ஸ்ரீராமாயணம் பாலபாடம் – அஸ்திர உபதேசமும், சித்தாச்ரம வரலாறும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீராமாயணம் பாலபாடம்

<< மாண்டாள் தாடகை

பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.

பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த பழங்களைத் தருகிறேன்.

குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த பழங்களை உண்டார்கள்.

அத்துழாய்: சென்ற முறை தாடகை வதத்தைப் பற்றியும், தேவேந்திரன் விச்வாமித்ர முனிவரிடம் ராமனுக்கு அஸ்திர வித்தையைக் கற்பிக்குமாறு வேண்டியதைப் பற்றியும் சொன்னீர்கள் பாட்டி. ராமன் முனிவரிடமிருந்து அஸ்திரங்களைப் பெற்றானா பாட்டி?

பாட்டி: சொல்கிறேன் கேளுங்கள். விச்வாமித்ர முனிவர் பெரும் புகழ் பெற்ற ராமனை நோக்கி, நான் கற்ற திவ்ய அஸ்திரங்களனைத்தையும் உனக்குக் கொடுக்கிறேன் என்றார். தண்ட சக்ரம், தாம சக்ரம், கால சக்ரம், விஷ்ணு சக்ரம், வஜ்ராஸ்திரம், ப்ரஹ்மாஸ்திரம் ஆகியவற்றைக் கொடுக்கிறேன். இவ்வளவேயன்றி மோதகி, சிகரி என்ற இரு ஒளிபொருந்திய கதைகளையும் ஏனைய அஸ்திரங்களையும் கொடுக்கிறேன். அவற்றைப் பெற்றுக்கொள்வாயாக என்றுரைத்து கிழக்கு முகமாக நின்று மிக உயர்ந்த அவ்வஸ்திர மந்திரங்களனைத்தையும் ராமனுக்கு உபதேசிக்கும்பொருட்டு அவைகளை நினைத்து ஜபம் செய்ய, அவரது கட்டளையின்படி அந்த அஸ்திர தேவதைகள் யாவும் அப்பொழுது பளபளவென்று மிகவும் காந்திமயமான சரீரங்களோடு விச்வாமித்ர முனிவர் அருகே வந்து நின்று, ராமனை நோக்கி, எங்களுக்குத் தகுந்ததோர் இருப்பிடம் கிடைத்ததே என்று மிக மகிழ்ந்து ரகுகுலத்திற்கு புகழ் சேர்க்கும் ராமனே! மிகவும் மகிமை பொருந்திய நாங்கள் உனக்குக் கிங்கரர்களாகிறோம் என்று உரைத்தன. ராமனும் அப்படியே என்று அங்கீகரித்து அவைகளைத் தன் கையினால் தடவிக்கொடுத்து நான் மனதில் நினைக்கும்பொழுது நீங்கள் வந்து உதவவேண்டும் என்று அந்த அஸ்திர தேவதைகளுக்குக் கட்டளையிட்டான்.

வ்யாசன்: கிங்கரர்கள் என்றால் என்ன பாட்டி?

பாட்டி: கிங்கரர்கள் என்றால் சேவகர்கள் என்று பொருள். மேலும் சொல்கிறேன் கேளுங்கள். விச்வாமித்ர முனிவரிடமிருந்து அஸ்திர மந்திரங்களை உபதேசமாகப் பெற்ற ராமன் முனிவரிடம் அந்த அஸ்திரங்களைச் செலுத்தும் முறையை உபதேசித்தது போலவே உபஸம்ஹார க்ரமத்தையும் உபதேசிக்குமாறு வேண்ட , மாமுனிவரும் அங்ஙனமே உபதேசித்தருள, அம்மந்திரங்களை உபதேசமாகப் பெற்ற ராமன், அவ்வுபஸம்ஹார தேவதைகளை நோக்கி, ‘காரியம் நேரிடுகிற சமயத்தில் நான் மனதில் நினைத்த மாத்திரத்தில் நீங்கள் வந்து உதவி செய்யவேண்டும் என்று கட்டளையிட்டு இப்பொழுது நீங்கள் உங்கள் விருப்பப்படி போய்வரலாம்’ என்று விடைகொடுத்தான்.

வேதவல்லி: உபஸம்ஹார க்ரமம் என்றால் என்ன பாட்டி?

பாட்டி: அஸ்திர மந்திரங்களை உச்சரித்து அந்த அஸ்திரங்களைக் கொண்டு காரியத்தை முடித்த பிறகு, மீண்டும் அந்த அஸ்திரங்களைத் தன்னிடம் வந்துசேரும்படி செய்யும் செயல். இவ்வாறு பற்பல அஸ்திரங்களை உபதேசமாகப் பெற்றான் ராமன். அதன்பின் மூவரும் தன் ப்ரயாணத்தைத் தொடர்ந்தார்கள்.

பராசரன்: மூவரும் எந்த இடத்திற்குச் சென்றார்கள் பாட்டி?

பாட்டி: மூவரும் வழி நடந்து சென்றுகொண்டிருக்கையில், ஸ்ரீராமன் ஓர் அழகிய சோலையைக் கண்டு வியந்து அதன் வரலாற்றைப் பற்றி முனிவரிடம் கேட்டான். முனிவர் ராமனை நோக்கி “ராமா! பகவான் மஹாவிஷ்ணு உலகத்தில் தவம் செய்யும் பொருட்டும் யோகம் செய்யும் பொருட்டும் இந்த அழகிய வனத்தில் நெடுங்காலம் வாஸம் செய்தார். மஹாவிஷ்ணுவின் அவதாரமான வாமனன் தவம் புரிந்த ஆச்ரமமும் இதுவே. மேலும் காச்யப முனிவரும் இவ்விடத்தில் தவம் புரிந்து சித்திபெற்றார். ஆகையால் இவ்விடம் ‘ஸித்தாச்ரமம்’ என்று அழைக்கப்படுகின்றது. எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் வாமனனாய் அவதரித்து மாவலியை யாசித்து த்ரிவிக்ரமனாக ரூபங்கொண்டு தனது பொற்பாதங்களாலே உலகங்களை அளந்து யாவர்க்கும் நன்மை செய்தருளினார். அவர் இந்த ஆச்ரமத்தில் வாஸம் செய்ததே இவ்விடத்திற்கு பெரும் சிறப்பு. நானும் வாமன ரூபியான எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனிடத்தில் பரம பக்தியைச் செய்து “வாமனன் மண்ணிது” என்று இவ்விடத்தின் பெருமையுணர்ந்து எம்பெருமான் வாஸம் செய்த இந்த ஆச்ரமத்தில் குடியிருக்கின்றேன். ஆனால் கொடிய ராக்ஷசர்களோ என் யாகத்தைக் கெடுக்கும்பொருட்டு இவ்விடத்திற்கு வருவார்கள். கொடிய அவ்வரக்கர்களை நீ இவ்விடத்தில் தான் கொல்லவேண்டும்” என்று சொன்னார்.

வேதவல்லி: சித்தாச்ரமத்திற்கு எத்தனை சிறப்புகள். எம்பெருமான் வாமனனாக அவதரித்தபோதும் அவ்விடத்தில் வாஸம் செய்தார். ராமனாக அவதரித்த காலத்திலும் அவ்விடத்திற்கு விசுவாமித்ர முனிவரின் யாகத்தை ரக்ஷிக்கும் பொருட்டு சென்றிருக்கிறார். கேட்பதற்கே ஆனந்தமாக இருக்கிறது பாட்டி. மேலும் சொல்லுங்கள். கேட்க ஆவலாக இருக்கிறது.

பாட்டி: சித்தாச்ரமத்தில் வாஸம் செய்யும் முனிவர்கள் அனைவரும் விச்வாமித்ர முனிவர் வருகையைக் கண்டு மிக மகிழ்ந்து, அவரையும் ராம லக்ஷ்மணர்களையும் வரவேற்றனர். பின்பு தசரத புத்ரர்களான ராம லக்ஷ்மணர்கள் விச்வாமித்ர முனிவரை நோக்கி ‘இன்றைய தினமே யாகதீக்ஷை பெற்றுக்கொள்வீராக’ என்று வேண்ட அவரும் தன் ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு அப்பொழுதே யாகஞ்செய்ய தீக்ஷித்துக் கொண்டார்.

வ்யாசன்: யாகம் நன்கு நிறைவேறியதா பாட்டி? மேலும் சொல்லுங்கள்.

பாட்டி: அடுத்தடுத்த விஷயங்களை நாளை உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்பொழுது இருட்டிவிட்டதால் உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருப்பார்கள். குழந்தைகள் பாட்டி சொன்ன கதையை எண்ணியவாறு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டனர்.

அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி

வலைத்தளம் –  http://pillai.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment