ஸ்ரீராமாயணம் பாலபாடம் – விச்வாமித்ரரின் வேள்வியைக் காத்த ராம லக்ஷ்மணர்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீராமாயணம் பாலபாடம்

<< அஸ்திர உபதேசமும், சித்தாச்ரம வரலாறும்

பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.

பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த பழங்களைத் தருகிறேன்.

குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த பழங்களை உண்டார்கள்.

பராசரன்: விச்வாமித்ர முனிவர் யாகம் செய்வதற்காக தீக்ஷித்துக் கொண்டார் என்று சொன்னீர்கள் பாட்டி. யாகம் நன்கு நிறைவேறியதா ?

பாட்டி: சொல்கிறேன் கேளுங்கள். தசரத புத்ரர்கள் போர் புரியவேண்டும் என்று விருப்பத்தோடு இருப்பதைக் கண்ட அங்குள்ள முனிவர்கள், தாசரதிகளை நோக்கி ‘இன்று முதல் ஆறு இரவுகள் நித்திரையின்றி இத்தபோவனத்தை ரக்ஷிக்கவேண்டும்’ என்றார்கள். ராம லக்ஷ்மணர்கள் இருவரும் அம்முனிவர் சொன்னபடி அத்தபோவனத்தை ரக்ஷிப்பதற்காகக் கையில் பெரிய வில்லேந்தி பகைவர்களை அடக்கியொடுக்குவதற்குரிய மனவலிமையுடன் முனிவரைக் காத்துக்கொண்டு அங்கே வசித்தார்கள்.

வேதவல்லி: பரம ஸுகுமாரர்களான ராம லக்ஷ்மணர்கள் ஆறு தினங்கள் உறங்காது வில்லும் கையுமாக அத்தபோவனத்தைக் காத்தது என்பது மிகப்பெரிய செயல். மேலும் என்ன நடந்தது பாட்டி?

பாட்டி: இவ்வாறு ஐந்து தினங்கள் கடந்து ஆறாவது தினம் வரும்போது, யஜ்ஞவேதியானது யாகப்பொருள்களுடன் திடீரென்று எரிந்தது. அப்பொழுது ஆகாயத்தில் பயங்கரமான ஒளி உண்டானது. யாக வேதியும் ரத்த வெள்ளத்தினால் நிறைந்து எரிந்துகொண்டிருந்தது. அப்போது மாரீச ஸுபாஹு என்ற கொடிய அரக்கர்கள் இருவரும் பலவிதமான மாயைகளைச் செய்து கொண்டு வானமெங்கும் பரந்து எதிர்நோக்கி ஓடிவந்தனர். ஸுபாஹு, மாரீசன் ஓடிவருவதைக் கண்ட ராமபிரான், லக்ஷ்மணனை நோக்கி ‘லக்ஷ்மணா! இதோ பார். இம்மாநவாஸ்திரமானது கொடிய அரக்கர்களைப் பறக்கடிக்கப்போகின்றது’ என்றுரைத்து மிகவும் கோபம் கொண்டு தீப்பொறி பறக்கும் மாநவாஸ்திரத்தைத் தொடுத்து மாரீசனது மார்பில் எய்தினான். மாரீசன் பல யோஜனைக்கப்பால் தள்ளுண்டு விழுந்தான். பிறகு ஆக்நேயாஸ்திரத்தைக் கொண்டு ராமன் ஸுபாஹுவை முடித்தான். யாகமும் எவ்வித இடையூறுமில்லாமல் நன்கு நிறைவேறியது.

அத்துழாய் : பல இடையூறுகளுக்குப் பிறகு ராம லக்ஷ்மணர்களுடைய பராக்ரமத்தால் யாகம் நன்கு நிறைவேறியதைக் கண்டு முனிவர்கள் அகமகிழ்ந்திருப்பார்களே பாட்டி ?

பாட்டி: சரியாகச் சொன்னாய் அத்துழாய். முனிவர்கள் அகமகிழ்ந்தனர். விச்வாமித்ர முனிவர் ராமனை நோக்கி ‘ராமா’ உனது புஜபலத்தால் நான் நடத்திய யாகம் இனிதே நிறைவேறியது. நீயும் உன்னுடைய தந்தையின் வசனத்தைக் காப்பாற்றினாய். உன்னால் இந்த ஸித்தாச்ரமம் பெருமை பெற்றது என்று கொண்டாடினார்.

வ்யாசன்: பாட்டி, மிக அழகாக யாகம் நிறைவேறியது பற்றிச் சொன்னீர்கள். எந்த ஒரு நற்செயலைச் செய்ய முயலும்போதும், பற்பல இடையூறுகள் வரும். ஆனால் எம்பெருமானிடம் அக்காரியத்தை ஸமர்ப்பித்துவிட்டோமானால் அவன் இனிதாக நிறைவேற்றிவிடுவான். எம்பெருமானுடைய திருவருள் இருந்தால் எல்லாம் வெற்றியாகவே அமையும் என்பது நன்கு வெளிப்படுகிறது பாட்டி.

பாட்டி: மிக அழகாக சொன்னாய் வ்யாசா. நான் சொன்ன விஷயங்களை நன்கு அனுபவித்திருக்கிறாய். அடுத்த முறை நீங்கள் வரும்பொழுது கதையைத் தொடர்வோம். இப்பொழுது இருட்டிவிட்டதால் உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பார்கள். குழந்தைகள் பாட்டி சொன்ன கதையை எண்ணியவாறு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டனர்.

அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி

வலைத்தளம் –  http://pillai.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment