ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – பெரியாழ்வார்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< குலசேகர ஆழ்வார்

periyazhvarஒரு அழகான ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆண்டாள் பாட்டி தாழ்வாரத்தில் (வீட்டு வெளித்திண்ணை) அமர்ந்து பெருமாளுக்கு மாலை தொடுத்துக் கொண்டிருக்கிறார். வ்யாசனும் பராசரனும் வந்து திண்ணையில் ஆண்டாள் பாட்டிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் ஆண்டாள் பாட்டியை ஆவலுடன் கவனிக்கிறார்கள்.

வ்யாச: நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் பாட்டி?

ஆண்டாள் பாட்டி: பெருமாளுக்கு மாலை தொடுத்துக் கொண்டிருக்கிறேன், அதுவே எனக்கு இரண்டு ஆழ்வார்களை நினைவு படுத்துகிறதே…!! அவர்களில் ஒருவரைப் பற்றிக் கேட்க விரும்புகிறீர்களா?

பராசர: நிச்சயமாக பாட்டி. நாங்கள் அதற்கு ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆண்டாள் பாட்டி: அருமையான குழந்தைகள் நீங்கள். அப்படியானால் நான் உங்களுக்குப் பெரியாழ்வாரைப் பற்றிக் கூறுகிறேன். அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனி மாதம் ஸ்வாதி நக்ஷத்ரத்தில்  அவதரித்தவர். அவரைப் பட்டர்பிரான் என்றும் அழைப்பார்கள். அவர் வடபத்ரஸாயி எம்பெருமானுக்கு மாலைகள் தொடுத்துக் கொடுக்கும் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள், பாண்டிய நாட்டின் அரசன் அறிஞர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தான். பரமாத்மா யார் என்று ஸ்தாபிப்பவர் யாரானாலும் அவருக்கு ஒரு பொற்கிழியைப் பரிசாக ஆறிவித்தான்.

வ்யாச: அது மிகக் கடினமாக இருந்திருக்கும், இல்லையா பாட்டி?

ஆண்டாள் பாட்டி: ஆனால் பெரியாழ்வாருக்கு அப்படியிருக்கவில்லை! பெருமாளின் மேல் அவருக்கு இருந்த பக்தியாலும், பெருமாளின் கருணையினாலும், அவர் அரசவைக்குச் சென்று அங்கே பெருமாளே பரம்பொருள் என்று வேதங்களின் மூலம் நிரூபித்தார். அரசன் மிகுந்த ஆனந்தம் கொண்டு பரிசுப் பொருளைப் பெரியாழ்வாருக்கு அளித்தது மட்டுமின்றி அவரை மதுரை நகரின் வீதிகளில் பட்டத்து யானையின் மேல் ஊர்வலம் அனுப்பச் செய்தான்.

பராசர : அந்த காட்சி காண்பதற்கு இனிமையாக இருந்திருக்கும் இல்லையா பாட்டி!!

ஆண்டாள் பாட்டி: ஆமாம் பராசரா, அப்படித்தான் இருந்தது. அதனாலேயே பெருமாளும் பரமபதத்தில் இருந்து இறங்கி கருடன் மேல் அங்கு தோன்றினார். பெரியாழ்வாரோ யானையின் மேல் சவாரி செய்து கொண்டிருந்தாலும், அப்பொழுதும் எளிமையாகவே இருந்தது மட்டுமின்றி பெருமாளுக்கு ஒரு தீங்கும் நேராமல் இருக்க வேண்டுமே என்று எண்ணினார். ஆகையினால் பெருமாளுக்கு திருப்பல்லாண்டு என்னும் பிரபந்தத்தைப் பாடிக் காப்பிட்டார். அதனாலேயே அவர் பெரியாழ்வார் என்று அழைக்கப்படுகிறார். அவர் பெரியாழ்வார் திருமொழி என்ற பிரபந்தத்தையும் பாடினார்.

வ்யாச:  ஆமாம் பாட்டி – பல்லாண்டு பல்லாண்டு – இதை நாங்கள் அறிவோம். இதைத்தானே ஒவ்வொரு நாளும் தொடக்கத்தில் அனுசந்திக்கிறோம். இதை நாங்கள் கோயிலில் கேட்டிருக்கிறோம்.

ஆண்டாள் பாட்டி. சரியாகச் சொன்னாய் வ்யாசா! பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு எப்பொழுதும் தொடக்கத்திலேயும், முடிவிலேயும் அனுசந்திக்கப்படுகிறது.

பராஸர: நல்லது பாட்டி. நாங்களும் இதைக் கற்றுக்கொண்டு பெருமாள் முன்பு அனுசந்திப்போம்.

ஆண்டாள் பாட்டி: நீங்கள் அவ்வாறு வெகு விரைவிலேயே செய்வீர்கள் என்று எனக்கு நிச்சயமாய் தெரியும். இன்னொன்று, அவர் தான் நம் எல்லாருக்கும் தெரிந்த திருப்பாவையைப் பாடிய ஆண்டாளின் தகப்பனார். ஆண்டாளைப் பற்றி மேலும் பிறகு சொல்கிறேன், வாருங்கள் நாம் போய் பெருமாளுக்கு மாலையை சமர்ப்பித்துவிட்டு வருவோம்.

ஆண்டாள் பாட்டி, தான் தொடுத்த மாலையைப் பெருமாளுக்கு சமர்ப்பிப்பதற்காக வ்யாசனோடும் பராசரனோடும் ஸ்ரீரங்கநாதனின் கோவிலை நோக்கிக் கிளம்புகிறார்.

அடியேன் கீதா ராமானுஜ தாஸி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2014/11/beginners-guide-periyazhwar/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment