ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஆசார்யர்கள் – ஓர் அறிமுகம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< திவ்ய ப்ரபந்தம் – ஆழ்வார்களின் அரும் பரிசு

ஆசார்ய ரத்ன ஹாரம் – ஆசார்யர்களை ரத்னமாகக் கொண்ட ஒரு ஹாரம்

பராசரனும் வ்யாசனும் பாட்டியைக் காண சிறிது காலம் கழித்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய விடுமுறைக்கு தங்கள் பாட்டி தாத்தாவின் ஊரான திருவல்லிக்கேணிக்கு சென்று திரும்பியிருக்கின்றனர்.

ஆண்டாள் பாட்டி: பராசரா! வ்யாசா! வாருங்கள். திருவல்லிக்கேணியில் விடுமுறை நாட்களை நன்றாக கழித்தீர்களா? .

பராசர: ஆமாம் பாட்டி! அங்கே மிக நன்றாக இருந்தது. நாங்கள் தினமும் பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலுக்குச் சென்று வந்தோம். அது மட்டுமின்றி, அருகிலுள்ள காஞ்சிபுரம் போன்ற பல திவ்ய தேசங்களுக்குச் சென்று வந்தோம்.  ஸ்ரீபெரும்பூதூருக்குச் சென்று எம்பெருமானாரையும் சேவித்து வந்தோம்.

ஆண்டாள் பாட்டி: கேட்பதற்கே மிக நன்றாக இருக்கிறதே. ஸ்ரீபெரும்பூதூர், ராமானுஜர் அவதரித்த ஸ்தலம் ஆகும். அவர் மிக முக்கியமான ஆசார்யர்களில் ஒருவர். அவரைப் பற்றி மேலும் உங்களுக்கு கூடிய சீக்கிரத்திலேயே சொல்வேன். நான் கடந்த முறை உங்களுக்கு ஆசார்யர்களைப் பற்றிச் சொல்லப் போவதாகச் சொன்னேன் இல்லையா? இப்பொழுது சுருக்கமாக அவர்களைப் பற்றி அறிமுகப் படுத்துகிறேன். “ஆசார்ய” என்னும் சொல்லின் பொருளை நீங்கள் அறிவீர்களா?

வ்யாச: ஆசார்யர் என்பவரும் குரு என்பவரும் ஒருவர்தானே பாட்டி?

ஆண்டாள் பாட்டி: ஆமாம். ஆசார்ய என்பதும் குரு என்பதும் ஒத்த சொற்களே. ஆசார்யர் என்பவர் மெய்ப்பொருள் என்ன என்பதனைக் கற்றறிந்து, அதனைத் தான் அனுஷ்டித்து பிறருக்கும் கற்பித்து அவ்வழியில் நடத்துபவர் ஆவார். குரு என்பவர் நம்முடைய அறியாமையை போக்குபவர் ஆவார்.

பராசர: மெய்ப் பொருள் என்பது என்ன பாட்டி?

ஆண்டாள் பாட்டி: வெகு புத்திசாலித்தனமான கேள்வி கேட்டாய் பராசரா! மெய்ப் பொருள் என்பது நாம் யார் என்பதையும், நம்முடைய கடமைகளையும் பொறுப்புகளையும் அறிந்து கொள்வதே. உதாரணமாக, உங்கள் பாட்டியாக எனக்கு உங்களுக்கு நல்ல விஷயங்களையும் குணங்களையும் கற்பிக்கும் கடமை உண்டு. இதை நான் நன்றாக உணர்ந்து கொள்கிறேனே – அதுவே உண்மை அறிவு. அதே போல, நாம் அனைவரும் பகவானுக்கு கீழ்ப்பட்டவர்கள், அவரே நம்மனைவருக்கும் ஸ்வாமி (உடையவர்). அவர் நம்மனைவருக்கும் எஜமானராதலால், அவருக்கு நாம் பணிவிடைகள் செய்ய வேண்டும்; அவரைச் சார்ந்தவர்களகிய நமக்கு, அவருக்கு சேவகம் செய்யும் கடமை உண்டு. இதுவே ‘மெய்ப் பொருளாக’ நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியதாகும். இதனைத் தெரிந்து, இதனைப் பிறருக்கு நடைமுறையில் கற்பிப்பவர்களை ஆசார்யர்கள் என்று அழைக்கிறோம். இந்த மெய்ப் பொருள், வேதம், வேதாந்தம் மற்றும் திவ்ய ப்ரபந்தங்களில் காண்பித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வ்யாச: ஓஹோ! அப்படியானால், முதல் ஆசார்யர் யார்? யாராவது ஒருவர் இந்த உண்மைப் பொருளை முதலில் அறிந்திருந்தால் தானே பிறருக்குக் கற்பிக்க இயலும்.

ஆண்டாள் பாட்டி: எவ்வளவு அறிவார்ந்த கேள்வி கேட்டாய் வ்யாசா. நம்முடைய பெரிய பெருமாள் தான் முதல் ஆசார்யர். நாம் ஆழ்வார்களைப் பற்றி முன்பே பார்த்து விட்டோம். அவர்களுக்கு உண்மையான அறிவை அளித்தது பெருமாளே. ஆழ்வார்களின் வாழ்க்கை முறையில் அவர்கள் பெருமாள் மீது கொண்டிருந்த ஈடுபாட்டையும், அவர்களுடைய திவ்ய ப்ரபந்த அருளிச் செயல்களிள் மெய்ப் பொருளையும் வெளிப்படுத்தினர்.

பராசர: பாட்டி! ஆழ்வார்களின் காலத்திற்குப் பிறகு என்ன நடந்தது?

ஆண்டாள் பாட்டி: ஆழ்வார்கள் பூமியில் சில காலம் இருந்து பிறகு நித்யமாக பெருமாளுடன் இருக்கும் பொருட்டு பரமபதத்திற்கு ஏகினர். இதன் பிறகு நாளடைவில் ஞானம் தேய்ந்து திவ்ய ப்ரபந்தங்கள் கிட்டத்தட்ட மறைந்தே போன ஒரு இருண்ட காலம் இருந்தது. ஆனால் நம்மாழ்வாருடைய காருண்யத்தினால் நமக்கு திவ்ய ப்ரபந்தம் மீண்டும் கிடைத்து. பிற்காலத்தில் பல ஆசார்யர்கள் மூலமாகப் பரவியது. அந்த ஆசார்யர்களைப் பற்றி பின்னால் சொல்கிறேன்.

பராசரனும் வ்யாசனும்: அதனை அறிந்து கொள்ள ஆர்வமாகக் காத்திருக்கிறோம் பாட்டி.

ஆண்டாள் பாட்டி: நல்லது, உங்கள் பெற்றோர் உங்களை இப்பொழுது அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் அடுத்த முறை சந்திக்கும் பொழுது ஆசார்யர்கள் பற்றி மேலும் சொல்கிறேன்.

அடியேன் கீதா ராமானுஜ தாஸி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2015/06/beginners-guide-introduction-to-acharyas/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment