ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – அஷ்டதிக்கஜங்கள் மற்றும் சில ஆசார்யர்கள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< அழகிய மணவாள மாமுனிகள்

பாட்டி: வாருங்கள் குழந்தைகளே, உங்கள் அனைவருக்கும் நாம் சென்ற முறை பேசியதெல்லாம் நினைவிருக்கும் என நினைக்கிறேன்.

குழந்தைகள் (ஒரே குரலில்): நமஸ்காரம் பாட்டி, நினைவு இருக்கு. நாங்கள் இன்று அஷ்டதிக்கஜங்கள் பற்றித் தான் கேட்க வந்திருக்கிறோம்.

பாட்டி: நல்லது, பேசலாம்.

பராசரன்: பாட்டி, அஷ்டதிக்கஜங்கள் என்றால் 8 சிஷ்யர்கள் இல்லையா, பாட்டி?

பாட்டி: பராசரன், நீ சொல்வது சரி. அஷ்டதிக்கஜங்கள் என்றால் மணவாள மாமுனிகளின் 8 முதன்மையான சிஷ்யர்கள் – பொன்னடிக்கால் ஜீயர், கோயில் அண்ணன், பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ஜீயர், எறும்பியப்பா, ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன், அப்பிள்ளை, அப்பிள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர்.

மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம்.

ponnadikkal-jiyar

பாட்டி: அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார்.

பராசரன்: பாட்டி, ஏன் அவரை பொன்னடிக்கால் ஜீயர் என்று அழைக்கிறார்கள்?

பாட்டி: பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள்.

பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செய்தி) அனுப்பினார். அதனால், மணவாள மாமுனிகள் பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலைக்கு அனுப்பினார்.

வ்யாசன்: பாட்டி, பொன்னடிக்கால் ஜீயர் வானமாமலைப் பெருமாளின் மாமனார் ஆவார், இல்லையா?

பாட்டி: ஆம், வ்யாசா! பொன்னடிக்கால் ஜீயர் தாம் நாச்சியார் விக்ரஹத்தை திருமலையிலிருந்து எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து தெய்வனாயகப் பெருமாளுக்குக் திருக்கல்யாணம் செய்து கொடுத்தார். அவரே கன்னிகாதானம் செய்து கொடுத்ததால், வானமாமலை எம்பெருமானும் “பெரியாழ்வரைப் போன்று பொன்னடிக்கால் ஜீயரும் எமது மாமனாரே” என்று அறிவித்தார்.

மாமுனிகளின் ஆணையைக் கொண்டு, பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நம் சம்ப்ரதாயத்தை வளர்த்தார், பொன்னடிக்கால் ஜீயர். இறுதியாக, தன் ஆசார்யரான மணவாள மாமுனிகளின் திருவடித்தாமரைகளைத் த்யானித்துக்கொண்டே தம் சரமத்திருமேனியை விட்டு, பரமபதத்தை அடைந்தார்.

பெருமானிடமும் ஆசார்யரிடமும் அத்தகைய அபிமானத்தை வளர்த்துக் கொள்வதற்கு பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமியின் திருவடித்தாமரைகளை ப்ரார்த்திப்போம், வாருங்கள்.

பாட்டி: நாம் அடுத்த விஷயமாக கோயில் அண்ணணைப் பற்றிப் பேசுவோம். மாமுனிகளின் ஆப்தசிஷ்யராகவும், அஷ்டதிக்கஜங்களில் ஒருவராகவும் ஆனவர். அவரது வாழ்க்கையில் அவரை மாமுனிகளின் திருவடிக்கு கொண்டு சேர்த்த ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது.

koilannan

பராசரன்: என்ன விஷயம் பாட்டி, அது ?

பாட்டி: முதலியாண்டானின் பரம்பரையில் பிறந்த கோயில் அண்ணனுக்கு, மாமுனிகளின் நிழலை ஏற்பதில் விருப்பம் இல்லை. இந்தச் சம்பவம் அவரை மணவாள மாமுனிகளின் திருவடித் தாமரைகளுக்குக் கொண்டு சேர்த்தது. கோயில் அண்ணன் ஸ்ரீரங்கத்தில் பல சிஷ்யர்களுடன் வாழ்ந்து வந்தார். ஸ்ரீ பாஷ்யகாரர் (ஸ்ரீ ராமானுஜர்) தாம் கோயில் அண்ணனை மணவாள மாமுனிகளின் சிஷ்யராகச் சொன்னார். முதலியாண்டானின் திருவடிச் சம்பந்தத்தை சரி வர உபயோகிக்குமாறு கோயில் அண்ணனைப் பணித்தார் அவர்.

எம்பெருமானார் அண்ணன் ஸ்வாமியின் கனவில் வந்து “நான் ஆதிசேஷன். மறுபடியும் மணவாள மாமுனிகளாய் பிறந்திருக்கிறேன்” என்று சொன்னார். நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் மாமுனிகளின் சீடர்களாகி உஜ்ஜீவனம் அடைவீர்களாக!” என்றார். கனவு கலைந்ததும் மிகுந்த அதிர்ச்சியுடன் எழுந்த அண்ணன் ஸ்வாமி தனது சகோதரர்களிடம் உணர்ச்சிபூர்வமாக நடந்ததை எடுத்துரைத்தார்.

அண்ணன் ஸ்வாமி மற்ற கந்தாடை குடும்பத்து ஆசார்ய புருஷர்களோடு ஜீயர் மடத்திற்குச் சென்று மாமுனிகளை ஆஸ்ரயித்தார். மாமுனிகள் வானமாமலை (பொன்னடிக்கால்) ஜீயரை அவர்களது பஞ்ச ஸம்ஸ்காரத்திற்கு தேவையானவற்றை தயார் செய்யுமாறு பணித்தார்.

குழந்தைகளே, கோயில் கந்தாடை அண்ணனின் சிறப்பான வாழ்க்கையிலிருந்து சில சம்பவங்களைப் பார்த்தோம். அவர் மாமுனிகளுக்கு மிகவும் பிரியமானவர். அவரைப் போன்ற ஆசார்ய அபிமானத்தைப் பெற அவரது திருவடித் தாமரைகளைத் தொழுவோம்.

அடுத்து, பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் என்ற பெயர் பெற்ற ‘மோர் முன்னார்’ ஐயரைப் பற்றிப் பார்ப்போம். இவர் மாமுனிகளின் அஷ்டதிக்கஜங்களில் ஒருவர். எம்பார் எவ்வாறு எம்பெருமானாரோடு இருந்தாரோ, அவ்வாறே இவரும் மாமுனிகளை விட்டுப்பிரியாமலே இருந்தார்.

OLYMPUS DIGITAL CAMERA

வேதவல்லி: பாட்டி, அவருக்கு ஏன் மோர் முன்னார் ஐயர் என்ற பெயர் வந்தது?

பாட்டி: சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா? தினமும் அவர் மாமுனிகள் சாப்பிட்ட சேஷப் பிரசாதத்தை (மிச்சத்தை) உண்ணுவார். மாமுனிகள் சாப்பிட்ட வாழை இலையிலேயே சாப்பிடுவார். மாமுனிகள் மோர் சாதத்துடன் முடிக்கும் பொழுது பட்டர்பிரான் ஜீயர் அந்த சுவை மாறாமல் இருப்பதற்காக மோர் சாதத்திலிருந்தே சாப்பிடத் தொடங்குவாராம். அதனால் அவர் மோர் முன்னர் ஐயர் என அழைக்கப்பட்டார்.

மாமுனிகளிடத்தே கைங்கர்யங்கள் பல செய்து சாஸ்த்ரார்த்தங்கள் அனைத்தையும் அவரிடம் கற்றார். மாமுனிகள் பரமபதித்த பின் அவர் திருமலையிலேயே தங்கி பல ஜீவாத்மாக்களை உஜ்ஜீவனம் அடையச் செய்தார். ஆசார்ய நிஷ்டை மிகுந்தவராதலால், “அந்திமோபாய நிஷ்டை” என்ற நூல் எழுதினார். அந்த க்ரந்தம் நமது ஆசார்ய பரம்பரையின் ஏற்றத்தையும், நமது பூர்வாசார்யர்கள் எவ்வாறு தத்தமது ஆசார்யர்களைச் சார்ந்தே இருந்தனர் என்றும் விளக்கவல்ல க்ரந்தமாகும். பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் மாமுனிகளுக்கு மிகவும் பிரியமான சீடராவார்.

பாட்டி: குழந்தைகளே, அடுத்து எறும்பியப்பா என்பவரைப் பற்றி உங்களுக்குச் சொல்லப் போகிறேன். அவரது இயற்பெயர் தேவராஜன். அவரது கிராமத்திலிருந்து கொண்டு அவரது தர்மத்தை அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் பொழுது, மணவாள மாமுனிகளைப் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க ஆசைப்பட்டார். அவர் மாமுனிகளோடு சில காலம் தங்கி இருந்து அனைத்து ரஹஸ்ய க்ரந்தங்களையும் கற்றறிந்து தனது கிராமத்திற்குத் திரும்பி கைங்கர்யம் செய்யலானார்.

eRumbiappA-kAnchi

அவர் எப்பொழுதும் தனது ஆசார்யரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார். ‘பூர்வ தினசர்யை’,’ உத்தர தினசர்யை’ (மாமுனிகளின் நித்யகர்மாக்களைப் பற்றிய வர்ணனை) என்ற இரண்டு க்ரந்தங்களை எழுதி மாமுனிகளுக்கு அனுப்பி வைத்தார். எறும்பியப்பாவின் நிஷ்டையை பார்த்து அவரைப் பெருமைப்படுத்தினார் மாமுனிகள். எறும்பியப்பாவிற்கு தன்னை வந்து பார்க்குமாறு அழைப்பு விடுத்தார்.

வ்யாசன்: பட்டர்பிரான் ஜீயர், பொன்னடிக்கால் ஜீயர், இவர்களைப் போல எறும்பியப்பாவும் தன் ஆசார்யனிடம் மிகுந்த பற்று கொண்டவர் இல்லையா, பாட்டி?

பாட்டி: ஆமாம், வ்யாஸா. “விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம்” என்பது அவரது முக்கிய க்ரந்தமாகும். எறும்பியப்பாவிற்கும் சேனாபதியாழ்வான் போன்ற அவரது சிஷ்யர்களுக்கும் நடக்கும் உரையாடல்களின் தொகுப்பாகும் இந்த க்ரந்தம்.

வேதவல்லி: பாட்டி, விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம் என்றால் என்ன?

பாட்டி: இந்த க்ரந்தம் நாம் ஆழ்வார் ஆசார்யர்களின் ஸ்ரீசூக்திகளைப் படித்துத் தவறாக புரிந்து கொள்வதால் வரும் குழப்பங்களை நீக்க வல்லது. எறும்பியப்பா சம்சாரத்தில் வைராக்கியம் வளர்த்துக் கொள்வதின் முக்கியத்துவத்தைச் சொல்லிக் கொடுக்கிறார். பூர்வாசார்யர்களின் ஞானம் மற்றும் அனுஷ்டானம் ஆகியவற்றில் ஈடுபாடு கொள்ளுமாறும் பணித்து நம்மை வழி நடத்துகிறார்.

பாட்டி: மணவாள மாமுனிகளை என்றும் நினைவில் கொண்ட எறும்பியப்பாவை நாமும் என்றும் நினைவில் கொள்வோம்.

பாட்டி: குழந்தைகளே, நாம் இப்பொழுது ப்ரதிவாதி பயங்கரம் அண்ணாவைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம், வாருங்கள். ஹஸ்திகிரிநாதராகப் பிறந்தவர், காஞ்சிபுரத்தில் தன் இளையபிராயத்தில் வேதாந்தாசார்யரின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர். அவர் பெரிய வித்வானாகி மற்ற ஸம்ப்ரதாயத்து வித்வான்களை வென்றார்.

pb-annan-kanchi

பின்னர் அவர் திருமலையில் தங்கி திருவேங்கடமுடையானுக்கு சேவை செய்யத் தொடங்கினார். மணவாளமாமுனிகளின் பெருமைகளைக் கேட்டவர், அவருக்கு சிஷ்யராக ஆசைப்பட்டார். ஸ்ரீரங்கத்தை வந்து மாமுனிகளின் மடத்தை அடைந்தார். அப்பொழுது மாமுனிகள் காலக்ஷேபம் செய்து கொண்டிருந்தார். அதனைக் கேட்ட அண்ணா பற்பல சாஸ்திரங்களில் மாமுனிகளுக்கு இருந்த அபார ஞானத்தை புரிந்து கொண்டார். மாமுனிகளிடம் சரணடைந்து அவரது சிஷ்யரானார்.

அண்ணன், எம்பெருமானின் மீதும் மாமுனிகளின் மீதும் பல க்ரந்தங்களைச் சாதித்தார். அவற்றில் வேங்கடேச சுப்ரபாதம், வேங்கடேச ப்ரபத்தி ஆகியவற்றை தனது ஆசார்யரின் மனம் மகிழுமாறு திருவேங்கடமுடையானுக்குச் சமர்ப்பித்தார்.

பாட்டி: குழந்தைகளே, நாம் இறுதியாக அப்பிள்ளை, அப்பிள்ளார் ஆகியோரைப் பற்றிப் பார்ப்போம். அவர்களைப் பற்றி நிறைய செய்திகள் கிடைக்க பெறுவதில்லை. அவர்கள் மணவாள மாமுனிகளின் ஆப்தசிஷ்யர்களானார்கள். வட இந்தியாவில் பல வித்வான்களை வென்றார்கள் எனத் தெரிய வருகிறது.

appiLLai
appiLLAr

அவர்கள் மாமுனிகளைப் பற்றித் தெரிந்திருந்தாலும், அவரிடம் அவர்களுக்கு எந்த அபிமானமும் ஏற்படவில்லை. பின்னர் அவரது பெருமைகளை கேள்விப்பட்டு , கந்தாடை அண்ணன், எறும்பியப்பா போன்றோர் மாமுனிகளை ஆச்ரயித்தனர் என்றும் கேள்விப்பட்டனர்.

வேதவல்லி: பாட்டி, பின்னர் அவர்கள் எப்படி மணவாள மாமுனிகளின் சிஷ்யர்களானார்கள்?

பாட்டி: ஆம் வேதவல்லி, எறும்பியப்பா தாம் மாமுனிகளிடம் அவர்கள் ஆசார்ய சம்பந்தத்திற்குத் தயார் என்று சொன்னார். பொன்னடிக்கால் ஜீயர் மாமுனிகளிடம் “அவர்கள் எறும்பியப்பாவிடம் நிறைய அர்த்தங்களைக் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் சிஷ்யர்களாவதற்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது” என்றார் . அவர்களும் மாமுனிகளிடம் தங்களை ஏற்றுக்கொள்ளும் படியாக கேட்டார்கள். மாமுனிகள் பின்னர் அப்பிள்ளை அப்பிள்ளார் ஆகியோர்க்குப் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தார்.

அப்பிள்ளாருக்கு ஜீயர் மடத்தின் ததீயாதாராதனம் போன்ற நித்யகைங்கர்யங்களில் ஈடுபடும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. கிடாம்பி ஆச்சான் எவ்வாறு எம்பெருமானாருக்கு கைங்கர்யம் செய்தாரோ, அவ்வாறே மாமுனிகளின் மடத்துக்கு அப்பிள்ளார் கைங்கர்யம் செய்தார்.

அப்பிள்ளை திருவந்தாதிகளுக்கு மாமுனிகளின் திவ்ய ஆணையின் படி வ்யாக்யானம் அருளினார். மாமுனிகளுடன் அவரது பல திவ்யப்ரபந்தத்துடன் சம்பந்தப்பட்ட கைங்கர்யங்களில் ஈடுபட்டார்.

மாமுனிகளின் இறுதிக்காலத்தில், அப்பிள்ளார் அவரிடம் தனக்கு மாமுனிகளின் அர்ச்சா விகிரஹத்தை கொடுக்குமாறு வேண்டினார். மாமுனிகள் தான் தினமும் பயன்படுத்துகிறச் சொம்பினை கொடுத்து அதிலிருந்து இரு விக்ரஹங்களைச் செய்ய சொன்னார். அப்பிள்ளாருக்கும் அப்பிள்ளைக்கும் ஆளுக்கு ஒரு விக்ரஹத்தை அவர்களின் நித்யதிருவாராதனத்திற்கு அளிக்கச் சொன்னார்.

அவர்களைப் போல ஆசார்ய அபிமானத்தை பெற நாமும் அவர்களின் திருவடித்தாமரைகளில் வேண்டுவோம்.

இது வரை நாம் மாமுனிகளின் பெருமைகளையும் அவரது அஷ்டதிக்கஜங்களின் பெருமைகளையும் பற்றித் தெரிந்து கொண்டோம்.

பராசரன்: இன்றைக்கு நிறையத் தெரிந்து கொண்டோம் பாட்டி.

பாட்டி: ஆம், குழந்தைகளா. உங்களுக்கு எல்லாம் மிக முக்கியமான ஒன்றைப் பற்றிச் சொல்லப் போகிறேன். கவனமாகக் கேளுங்கள்.

மாமுனிகளின் காலத்திற்குப் பிறகு, பல ஆசார்யர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் ஊரிலும் பக்தர்களை அனுக்ரஹித்து வந்தனர். திவ்யதேசங்களிலும் அபிமானஸ்தலங்களிலும் ஆழ்வார் ஆசார்யர் அவதார ஸ்தலங்களிலும் தங்கி ஞானத்தையும் பக்தியையும் வளர்த்தனர்.

திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமியும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றான எம்பார் ஜீயரும் சமீப காலத்தில் (200 வருடத்திற்கு முன்பாக) நம் சம்ப்ரதாயத்திற்காகப் பல ஆழ்ந்த கருத்துடைய க்ரந்தங்களையும் நிறைய கைங்கர்யங்களையும் செய்திருக்கிறார்கள்.

நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டதெல்லாம் இந்த ஆசார்யப் பரம்பரையிலிருந்து வந்தது தாம். நாம் அவர்களுக்கு எப்பொழுதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். உங்களுக்கு பொழுது நன்றாக கழிந்தது என்று நினைக்கிறேன். நம்முடைய மனம், வாக்கு, மெய் எல்லாம் ஆழ்வார் ஆசார்யர் மற்றும் எம்பெருமானின் கைங்கர்யத்திலேயே ஈடுபட்டிருக்க வேண்டும்.

சரி, இரவாகி விட்டது. நம் ஆசார்யர்களின் சிந்தனையோடு வீட்டிற்குச் செல்லுங்கள்!

குழந்தைகள்: நன்றி பாட்டி!

அடியேன் பார்கவி ராமானுஜ தாசி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2018/07/beginners-guide-ashta-dhik-gajas-and-others/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment