ஸ்ரீராமாயணம் பாலபாடம் – சிவதனுசை முறித்த ராமன்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீராமாயணம் பாலபாடம்

<< ஜனகமன்னன் அறிவித்த நிபந்தனை

பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.

பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள்.

பராசரன்: சென்ற முறை, தன்னிடமுள்ள சிவதனுசை நாணேற்றி வளைப்பானாகில் தன்னுடைய மகளான சீதையை ராமனுக்கு மணம் புரிவிப்பேன் என்று ஜனக மன்னன் சொல்லியதாகக் கூறினீர்கள். மேலே என்ன நடந்தது என்று சொல்லுங்கள் பாட்டி.

பாட்டி: இவ்வாறு ஜனகமன்னன் கூறியதைக் கேட்ட விச்வாமித்ர முனிவர், அந்த சிவதனுசை ராமனுக்குக் காட்டுகவென்று சொன்னார். ஜனகனும் தனது வேலைக்காரர்களை அழைத்து அந்த வில்லை அங்கு கொண்டுவருமாறு கட்டளையிட்டான். அவர்களும் மிகவும் சிரமப்பட்டு அவ்வில்லை அங்கு கொண்டு வந்தார்கள். பிறகு ஜனக மன்னன் விச்வாமித்ர முனிவரை நோக்கி, ”முனிவரே! இந்த வில்லானது மிகவும் மேன்மை பொருந்தியது; தேவர், அசுரர், அரக்கர், யக்ஷர், கந்தர்வர் ஆகியோர் ஒன்று கூடினாலும் இப்பெருவில்லை நாணேற்ற முடியாது; அப்படியிருக்க, மனிதர்களில் இந்த வில்லை நாணேற்ற வலிமைபொருந்தியவர் யாவர் ? இந்த பெருவில்லை தாசரதிகள் பார்க்கட்டும்” என்று கூறினான்.

வேதவல்லி: ஆஹா! கேட்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கிறது பாட்டி. மேலும் சொல்லுங்கள்.

பாட்டி: சொல்கிறேன் கேளுங்கள். விச்வாமித்ர முனிவர் ராமனை அழைத்து, ‘குழந்தாய்! இந்த வில்லைப்பார்’ என்றார். உடனே ராமனும், பெட்டியிலிருந்த அந்த பெருவில்லை உற்று நோக்கி ‘முனிவரே! மேன்மை பொருந்திய இந்த வில்லை என் கையினால் தொட்டுப்பார்க்கிறேன்; பிறகு அதைத் தூக்குவதற்கு முயற்சி செய்கிறேன்’ என்று கூறி, பல்லாயிரவர் பார்த்துக்கொண்டிருக்கையில் அநாயாசமாக அப்பெருவில்லை நாணேற்றி இழுக்கும்பொழுது அவ்வில் இடையில் இற்றுமுறிந்தது. அப்போதுண்டான பெரும் சப்தம் வருணிக்கமுடியாதபடியிருந்தது. அந்த பெரும் சப்தத்தைக் கேட்டு பலரும் மூர்ச்சித்து விழுந்தார்கள்.

அத்துழாய்: பரம ஸுகுமாரனான ராமன் எளிதாக அந்த வில்லை நாணேற்றியதைக் கண்டு பலரும் அவனுடைய பராக்ரமத்தை எண்ணித் திகைத்துப்போயிருப்பார்கள் அல்லவா பாட்டி?

பாட்டி: ஆமாம். ஜனகமன்னன் முனிவரை நோக்கி, “ஸ்வாமி! ராமனுடைய வலிமையை கண்டு வியந்துபோனேன்; இனி எனது மகள் சீதை, ராமனை மணம்புரிந்து எம் குலத்திற்குப் பெரும்புகழைச் சேர்ப்பாள்”. இனி சீதா ராம விவாஹம் நடைபெறவேண்டியதே. இவ்விஷயத்தை அயோத்தியில் வாழும் தசரத மன்னனுக்கு அறிவித்து விரைவில் அவரை இங்கு வரவழைக்கவேண்டும் என்று சொன்னான்.

விச்வாமித்ர முனிவரும் அப்படியே ஆகட்டும் என்று சொல்ல, ஜனகமன்னன் தன் மந்திரிகளிடம் விவாஹமுகூர்த்தப்பத்திரிகை கொடுத்துத் தசரத மன்னனை அழைத்து வருமாறு உத்தரவிட்டான்.

வ்யாசன்: ஜனகமன்னனுடைய மந்திரிகள் தசரத மன்னனுக்கு இச்செய்தியை அறிவித்தார்களா பாட்டி? பிறகு என்ன நடந்தது என்று சொல்லுங்கள். கேட்பதற்கு ஆவலாக இருக்கிறது.

பாட்டி: அடுத்த முறை நீங்கள் வரும்போது மேலே என்ன நடந்தது என்று சொல்கிறேன். சற்று நேரத்தில் பெருமாளுக்குத் தளிகை அமுதுசெய்தாகிவிடும். இங்கேயே நீங்கள் பெருமாள் ப்ரசாதத்தை எடுத்துக்கொண்டபிறகு உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள்.

குழந்தைகளும் பெருமாளுக்கு அமுதுசெய்த ப்ரசாதத்தை உண்டுவிட்டு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டார்கள்.

அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி

வலைத்தளம் –  http://pillai.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment