ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஸ்ரீமன் நாராயணன் யார்?

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< ஒரு அறிமுகம்

ஆண்டாள் பாட்டி பேரர்கள் பராசரனையும் வ்யாசனையும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறார்.

srirangam-temple

வ்யாச: ஆஹா பாட்டி, எத்தனை பெரிய கோயில்? இத்தனை பெரியதாக ஒன்றை நாங்கள் இதுவரை கண்டதேயில்லை. இதுபோன்ற பெரிய மாளிகைகளில் அரசர்கள் வசிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். நாம் இப்பொழுது யாரேனும் அரசனைக் காணப் போகிறோமா ?

ஆண்டாள் பாட்டி: ஆம், நாம் இப்பொழுது யாவர்க்கும் அரசனான, ரங்கராஜனை (ஸ்ரீரங்கத்தின் அரசன்) இங்கே காணப்போகிறோம். இவரை ஸ்ரீரங்கத்தில் அனைவரும் அன்புடன் பெரிய பெருமாள் என்றும் நம்பெருமாள் என்றும் அழைப்பர். ஆதிசேஷனின் மேல் கிடந்த கோலத்தில் பெரியபெருமாள் கிடந்து தமது மேன்மையும் ஸ்வாமித்வத்தையும் காட்டிக்கொடுக்கிறார். அவர் தமது பக்தர்களுக்கு அருள, தம்மை நாடி வரும் பக்தர்களுக்காகக் காத்திருக்கிறார்; நம்பெருமாளோ அணுகுவதற்கு எளியவராக, தம்மைக்காண வர இயலாத பக்தர்களுக்காக அவர்களின் சிரமம் அறிந்து, தாமே அவரது புறப்பாடு (சவாரி / ஊர்வலம்) காலங்களில் புறப்பாடு கண்டு அருளி தனது ஸௌலப்யத்தை (எளிமையை) காண்பித்துக் கொடுக்கிறார். நம்பெருமாள் புறப்பாடு கண்டருளி தமது பக்தர்களுக்கு அருள் புரிவதை நாம் ஸ்ரீரங்கத்தில், கிட்டத்தட்ட வருடம் முழுவதுமே காணலாம்.

பராசர: ஆனால் பாட்டி, நாங்கள் பெருமாள் வைகுண்டத்தில் இருப்பதாக நினைத்திருந்தோமே, பின் எப்படி இங்கும் இருக்கிறார்?

பாட்டி: ஆமாம் பராசரா, நீ கேள்விப்பட்டது சரிதான். பெருமாள் வைகுண்டத்திலும் இருக்கிறார்; நம்முடனும் இருப்பதற்காக இங்கும் வந்து இருக்கிறார். நீங்கள் நீரின் பல நிலைகளான திரவம், நீராவி, பனிக்கட்டி பற்றி அறிந்து இருக்கிறீர்கள் தானே; அது போல பெருமாள் ஐந்து நிலைகளில் இருக்கிறார், அவைகள், பர, வ்யூஹ, விபவ, அந்தர்யாமி மற்றும் அர்ச்சை ஆகிய நிலைகளாகும். ஸ்ரீரங்கத்தில் பெருமாள் இருக்கும் நிலை அர்ச்சாவதாரம் என்று அறியப்படுகிறது. அவதாரம் என்றால் கீழிறங்கி வருதல் என்பதாகும். நான் முன்பே கூறியது போல, நாம் உலகத்தில் உள்ள அனைவரின் நன்மைக்காக பிரார்த்திக்கிறோம். நம் பிரார்த்தனைகளுக்கு செவி சாய்ப்பதற்காக ஸ்ரீமன் நாராயணன் இங்கு வந்து இருக்கிறார். அவர் நம் அனைவரின் மேலும் அளவற்ற அன்பு கொண்டவர்; நம்முடன் இருப்பதில் விருப்பம் கொண்டவர்; அவர் ஸ்ரீரங்கநாதனாக இங்கு இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.bhagavan-5-forms-parathvadhi-panchakamபாட்டியும் வ்யாசனும், பராசரனும் பெரிய பெருமாளை சேவித்த பின் மூலவர் சன்னிதியை விட்டு வெளியே வருகின்றனர்.

வ்யாச: அவரைப்பற்றி நீங்கள் கூறியதைக் கேட்ட பின் எங்களுக்கும் அவர்மேல் விருப்பம் தோன்றுகிறது பாட்டி. மேலும், அவர் காண்பதற்கு எங்களைப் போன்றே இருக்கிறார் பாட்டி.

ஆண்டாள் பாட்டி: அவர் காண்பதற்கு நம்மைப்போல் இருப்பது மட்டுமில்லை, நம்மைப் போலவே வாழ்ந்தும் காண்பித்தார். விபவ ரூபத்தில், நம்முடன் இருப்பதற்காக வைகுண்டத்தை விடுத்து, இங்கே பிறந்து, இராமனாகவும் கிருஷ்ணனாகவும் வாழ்ந்தார். நாம் பெரும்பாலும் ஸ்ரீராமனிடமோ கிருஷ்ணனிடமோ தனி ஈடுபாடு கொண்டவர்களே; அதனால், நம்மிடையே தொடர்ந்து இருப்பதற்காக கிருஷ்ணன் பெரியபெருமாள் ரூபத்திலும், இராமன் நம்பெருமாளின் ரூபத்திலும் இருந்து வருகின்றனர். பெரியபெருமாள் எப்பொழுதும் தனது பக்தர்களைக் குறித்து ஆழ்ந்த சிந்தனையில் சயனக் கோலத்தில் காட்சி அளிக்கிறார்; நம்பெருமாளோ, எப்பொழுதும் பக்தர்களின் அன்பை அனுபவித்துக்கொன்டு இருக்கிறார்.

மூவரும் வீட்டை அடைகின்றனர்.

வ்யாசனும் பராசரனும்: சரி பாட்டி, நாங்கள் இப்பொழுது விளையாடச் செல்கிறோம்.

ஆண்டாள் பாட்டி: கவனமாய் விளையாடுங்கள் குழந்தைகளே; முடிந்தவரையில் கூட விளையாடும் குழந்தைகளிடமும் ஸ்ரீமன் நாராயணனைக் குறித்து பேசுங்கள்.

அடியேன் கீதா ராமானுஜ தாஸி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2014/07/beginners-guide-who-is-sriman-narayanawho-is-sriman-narayana/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment