ஸ்ரீராமாயணம் பாலபாடம் – கல்லையும் பெண்ணாக்கினான்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீராமாயணம் பாலபாடம்

<< ராம லக்ஷ்மணர்களின் மிதிலாநகர் ப்ரயாணம்

பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.

பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு பெருமாள் அமுது செய்த பழங்களைத் தருகிறேன்.

குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த பழங்களை உண்டார்கள்.

பராசரன்: அகலிகை சாபம் தொலைந்து மீண்டும் இழந்த பெண்ணுருவதைப் பெற்றாள் என்று சென்ற முறை சொல்லிமுடித்தீர்கள் பாட்டி. யார் அகலிகை சாபத்தைப் போக்கினார் பாட்டி ?

பாட்டி: பிரமனால் படைக்கப்பட்ட பேரழகி அகல்யா. கௌதம ரிஷியின் மனைவி. தினமும் விடியற்காலை சேவல் கூவியதும், கௌதமர் நதியில் நீராடச் சென்றுவிடுவது வழக்கம்.
இதை அறிந்த இந்திரன், ஒருநாள், விடிவதற்கு முன் சேவல் போலக் கூவி விடிந்தாற் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினான். கௌதமரும் வழக்கம் போல நீராடச் சென்று விட்டார். அவர் இல்லாத அந்நேரத்தில் இந்திரன், கௌதமரின் உருவத்தில் குடிலுக்குள் சென்று அகல்யையைப் புணர்ந்தான். அகல்யாவிற்கும், அது தன் கணவனில்லை எனத் தெரிந்தது. ஆனாலும், அவள் அவனைத் தடுக்கவில்லை. ஏதோ சந்தேகம் ஏற்பட கௌதமர் வீடு திரும்பினார். அங்கு இருவரையும் ஒன்றாகக் கண்டு கோபம் மேலிட அகல்யாவை நோக்கி நீ பல ஆயிரம் வருடங்கள் உண்ண உணவின்றிக் காற்றை மட்டும் புசித்துக்கொண்டு சாம்பலில் வீழ்ந்து தவித்துக் கிடப்பாயாக; ஒருவர் கண்ணிலும் தென்படாமல் இவ்வாச்ரமத்திலேயே இருப்பாயாக என்று சாபத்தைக் கொடுத்தார். இந்திரனுக்கும் சாபத்தைக் கொடுத்தார். அகலிகைக்கோ, பின் ஒரு நாளில் ஸ்ரீராமன் பாதங்கள் பட்டு, திரும்பப் பெண்ணாக மாறுவாள் என்று சொல்லிவிட்டு இமயமலையுச்சியில் தவம் புரியச் சென்றார்.

வேதவல்லி: ராமபிரான் கௌதமருடைய ஆச்ரமத்திற்குச் சென்று அகலிகை சாபம் தீர்த்தாரா பாட்டி? மேலே சொல்லுங்கள்.

பாட்டி: ஆமாம். விச்வாமித்ர முனிவர் ராம லக்ஷ்மணர்களை அழைத்துக் கொண்டு கௌதம முனிவரது ஆச்ரமத்திற்குச் சென்றார். செல்லும்பொழுது, ராமபிரானுடைய திருவடித்துகள் படப்பெற்று இழந்த பெண்ணுருவைப் பெற்றெழுந்த அகலிகையை அனைவரும் கண்டனர். கௌதம முனிவர் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற்றாள்.

வ்யாசன்: ஆஹா கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது. ராமபிரானுடைய திருவடியே ஸகல விதமான இன்னல்களையும் போக்க வல்லது என்று நன்கு விளங்குகிறது. மேலே சொல்லுங்கள் பாட்டி. கேட்க ஆவலாக இருக்கிறது.

பாட்டி: அகலிகை முன்பு கௌதம முனிவர் சொல்லியிருந்ததை நினைத்துக்கொண்டு, ராமபிரானுக்கு உரிய பூஜைகளைச் செய்தாள். அப்பொழுதே இதையுணர்ந்த கௌதம முனிவரும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்து, அகலிகையோடு சேர்ந்து, ராமபிரானுக்குப் பூஜை செய்து மீண்டும் பழையபடி தவத்திலே ஊன்றினார்.

அத்துழாய்: பிறகு என்ன நடந்தது பாட்டி?

பாட்டி: பிறகு அம்மூவரும் மிதிலை நகருக்குப் புறப்பட்டார்கள். அடுத்த முறை நீங்கள் வரும்போது மேலே என்ன நடந்தது என்று சொல்கிறேன். சற்று நேரத்தில் பெருமாளுக்குத் தளிகை அமுதுசெய்தாகிவிடும். இங்கேயே நீங்கள் பெருமாள் ப்ரசாதத்தை எடுத்துக்கொண்டபிறகு உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள்.

குழந்தைகளும் பெருமாளுக்கு அமுதுசெய்த ப்ரசாதத்தை உண்டுவிட்டு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டார்கள்.

அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி

வலைத்தளம் –  http://pillai.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment