ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – நஞ்ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< பட்டர்

பராசரனும் வ்யாசனும் வேதவல்லி மற்றும் அத்துழாயுடனும் பாட்டியின் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

பாட்டி: வாருங்கள் குழந்தைகளே! இன்று நாம் பராசர பட்டரின் சிஷ்யரான, நஞ்சீயர் என்கிற ஆசார்யனைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறோம். நான் உங்களிடம் முன்பே சொல்லியது போல், நஞ்சீயர் ஸ்ரீமாதவராக பிறந்து, பின்பு இராமானுஜரின் திவ்ய ஆணையால் ஸம்ப்ரதாயத்திற்குப் பராசர பட்டரால் கொண்டுவரப்பட்டார். பட்டர் எப்படித் திருநெடுந்தாண்டகத்திலிருந்தும், சாஸ்தரங்களிலிருந்த மற்ற அர்த்தங்களைக் கொண்டும் மாதவாசார்யரை வாதத்தில் வென்றார் என்று பார்த்தோம் அல்லவா? மாதவர் ஒரு அத்வைத பண்டிதர். அவருக்கு பட்டர் பின்பு “நஞ்ஜீயர்” என்ற பெயரிட்டார். அவருக்கு “நிகமாந்த யோகி” என்றும் “வேதாந்தி” என்றும் பெயர்களுண்டு.

வ்யாசன்: பாட்டி, ராமானுஜரும் பட்டரும் மற்ற ஸித்தாந்தங்களில் ஈடுபட்டிருந்த யாதவப்ரகாசரையும் (பின்னாளில் கோவிந்த ஜீயரானவர்), கோவிந்தப் பெருமாளையும் (பின்னாளில் எம்பாரானவர்), யஞ்யமூர்த்தியையும் (பின்னாளில் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரானவர்) திருத்தியதைப் போல் ஏன் தங்களுக்குத் துன்பம் கொடுத்த சைவ மன்னர்களையும் திருத்தவில்லை ? ஏன் அவர்கள் சைவ மன்னர்களிடமிருந்து விலகி இருந்தார்கள்?

பாட்டி: வ்யாசா, நம் பூர்வாசார்யர்களுக்குத் தெரியும், யாரை திருத்த முடியும், யாரைத் திருத்த முடியாதென்று. நீ சொன்ன அனைத்து ஆசார்யர்களும், தங்களுடைய வாதத்தை ப்ரதிவாதி நியாயமான வகையில் தோற்கடித்தார் என்கிற பொழுது, தங்களுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, பெரிய திருமலை நம்பி, ராமானுஜர், பட்டர் ஆகியோரின் திருவடித் தாமரைகளைச் சரணடைந்து, ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை ஆச்ரயித்தார்கள். ஆனால், அந்த சைவமன்னனோ, நியாயமான வாதத்திற்கும் தயாராகவில்லை, வாதத்தில் தோல்வியை ஏற்கும் கண்ணியமும், மனப்பக்குவமும் அவனிடம் இல்லாததால், ஸ்ரீமந்நாராயணன் தான் பரதெய்வம் என்ற உண்மையையும் ஒப்புக்கொள்ளவில்லை. “தூங்குபவனை எழுப்பிவிடலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்பமுடியாது” என்பது பழமொழி.  நமது பூர்வாசார்யர்களுக்குத் தெரியும் யார் உண்மையாகத் தூங்குகிறார்கள், யார் நடிக்கிறார்கள் என்று.  அதனால், அவர்களுடைய செயல்களும், முடிவுகளும் அதற்கேற்றார் போலே இருந்தன. இப்படிச் சிலரிடம் குறைபாடுகளிருந்தாலும், நம் பூர்வாசார்யர்கள் அவர்களைத் திருத்தத்தான் முனைந்தார்கள். குதிருஷ்டிகளிடமிருந்து மிகுந்த எதிர்ப்பைச் சந்தித்ததால், அவர்கள் தங்கள் முயற்சியைத் தொடரவில்லை.

பராசரன்: பாட்டி, மாதவருக்கு நஞ்சீயர் என்ற பெயர் எப்படி வந்தது?

பாட்டி: பட்டர் மாதவரை வாதில் வென்ற பின்னர், அவருக்கு ஸம்ப்ரதாயக் கொள்கைகளைச் சொல்லிக் கொடுத்து, அருளிச்செயல்களைக் கற்றுக்கொள்ளுமாறு பணித்து, ஸ்ரீரங்கத்திற்குச் சென்றார். பட்டர் சென்ற பிறகு, மாதவருக்கு தன் இரு மனைவியரிடமிருந்து அவரது கைங்கர்யத்திற்கு எந்த சகாயமும் இல்லாததாலும், அவரது ஆசார்யனைப் பிரிந்திருக்க முடியாததாலும், ஸந்யாஸியாக முடிவு செய்து, ஸ்ரீரங்கத்திற்குச் சென்று தன் ஆசார்யனுடன் இருக்க முடிவு செய்தார். அவர் தன்னுடைய பெரும் செல்வத்தை 3 பங்குகளாக்கி, இரண்டு பகுதிகளைத் தனது இரு மனைவியரிடம் கொடுத்து விட்டு, ஒரு பங்கை  பட்டரிடம் ஸமர்ப்பிப்பதற்காக எடுத்துக்கொண்டு, ஸந்யாஸாச்ரமத்தை ஏற்றுக்கொண்டு, ஸ்ரீரங்கத்திற்குச் சென்றார். மாதவரை ஸ்ரீரங்கத்தில் பார்த்தவுடன், அவரது ச்ரத்தையையும், ஆசார்ய பக்தியையும் பார்த்து அவரை “நம் ஜீயர்” (எங்கள் அன்பிற்குரிய ஜீயர்) என்று அழைத்தார், பட்டர். அன்று முதல், அவருக்கு நஞ்சீயர் என்ற பெயர் ஏற்பட்டது. நஞ்சீயரது ஆசார்ய பக்தி எல்லையில்லாததாயிருந்தது.  மற்றொரு ஸ்ரீவைஷ்ணவனின்  துக்கத்தை காணச் சகிக்காமல் அதற்காக வேதனைப் படுபவன் தான் ஸ்ரீவைஷ்ணவன் என்பது அவரது கருத்து. அவரது காலத்து ஸ்ரீவைஷ்ணவர்களிடத்திலும் ஆசார்யர்களிடத்திலும் அவருக்குப் பெரும் மரியாதை இருந்தது.

நஞ்சீயர் – திருநாராயணபுரம்

அத்துழாய் : பாட்டி, நஞ்சீயரின் ஆசார்ய பக்தியை பற்றிச் சில கதைகள் சொல்லுங்களேன். 

பாட்டி: ஒரு சமயம், பட்டரைப் பல்லக்கில் தூக்கிச் சென்ற பொழுது, நஞ்சீயர் த்ரிதண்டத்தை ஒரு தோளிலும், பல்லக்கை மற்றொரு தோளிலும் தூக்கிச் செல்ல முற்பட்டார். அப்பொழுது பட்டர் “ஜீயா! இது உன் ஸந்யாஸாச்ரமத்திற்கு ஏற்காது. நீ என்னைத் தூக்கிச் செல்லக்கூடாது” என்றார். நஞ்சீயரோ ” எனது த்ரிதண்டம்  நான் உங்களுக்குச் செய்யும் சேவைக்குத் தடங்கலாய் இருக்குமானால், அதனை உடைத்து ஸந்யாஸாச்ரமத்தைக் கைவிடுவேன்” என்றார்.

மற்றொரு சமயம், நஞ்சீயரின் சில சிஷ்யர்கள் அவரது தோட்டத்தின் அமைதி பட்டரின் வருகையால் கெடுகிறது என்று நஞ்சீயரிடம் முறையிட்டனர். நஞ்சீயரோ அந்த தோட்டம் பட்டர் மற்றும் அவரது குடும்பத்தின் உபயோகத்திற்காகவே ஏற்படுத்தப்பட்டதென்று தனது சிஷ்யர்களை எப்பொழுதும் அதனை நினைவில் கொள்ளுமாறு எச்சரித்தார்.

ஆசாரியர்கள் சிஷ்யர்களின் மடியில் தலை வைத்துப் படுப்பது வழக்கம். ஒரு சமயம், பட்டர் நஞ்சீயரின் மடியில் நெடு நேரம் தலை வைத்து ஒய்வெடுத்தார் . நஞ்சீயர் முழு நேரமும் அசையாமல் அமர்திருந்தார். அவரது ஆசார்யரிடம் அவருக்கு அத்தனைப் பக்தியும் அன்பும் இருந்தது. பட்டருக்கும் நஞ்சீயருக்குமிடையே நிறைய சுவையான உரையாடல்கள் நடக்கும்.

வேதவல்லி: நம்மிடையே நடக்கும் உரையாடல்களைப் போலவா?

பாட்டி (புன்னகையுடன்): ஆமாம், அதைப் போலத்தான்-  ஆனால், இன்னும் சுவையாக இருக்கும்.

ஒரு முறை, நஞ்சீயர் பட்டரிடம் “ஏன் எல்லா ஆழ்வார்களும் கண்ணனிடமே ஆசை கொண்டவர்களாக இருக்கின்றார்கள்” என்று கேட்டார். இராமனிடமே எப்பொழுதும் பக்தி கொண்ட பட்டரோ “அனைவரும் சமீபகாலத்தில் நடந்த விஷயங்களையே நினைவில் கொள்வார்கள் – க்ருஷ்ணாவதாரம் எம்பெருமானின் அவதாரங்களிலேயே சமீபத்தில் நடந்த அவதாரம், அதனால் தான் ஆழ்வார்களுக்கு க்ருஷ்ணனின் மீது ஆசை அதிகம்” என்றார்.

மற்றொரு சமயம், நஞ்சீயர் பட்டரிடம், மஹாபலி ஏன் பாதாளத்திற்கு சென்றான் என்றும், சுக்கிராசார்யர் ஏன் கண்ணிழந்தார் என்றும் கேட்டார். பட்டர், சுக்கிராசார்யர்  மஹாபலி வாமனனுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொழுது அவனைத் தடுத்ததால், அவரது கண்ணை இழந்தார் என்றும், மஹாபலி தனது ஆசார்யரின் ஆணையை நிறைவேற்றாததால், பாதாளத்தில் இருக்குமாறு தண்டிக்கப்பட்டான் என்றும் பதிலளித்தார். இங்கு பட்டர் ஒருவன் தனது ஆசார்யனை மதிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்துகிறார். இது போல பல சுவையான உரையாடல்கள் அவர்களிடையே நடைபெறும். இவை நஞ்சீயரின் க்ரந்தங்களிலும் பெரிதும் உதவின.

ஒரு நாள் நஞ்சீயர் தனது க்ரந்தங்களின் நகல்களை எடுக்க எண்ணி, அதற்குத் தகுந்தவர் யாரென தனது சிஷ்யர்களிடத்தே விசாரித்தார். நம்பூர் வரதராஜரின் பெயரை அவர்கள் சிபாரிசு செய்தார்கள். நஞ்சீயர் வரதராஜருக்கு 9000 படியின் காலக்ஷேபத்தை  அருளிய பிறகே, அவருக்கு மூல நூலை வழங்கினார். வரதராஜர் தனது சொந்த ஊருக்குச் சென்று நூலை எழுதி முடிக்கலாமென்றுக் காவேரியைக் கடந்து செல்லலானார். ஆற்றைக் கடக்கும் போது திடீரென வெள்ளம் வர, வரதராஜர் நீச்சல் அடிக்கலானார். அப்பொழுது அவரது கையிலிருந்து மூல நூல் நழுவியதால் மிகுந்த துன்பத்திற்குள்ளானார். அவரது சொந்த ஊரைச் சென்றடைந்த பின், அவரது ஆசார்யனின் மீதும் அவர் கொடுத்த அர்த்தங்களின் மீதும் த்யானித்து மீண்டும் 9000 படி வ்யாக்யானத்தை எழுத ஆரம்பித்தார். அவர் தமிழ் மொழியிலும், இலக்கியத்திலும் சிறந்த புலமை பெற்றிருந்ததால், மேலும் சில செம்மையான அர்த்தங்களை தகுந்த இடங்களில் சேர்த்து, நஞ்சீயரிடம் நூலை ஸமர்ப்பித்தார். நஞ்சீயர் வ்யாக்யானத்தை பார்த்ததும், அர்த்தங்கள் சில மூல நூலிலிருந்து மாறுபட்டதையறிந்து என்னவாயிற்று என வினவினார். வரதராஜர் நடந்த விவரங்களைக் கூறினார். அவரது எழுத்துப்புலமையினாலும், மேன்மையினாலும் மகிழ்ந்து, நஞ்சீயர் அவருக்கு நம்பிள்ளை என்ற பெயரிட்டு அவரை அடுத்த தர்சன ப்ரவர்த்தகராக்கினார். நம்பிள்ளை தன்னை விட உயர்ந்த விளக்கத்தை வழங்கும் போது, நஞ்சீயர் அவரை எப்பொழுதும் பாராட்டுவார். இது நஞ்சீயரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. 

வ்யாசன்: பாட்டி, நம்பிள்ளையை பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்!

பாட்டி: நம்பிள்ளையைப் பற்றியும் அவரது பெருமைகளைப் பற்றியும் நாளை சொல்கிறேன். இப்பொழுது நேரமாகிவிட்டது. நீங்களெல்லாம் வீட்டிற்குப் போக வேண்டும்.

குழந்தைகளெல்லாம் பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளையை பற்றிய நினைவுகளுடனே அவரவர் வீட்டிற்கு செல்கின்றனர்.

அடியேன் பார்கவி ராமானுஜ தாசி

ஆதாரம் : http://pillai.koyil.org/index.php/2016/08/beginners-guide-nanjiyar/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/

Leave a Comment