ஸ்ரீராமாயணம் பாலபாடம் – ஜனகர் தமது வம்ச பரம்பரையைக் கூறி கன்னிகாதான உறுதி செய்துகொள்ளுதல்

ஸ்ரீராமாயணம் பாலபாடம்

<< வஸிஷ்ட முனிவர் இக்ஷ்வாகு வம்சாவளியை எடுத்துரைத்தல்

பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.

பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த திருப்பணியாரங்களைத் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த திருப்பணியாரங்களை உண்டார்கள்.

வேதவல்லி: சென்றமுறை வஸிஷ்டமுனிவர் இக்ஷ்வாகு வம்சாவளியை ஜனகமன்னன் ஸபையில் எடுத்துரைத்ததை எடுத்துச்சொன்னீர்கள் பாட்டி.

பாட்டி: ஆமாம் வேதவல்லி. இன்று ஜனகமன்னனின் வம்சாவளியை எடுத்துச் சொல்கிறேன்.

பராசரன்: சொல்லுங்கள் பாட்டி. தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம்.

பாட்டி: இங்ஙனம் முனிவர் தசரத சக்ரவர்த்தியின் வம்சாவளியை எடுத்துரைத்து முடித்தபின், ஜனக சக்ரவர்த்தியும் தமது வம்சாவளியை எடுத்துரைக்கத் தொடங்கினர். நிமி சக்ரவர்த்தி எமக்கு மூல புருஷர். நிமியின் புத்ரர் – மிதி. மிதியென்பவராலேயே மிதிலாநகரம் ஏற்படுத்தப்பட்டது. மிதியின் புதல்வர் – ஜனகர். ஜனகருடைய புதல்வர் – உதாவஸு. உதாவஸுவின் புத்திரர் – நந்திவர்த்தனர். நந்திவர்த்தனருடைய புத்திரர் ஸுகேது. ஸுகேதுவின் புத்திரர் – தேவராதர். தேவராதருடைய புத்திரர் – ப்ருஹதரதர். ப்ருஹதரதருடைய புத்திரர்- மஹாவீரர். மஹாவீரருடைய புத்திரர் – ஸுத்ருதி. ஸுத்ருதியின் புத்திரர் – த்ருஷ்டகேது. த்ருஷ்டகேதுவின் புத்திரர் – ஹர்யசவர். ஹர்யசவருடைய மகன் – மரு. மருவின் புதல்வர் – ப்ரதிந்தகர். ப்ரதிந்தகருடைய புத்திரர் – தேவமீடர். தேவமீடருடைய புத்திரர் – விபுதர். விபுதருடைய புத்திரர் – மஹீதரகர். மஹீதரகருடைய புத்திரர் – கீர்த்திராதர். கீர்த்திராதருடைய புத்திரர் – மஹாரோமர். மஹாரோமருடைய புத்திரர் – ஸ்வர்ணரோமர். ஸ்வர்ணரோமருடைய புத்திரர் – ஹரஸ்வரோமர். ஹரஸ்வரோமருக்கு இரண்டு புத்திரர்கள்; ஜனகனென்கிற – மூத்தவன்; குசத்வஜனென்பவன் எனது இளையதம்பி. நான் எனது தந்தையாகிய ஹரஸ்வரோமர் எனக்கு முடி சூட்டி, என் தம்பியான குசத்வஜனையும் என்னிடமே ஒப்புவித்துத் தவம்புரியக் காடு சென்று சுவர்க்கமுஞ் சென்றனர். நானும் தம்பியும் ஒத்துவாழ்ந்து வருகையில் ‘ஸுதந்வா’ என்னும் ஓர் அரசன் மிதிலாநகரத்தை ஆக்கிரமிக்க விரும்பி ஸாங்காசயா நகரத்தில் நின்றும் வந்தனன். “சிவதனுசையும் ஸீதையையும் எனக்கே கொடுக்கவேண்டும்; இல்லையாகில் போர்புரிய நேரும்’ என்று சொல்லித் தூதுவர்களை என்னிடமனுப்பினன். பிறகு அப்படியே கொடிய யுத்தமும் உண்டாயிற்று. யுத்தத்தில் அம்மன்னவனை வதை செய்து தம்பியை அந்த ஸாங்காசயா நகரத்தில் முடி சூட்டி அரசாள வைத்தேன். ஸீதையை இராமனுக்கும், ஊர்மிளையை லக்ஷ்மணனுக்கும் விவாஹம் செய்து கொடுக்கக் கடவேன். அடுத்துவரும் உத்தர பங்குனி நன்னாளில் சுபமுஹூர்த்தம் நடைபெற வேண்டும். அதற்கு முன் மற்றைய சடங்குகளெல்லாம் குறையற நடத்தப்பட வேண்டும் என்று ஜனகமகாராஜன் சொல்லி முடித்தனன்.

வ்யாசன்: கேட்பதற்கே மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது பாட்டி.

பாட்டி: ஜனக சக்ரவர்த்தியை வஸிஷ்டரும் விஶ்வாமித்ரரும் புகழ்ந்துகூறி ‘உனது தம்பியாகிய குசத்வஜனுக்கு இரண்டு பெண்கள் இருக்கின்றார்களே, அவர்களையும் தசரத புத்ரர்களான பரதசத்ருக்கனர்கட்கு விவாஹம் செய்து கொடுக்குமாறு கோருகிறோம்’ என்ன, அது கேட்ட ஜனக மன்னவன் மிகமகிழ்ந்து அங்ஙனமேயாகுக என்று இசைந்து ராஜகுமாரர் நால்வர்க்கும் ஒரு நாளிலேயே விவாஹ முஹூர்த்தம் நடை பெறும்படி திட்டஞ் செய்தனன். அடுத்த நன்னாளாகிய உத்தர பங்குனி நக்ஷத்ரம் விவாஹத்திற்கு மிகச்சிறந்திருப்பதால் அன்றைக்கே சுபத்தை நடத்தவேணுமென்றும் நிச்சயஞ் செய்தனன். இத்தகைய சிறந்த ஸம்பந்தம் தங்களுக்கு நேர்ந்ததைப் பற்றி ஜனக தசரதர்கள் ஒருவர்க்கொருவர் மிக்க குதூஹலம் பாராட்டிப் பரமானந்தம் பொலிய வார்த்தையாடிக் கொண்டனர். மேல் செய்யவேண்டிய சடங்குகளை முறைவழுவாது நிறைவேற்றுதற் பொருட்டுத் தசரதர் வஸிஷ்ட விஶ்வாமித்ரர்களுடன் தமது விடுதிக்கு வந்து சேர்ந்தனர்.

அத்துழாய்: அடுத்து என்ன நடந்தது பாட்டி?

பாட்டி: அடுத்த முறை நீங்கள் வரும்போது அவற்றைச் சொல்லுகிறேன். இப்பொழுது இருட்டிவிட்டதால் உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள். குழந்தைகளும் பாட்டி கூறியதை எண்ணியவாறு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டார்கள்.

அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment