ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – நம்பிள்ளையின் சிஷ்யர்கள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< நம்பிள்ளை

ஆண்டாள் பாட்டி மடப்பள்ளியில் வேலை செய்து கொண்டிருக்கையில் பராசரன், வ்யாசனோடு  வேதவல்லியும் அத்துழாயும் பாட்டியின் வீட்டிற்கு வருகின்றனர். கூடத்தில்  குழந்தைகளின் பேச்சுக்குரல் கேட்டு பாட்டி அங்கு வந்து அவர்களை வரவேற்றார்.

பாட்டி: வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக்கொண்டு கோயில் பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.  சென்ற முறை நாம் நம்முடைய ஆசார்யரான நம்பிள்ளையைப் பற்றித் தெரிந்து கொண்டோம். நான் சென்ற முறை சொன்னது போலே இன்று நாம், நம்பிள்ளையின் பிரதான சிஷ்யர்களான வடக்குத் திருவிதிப் பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர், ஈயுண்ணி  மாதவப் பெருமாள், நடுவில் திருவீதிப் பிள்ளை ஆகியோரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

வ்யாசன்: பாட்டி, நம்பிள்ளைக்கு பல சிஷ்யர்கள் இருந்திருக்கிறார்களே, அவர்களைப் பற்றி எங்களுக்குச் சொல்கிறீர்களா?

பாட்டி: சரி, அவர்களைப் பற்றி ஒவ்வொருவராக அறிந்து கொள்வோம். நம்பிள்ளையின் சிஷ்யரான, தன்னிகரற்ற வியாக்கியான சக்கரவர்த்தியான பெரியவாச்சான் பிள்ளையைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.  சேங்கனூர் (சங்கநல்லூர்) யாமுனரின் புதல்வராக அவதரித்தவருக்கு, கிருஷ்ணன் என்ற பெயரிட்டனர்; பிற்காலத்தில் பெரியவாச்சான் பிள்ளை என்று அழைக்கப்பட்டார். நம்பிள்ளையின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவர்; அவரிடமே எல்லா சாஸ்திரப் பொருட்களைக் கற்றறிந்தவர். நாயனாராச்சான் பிள்ளை என்பவரைத் தம் புத்திரராக ஸ்வீகரித்தவர். திருக்கண்ணமங்கை எம்பெருமான் திருமங்கையாழ்வாரின் பாசுரப் பொருளை  திருமங்கையாழ்வாரிடமே கற்றறியும் பொருட்டு – திருமங்கையாழ்வார் நம்பிள்ளையாகவும் அருளிச்செயலின் பொருள் கற்கும் பொருட்டு எம்பெருமானே பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதரித்தனர் என்று சொல்வார்கள்.

பெரியவாச்சான் பிள்ளை – சேங்கனூர் (சங்கநல்லூர்)

வ்யாசன்: பாட்டி, பெரியவாச்சான் பிள்ளையை ஏன் வ்யாக்யானச் சக்கரவர்த்தி என்று அழைக்கின்றனர் ?

பாட்டி: அனைத்து அருளிச்செயல்களுக்கும் வ்யாக்யானம் எழுதிய ஆசார்யர் பெரியவாச்சான் பிள்ளை ஒருவர் மட்டுமே. ஸ்ரீ ராமாயணத்திலும் அருளிச்செயலிலும் அவர் நிகரற்ற தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் பாசுரப்படி ராமாயணம் என்ற க்ரந்தம் அருளினார்; அதில் முழு ஸ்ரீ ராமாயணத்திற்கும் மிகச்சுருக்கமாக  ஆழ்வார்களின் பாசுரங்களின் சொற்களைக்கொண்டே பொருளை எழுதினார். அவருடைய வ்யாக்யானம் இல்லையென்றால் அருளிச்செயலின் உட்கருத்துக்களை ஒருவராலும் பேசவோ புரிந்து கொள்ளவோ இயலவே இயலாது. அவர் அனைத்து பூர்வாசார்யர்களின் க்ரந்தங்களுக்கும் வ்யாக்யானங்கள் எழுதியுள்ளார்.

நம்பிள்ளையின் மற்றோர் சிஷ்யரான வடக்குத் திருவீதிப் பிள்ளை, நம்பிள்ளையின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவராவார். ஸ்ரீரங்கத்தில் க்ருஷ்ணபாதர் என்ற பெயருடன் அவதரித்த அவர், ஆசார்ய நிஷ்டையில் மூழ்கியவர். அவருடைய ஆசார்யரான நம்பிள்ளையின் அனுக்ரஹத்தினால் வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கு ஒரு மகன் பிறந்தார். நம்பிள்ளையின் (லோகாசார்யர் என்றும் அழைக்கப்பட்டவர்) அனுக்ரஹத்தினால் பிறந்ததனால் அவருக்கு பிள்ளை லோகாசார்யார்  என்று பெயரிட்டார். நம்பிள்ளையை லோகாசார்யர் என்று அழைக்கப்படுவது ஏன் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா?

வ்யாசன்: ஆமாம், பாட்டி. நம்பிள்ளையை லோகாசார்யர் என்று அழைத்தவர் கந்தாடை தோழப்பர். அந்தக் கதையும் எங்களுக்கு நினைவிருக்கிறது.

வடக்குத் திருவீதிப் பிள்ளைகாஞ்சிபுரம்

பாட்டி:  வடக்குத் திருவீதிப் பிள்ளை தம் பிள்ளைக்கு பிள்ளை லோகாசார்யர் என்று பெயரிட, நம்பிள்ளை அந்தக் குழந்தைக்கு அழகிய மணவாளன் என்று பெயரிடும் தம்முடைய எண்ணத்தை தெரிவித்தார். விரைவிலேயே, நம்பெருமாள் வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கு இன்னொரு பிள்ளையை அனுக்ரஹிக்க இரண்டாவது பிள்ளை அழகிய மணவாளனின் அனுக்ரஹத்தினால் பிறந்ததினால் அக்குழந்தைக்கு   அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்று பெயரிட்டு நம்பிள்ளையின் அவாவை நிறைவேற்றினார். இரண்டு பிள்ளைகளும் ராமலக்ஷ்மணர்களாய் அறிவில் சிறந்தவர்களாக வளர்ந்து நம் சம்பிரதாயத்திற்கு பல பெரிய கைங்கர்யங்களைச் செய்தனர். அவ்விருவரும் நம் சம்பிரதாயத்தின் சிறந்த ஆசார்யர்களான நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை ஆகியோரின் அனுக்ரஹத்தையம் வழிகாட்டலையும் பெற்றிருந்தனர்.

ஒரு தடவை வடக்குத் திருவீதிப் பிள்ளை, நம்பிள்ளையைத் தம்முடைய திருமாளிகைக்கு (ஸ்ரீவைஷ்ணவர்கள் கிருஹத்தை திருமாளிகை என்று தான் சொல்ல வேண்டும்) ததியாராதனத்திற்கு அழைக்க, அதனை ஏற்று நம்பிள்ளையும் அவருடைய திருமாளிகைக்குச் சென்றார். அங்கே கோயிலாழ்வாரிடத்தில் (பெருமாள் சந்நிதியில்) தாம் நம்மாழ்வாரின் பாசுரங்களுக்கு உரைத்த பாடங்களுக்கும் காலக்ஷேபங்களுக்குமான விளக்கங்கள், மிகத் தெளிவாகவும் நேர்த்தியுடனும் ஏடுகளில் எழுதப்பட்டு வைத்திருந்ததைக் கண்டார்.  ஆவல் மேலிட அவற்றுள் சிலவற்றை வாசித்தவர் அவை என்னவென்று வடக்குத் திருவீதிப் பிள்ளையிடம் கேட்டார். ஒவ்வொரு நாளும் நம்பிள்ளை செய்த காலக்ஷேபங்களைக் கேட்டு அன்றைய இரவில் அவற்றைத் தாம் எழுதி வைத்தவையே அவை என்று சொன்னார். நம்பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளையிடம் தன்னுடைய அனுமதியின்றி அவ்வாறு எழுதியது ஏன்; பெரியவாச்சான் பிள்ளையுடைய  வ்யாக்யானங்களுக்கு (ஆழ்வார்களின் பாசுரங்களுக்கான விளக்கங்கள்) போட்டியாகச் செய்தீரோ என்றும் கேட்டார். வடக்குத் திருவீதிப் பிள்ளை குற்றவுணர்வுடன் நம்பிள்ளையின் திருவடித் தாமரைகளில் பணிந்து பிற்காலத்தில் பயன்படக் கூடிய குறிப்பிற்காகவே அவற்றை  எழுதி வைத்ததாக சொன்னார்.  அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நம்பிள்ளை அந்த வ்யாக்யானத்தை புகழ்ந்து வடக்குத் திருவீதிப் பிள்ளையை பாராட்டினார். வடக்குத் திருவீதிப் பிள்ளை தம்முடைய ஆசார்யரிடத்தில் கொண்டிருந்த அபிமானமும் அவருடைய ஆழ்ந்த ஞானமும் அவ்வளவு உயர்ந்ததாகும்.

பராசர: வ்யாக்யானம் என்னவாயிற்று? வடக்குத் திருவீதிப் பிள்ளை அதனை எழுதி முடித்தாரா?

பாட்டி: ஆமாம், வடக்குத் திருவீதிப் பிள்ளை அந்த வ்யாக்யானத்தை எழுதி முடிக்க, திருவாய்மொழிக்கான அவருடைய வ்யாக்யானமே ஈடு முப்பத்தியாராயிரப்படி என்று பிரபலமாக வழங்கப்படுகிறது. நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளையை, ஈயுண்ணி மாதவப் பெருமாளின் வழித்தோன்றல்களுக்கு கற்பிக்கும் பொருட்டு அந்த வ்யாக்யானத்தை ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் தருமாறு பணித்தார்.

nampillai-goshti1நம்பிள்ளையின் காலக்ஷேபக் கோஷ்டிவலப்பக்கத்திலிருந்து இரண்டாமிடத்தில் ஈயுண்ணி மாதவப் பெருமாள்

வேதவல்லி : பாட்டி,  நம்பிள்ளை அளித்த வ்யாக்யானத்தை ஈயுண்ணி மாதவப் பெருமாள் என்ன செய்தார்?

பாட்டி: ஈயுண்ணி மாதவப் பெருமாள் அவற்றை தம்முடைய மகனான ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளுக்கு உபதேசித்தார். ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் அவற்றைத் தம்முடைய அன்பிற்கு பாத்திரமான சிஷ்யர் நாலூர் பிள்ளைக்கு உபதேசித்தார். இவ்வாறாக ஒவ்வொரு ஆசார்யரிடமிருந்து சிஷ்யர் என்ற முறையில் இவை உபதேசிக்கப்பட்டு வந்தது. நாலூர் பிள்ளையின் அன்பிற்கு பாத்திரமான சிஷ்யரும் மகனும் நாலூராச்சான் பிள்ளையாவார். நாலூராச்சான் பிள்ளை நாலூர் பிள்ளையின் திருவடித் தாமரைகளின் கீழ்மர்ந்து ஈடு முப்பத்தாறாயிரப்படியைக் கற்றார்.  நாலூராச்சன் பிள்ளைக்கு இருந்த பல சிஷ்யர்களில் திருவாய்மொழிப் பிள்ளையும் ஒருவர். நாலூர் பிள்ளையும் நாலூராச்சான் பிள்ளையும் தேவப் பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்யும் பொருட்டு காஞ்சிபுரம் செல்லும் பொழுது, எம்பெருமானே நாலூராச்சான் பிள்ளையை திருவாய்மொழிப் பிள்ளைக்கு ஈடு வ்யாக்யானம் போதிக்குமாறு பணித்தார். திருவாய்மொழிப் பிள்ளையும் மற்றோரும் ஈடு வ்யாக்யானத்தை நாலூராச்சான் பிள்ளையிடம் பயின்று அதனை ஈட்டுப் பெருக்கர் (ஈட்டு வியாக்கியானத்தை வளர்ப்பவர்) என்று கொண்டாடப்படும் மணவாள மாமுனிகளுக்கு கற்பித்தார். இவ்வாறாக வ்யாக்யானம் மணவாள மாமுனிகளை அடையும் என்று அறிந்திருந்ததனாலேயே, நம்பிள்ளை அதனை ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்குக் கொடுத்தார்.

அத்துழாய்: பாட்டி, ஈயுண்ணி மாதவப் பெருமாள் என்பதிலும் ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் என்பதிலும் “ஈயுண்ணி” என்ற சொல்லின் பொருள் என்ன?

பாட்டி: “ஈதல்” என்ற தமிழ் சொல்லுக்கு தர்மம் என்று பொருள். “உண்ணுதல்” என்றால் சாப்பிடுவது. ஈயுண்ணி என்பதன் பொருள் பிற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உணவளித்த பின்பே தாம் உண்பவர் என்பதாகும்,

நம்பிள்ளையின் மற்றோரு பிரதான சிஷ்யர் பின்பழகிய பெருமாள் ஜீயர் ஆவார். க்ருஹஸ்தரான நம்பிள்ளைக்குத் தொண்டு புரிந்த ஓர் சன்யாசி இவர்; சன்யாசியான நஞ்சீயர் பட்டருக்கு தொண்டு புரிந்தது போலே.  நம்பிள்ளைக்கு வெகு ஆப்தமான சிஷ்யர் இவர்; இவரைப் பின்பழகராம் பெருமாள் ஜீயர் என்றும் அழைப்பார்கள். அவர் ஆசார்யனிடத்தில் மிகுந்த மரியாதையும் அபிமானமும் அன்பும் கொண்டு தொண்டு புரிந்து ஒரு உண்மையான ஸ்ரீவைஷ்ணவருக்கு எடுத்துக்காட்டாக  இருந்து காட்டியவர். அவருடைய ஆசாரிய அபிமானம் (பக்தி) வெகுவாகப் போற்றத்தக்கதாகும்.

nampillai-pinbhazakiya-perumal-jeer-srirangam

நம்பிள்ளையின் திருவடித்தாமரைகளில் பின்பழகிய பெருமாள் ஜீயர், ஸ்ரீரங்கம்

பராசர : பாட்டி, நம்பிள்ளைக்கும் அவருடைய சிஷ்யர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்களை பற்றி இன்று நீங்கள் சொல்லவே இல்லையே. அவர்களுடைய உரையாடல்களில் சுவையானவற்றைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்களேன்.

பாட்டி : நம்முடைய பூர்வாசார்யர்கள் எப்பொழுதும் பகவத் விஷயத்தையும் பாகவத கைங்கர்யத்தைப் பற்றியுமே பேசுவார்கள். ஒரு தடவை பின்பழகிய பெருமாளுக்கு உடல் சுகமின்றி போக, அவர் தாம் விரைவாக குணமடைய எம்பெருமானிடம் ப்ரார்த்திக்குமாறு பிற ஸ்ரீவைஷ்ணவர்களை கேட்டார்.

நம்முடைய சம்பிரதாயத்தில், ஒரு ஸ்ரீவைஷ்ணவன் எதையும் எம்பெருமானிடம் வேண்டக்கூடாது – அது தேஹ அசௌகரியங்களில் இருந்து குணம் பெறக் கோருவதானாலும் கூட. இதனைக் கண்ட நம்பிள்ளையின் சிஷ்யர்கள் அதைப் பற்றி நம்பிள்ளையிடம் விளக்கம் கேட்டனர். முதலில் நம்பிள்ளை அவர்களிடம் “சென்று அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்த எங்களாழ்வானிடம் கேளுங்கள்”  என்று சொன்னார். எங்களாழ்வான் “ஒருக்கால் அவர் ஸ்ரீரங்கத்தின் மேல் கொண்ட அபிமானத்தால் மேலும் சிலகாலம் அங்கிருக்க எண்ணியிருப்பார்” என்று கூறினார். நம்பிள்ளை தம் சிஷ்யர்களை அம்மங்கி அம்மாளிடம் சென்று அவரிடம் கேட்குமாறு கூற, அவரோ “நம்பிள்ளையின் காலக்ஷேப கோஷ்டியை விட்டுச் செல்ல யார் தாம் விரும்புவார்கள்; எனவே நம்பிள்ளையின் காலக்ஷேபத்தைக் கேட்கும் பொருட்டே அவர் அவ்வாறு வேண்டியிருப்பார்” என்றார். முடிவில் நம்பிள்ளை தாமே ஜீயரைக் கேட்க, ஜீயர் கூறினார் “உண்மையான காரணத்தை நீர் அறிந்திருந்தாலும் அடியேன் வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். அடியேன் இன்னும் இங்கிருக்க என்னும் காரணம் என்னவென்று சொல்லுகிறேன் தினமும் நீங்கள் நீராடிய பின்பு, தங்களின் திவ்ய திருமேனி தரிசனமும், தங்களுக்கு விசிறி வீசும் கைங்கர்யமும் அடியேனுக்கு  கிடைக்கும். அத்தகைய தொண்டை விட்டுவிட்டு இத்தனை விரைவாக பரமபதம் செல்ல எவ்வாறு அடியேனால் இயலும்?”  இவ்வாறாக ஒரு சிஷ்யனுடைய லக்ஷணத்தை – தம்முடைய ஆச்சார்யரின் திவ்ய சொரூபத்தில் முழுதும் ஈடுபட்டிருத்தல், பின்பழகராம் பெருமாள் ஜீயர் வெளிப்படுத்தினார். இதனைக் கேட்ட அனைவரும் ஜீயருக்கு நம்பிள்ளையின் மேலிருந்த ஈடுபாட்டைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தனர். பின்பழகிய பெருமாள் ஜீயர் பரமபதத்தைக் கூட மறுதலிக்குமளவும் நம்பிள்ளையிடம் ஈடுபாடு கொண்டிருந்தார். அவருடைய ஆசார்ய நிஷ்டை அத்தனை ஆழமானது.

இறுதியாக, நம்பிள்ளையின் மற்றோர் சிஷ்யரான நடுவில் திருவீதிப் பிள்ளையைப் பற்றி பார்க்கலாம். தொடக்கத்தில், நடுவில் திருவீதிப் பிள்ளைக்கு நம்பிள்ளையின் மீது அத்துணை அபிமானம் இருக்கவில்லை. கூரத்தாழ்வான், பராசர பட்டர் வழிவந்தவராகையால் தம்முடைய  பாரம்பரியத்தின் பெருமையினால் அவர் நம்பிள்ளையிடத்தில் பணிவு கொண்டவராக இல்லை. அவர் எவ்வாறு நம்பிள்ளையின் திருவடித்தாமரைகளில் பணிந்தார் என்பதைப் பற்றி ஒரு சுவையான கதை உண்டு.

nampillai-goshti1

நம்பிள்ளை காலக்ஷேப கோஷ்டி – இடப்புறத்திலிருந்து மூன்றாமிடத்தில் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்

வ்யாசன்: கூரத்தாழ்வானின் வழித்தோன்றலிடம் கர்வமும் அகந்தையும் இருந்தன என்பது எத்தனை முரண்பாடானது. அந்த கதையைச் சொல்லுங்கள் பாட்டி.

பாட்டி:  ஆமாம்! ஆனால்  அத்தகைய காரணமற்ற அகந்தை வெகு காலம் நீடித்திருக்கவில்லை. என்ன இருந்தாலும் கூரத்தாழ்வானின் பேரனல்லவா அவர். ஒருமுறை, நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் ராஜாவுடைய அரண்மனைக்கு செல்லுகையில் வழியில் பின்பழகிய பெருமாள் ஜீயரைக் காண அவரைத் தம்முடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அரசன் அவர்களை வரவேற்று நல்ல ஆசனமளித்து அமரச் செய்தான். கற்றறிந்த அரசனான அவன், பட்டருடைய அறிவாற்றலைச் சோதிக்கும் பொருட்டு அவரிடம் ஸ்ரீராமாயணத்திலிருந்து ஒரு கேள்வி கேட்டான். “ஸ்ரீராமன்  தசரதனுடைய அன்பு மகனான தாம் ஒரு எளிய மனிதன் என்று சொல்கிறார். ஆனால் ஜடாயுவின் பிராணன் போகும் காலத்தில் ஸ்ரீராமன் அவருக்கு ஸ்ரீவைகுண்டம் அளிக்கிறார். எளிய மானிடனான அவர்,  எவ்வாறு ஒருவருக்கு வைகுண்டத்தை அளிக்க முடியும்” என்று அரசன் கேட்டான். இதற்கு பதிலளிக்க இயலாமல் பட்டர் வாயடைத்துப் போனார். அப்பொழுது அங்கே வேறு ஏதோ பணியின் காரணமாக அரசனுடைய கவனம் திரும்ப, பட்டர் ஜீயரிடம் இதற்கு நம்பிள்ளையின் விளக்கம் என்னவென்று கேட்க, ஜீயர் “பூரணமாக தர்மத்தை அனுஷ்டிக்கும் ஒருவர் எல்லா உலகத்தையும் ஆள்வான் என்று நம்பிள்ளை விளக்குவார்” என்று பதிலளித்தார்.  அரசனுடைய கவனம் இவர்கள் பக்கம் திரும்ப, பட்டர் இந்த விளக்கத்தை அரசனிடம் கூறினார். இதனை ஏற்ற அரசனும் பட்டருக்கு பல வகையான பரிசுகள் அளித்து   கௌரவப்படுத்தினான். நம்பிள்ளையிடம் மிகுந்த நன்றியுணர்வு மேலிட பட்டர், ஜீயரைத் தம்மை நம்பிள்ளையிடம் அழைத்துக் கொண்டு போகுமாறு வேண்டினார். நம்பிள்ளையின் திருமாளிகைக்குச் சென்று தனது பெருஞ்செல்வத்தை  நம்பிள்ளையின் திருவடித் தாமரைகளில் சமர்ப்பித்தார். பட்டர் “இத்தனை செல்வங்களும் உம்முடைய உபதேசங்களிலிருந்த  ஒரே ஒரு சிறு விளக்கத்தினால் கிடைத்தது.  இத்தனை காலமும் உம்முடைய உயர்ந்த வழிகாட்டுதலோ சேர்க்கையோ இல்லாமல் வீணே போயிற்று. இன்று தொடக்கமாக நான் உமக்குத் தொண்டு புரிந்து சம்ப்ரதாயக் கருத்துக்களை கற்றுக்கொள்வேன் என்று உறுதி கொண்டுள்ளேன்” என்று நம்பிள்ளையிடம் கூறினார். பட்டரை அணைத்துக் கொண்டு நம்பிள்ளை அவருக்கு நம் சம்ப்ரதாயத்தின் சாரத்தை உபதேசித்தார். குழந்தைகளே, இந்த கதையிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்வது என்ன?

வேதவல்லி: முன்னோர்களின் ஆசிகளாலேயே, பட்டர் சரியான இலக்கைச் சென்றடைந்தார் என்று தெரிந்து கொண்டேன்.

அத்துழாய்: நம்பிள்ளையின் ஞானத்தையும் மேன்மையையும் பற்றி நான் தெரிந்து கொண்டேன்.

பாட்டி: நீங்கள் இருவர் சொல்லுவதும் சரிதான். இந்த கதையிலிருந்து நாம் அறிந்து கொள்ள இன்னொரு விஷயமும் உண்டு. எம்பெருமான் எப்படி ஆசார்யர்கள் வழியாகவே நம்மை ஏற்றுக்கொள்வானோ, அது போலவே நாம் ஆசார்யனை அடைவதும் ஒரு ஸ்ரீவைஷ்ணவனின் உயர்ந்த சகவாசத்தால் மாத்திரமே முடியும். இதனைத்தான் நாம் ஸ்ரீவைஷ்ணவ சம்பந்தம் என்றும் அடியார்கள் சம்பந்தம் என்றும் சொல்கிறோம். இங்கே, பட்டரை நம்பிள்ளையிடம் சென்றடையச் செய்த உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவர் எவர்?

பராசர: பின்பழகிய பெருமாள் ஜீயர்!

பாட்டி: ஆமாம்! இதனால் பாகவத சம்பந்தத்தின் ஏற்றத்தைத் தெரிந்து கொள்ளலாம்.  ஜீயர், நம்பிள்ளையின் உகந்த சிஷ்யராக இருந்து, பட்டருக்கு ஆசார்ய ஞானத்தையும் ஆசார்ய சம்பந்தத்தையும் அனுக்ரஹித்தார். நாமும் நம்பிள்ளையையும் அவருடைய சிஷ்யர்களின் திருவடித் தாமரைகளை பணிவோம். அடுத்த தடவை, நான் உங்களுக்கு வடக்குத் திருவீதிப் பிள்ளையைப் பற்றியும் அவருடைய உன்னதமான இரண்டு புத்திரர்களைப் பற்றியும் அவ்விருவர் நம் சம்ப்ரதாயத்திற்கு புரிந்த நிகரற்ற தொண்டினைப் பற்றியும் சொல்கிறேன்.

குழந்தைகள் எல்லாரும் நம்முடைய பல ஆசார்யர்களின் சிறப்பினையும் அவர்களின் திவ்ய கைங்கர்யங்களைப் பற்றியும் எண்ணியவாறு தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.

அடியேன் கீதா ராமானுஜ தாசி

ஆதாரம் : http://pillai.koyil.org/index.php/2016/09/beginners-guide-nampillais-sishyas/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/

1 thought on “ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – நம்பிள்ளையின் சிஷ்யர்கள்”

  1. அடியேன் இராமானுஜ தாசன், தங்களின் இச் சேவை மிக அறிய சேவை. தொடரட்டும்.

    Reply

Leave a Comment