ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – தொண்டரடிப்பொடி ஆழ்வார்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< ஆண்டாள்

பெரிய பெருமாள் – தொண்டரடிப்பொடியாழ்வார்

ஆண்டாள் பாட்டி வாசலில் பூக்காரரிடமிருந்து பூக்களை வாங்குகிறார். வ்யாசனும் பராசரனும் அதிகாலையிலேயே விழித்து விட்டனர், பாட்டியிடம் வருகின்றனர்.

வ்யாச: பாட்டி, பாட்டி, நீங்கள் பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்தவர்கள் இரண்டு ஆழ்வார்கள் என்று கூறினீர்களே, அதில் ஒருவராகிய பெரியாழ்வாரை அறிந்து கொண்டோம், இரண்டாவது ஆழ்வாரைப் பற்றி இப்பொழுது சொல்கிறீர்களா?

ஆண்டாள் பாட்டி: உனக்கு நல்ல நினைவாற்றல் வ்யாசா! நீங்கள் கேட்டபடி, பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்த மற்ற ஆழ்வாரைப் பற்றிக் கூறுகிறேன்.

வ்யாசனும் பராசரனும் அடுத்த ஆழ்வாரைப் பற்றிக் கேட்பதற்காக பாட்டியின் அருகே வந்து அமர்கின்றனர்.

ஆண்டாள் பாட்டி: அவர் தொண்டரடிப்பொடியாழ்வார் என்று அழைக்கப்படுகிறார். அவருடைய பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் விப்ரநாரயணன். அவர் கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருமண்டங்குடியில், மார்கழி மாதம் கேட்டை நக்ஷத்ரத்தில் அவதரித்தார். அவருக்கு ஸ்ரீ ரங்கநாதன் மீது வெகு பிடித்தம். அவர் அருளிய இரண்டு திவ்ய பிரபந்தங்களான திருமாலையிலோ திருப்பள்ளியெழுச்சியிலோ வேறு எந்த பெருமாளைப் பற்றியும் பாடாத அளவுக்கு பிடித்தம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். திருமாலை அறியாதவர்கள் திருமாலையே அறியாதார் என்பர்.

பரசார: அப்படியா பாட்டி? அப்படியென்றால் நாங்கள் இருவரும் திருமாலையையும் கற்றுக் கொள்வோம். .

ஆன்டாள் பாட்டி: நீங்கள் அதைக் கற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. பெரிய பெருமாளுடைய மேன்மைகளை முழுமையாகச் சொல்வது திருமாலை. இந்த ஆழ்வாரின் தனிச்சிறப்பு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

வ்யாச: அது என்ன பாட்டி?

ஆண்டாள் பாட்டி: நீங்கள் ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதத்தின் முதல் ஸ்லோகத்தைக் கேட்டிருக்கிறீர்களா?

பராசர: ஆமாம் பாட்டி. (பாடுகிறான்) “கௌஸல்யா ஸுப்ரஜா ராம…”.

ஆண்டாள் பாட்டி: ஆமாம், அது ஸ்ரீ ராமாயணத்திலிருந்து வந்தது என்று தெரியுமா? இதனை ஸ்ரீ ராமரை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்காக விச்வாமித்திர மஹரிஷி பாடினார். அது போலவே, கண்ணன் எம்பெருமானை உறக்கத்திலிருந்து தன்னுடைய பாசுரங்களால் பெரியாழ்வாரும் எழுப்பினார். தொண்டரடிப்பொடியாழ்வார் ஸ்ரீரங்கநாதனுக்கு சுப்ரபாதமாக திருப்பள்ளியெழுச்சி பிரபந்தத்தைப் பாடினார்.

வ்யாச: ஓஹோ! இதைத்தான் மார்கழி மாதத்தில் பெரிய பெருமாளுக்கு முன்பாக அரையர் சுவாமி காலையில் திருப்பாவையுடன் பாடுகிறாரா?

ஆண்டாள் பாட்டி: ஆமாம், மிகச்சரி! இப்பொழுது நாம் இந்த பூக்களை மாலையாக தொடுத்துக் கொண்டு பெரிய பெருமாள் சன்னிதிக்கு செல்லலாம்.

அடியேன் கீதா ராமானுஜ தாஸி

ஆதாரம்:  http://pillai.koyil.org/index.php/2014/12/beginners-guide-thondaradippodi-azhwar/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

1 thought on “ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – தொண்டரடிப்பொடி ஆழ்வார்”

Leave a Comment