ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
பராசரனும் வ்யாசனும் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்குள் வேதவல்லி மற்றும் அத்துழாயுடன் நுழைகிறார்கள். பாட்டி திருப்பாவை அநுஸந்தித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவர்கள் அவள் முடிக்கும் வரை காத்துக் கொண்டிருந்தார்கள். பாட்டியும் அநுஸந்தானத்தை முடித்து விட்டு அவர்களை வரவேற்றாள்.
பாட்டி: வாருங்கள் குழந்தைகளே!
வ்யாசன் : பாட்டி, சென்ற முறை நீங்கள் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருக்குமாரர்களைப் பற்றி கூறுவதாகச் சொன்னீர்கள். அவர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்!
பாட்டி: ஆமாம் வ்யாசா! இன்றைக்கு நாம் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருக்குமாரர்களைப் பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம். சென்ற முறை சொன்னது போல, தனது ஆ்சார்யரான நம்பிள்ளையின் அருளாலும், நம்பெருமாளின் அருளாலும், வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கு, பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்ற இரு புதல்வர்கள் பிறந்தனர். இருவரும் ராமலக்ஷ்மணர்களைப் போல வளர்ந்து நம் சம்ப்ரதாயத்திற்கு பல கைங்கர்யங்களைச் செய்தனர்.
நம்பிள்ளை பரமபதத்தையடைந்தபின் வடக்குத் திருவீதிப் பிள்ளை நமது சம்ப்ரதாயத்தின் அடுத்த ஆ்சார்யராகி தனது இரு புதல்வர்களுக்கு தமது ஆசார்யரான நம்பிள்ளையிடமிருந்து கற்ற அர்த்தங்களையெல்லாம் கற்றுக் கொடுக்கலானார். சிறிது காலத்திற்குப் பின் வடக்குத் திருவீதிப்பிள்ளை தனது ஆசார்யரான நம்பிள்ளையை த்யானித்துக்கொண்டே தம் சரம திருமேனியை விட்டு பரமபதத்தையடைந்தார். அதன் பிறகு பிள்ளை லோகாசார்யர் நம் சம்ப்ரதாயத்தின் அடுத்த ஆசார்யரானார்.
அத்துழாய்: பாட்டி, பிள்ளை லோகாசார்யர் தேவப்பெருமாளின் மறு அவதாரம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
பாட்டி: ஆம், நீ கேட்டது சரி தான் அத்துழாய்! பிள்ளை லோகாசார்யர் தேவப் பெருமாளே தான். பிள்ளை லோகாசார்யர் தமது இறுதி நாட்களில் ஜோதிஷ்குடியில் நாலூர் பிள்ளையிடம் திருமலை ஆழ்வாருக்கு (திருவாய்மொழிப்பிள்ளை என்ற பெயர் கொண்டவர் ) வ்யாக்யானங்களைச் சொல்லித் தருமாறு பணித்தார். திருமலையாழ்வார் தேவப்பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்ய காஞ்சிபுரத்திற்குச் சென்ற பொழுது, அருகில் இருந்த நாலூர் பிள்ளையிடம், “நான் உமக்கு ஜோதிஷ்குடியில் சொன்னதைப் போல, நீர் திருமலையாழ்வாருக்கு அருளிச்செயல்களின் அர்த்தங்களைச் சொல்லித்தரவும்” என்றார்.
வேதவல்லி : பாட்டி, ஏன் பிள்ளை லோகாசார்யர் தனது இறுதி நாட்களை ஜோதிஷ்குடியில் கழித்தார் ? அவர் ஸ்ரீரங்கத்தில் பிறந்தவராயிற்றே?
பாட்டி: பிள்ளை லோகாசார்யர், அனைவரது உஜ்ஜீவனத்திற்காக, ஆழ்வார் பாசுரங்களின் ஆழ்ந்த அர்த்தங்களை எளிய தமிழில் அழகிய க்ரந்தங்களாக எழுதிய ஒரு சிறந்த ஆசார்யராவார். பலர், ஸம்ஸ்க்ருதத்தையோ தமிழையோ நிரம்பக் கற்காதிருக்கலாம். ஆனால் அவர்கள் பூர்வாசார்யர்களின் க்ரந்தங்களைப் படித்துப் பயன்பெற விரும்பலாம். அவர்களின் நலனிற்காக, பிள்ளை லோகாசார்யர் மிகுந்த கருணையோடு தன் ஆசார்யரிடம் கற்றதை எளிமையாகவும் சுருக்கமாகவும் எழுதி வைத்தார். ஸ்ரீவசனபூஷணம் என்பது நம் சம்ப்ரதாயத்தின் அர்த்தங்களைச் சொல்ல வந்த அவரது தலைசிறந்த படைப்பாகும். நமது ப்ரமாணத்தை ரக்ஷித்த முக்கிய ஆசார்யனாவார் நம் பிள்ளை லோகாசார்யர் (நம் சம்ப்ரதாயத்தின் ஞானாதாரத்தை வளர்த்துக் காத்தவர் அவர்).
பிள்ளை லோகாசார்யர் நமது ப்ரமாணத்தை மட்டுமில்லை நமது சம்ப்ரதாயத்தின் ஆணிவேறான ஸ்ரீரங்கம் நம்பெருமாளையும் காத்தவர். ஸ்ரீரங்கத்தில் எல்லாம் சீராக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, திடீரென முகலாயர்களின் படையெடுப்பைப் பற்றிய செய்தி காட்டுத் தீயைப் போல பரவியது. முகலாய மன்னர்கள் சொத்துக்கள் மிகுந்த கோயில்களை குறி வைப்பார்கள் என்பது யாவரும் அறிந்ததே. அதனால் அனைவரும் மிகுந்த கவலை கொண்டார்கள். பிள்ளை லோகாசார்யர் (மிகுந்த மூத்த ஸ்ரீவைஷ்ணவரானதால்) நிலைமையை சீர்தூக்கிப் பார்த்தார். சில ஸ்ரீவைஷ்ணவர்களை பெரிய பெருமாளுக்கு முன் ஒரு சுவற்றை எழுப்பச் சொல்லிவிட்டு, நம்பெருமாளுடனும், உபய நாய்ச்சியார்களுடனும் தெற்கை நோக்கி செல்லத் தொடங்கினார். அவருக்கு மிகுந்த வயதான போதிலும், தனது உடலைப் பற்றிக் கவலை கொள்ளாமல், நம்பெருமாளுடனே பயணிக்கலானார். காட்டுவழியே சென்று கொண்டிருந்த பொழுது, சில கொள்ளையர்கள் அவர்களை வழிமறித்து, நம்பெருமாளின் நகைகளை அபகரித்தனர். பிள்ளை லோகாசார்யர் அவர்களின் மனதை மாற்றியதால், அவர்கள் அவரைச் சரணடைந்து நகைகளைத் திரும்பக் கொடுத்தனர்.
பராசரன்: தேவப்பெருமாளின் அவதாரமாகத்தான் இருந்திருக்க வேண்டும், தியாகத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறாரே!
பாட்டி: ஆம் பராசரா, அதனால் தான் தேவப்பெருமாள் நம் சம்ப்ரதாய பெருமாள் என்றழைக்கப்படுகிறார். பிள்ளை லோகாசார்யர் ப்ரமாண ரக்ஷணம் (க்ரந்த ரூபத்திலிருக்கும் நம் ஸம்ப்ரதாயத்தை காத்தல்) மட்டுமின்றி ப்ரமேய ரக்ஷணத்திற்கும் (நம்பெருமாளை காத்தல்) காரணமாயிருந்தார். ஒரு உண்மையான ஸ்ரீவைஷ்ணவனுக்கு எடுத்துக்காட்டாய் நம்பெருமாளின் பாதுகாப்பைப் பற்றியே எண்ணி இருந்தார். பெரியாழ்வார் எப்படி நம்பெருமாள் திருமேனியைப் பற்றியே எண்ணி அவர்க்கு பல்லாண்டு பாடினாரோ, பிள்ளை லோகாசார்யரும் நம்பெருமாளின் அர்ச்சாரூபத்தை ஒரு குழந்தையாகவே பாவித்து, தன் உயிரே போகும் தருவாயிலும், முகலாய மன்னர்கள் நம்பெருமாளை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. நீங்கள் அடுத்த முறை பெருமாள் கோயிலுக்குச் செல்லும் போது, நம்முடைய இன்றைய சம்ப்ரதாயத்தின் நன்னிலை அவர்களைப் போல ஆயிரக்கணக்கான ஸ்ரீவைஷ்ணவர்கள் த்யாகத்தினால் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அவர்கள், பின்வரும் சந்ததியினர் அனைவரும் பயனுறவேண்டும் என்றே நம்பெருமாளையும் சம்ப்ரதாயத்தையும் காக்க கஷ்டப்பட்டனர். நாம் அவர்களுக்கு எந்த கைமாறையும் செலுத்த முடியாது தான் – ஆனால் அவர்களின் தியாகங்களை நன்றியோடு நினைவில் கொண்டு, நம் சம்ப்ரதாயத்தை மதித்து அதனை அடுத்த தலைமுறையினர்க்கு கொண்டு செல்ல முயலவேண்டும்.
அத்துழாய்: பாட்டி, பிள்ளை லோகாசார்யரின் இளைய தம்பி, அழகிய மணவாள பெருமாள் நாயனாரைப் பற்றிச் சொல்லுங்களேன்.
பாட்டி: நாயனார் நம் சம்ப்ரதாயத்தின் சீரிய கருத்துக்களையொட்டி பல க்ரந்தங்களை எழுதினார். அவற்றில் ஆசார்யஹ்ருதயம் மிகச் சிறந்ததாகும். பெரியவாச்சான் பிள்ளையைப் போன்ற பெரிய ஆசார்யர்களை ஒத்த ஞானத்தை உடையவயராய் அவரை அனைவரும் மதித்தனர். அவரை அனைவரும் “ஜகத் குருவரானுஜ – லோகாசார்யரின் இளைய தம்பி” என்று அழைத்தனர். அவரது க்ரந்தங்கள் ஞானத்தைப் பிரகாசிக்கச் செய்யும் இரத்தினங்கள் என்றே கொள்ள வேண்டும். அவையில்லாமல் நம் சம்ப்ரதாயத்தில் பல அர்த்தங்கள் சாமான்ய மனிதர்களைச் சென்று சேர்ந்திருக்க முடியாது. மாமுனிகள் நாயனாரையும் அவரது படைப்புக்களையும் போற்றி, பிள்ளை லோகாசார்யருக்கு அடுத்து இவர் தாம் சம்ப்ரதாயத்துக்கு பல கைங்கர்யங்களைச் செய்துள்ளதாகச் சொல்கிறார். நாயனார் தன் திருமேனியை விட்டு பரமபதத்துக்கு ஏக எண்ணினார். பிள்ளை லோகாசார்யர், நாயனார் பரமப்பதத்திற்கு ஏகிய பொழுது, துக்க சாகரத்தில் மூழ்கியவராய் அவரது திருமுடியை தன் மடியில் வைத்து அழுதார். நாயனாரை இந்த உலகம் குறுகிய காலத்தில் இழந்த ஒரு சிறந்த ஸ்ரீவைஷ்ணவராய் பார்க்கிறார், பிள்ளை லோகாசார்யர்.
வ்யாசன்: பிள்ளை லோகாசார்யர் மற்றும் நாயனாரின் வாழ்க்கை வரலாறு மிகுந்த சுவாரஸ்யமானதாகவும், உணர்ச்சிவசப்படச் செய்வனவாகவும் இருந்தன.
பாட்டி: ஆம், வ்யாசா. நமது ஆசார்யர்களைப் பற்றியும் அவர்களது வாழ்க்கையைப் பற்றியும் பேசுகையில் நேரம் போவதே தெரிவதில்லை. வெளியே இருட்டி விட்டது. நீங்களெல்லாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும். அடுத்து நாம் சந்திக்கும் பொழுது, பிள்ளை லோகாசார்யரின் சிஷ்யர்களைப் பற்றிச் சொல்கிறேன்.
குழந்தைகள் அவரவர் வீட்டிற்குச் செல்லும் பொழுது வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஆகியோர்களைப் பற்றியும் அவர்களது வாழ்க்கைகளைப் பற்றியும் நினைத்துக் கொண்டே சென்றனர்.
அடியேன் பார்கவி ராமாநுஜதாசி
ஆதாரம் : http://pillai.koyil.org/index.php/2016/09/beginners-guide-pillai-lokacharyar-and-nayanar/
வலைத்தளம் – http://pillai.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/