ஸ்ரீராமாயணம் பாலபாடம் – மாண்டாள் தாடகை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீராமாயணம் பாலபாடம்

<< மாமுனிவர்களைத் துன்புறுத்தும் தாடகை

பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.

பாட்டி தன் அகத்து எம்பெருமான் சந்நிதி முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். குழந்தைகள் வருவதைப் பார்த்ததும் , வாருங்கள் குழந்தைகளே, கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த திருக்கண்ணமுதைத் தருகிறேன்.

குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த திருக்கண்ணமுதைப் பருகினார்கள்.

வேதவல்லி: ராமன் விச்வாமித்ர முனிவரின் அறிவுரையின்படி தாடகையைக் கொன்றானா? ஆயிரம் யானைகளுடைய பலத்தை அக்கொடிய அரக்கி எவ்வாறு பெற்றாள்?

பாட்டி: சொல்கிறேன் கேளுங்கள். முன்னொருகால் சுகேது என்ற யக்ஷனொருவன், ப்ரஹ்மன் கொடுத்த வரத்தால் ஆயிரம் யானைகளைப் போல வலிமையுடைய தாடகையை மகளாகப் பெற்றான். அவளை சுந்தன் என்னும் ராக்ஷசனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். சுந்தனுக்கும் தாடகைக்கும் மாரீசன், சுபாஹு என்ற புதல்வர்கள் பிறந்தார்கள். அகஸ்திய முனிவரிடம் அபச்சாரப்பட்டதால் தாடகையின் பிள்ளைகள் ராக்ஷசர்களானார்கள். தாடகை தன்னுடைய அழகிய உருவத்தை இழந்து பார்க்க வழங்காதபடி கோரமான முகத்துடன்கூடி மனிதர்களைப் பிடுங்கித் தின்னும் ராக்ஷசியாக ஆகிவிட்டாள். சாபத்தைப் பெற்ற தாடகை, உலகனைத்தும் வருந்தும்படி கொடூர செயல்களைச் செய்து கொண்டிருந்தாள். முனிவர்கள் உலக நன்மையின் பொருட்டு யாகங்கள் செய்யும்பொழுது, அவர்களைத் துன்புறுத்தி யாக வேள்வியில் ரத்த மாமிசங்களை மழையாகப் பொழிகின்றாள். கொடிய தாடகையின் கோரதாண்டவம் நாளுக்கு நாள் எல்லை மீறுகின்றது. அழகிய தேசங்கள் பாழடைந்தன. இவளை வதம் செய்வது மிக உத்தமமான செயல். சிறிதும் தயங்காமல் அவளை முடித்துவிடு என்றார் விச்வாமித்ர முனிவர். ஆனால் ராமனோ கருணையே வடிவெடுத்தவன். ஒரு பெண்ணை வதைக்க அவன் மனம் சம்மதிக்கவில்லை.

பராசரன்: ஆனால் அவளோ பெண் உருவெடுத்த ராக்ஷசி ஆயிற்றே. தாமதித்தால் உலகமழிந்திடுமே. என்ன நடந்தது பாட்டி, மேலும் சொல்லுங்கள்.

பாட்டி: விச்வாமித்ர முனிவர், ராமனிடம் அக்கொடிய தாடகையை அழித்தே ஆகவேண்டும். ராஜ குமாரனான நீ, உலக மக்களின் நன்மைக்காக இச்செயல் புரியவேண்டும். அதுவே ராஜ தர்மம். பெண்களாயினும் கொடியவர்கள் என்றால் அவர்களை அழிப்பது தவறல்ல. அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டுவாயாக என்றார்.

அத்துழாய்: ராமன் தர்மமே வடிவெடுத்தவன். நிச்சயமாக முனிவர் விருப்பத்தை நிறைவேற்றியிருப்பான்.

பாட்டி: ராமன் விச்வாமித்ர முனிவரின் வார்த்தையை சிரமேற்கொண்டு நடப்பதாக வாக்களித்து, உடனே தன்னுடைய வில்லில் நாணையேற்றி ஒலியெழுப்பினான். அந்த நாணின் ஒலியைக்கேட்டு, தாடகையின் காட்டில் வசிக்கும் அனைவரும் அஞ்சிநடுங்கினர். தாடகையும் அவ்வொலியைக் கேட்டு மிகுந்த கோபம்கொண்டு, ஒன்றும் செய்வதறியாமல் தட்டித் தடுமாறி, அவ்வொலியானது எந்த திசையிலிருந்து வருகிறதென்று அறிந்து வேகமாக ஓடி வந்தாள். அவள் ஓடிவருவதைக் கண்ட ராமன் தன் தம்பி லக்ஷ்மணனைப் பார்த்து, லக்ஷ்மணா இக்கொடிய தாடகையின் வடிவத்தைப்பார். இவள் யாராலும் வெல்லமுடியாதவள். மேலும் இவள் அதீத பலம் பொருந்தியவள். இப்பொழுது இவளுடைய காதையும் மூக்கின் நுனியையும் அறுத்துத் துரத்திவிடு என்றான். இதனால் விச்வாமித்ர முனிவரின் கட்டளையை நிறைவேற்றியதாகிவிடும். இவள் ஒரு பெண்னாக இருப்பதால் என் மனம் இவளைக் கொள்ள மறுக்கின்றது. ஆகையால் கைகளையும் கால்களையும் முறித்து விட்டுவிடலாமென்று எனக்குத் தோன்றுகிறது என்றான். இப்படி ராமன் சொல்லிக்கொண்டிருக்கையில், அக்கொடிய தாடகை கைகளை உயர்த்திக்கொண்டு, கர்ஜித்துக்கொண்டே ராமனை நோக்கி ஓடிவந்தாள். அதைக் கண்ட விச்வாமித்ர முனிவர், ராமன் அதீத பலம் பொருந்தியவன் என்று நன்கு அறிந்தும், அவனுக்குத் தாடகையால் எவ்வித தீங்கும் ஏற்படாமல் இருக்கவேண்டும். அவனுக்கு எப்பொழுதும் வெற்றி உண்டாகட்டும் என்று மங்களாசாசனம் செய்தார்.

வ்யாசன்: ராமன் ஸாக்ஷாத் ஸர்வேஶ்வரன் என்று அறிந்திருந்தாலும், அவனுடைய மென்மையான திருமேனியானது இவ்வாறு விச்வாமித்ர முனிவரை மங்களாசாசனம் பண்ணும்படி செய்தது.

பாட்டி: மிகச்சரியாக சொன்னாய். அக்கொடிய அரக்கி எங்கும் புழுதியை வாரி இறைத்துத் தான் நினைத்தபடி கோரமான வடிவங்களை எடுத்துக்கொண்டு, அளவில்லாத கற்களைப் பொழிந்தாள். ராமனும் மிகவும் கோபம் கொண்டு, அவள் பொழிந்த கற்களைத் தடுத்து அவற்றை பொடிப்பொடியாக்கி, அவளது கைகளை அறுத்தெறிந்தான். விச்வாமித்ர முனிவர் ராமனிடம், இக்கொடியவள் மீது நீ இனியும் கருணை காட்டவேண்டாம். அந்திப்பொழுது நெருங்குகிறது. அந்திப்பொழுதில் ராக்ஷஸர்கள் யாவராலும் வெல்லமுடியாத அதீத பலத்தைப் பெறுவார்கள். அப்பொழுது அவர்களை வெல்வது மிகக்கடினம். ஆதலால் காலம் தாழ்த்தாது இப்பொழுதே அவளை வதைத்தெறிவாயாக என்றார். கண்ணுக்குப் புலப்படாமல் கற்களைப் பொழியும் தாடகையின் முழக்கத்தினால் அவள் இருக்கும் திசையறிந்து, ராமன் தன்னுடைய அம்புகளால் எங்கும் போகவிடாமல் அவ்விடத்திலேயே அவளைத் தடுத்துவிட்டான். அவளும் ராம பாணங்களால் கட்டுப்பட்டு செய்வதறியாமல் அலறிக்கொண்டிருந்தாள். அப்பொழுது அவள் மார்பில் ஓர் அம்பைத் தொடுத்து நாட்ட, அந்த நொடியே அக்கொடியவள் மாண்டு போனாள்.

வேதவல்லி: மாண்டாள் தாடகை. ஜெயித்தான் ராமபிரான். அதர்மம் ஓங்கும்பொழுது எம்பெருமான் அவற்றை ஒழித்து, தர்மத்தை மீண்டும் நிலைநிறுத்துவான் என்பது நன்கு புலப்படுகின்றது. விச்வாமித்திர முனிவர் பேரானந்தம் அடைந்திருப்பாரே பாட்டி?!

பாட்டி: அவர் மட்டுமா ஆனந்தமடைந்தார், மூவுலகும் களிப்படைந்தது. தாடகை மடிந்த செய்தியறிந்து மகிழ்ச்சியடைந்த இந்திரன், தேவர்களோடு அவ்விடத்தில் தோன்றி, விச்வாமித்ர முனிவரிடம், நீர் ராமனிடத்தில் கொண்டுள்ள அதீத ப்ரியத்தை இப்பொழுது வெளியிடவேண்டும். நீர் தவ மகிமையால் பெற்ற அஸ்திர வித்தைகளை, ராமனுக்குக் கற்பிக்கவேண்டும் என்று சொல்லி முனிவரைப் பூஜித்துப் போனான்.

வ்யாசன்: தாடகை வதம் ஆயிற்று. மிகவும் அழகாகச் சொன்னீர்கள் பாட்டி. மேலும் சொல்லுங்கள். கேட்பதற்கு ஆவலாக இருக்கிறது.

பாட்டி: வந்தெதிர்ந்த தாடகை தன் உரத்தைக்கீறிய ராமனுக்குப் பல்லாண்டு. அடுத்தடுத்த விஷயங்களை நாளை உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்பொழுது இருட்டிவிட்டதால் உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பார்கள்.

குழந்தைகள் பாட்டி சொன்ன கதையை எண்ணியவாறு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டனர்.

அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி

வலைத்தளம் –  http://pillai.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment