ஸ்ரீ வைஷ்ணவம் – பால பாடம் – ஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 1

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< பெரிய நம்பி

திருவரங்கப்பெருமாள் அரையர், பெரிய திருமலை நம்பி மற்றும் திருமாலை ஆண்டான்

pancha-acharyas

ஆளவந்தாரின் சீடர்கள்

பராசரனும் வ்யாசனும் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்கு அவர்களின் தோழி வேதவல்லியோடு வருகிறார்கள்.

பாட்டி : வா வேதவல்லி. உள்ளே வாருங்கள் குழந்தைகளே!

வ்யாச : பாட்டி, போன முறை எங்களுக்கு ராமானுஜரைப் பற்றியும் அவருடைய ஆசார்யர்கள் குறித்து மேலும் பிறகு சொல்வதாகச் சொன்னீர்களே.

பராசர : பாட்டி, ராமானுஜருக்கு பெரிய நம்பி மாத்திரமல்லாது வேறு பல ஆசார்யர்களும் இருந்தனர் என்று சொன்னீர்களே ? அவர்கள் எவர் பாட்டி?

பாட்டி : நான் போன முறை சொன்னது போல, ஆளவந்தாருடைய பல சிஷ்யர்கள் இளையாழ்வாரை சம்பிரதாயத்தில் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுள் முக்கியமானவர்கள் 1) திருவரங்கப்பெருமாள் அரையர் 2) திருக்கோஷ்டியூர் நம்பி 3) பெரிய திருமலை நம்பி 4) திருமாலையாண்டான் 5) பெரிய நம்பியுடன் 6) திருக்கச்சி நம்பியும். நாம் போன தடவை பெரிய நம்பியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோமில்லையா? இப்பொழுது நான் மற்ற ஆசார்யர்கள் பற்றியும் அவர்கள் நம் சம்பிரதாயத்திற்குப் புரிந்த அருந்தொண்டினையும் கூறப் போகிறேன்.

பராசர : பாட்டி, ராமானுஜர் ஏன் இத்தனை ஆசார்யர்களைப் பெற்றிருந்தார்?

பாட்டி : அவர்கள் ஒவ்வொருவருமே ஸ்ரீ ராமானுஜரை அத்துணை சிறந்த ஆசார்யராகப் பிற்காலத்தில் விளங்கும் வண்ணம் அவரைச் செதுக்கியவர்கள் ஆவர். திருவரங்கப்பெருமாளரையர்  ராமானுஜரை காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்குக் கொணர்ந்த சிறந்த கைங்கர்யத்தைச் செய்தவர்.

வ்யாச : அது எவ்வாறு நடந்தது? அந்தக் கதையை எங்களுக்குச் சொல்லுங்கள் பாட்டி.

பாட்டி : ராமானுஜர் ஸந்யாஸாச்ரமம் பெற்ற பின்பு காஞ்சிபுரத்தில் வசித்து வந்திருந்தார். அச்சமயம் அரையர் காஞ்சிபுரத்திற்கு சென்று திருக்கச்சி நம்பியிடம் தாம் தேவப்பெருமாளின் முன் அரையர் சேவை செய்ய அனுமதி கோரினார். தேவப்பெருமாள் தம் முன் அரையர் சேவை செய்ய அவருடைய அர்ச்சகர்கள் மூலம் அனுமதி கொடுத்தார். அரையர் ஆழ்ந்த அன்புடனும் பக்தியுடனும் பாசுரங்களை அபிநயத்துடன் பாடினார். எம்பெருமான் மிகுந்த மகிழ்வுற்றவராக அவருக்குப் பல பரிசுகள் கொடுத்தார். அரையரோ தனக்கு அந்தப் பரிசுகள் வேண்டாம் என்றும் தமக்கு வேறொன்று வேண்டும் என்று கூறினார். எம்பெருமான் ஒப்புக்கொண்டு “எது கேட்டாலும் கொடுப்போம், மேலே கேளும்” என்று சொல்ல, அரையர் அப்பொழுது ராமானுஜரைச் சுட்டிக்காட்டி, அவரைத் தம்முடன் ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகச் சொன்னார். “நீர் இவரைக் கேட்கப் போவதை யாம் அறியவில்லை, வேறு எதாவது கேளும்” என்று தேவப் பெருமாள் கூறினார்.  அரையர்  “ஒரே சொல் என்று கொண்ட ஸ்ரீராமனும் நீரே – இதற்கு மேலும் மறுக்காதீர்” என்று பதிலளித்தார். இறுதியில் தேவப் பெருமாள் ஒப்புக்கொண்டு ராமானுஜருக்கு விடை கொடுத்தார்.

வ்யாச: என்ன தந்திரம் பாட்டி ? அரையர் எவ்வளவு சாமர்த்தியமாகப் பெருமாளை ஒப்புக்கொள்ளச் செய்தார்!

பாட்டி: ஆமாம் வ்யாசா. அக்கணமே, அரையர் ராமானுஜருடைய கைகளைப் பற்றி, ஸ்ரீரங்கத்திற்கு பயணத்தைத் தொடங்கினார். இவ்வாறாக, அரையரை ஸ்ரீரங்கத்திற்கு கொணர்ந்ததன் மூலம், ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் உறுதியுடன் மேலும் தழைத்தோங்க வழி வகுத்தார்.

வேதவல்லி : பாட்டி, ஒவ்வொரு ஆசார்யருமே ராமானுஜரை ஒவ்வொரு வழியில் செதுக்கினர் என்று கூறினீர்களே, அரையர் ராமானுஜருக்கு என்ன உபதேசித்தார்?

பாட்டி : ஆளவந்தார் தம்முடைய முக்கிய சிஷ்யர்கள் ஒவ்வொருவரையும் நம் சம்பிரதாயத்தின் வெவ்வேறு அம்சங்களை ராமானுஜருக்குக் கற்பிக்குமாறு பணித்திருந்தார். அவ்வாறு அரையரை நம் சம்பிரதாயத்தின் உட்கருத்தை ராமானுஜருக்கு கற்பிக்குமாறு கூறப்பட்டிருந்தது. அந்நிலையில், ராமானுஜர் அரையரிடம் உபதேசம் பெற்றுக்கொள்ளும் முன் ஒரு அழகான செயலைச் செய்தார். தம்முடைய ஆசார்யரிடம் (அரையர்) உபதேசம் பெற்றுக்கொள்ளும் முன் 6 மாத காலத்துக்கு அவர் கைங்கர்யங்கள் புரிந்து வந்தார். ராமானுஜரின் இந்தத் தொண்டான – தத்தம் ஆசர்யர்களிடம் உபதேசம் பெற்றுக்கொள்ளும் முன் அவருக்கு கைங்கர்யங்கள் புரிந்து வருதலை, கூரத்தாழ்வான், முதலியாண்டான் மற்றும் வேறு பல ஆசார்யர்களின் வாழ்க்கைச் சரித்திரத்திலும் காணலாம். இது அவர்களின் பெற்றுக் கொள்ளப்போகும் உபதேசத்தின் மீதும் அதை உபதேசிப்பவர் மீதும் உள்ள சிரத்தையை நமக்கு அழகாக உணர்த்தும். ராமானுஜர் அரையருக்கு தினந்தோறும் அவர் பருகும் பாலை காய்ச்சிச் சரியான சூட்டில் கொடுப்பதையும் தேவைப்படும் நேரத்தில் அவருக்கு மஞ்சள் காப்புப் பூசிவிடும் தொண்டையும் புரிந்து வந்தார்.

வ்யாச: பாட்டி, மற்ற ஆசார்யர்கள் ராமானுஜருக்கு என்ன உபதேசித்தனர் பாட்டி?

பாட்டி : ஆமாம், அவற்றை ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். திருமலை நம்பி ராமானுஜரின் மாமா ஆவார். திருவேங்கடத்தைச் சேர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களில் அவர்தாம் முதன்மையானவர். அவர் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு தினந்தோறும் தீர்த்தத்தை ஆகாச கங்கையிலிருந்து (திருமலையில் இருக்கும் ஓர் நீராதாரம்) கொண்டு வரும் கைங்கர்யத்தை மேற்கொண்டிருந்தார். அவருடைய ஆசார்யரான ஆளவந்தார் அவரிடம் ஸ்ரீ ராமாயணத்தின் சாரத்தையும் அதன் அழகான பொருளையும் ராமானுஜருக்கு உபதேசிக்குமாறு நியமித்திருந்தார். நம் சம்பிரதாயத்தில் ஸ்ரீராமாயணத்தைச் சரணாகதி சாஸ்திரம்  என்று போற்றிக் கூறுவர். ராமானுஜர் அவதரித்தபொழுது, அவருக்கு இளையாழ்வார் என்று பெயரிட்டது அவருடைய தாய்மாமாவாகிய திருமலை நம்பியே. இது மாத்திரம் அன்று, திருமலை நம்பி ராமானுஜரின் தாயாருடைய சகோதரியின் புத்திரரான கோவிந்தப் பெருமாளையும் திருத்தி நம் சம்பிரதாயத்தில் திருப்பியவர் திருமலை நம்பியே. நம் சம்பிரதாயத்தில் அவருடைய ஞானத்திற்கும் ஆழ்வார்களுடைய பாசுரங்களில் அவருக்கு இருந்த ஈர்ப்பிற்க்கும் நிகரேயில்லை.

பராசர : பாட்டி, எங்களுக்குத் திருமாலையாண்டானைப் பற்றி மேலும் சொல்கிறீர்களா? அவர் ராமானுஜருக்கு எவ்வாறு அனுக்ரஹித்தார்?

பாட்டி :  திருவாய்மொழியின்  பொருளை உபசேதிசிப்பதே திருமாலையாண்டானுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு. ராமானுஜர் ஸ்ரீரங்கத்தை அடைந்தபின், திருக்கோஷ்டியுர் நம்பி அவரைத் திருமாலையாண்டானிடமிருந்து நம்மாழ்வாருடைய திருவாய்மொழியின்   சிறந்த கருத்துகளைக் கேட்டறியுமாறு வழிகாட்டினார். இருவருமே சிறந்த பண்டிதர்களானதால் முதலில் இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும், அவைகள் இணக்கமாகவே தீர்ந்து போயின; ராமானுஜர் ஆழ்வாருடைய பாசுரங்களின் நுண்ணிய உட்கருத்துக்களை அவருடைய ஆசார்யரான திருமாலையாண்டானுடைய அனுக்கிரஹத்தினால் கற்றறிந்தார். திருமாலையாண்டான் அவருடைய ஆசார்யர் ஆளவந்தாரிடத்தில் மிகுந்த பக்தியும் மதிப்பும் கொண்டிருந்தவர். அவர் எக்காலத்திலும் அவருடைய ஆசார்யருடைய உபதேசங்களிலிருந்தோ ,  அவர் காட்டிய மார்க்கத்திலிருந்தோ விலகியதேயில்லை. நம் சம்பிரதாயத்திற்கான  கைங்கர்யங்களின் பொருட்டு அவற்றை ராமானுஜருக்கு அவர் கற்பித்தார்.

வேதவல்லி : திருக்கோஷ்டியூர் நம்பியைப் பற்றியும் திருக்கச்சி நம்பியைப் பற்றியும் சொல்லுங்கள் பாட்டி?

பாட்டி : அவர்களைப் பற்றி நான் அடுத்த தடவை சொல்கிறேன். அவர்கள் குறித்து பல சுவையான கதைகள் உண்டு.

வ்யாசன், பராசரன் வேதவல்லி (ஏகோபித்த குரலில்) : அந்தக் கதைகளை இப்பொழுது சொல்லுங்களேன் பாட்டி.

பாட்டி : நேரமாகி விட்டதே. இன்றைக்கு இது போதும் . வீட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள். நாளை உங்கள் நண்பர்களையும்  மறவாது அழைத்து வாருங்கள்.

குழந்தைகள் ஆசார்யர்களைப் பற்றியும், பாட்டி அடுத்த நாள் சொல்லப் போகும் கதைகளைப் பற்றியும் ஆர்வத்துடன் எண்ணமிட்டவாறும் தங்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்றனர்.

அடியேன் கீதா ராமானுஜ தாசி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2016/07/beginners-guide-alavandhars-sishyas-1/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/

Leave a Comment