ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
அதிகாலையில் ஆண்டாள் பாட்டி பால்காரரிடமிருந்து பாலைப் பெற்று வீட்டுக்குள் கொண்டு வருகிறார். பாலைக் காய்ச்சி வ்யாசனுக்கும் பராசரனுக்கும் தருகிறார். வ்யாசனும் பராசரனும் பாலை அருந்துகின்றனர்.
பராசர: பாட்டி, அன்றொரு நாள், ஆண்டாளைப் பற்றிப் பிறகு சொல்வதாக சொன்னீர்களே, இப்பொழுது சொல்கிறீர்களா?
ஆண்டாள் பாட்டி: ஓ, நிச்சயமாய். ஆமாம், அவ்வாறு உங்களிடம் சொன்னது நினைவிருக்கிறது. ஆண்டாளைப் பற்றிச் சொல்ல ஏற்ற தருணமிது .
ஆண்டாள் பாட்டி, வ்யாசன் பராசரன் மூவரும் முற்றத்தில் அமர்கின்றனர்.
ஆண்டாள் பாட்டி: ஆண்டாள் பெரியாழ்வாரின் திருமகள், அவள் அவதரித்தது ஸ்ரீவில்லிபுத்தூரில். பெரியாழ்வார் ஆண்டாளைக் கோயிலுக்கு அருகே இருக்கும் நந்தவனத்தில், ஒரு துளசிச் செடிக்கு அருகே கண்டெடுத்தார். அவள் அவதரித்தது ஆடி மாதம் பூர நக்ஷத்ரத்தில். இந்த நாளையே திருவாடிப்பூரம் என்று சிறப்பாக கொண்டாடுகிறோம். ஆண்டாளுக்கு உணவூட்டும் போதே பெரியாழ்வார் அவளுக்குப் பெருமாளின் மீது பக்தியையும் சேர்த்தே ஊட்டினார்.
வ்யாச: ஓ அப்படியா! நீங்கள் எங்களுக்கு கற்பிப்பது போலேயா?
ஆண்டாள் பாட்டி: ஆமாம், அதற்கும் மேலே! பெரியாழ்வார் எப்பொழுதும் கைங்கர்யங்களிலே முழுமையாக ஈடுபட்டிருந்ததனால் அவர் பெருமாளுக்குச் செய்யப்படும் பல வித கைங்கர்யங்களின் பரிணாமங்களையும் ஆண்டாளுக்கு ஊட்டிய வண்ணம் இருந்தார். அதனாலே மிகச்சிறு பிராயமான 5 வயதிலேயே, அவள் தன்னை பெருமாள் மணம் செய்து கொள்வது போலவும் அவருக்கு அவள் சேவைகள் செய்வது போலவும் கனாக்காணத் தொடங்கி விட்டாள்.
பராசர: ஓஹோ. அவர் செய்த முக்கிய கைங்கர்யம் என்ன பாட்டி?
ஆண்டாள் பாட்டி: கோயில் நந்தவனத்தை பராமரித்து பெருமாளுக்கு அழகழகான பூமாலைகளை நாள்தோறும் தொடுத்து சமர்ப்பிப்பதையே முக்கியமான கைங்கர்யமாகச் செய்து கொண்டிருந்தார். அழகான மாலைகளைத் தொடுத்துத் தனது இல்லத்தில் வைத்து விட்டுத் தன்னுடைய அன்றாடப் பணிகளைச் செய்து விட்டுக் கோயிலுக்கு செல்லும் பொழுது அந்த மாலைகளை எடுத்துச் சென்று பெருமாளுக்குச் சமர்ப்பிப்பார். அவ்வாறு தொடுத்து இல்லத்தில் தயாராக வைக்கும் மாலையை ஆண்டாள் தன் மேல் சூட்டிக் கொண்டு கண்ணாடியில் அதனைக் காண்பாள், அந்த மாலையுடன் தான் இருப்பதை பெருமாள் அன்புடன் பார்த்து ரசிப்பதாக எண்ணவும் செய்தாள்.
வ்யாச: இதனைப் பெரியாழ்வார் அறியவில்லையா?
ஆண்டாள் பாட்டி: ஆமாம், இதனைப் பல நாட்களுக்கு அவர் அறிந்து கொள்ளவில்லை. பெருமாளும் தனக்கு மிகவும் பிரியமான ஆண்டாள் சூடிய மாலைகளை மிகவும் உகப்புடன் ஏற்றுக் கொண்ட வண்ணம் இருந்தார். ஆனால், ஒரு நாள், பெரியாழ்வார் மாலை தொடுத்து விட்டு, இல்லத்தில் வைத்து விட்டு வெளியே சென்று வந்தார்; பின்பு கோயிலுக்கு அதனை எடுத்துச் சென்ற போது, அதில் ஒரு கூந்தல் இழையைக் கண்டதனால் அந்த மாலையைத் திரும்பத் தனது இல்லத்திற்கு எடுத்து வந்து விட்டார். தனது மகள் அதனை அணிந்து கொண்டிருக்கக் கூடும் என்று உணர்ந்து, புதிதாய் வேறு ஒரு மாலையைத் தொடுத்து, அதனைக் கோயிலுக்குத் திரும்ப எடுத்துச் சென்றார். ஆனால் பெருமாள் அந்தப் புதிய மாலையை ஏற்க மறுத்து ஆண்டாள் சூடிக் கொண்ட மாலையையே கேட்டார். பெரியாழ்வார் தன்னுடைய மகளின் பக்தியின் ஆழத்தையும் பெருமாளுக்கு அவளிடம் இருந்த அன்பையும் புரிந்து கொண்டு, ஆண்டாள் சூடிக்கொண்ட மாலையையே திரும்ப எடுத்து வர, பெருமாளும் அதனைப் பெரும் உகப்புடன் ஏற்றுக் கொண்டார்.
வ்யாசனும் பராசரனும் ஆண்டாளைப் பற்றியும் அவளுக்கு பெருமாளின் மேல் இருந்த அன்பை பற்றியும் மெய்மறந்து கேட்கின்றனர்.
வ்யாச: பிறகு என்ன நடந்தது?
ஆண்டாள் பாட்டி: ஆண்டாள் பெருமாள் மேல் கொண்ட பக்தி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வந்தது. மிகச் சிறு வயதிலேயெ, அவள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை பாடினாள். மார்கழி மாதத்தில், திருப்பாவை எல்லா வீடுகளிலும் கோயில்களிலும் சொல்லப்படுகிறது. இறுதியில் பெரிய பெருமாள், ஆண்டாளை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வந்து, தமக்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு பெரியாழ்வாரிடம் கேட்டார். பெரியாழ்வாரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆண்டாளைச் சிறப்பாக ஊர்வலமாக கூட்டிக் கொண்டு ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வந்தார். ஆண்டாள் நேரே பெரிய பெருமாள் சன்னிதிக்குச் செல்ல, பெருமாள் அவளை மணம் செய்து ஏற்றுக் கொள்ள அவளும் பரமபதத்திற்குத் திரும்பச் சென்றாள்.
பராசர: அவளும் திரும்பினாள் என்கிறீர்களே! அப்படியானால், அவள் பரமபதத்தைள் சேர்ந்தவளா?
ஆண்டாள் பாட்டி: ஆமாம், அவள் சாக்ஷாத் பூமிதேவியேதான். இவ்வுலகில் அவதரித்து, பெருமாளுடைய அனுக்கிரகத்தின் மூலம் ஆழ்வார்களான மற்ற ஆழ்வார்கள் போலல்லாமல், நம்மனைவரையும் பக்தி மார்கத்தில் ஈர்த்துச் செல்வதற்காகவே ஆண்டாள் பரமபதத்திலிருந்து இறங்கி இவ்வுலகில் அவதரித்தாள். அப்பணியை முடித்ததனால், மறுபடியும் அவள் பரமபதத்தை அடைந்தாள்.
பராசர: என்ன கருணை பாட்டி ஆண்டாளுக்கு!
ஆண்டாள் பாட்டி: சரி, இப்பொழுது நீங்கள் இருவரும் திருப்பாவையை கற்றுக் கொண்டு சொல்லப்பழக வேண்டும். மார்கழி மாதம் வெகு அருகிலேயே வருகிறது. அப்பொழுதுதான் உங்களால் அம்மாதத்தில் திருப்பாவையைச் சொல்ல இயலும்.
வ்யாசனும் பராசரனும்: நிச்சயம் பாட்டி, இப்பொழுதே தொடங்கலாமே!
ஆண்டாள் பாட்டி அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க, சிறுவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கற்கின்றனர்.
அடியேன் கீதா ராமானுஜ தாஸி
ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2014/12/beginners-guide-andal/
வலைத்தளம் – http://pillai.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org
பிரமாதம் அடியேன் இந்த பாட்டிக் கதையை என் பேரன் பேத்திகளுக்கு சொல்கிறேன்.