ஸ்ரீராமாயணம் பாலபாடம் – ஸ்ரீராம பரத லக்ஷ்மண சத்ருக்கனர்களின் விவாஹ மஹோத்ஸவம்.

ஸ்ரீராமாயணம் பாலபாடம்

<< ஜனகர் தமது வம்ச பரம்பரையைக் கூறி கன்னிகாதான உறுதி செய்துகொள்ளுதல்

பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.

பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள்.

அத்துழாய்: ஸ்ரீராம லக்ஷ்மண பரத சத்ருக்கனர்கள் விவாஹ மஹோத்ஸவம் நடந்ததைப் பற்றி கூறுகிறேன் என்றீர்கள் பாட்டி.

பாட்டி: ஆமாம் அத்துழாய். சொல்லுகிறேன் கேளுங்கள். விவாஹமஹோத்ஸவத்திற்காக நடைபெறவேண்டிய சடங்குகள்யாவும் நடைபெற்று வந்தன. அந்தணர்கட்கு விசேஷமாகக் கோதானங்கள் செய்யப்பட்டன. மற்றும் பலவகைப் பொருள்களும் அந்தணர்கட்கு வழங்கப்பட்டன. இந்நிலைமையில் கேகய நாட்டிலிருந்து, பரதனுடைய அம்மானாகிய (தாய் மாமன்) யுதாஜித் என்பவர் மிதிலாபுரிக்கு வந்து சேர்ந்து க்ஷேம சமாசாரங்கள் கூறினர். “பரதனைக் காணவிரும்பிய என் தந்தை அவனையழைத்துவரும்படி என்னையனுப்பினார்; நான் அயோத்திமாநகரில் வந்து விசாரிக்கையில், விவாஹத்தின் பொருட்டு யாவரும் இவ்விடம் வந்திருக்கிற செய்தியறிந்து நானும் இவ்விடம் வந்து சேர்ந்தேன்” என்றும் கூறினார். தசரதர் அவர்க்கு முறைப்படி உபசாரங்கள் செய்தார். மறுநாள் காலையில் யாவரும் கல்யாண மண்டபத்திற்கு வந்து கூடினர். சிறந்த சுப முகூர்த்தத்தில் இராமபிரான் தம்பிமார்களுடன் கூட வஸிஷ்டர் முதலிய முனிவர்களை முன்னிட்டுக்கொண்டு அவ்விடம் வந்து சேர்ந்தபின், வஸிஷ்டர் ஜனக மன்னவனை நோக்கி, “மன்னர் பெருமானே! கன்னிகாதானம் செய்யவேண்டிய கடமை உன்னுடையதாதலால் அதனை இனி நிறைவேற்றவேண்டும்’ என்று கூற, அதற்கு ஜனகன் ‘முனிவரே! கன்னிகைகளும் மங்கள காரியங்களெல்லாம் செய்துமுடித்து விவாஹ வேதியின்கண் தயாராக இருக்கின்றார்கள்; இனி விவாஹச் சடங்கு தாமதமின்றியே நடைபெறலாம்; முற்றும் தேவரீர் முனிவர்களோடு கூடி முறை தவறாது நடைபெறுத்த வேண்டும்’ என்று விண்ணப்பஞ் செய்தனன்.

வ்யாசன்: கேட்பதற்கே ஸ்வாரஸ்யமாக இருக்கிறது பாட்டி. மேலே சொல்லுங்கள்.

பாட்டி: வஸிஷ்டர் வைதிக காரியங்களான ஹோமம் முதலியவற்றைக் குறையறச் செய்யத் தொடங்கினர். பிறகு, ஜனக மன்னவன் ஸகல பூஷணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கும் ஸீதாப்பிராட்டியை அக்னிக்கு முன்பாக அழைத்துவந்து இராமனெதிரில் நிறுத்திக்கொண்டு, “இயம் ஸீதா மம ஸுதா ஸஹதர்மசரீ தவ ப்ரதிச்சசைநாம் பத்ரம் தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா” என்று சொன்னார்.

பராசரன்: இதன் பொருள் என்னவென்று சொல்லுங்கள் பாட்டி.

பாட்டி: (இதன் பொருள்:- இந்த ஸீதை எனது மகள்; நீர் அனுஷ்டிக்கவேண்டிய ஆஶ்ரிதரக்ஷணமாகிற (அடியார்களைக் காத்தல் என்கிற) தர்மத்தை அனுஷ்டிப்பதில் இவள் உமக்குத் துணைவியாக இருக்கத் தகுந்தவள்; ஒரு குறையுமின்றி நீர் வாழ்க. உமது கையினால் இவளது கையைப் பிடித்துக்கொள்ளும் என்று சொல்லித் தாரை வார்த்துத் தத்தஞ் செய்தனன். அப்பொழுது தேவர்களும் முனிவர்களும் வாழ்த்துக் கூறிப் பூமழை பொழிய, மங்கள வாத்ய கோஷமும் உண்டாயிற்று. அந்த முகூர்த்தந்தன்னிலேயே ஜனக மன்னவன் தனது புதல்வியான ஊர்மிளையை லக்ஷ்மணனுக்குக் கன்னிகாதானம் செய்தனன். குசத்வஜரின் பெண்களுள் மாண்டவியென்பவளை பரதனுக்கும், ஶ்ருதகீர்த்தியென்பவளை சத்ருக்கனனுக்கும் கன்னிகாதானம் செய்தனன். இங்ஙனம் தாசரதிகள் நால்வர்க்கும் திருமணம் குறையற நிறைவேறியது. அப்போது பலவகையான சுபக்குறிகள் தோன்றின. இங்ஙனம் நிகழந்தபின்பு அவரவர்கள் தம் தம் விடுதிகட்குச் சென்று சேர்ந்தனர்.

வேதவல்லி: கேட்பதற்கே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது பாட்டி. மிக அழகாக தாசரதிகளின் விவாஹ மஹோத்சவத்தைப் பற்றிக் கூறினீர்கள்.

அத்துழாய்: அடுத்து என்ன நடந்தது பாட்டி?

பாட்டி: அடுத்தமுறை நீங்கள் வரும்போது அவற்றைச் சொல்லுகிறேன். இப்பொழுது இருட்டிவிட்டதால் உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள். குழந்தைகளும் பாட்டி கூறியதை எண்ணியவாறு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டார்கள்.

அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி

வலைத்தளம் –  http://pillai.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment