார். அவர் தாம் பவிஷ்யதாசார்யனின் (எம்பெருமானார்) விக்ரஹத்தைக் கண்டு, அவருக்கென்று நகரத்தின் மேற்குப் புறத்தில் ஒரு கோவிலையும், கோவிலின் முன்பாக ஒரு சந்நிதித் தெருவையும் நான்கு மாட வீதிகளையும் நிர்மாணித்தவர். இந்த கோவிலைப் பராமரிக்க கைங்கர்யபரர்களை நியமித்தவரும் அவரே. அவரன்றி நாம் இன்று கண்டு மகிழும் ஆழ்வார்திருநகரியைக்  கற்பனைகூட செய்ய இயலாது.

திருவாய்மொழிப் பிள்ளையைப் பற்றி கேள்வியுற்ற அழகிய மணவாளன் (சந்நியாசம் ஏற்றுக் கொள்வதற்கு முன்பு மணவாளமாமுனிகள்) ஆழ்வார்திருநகரிக்குச் சென்று அவரிடம் சிஷ்யராகத்  தொண்டு செய்து அருளிச்செயல்களையும் அதன் பொருளையும் முழுதுமாகக் கற்றார். அவருடைய அந்திமக்காலத்தில் தமக்கு பிறகு நம் சம்பிரதாயத்தைத் தொடர்ந்து நடத்துவது யார் என்று  திருவாய்மொழிப் பிள்ளை கவலைப்படலானார். அழகிய மணவாளன் அந்த பொறுப்பை ஏற்பதாக உறுதி அளித்தார். மிகவும் மகிழ்வடைந்த திருவாய்மொழிப் பிள்ளை மாமுனிகளை ஸ்ரீபாஷ்யத்தை ஒருமுறைக் கற்று அதற்கு பிறகு திருவாய்மொழியின் மீதும் அதன் வ்யாக்யானங்கள் மீதும் தம் காலத்தில் ஈடுபடுமாறு பணித்தார். அதன் பின் திருவாய்மொழிப்பிள்ளை பரமபதிக்க, அழகிய மணவாளன் திருவாய்மொழிப்பிள்ளைக்கு அனைத்துச்  சரமகைங்கர்யங்களையும் செய்தார்.

திருவாய்மொழிப்பிள்ளை தம் காலம் முழுதையும் நம்மாழ்வாருக்கும் திருவாய்மொழிக்குமே அர்ப்பணித்தவர். அவருடைய முயற்சியினாலேயே நாம் ஈடு 36000 படி வ்யாக்கியானத்தை, அதன் மேன்மையை பிற்காலத்தில் உணரச்செய்த அழகியமணவாளமாமுனிகளின் வாயிலாகப் பெற்றுள்ளோம். ஆகையினால் குழந்தைகளே, திருவாய்மொழிப்பிள்ளை அவருடைய ஆசார்யன் மீதும் எம்பெருமானார் மீதும் கொண்டிருந்தப்  பற்றுதலைப் பெற அவருடைய திருவடித் தாமரைகளையே பணிவோம்.

குழந்தைகள் நாம் பெற்றுள்ள செல்வங்களைப் பற்றியும் அன்றைய உரையாடல்களையும்  எண்ணமிட்டவாறே ஆண்டாள் பாட்டியின் வீட்டை விட்டு கிளம்பினார்கள்.

அடியேன் கீதா ராமானுஜ தாஸி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2018/05/beginners-guide-thiruvaimozhip-pillai/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment