ஸ்ரீராமாயணம் பாலபாடம் – மாமுனிவர்களைத் துன்புறுத்தும் தாடகை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீராமாயணம் பாலபாடம்

<< ஸரயூ நதிக்கரையில் மந்திர உபதேசம்

பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.

பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. உங்கள் வருகைக்காகக் காத்திருந்தேன். கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த திருப்பணியாரங்களைத் தருகிறேன்.

குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த திருப்பணியாரங்களை உண்டார்கள்.

பராசரன்: பாட்டி, சென்ற வாரம் ராமபிரான் விச்வாமித்ர முனிவரிடமிருந்து பலை அதிபலை என்ற மந்திரங்களை உபதேசமாகப் பெற்று, குருவிற்கு செய்யவேண்டிய உபசாரங்கள் அனைத்தையும் நன்கு செய்து, அன்றிரவுப் பொழுதை ஸரயூ நதிக்கரையிலே மூவரும் கழித்தனர் என்று சொல்லி முடித்தீர்கள் பாட்டி.

பாட்டி: நன்கு நினைவுறுத்தினாய் பராசரா. மேலும் கதையைச் சொல்கிறேன், கேளுங்கள் குழந்தைகளே. அன்றிரவுப் பொழுது அம்மூவருக்கும் ஸரயூ நதிக்கரையில் நன்கு கழிந்தது. பொழுது விடிந்ததும், ராஜ குமாரர்களான ராம லக்ஷ்மணர்களை விச்வாமித்ர முனிவர் பள்ளி உணர்த்தினார் (துயில் எழுப்பினார்). ராமன் அழகாக உறங்கிக்கொண்டிருந்தான் . ”கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்” என்று விச்வாமித்ர முனிவர் ஸ்தோத்திரம் செய்து ராமனை எழுப்புகிறார். கௌசலையின் தவப்புதல்வனே ! ராமா! சூரியன் கிழக்கே உதித்தது, பொழுது விடிந்தது, உறக்கத்திலிருந்து எழுந்து உம்முடைய நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்வாயாக என்கிறார். ராம லக்ஷ்மணர்கள் கண் விழித்தனர். தம்முடைய நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்து முடித்து, அவ்விடத்திலிருந்து விச்வாமித்ர முனிவர் புறப்படுவதை எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர்.

வேதவல்லி: ஸரயூ நதிக்கரையிலிருந்து அம்மூவரும் எங்கு புறப்பட்டார்கள் பாட்டி?

பாட்டி: மூவரும் ஸரயூநதி வந்து சேருமிடத்தில் புண்ய நதியான கங்காநதியைக் கண்டனர். அங்கு அமைந்திருக்கும் ரிஷிகளின் ஆசிரமங்களைக் கண்டு தசரதனின் புத்திரனான தாசரதி, விச்வாமித்ர முனிவரிடம் இந்த அழகிய பர்ணசாலைகள் யாருடையது? இங்கு குடியிருப்பவர்கள் யாரென்று கேட்டான்.

அத்துழாய்: பர்ணசாலை என்றால் என்ன பாட்டி?

பாட்டி: காட்டில் கிடைக்கக்கூடிய உலர்ந்த இலைகள், மரக்கழிகள் மற்றத் தாவரப்பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் குடில்கள். முனிவர்களும், யோகிகளும் காடுகளில் வாழும்போது தாங்கள் தங்குவதற்காக அமைத்துக்கொள்வது தான் பர்ணசாலை என்பது. மேலும் கதையைச் சொல்கிறேன். கேளுங்கள். விச்வாமித்ர முனிவர் ராம லக்ஷ்மணர்களிடம், குழந்தைகளே, காமனென்னும் மன்மதன் முன்பு கண்ணுக்குப் புலப்படும்படியாக உருவத்துடன் இருந்தான். பின்பொரு சாபத்தால் தன்னுடைய அங்கங்களை இழந்து அனங்கனென்று பெயர்பெற்றான். அந்த மன்மதன் தன்னுடைய உடல் அங்கங்களை எவ்விடத்தில் இழந்தானோ, அந்த தேசம் இன்றும் அங்கதேசம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கிருக்கும் இம்முனிவர்கள், அக்காலம் தொடங்கி வம்ச பரம்பரையாக இவ்விடத்தில் வாழ்ந்து வருகின்றனர். இன்று இரவு இந்த அங்கதேசத்தில் இப்புண்யநதிகளின் இடையில் தங்கியிருந்து நாளைய தினம் நாம் கங்கைநதியைத் தாண்டி ப்ரயாணத்தைத் தொடரலாம் என்றார்.

வ்யாசன்: விச்வாமித்ரமுனிவர், ராம லக்ஷ்மணர்களின் வருகையைக் கண்டு அம்முனிவர்கள் யாவரும் மிகவும் மகிழ்ந்திருப்பார்களே பாட்டி?

பாட்டி: ஆம் மிகவும் மகிழ்ந்து அவர்களுக்கு அதிதி பூஜையை நன்கு நடத்தினர். பின்னர் அவர்களெல்லோரும் பற்பல புண்ய கதைகளைச் சொல்லிக்கொண்டே அன்றிரவுப் பொழுதைக் கழித்தார்கள்.

வேதவல்லி: இதிலிருந்து நம் அகத்திற்கு வரும் விருந்தினர்களை நன்கு உபசரிக்கவேண்டும் என்று விளங்குகிறது. மேலும் சொல்லுங்கள் பாட்டி. கேட்பதற்கு ஆவலாக இருக்கிறது.

பாட்டி: சொல்கிறேன் கேளுங்கள். பொழுது விடிந்தது. ராம லக்ஷ்மணர்கள் நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்து முடித்தனர். பின்பு மூவரும் கங்கை நதிக்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கிருக்கும் முனிவர்கள் அனைவரும், ஒரு ஓடத்தை அருகில் கொண்டு வந்து நிறுத்த, அம்மூவரும் அதிலேறி ஸரயூ நதியின் பெருமைகளைப் பேசிக்கொண்டே கங்கை நதியின் தென்கரையை அடைந்து, இறங்கி வேகமாக நடந்தார்கள். மக்கள் நடமாட்டமில்லாத கொடிய விலங்குகள் நிறைந்த இக்கானகத்தின் (காட்டின்) பெயர் யாது? என்று ராம லக்ஷ்மணர்கள் விச்வாமித்ர முனிவரைக் கேட்டனர். அதற்கு விச்வாமித்ர முனிவர், முன்பு இது தேவர்களால் நிருமிக்கப்பட்டு நன்கு செழிப்போடு மலதமென்னும், கரூசமென்னும் பெயர்களைக் கொண்ட இரண்டு தேசங்களாக இருந்தது. சில காலங்களுக்குப் பின் தாடகை என்னும் பெயர் கொண்ட ஒரு யக்ஷ கன்னிகை தோன்றினாள். அவள் பிறந்தது முதல் ஆயிரம் யானைகளுடைய பலத்தைப் பெற்று நினைத்தபடி வடிவமெடுக்கும் வல்லமை பெற்றிருந்தாள். அவளை சுந்தன் என்பவன் திருமணம் செய்துகொண்டான். அவளுக்கு மாரீசன், சுபாஹு என்ற இரு ராக்ஷஸர்கள் பிறந்தார்கள். இருவரும் தன் தாயைப் போலக் கொடூரர்களாக இருந்தார்கள். அத்தாடகை இந்த மலத கரூச தேசங்களைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறாள். ஒன்றரை யோசனை தூரத்தில் வழியை அடைத்துக்கொண்டு வசிக்கிறாள். அக்கொடிய அரக்கியான தாடகை வசிக்கும் காட்டைத் தாண்டியே நாம் போகவேண்டும். என்னுடைய சொல்படி அக்கொடிய அரக்கியை நீ வதம் செய்யவேண்டும். அவளை நீ வதம் செய்துவிட்டால் மீண்டும் இவ்விரு தேசங்களும் செழிப்படையும். அவளுடைய ஆக்கிரமிப்பால் இவ்விடம் மக்கள் நடமாட்டமில்லாது இருக்கின்றன என்றார்.

பராசரன்: கேட்பதற்கே பயங்கரமாக இருக்கிறது பாட்டி. மிகவும் மென்மையான ராமன், இக்கொடிய அரக்கியை எவ்வாறு வதம் செய்தான்? மீண்டும் அவ்விரு தேசங்களும் இழந்த பொலிவையும் செழிப்பையும் பெற்றதா? மேலும் சொல்லுங்கள் பாட்டி.

பாட்டி: குலசேகர ஆழ்வார் தான் அருளிச்செய்த பெருமாள் திருமொழியில், “வந்தெதிர்ந்த தாடகை தன் உரத்தைக்கீறி வருகுருதி பொழிதர வன்கணையொன்றேவி” என்று தாடகை வதத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அடுத்தமுறை நீங்கள் வரும்பொழுது தாடகை வதத்தைப்பற்றிச் சொல்கிறேன். இப்பொழுது இருட்டிவிட்டதால் உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள்.

குழந்தைகள் பாட்டி சொன்ன கதையை எண்ணியவாறு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டனர்.

அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி

வலைத்தளம் –  http://pillai.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment